Friday, 19 July 2019

அகத்தியர் வாக்கு - கேள்வி பதில்

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் தினம் ஒரு ஜீவ அருள்நாடி வாக்கு :

பிரபஞ்ச சக்தியை தியானத்தில்கூட பார்க்கமுடியாது, அதைத் தாங்க முடியாது மனிதர்களால், என்று சொல்லப்படுவது பற்றி?

உடலையும், ஆத்மாவையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால், உடலை, யோகத்தால் நல்ல முறையில் வைத்துக்கொண்டால், ஆத்மாவை பாவங்களற்ற நிலையில் வைத்துக்கொண்டால், புண்ணியத்தை அதிகமாக சேர்த்து ஆத்ம பலத்தை அதிகரித்துக் கொண்டால் மனிதனால் அனைத்தையும் உணரலாம், தாங்கிக் கொள்ளலாம்.

ஒரு ஆன்மீகக் குழு, மானசரோவருக்கு சென்று ஒளி வடிவில் தேவர்கள் அதில் இறங்குவதை நேரில் காண்பதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். அது உண்மையா ?

தேவர்கள் வருகிறார்கள் என்று நம்பி பார்க்கும்போது அதை குற்றமாக நாங்கள் கூறவில்லை. அதை இறை காட்சி என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று நிகழ்ந்தது அதுவா ? அதுதான் தினமும் நிகழ்கிறதா ? என்றால் அப்படி நிகழாது, நிகழ்ந்தாலும் மனிதக் கண்களுக்கு அது தெரியாது.

அன்று நடந்தது உண்மையா ஐயனே ?
உண்மைதான்.

அப்படியென்றால் அந்த நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனவா?

கட்டாயம். மனித கண்களுக்கு அதுமட்டுமா தெரிவதில்லை ? பிறரின் வறுமை தெரிவதில்லை, பிறரின் கண்ணீர் தெரிவதில்லை,  பிறரின் சோகம் தெரிவதில்லை, பிறரின் கலக்கம் தெரிவதில்லை, பிறரின் வேதனை தெரிவதில்லை. மனித கண்ணுக்கு என்னதான் தெரிகிறது ? தன்
குடும்பம், தன் வாழ்க்கை, தன் சுயநலம், தன் செல்வம், தன் ஆஸ்தி இது மட்டும்தான் தெரிகிறது.
இறைகாட்சிகளை சந்தேகமே படக்கூடாது. ஏனென்றால் உண்மையில்லாததைக் கூட உண்மை என்று ஒரு மனிதன் இறைரீதியாக பார்க்கப் பழகிவிட்டால் அது மெய்யாக இறைகாட்சியாகிவிடும். இதற்காக ஒரு பழங்காலக் கதை ஒன்றைக் கூறுகிறோமப்பா.
இஃதொப்ப கூட்டமாக ஒரு சமயம் பழனிக்கு பல்வேறு தடத்து அன்பர்கள் எல்லாம் பாலை எடுத்துக்கொண்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம் என்று செல்லும் பட்சத்திலே ஒரு ஏழை சிறுவன் மட்டும் “என்னிடம் பால் குறைவாக இருக்கிறதே ? எப்படி ( பழனிக்கு ) செல்வது ? இதைவிட போகாமல் இருந்துவிடலாம்’ என்று எண்ணும்பொழுது “ பாதகமில்லை, இருப்பதை எடுத்துச்செல் “ என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, சிறிதளவு பாலை மட்டும் எடுத்துக்கொண்டு அவன் தயக்கத்துடன் செல்ல “ ஏனையோர்களோ குடம், குடமாக ( பாலை ) எடுத்துக்கொண்டு செல்லும்பொழுது நான் மட்டும் குறைந்த அளவு எடுத்து வரவேண்டுமா ?   இதையெல்லாம் நீ எங்கே எடுத்துக்கொள்ளப் போகிறாய் ? அற்புதமான பால் எல்லாம் வெள்ளிக்குடத்திலும், தங்கக்குடத்திலும் வந்து கொண்டிருக்கிறது. நான், இந்த சிறிய மண் பாத்திரத்தில் மிக சிறிய அளவு அல்லவா எடுத்து வந்து கொண்டிருக்கிறேன் ? “ என்று வேதனைபட்டுக் கொண்டே ஆங்காங்கே இளைப்பாறிக் கொண்டே செல்கிறான்.
சிறிது தூரம் வந்தவுடன் ஒரு தாயும், மகனும் வந்து “ வறுமை காரணமாக என் மகனுக்கு பசி நோய் வாட்டுகிறது. உன்னிடம் இருக்கும் பாலைக் கொடு “ என்று கேட்க, “ இதுவோ சிறிய அளவு, முருகனுக்கு எடுத்து செல்கிறேன். இருந்தாலும் குழந்தைக்குப் பசி என்கிறாய். இந்தா வைத்துக்கொள் “ என்று கூற, அந்த சிறுவன் அனைத்து பாலையும் குடித்துவிட்டு ‘ இப்பொழுதுதான் பசி அடங்கியிருக்கிறது. நன்றி ‘ என்று சொல்லி அவர்கள் இருவரும் சென்று விடுகிறார்கள்.
இப்பொழுது இருந்த பாலும் போய்விட்டது. என்ன செய்வது ? என்று தெரியவில்லை. ஆனால் கட்டாயம் இதை அங்கு சென்று சேர்க்க வேண்டும். வீடு திரும்ப முடியாது, வீட்டிலே கோபிப்பார்கள். அங்கு சென்றால் குடங்களை வரிசையாக ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடவேண்டும். அவர்கள்தான் ஒவ்வொன்றாக எடுத்து அபிஷேகம் செய்வார்கள். வெறும் குடத்தை எப்படி அங்கு வைப்பது ? என்று எண்ணி, அருகிலே உள்ள குளத்து நீரை எடுத்து அதிலே இட்டு, “ வேறு வழியில்லை முருகா ! என்னை மன்னித்துவிடு. இதைத்தான் நீ பாலாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் எப்படியாவது கூட்டத்தில் இதை எடுத்து அபிஷேகம் செய்யப்படும்பொழுது தெரியாமல் போய்விடும் “ என்று எண்ணி அச்சிறுவன் தனக்குத் தெரிந்தவகையிலே செய்துகொண்டு செல்கிறான்.
பழனியம்பதியை சென்று அடைந்து அதனை ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்துவிட்டு பிறகு அமைதியாக இருக்கும்பொழுது இவன் முறை வரும்பொழுது இவன் பயந்துகொண்டே இருக்கும்பொழுது அக்குடத்தை திறந்து பார்க்கும்பொழுது அந்த சிறிய மண் பாண்டத்திலிருந்து பால் வந்துகொண்டே இருக்கிறதப்பா. கொட்டிக்கொண்டே இருக்கிறது. என்ன காரணம் ? எது அங்கே ஜெயித்திருக்கிறது ? அவன் செய்த அந்த தர்மபலன் அங்கே வந்துகொண்டேயிருக்கிறது.
எனவே இதுபோன்ற தெய்வ காரியங்களில் முரட்டுத்தனமான, கண்மூடித்தனமான பக்தியைக்கூட இறைவன் ஏற்றுக்கொள்கிறான் என்பதைதான் இது காட்டுகிறது.

மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் ஆலயம் பற்றி?

இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் நன்மை தருவார். எனவே எப்பொழுதுமே சென்று வணங்கவேண்டிய ஆலயங்களில் அதுவும் ஒன்று. இதெல்லாம் சொல்லாடலில் வந்தது. சொல்லுக்கு சொல் நேரடியாக பொருளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இம்மையோ, மறுமையோ, இறைதானே தரவேண்டும்.

ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.