Friday 19 July 2019

நாவடக்கம் கொள்

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
--வள்ளுவன் வாக்கு--
இதை விதுரர் அழகாக எடுத்துரைக்கிறார். 
போர்களத்தில் அஸ்திர சஸ்திரங்களினால் ஏற்படும் வடுக்கள் ஆறிவிடுமாம். ஆனால் தீய சொற்களினால் ஏற்படும் காயம் மனதின் ஆழத்தில் பதிந்து மனதை புரையோட செய்யுமாம். அதற்கான தண்டனையிலிருந்து யாராலும் தப்ப இயலாது என உரைக்கிறார்.

இது மஹாபாரதத்தில் திருதராஷ்டிரனுக்கு சொல்லப்படுகிறது.  அதை இப்பொழுது பார்ப்போம். முதலில் நிறைந்த அவையில் துரியோதனன் விதுரரை "வேசி மகன்", பாண்டவர்களின் கையாள் என இடித்துரைக்கிறான். விளைவு. விதுரர் தன் வில்லை ஒடித்து நான் யார் பக்கமும் போரிட மாட்டேன் என்று சூளுரைத்து யாத்திரை சென்று விடுகிறார். நட்டம் அவருக்கல்ல. துரியோதனனுக்கு. ஓர் சிறந்த வில்லாளியை இழக்கிறான். விதுரர் கை வில் திருமாலின் சாரங்கம். அதன் முன் காண்டீபம் பயனற்றுவிடும். இரண்டாவதாக தங்கள் குலமகள் திரௌபதியை ஏசுகிறான். வேசி என சாடுகிறான். தண்டனை. தன் கண்முன் அனைத்து தம்பியரையும் இழந்து தனிமரமாய் நிற்கிறான். கர்ணன் பாஞ்சாலியை " ஐவரின் மனைவி". வேசி என ஏசுகிறான். விளைவு. சாரதியால் கைவிடப்பட்டு பரிதாபமாக உயிரிழக்கிறான்.

இராமயணத்திலிருந்தும் இதற்கு சான்றளிக்கப்படுகிறது. தெய்வீக அவதாரமான இராமன், சீதா மற்றும் இலக்குவனும் சுடு சொற்களை சிந்தி தண்டனை பெற்றுள்ளனர். முதலில் இலக்குவன். இராமன் வனவாசம் வந்தபின் அயோத்தியை அடைந்த பரதன் தாயின் மூலம் நிகழ்வுகளை அறிகிறான். மூத்தவனான இராமன் இருக்க தான் நாடாள்வது தவறு என்று இராமனை தேடி கானகம் ஏகுகிறான். கங்கை கரையை அடைய அங்கு குகனால் வழிமறிக்கப்படுகிறான். மந்திரி சுமந்திரர் வாயிலாக உண்மை உணர்ந்து, "ஆயிரம் இராமர்கள் நின்னை ஒப்பறோ" என்று பரதனை புகழ்ந்து அக்கரை சேர்ப்பிக்கிறான்.

 பரத்வாஜர் வழிகாட்டலில் இராமன் தங்கியிருக்கும் சித்திரகூடம் வருகிறான். பரதன் வருவதை தொலைவிலிருந்து காண்கிறான் இலக்குவன். கோபம் மேலிட போருக்கு ஆயத்தமாகிறான். இதனை கண்ணுற்ற இராமன் காரணம். வினவ, இலக்குவன் மொழிவது "தாய் அரியணையை பறித்தாள். அவர் மகன் உங்கள் உயிரை பறிக்க வருகிறான்". என்னுயிர் தந்து உம்மை காப்பேன் என்கிறான். பரதனின் தூய உள்ளத்தை மாசு படுத்தும் சொற்கள். இதை பரதன் அறியான். ஆயினும் ஒருவரை பற்றி சரிவர அறியாமல் அவருக்கு மாசு கற்பிக்கும் வண்ணம் உதிர்க்கும் சொற்களும் சுடு சொற்களே என அறிவீர்.

 இராமன் தடுத்து பரதனை இன்முகம் காட்டி வரவேற்று அவன் வாயினாலேயே அவன் வந்த காரணத்தை இலக்குவன் அறிய உரைக்க செய்கிறார். அது மட்டுமல்லாது இலக்குவனிடம் தனிப்பட்ட முறையில் " உனக்கு உள்மனதில் நாடாளும் எண்ணம் உண்டோ அறிகிலேன், அவ்வாறாயின் இயம்புக பரதன்கண் உரைக்கிறேன்" என்கிறார். பரதனின் சரணாகதியால் நாணப்பட்ட இலக்குவனுக்கு மேலும் ஓர் அடி. இங்கு ஒன்றை நோக்க வேண்டும். இராமனும் அன்பு மனையாளை பிரிந்து சகோதரனுக்கும் அவன் துணைவிக்கும் சேவை செய்ய தன்னை அர்பணித்து கொண்ட இலக்குவனை சந்தேகித்து இவ்வாறான சுடு சொல்லை வீசுகிறார். விளைவு. மனையாளை பிரிந்து வாடுகிறார். ஆகவே அவதார புருஷனான இராமனும் இதற்கு விதிவிலக்கல்ல என இயம்பப்படுகிறது.

பரதனை சந்தேகித்து, மனதளவில் தீய வார்த்தைகளை வீசிய இலக்கவனுக்கு  தண்டனை சீதையிடமிருந்து கிடைக்கப்பெற்றது. இராம பானத்தால் தாக்குண்ட மாரீசன் இராமனின் குரலில் ஹே சீதே, ஹே லக்ஷ்மணா என்று கதறியவுடன், சீதை கலக்கமுற்று இலக்குவனை சகோதரனுக்க உதவ செல்லும்படி கூறுகிறாள். ஆயின் இலக்குவனோ இராமனுக்கு ஓர் ஆபத்தும் நேராது என உறுதிபட இயம்புகிறான். இது மாரீசனின் சூழ்ச்சி எனவும் கூறுகிறான். சீதை இதை ஏற்காமல், "உன் உள்மனதில் தீய எண்ணம் உளது. எனவே நீ செல்ல மறுக்கிறாய். இது துரோக செயல்" என சாடுகிறாள். இலக்குவன் மீது மாசு கற்பிக்கப்படுகிறது. மனம் துயருற்ற இலக்குவன் இராமனை தேடி செல்கிறான்.

சீதை பகன்றது எத்தனை தீய சொற்கள். கைங்கரியம் செய்யவென்றே தன்னை அர்பணித்து கொண்ட இலக்குவனை சந்தேகித்தது மிகப்பெரிய குற்றம். அதிலும் " நீ என்னை பெண்டாள எண்ணம் கொண்டுள்ளாய் போலும்" என்று கூறி அவனை ஏசுகிறாள். எத்தனை கொடிய சொற்கள். இதற்கு தண்டனையாகத்தான் சீதை தன் கணவனை விட்டு பிரிந்து இலங்கையில் சிறைப்படுகிறாள். பட்டமகிஷி என ஆன பின்பும், பிரஜை ஒருவரின் வார்த்தைக்காக இராமனால் கை விடப்பட்டு இரண்டாவது முறையாக கானக வாசம் பெறுகிறாள்.

 இதிலிருந்து நாம் அறிவது, தெரிந்தோ தெரியாமலோ, மனதளவிலோ ஒருவரை வாரத்தைகளால் காயப்படுத்தினால் அதற்கு தண்டனை நிச்சயம். அதிலிருந்து தப்புவது அரிது. இராமன், சீதை ஆகியோரே அதை அனுபவித்தனர் எனில் நாம் எம்மாத்திரம். நாவடக்கம் கொள்வோம் வாழ்வில் உய்வோம்.

ஜெய் ஸ்ரீராம்.