"ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
ஆதவனின் வெம்மைஒளிமீ
தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன்ப ருக்கு முற்றா
மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்கு மெட்டா
முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழு முத்தும்
இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருந்
தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
தருவநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
சரவணக் குமரன் வேலே"
முதல் வரி தொடங்குகின்றது....
"ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
ஆதவனின் வெம்மைஒளிமீ"
இதன் பிரித்து வரும் வரி இப்படி வரும்.....
"ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளி மீது" என வரும், இந்த வரியின் பொருள் என்னவென்றால் ஆலம் என்றால் விஷம் அவுணர் என்றால் அசுரர், அமரர் என்றால் தேவர்கள் அமுதம் என்றால் அது எல்லோரும் அறிந்த சாவில்லா நிலையினை கொடுக்கும் அபூர்வ பானம். அரசுரர்க்கு விஷமானதும், தேவர்களுக்கு அழிவில்லா வாழ்வை கொடுக்கும் அமுதமானது என்பது பொருளாகும்...
அப்படியே அடுத்த வரிக்கான தொடக்க வார்த்தை இங்கே முடிவாய் வரும் "ஆதவனின் வெம்மை ஒளிமீ(து)" அதாவது சூரியனை போல ஜொலிக்கும் என முடிகின்றது, இனி இரண்டாம் வரியினை பார்க்கலாம்....
"தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன்ப ருக்கு முற்றா"
இதனை பிரித்தால் "அரிய தவமுநிவருக்கு இந்துவின் தண் என்று அமைந்து அன்பருக்கு முற்றா" என பிரிந்து வரும். அதாவது சூரியனை போல ஜொலிக்கும்படி வெம்மையால் எரியும் தவமுனிவர்களை குளிர்விக்கும் பொருட்டு நிலவின் குளிர்ச்சி போல என அமைவத.... (இந்து என்றால் நிலா, தண் என்றால் குளிர்ச்சி)
அடுத்தவரியின் தொடக்கம் "அன்பருக்கு முற்றா" அதாவது அன்பருக்கு முடிவில்லா என்பதோடு இரண்டாம் வரி முடிகின்றது இனி மூன்றாம் வரியினை காணலாம்....
"மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்கு மெட்டா"
இவ்வரி "மூலமாம் வினை அறுத்து அவர்கள் வெம் பகையினை முடித்து இந்திரர்க்கும் எட்டா" என பிரிந்து வரும். அதாவது முந்தை தொடர்ச்சியான அடியார்களுக்கு முற்றில்லா துன்பத்தை தரும் மூல வினைகளை அறுத்து அவர்களின் பகையினை அறுத்து போடுவது எது என்பது பொருள், அப்படியே இந்திரருக்கும் எட்டா என அடுத்தவரியின் தொடக்கம் வருகின்றது,
இனி நான்காம் வரியினை காணலாம்...
"முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்"
இந்த வரி "முடிவில் ஆநந்தம் நல்கும் பதம் அளித்து எந்த மூதண்டமும் புகழும் வேல்" என பிரியும். அதாவது தேவர்க்கும் எட்டாத முடிவில்லா பரமானந்த நிலையினை அளித்து எல்லா பெரும் அண்டமும் புகழும் வேல். அந்த வேல் எப்படிபட்ட வேல் என்பதை அடுத்த வரிகளில் சொல்லவருகின்றார் அருணகிரியார், தொடர்ந்து ஐந்தாம் வரியில் பாடுகின்றார்.
"ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழு முத்தும்"
இந்த வரி "ஏல மா யானையின் கோடு அதில் சொரி முத்தும் இன்பணைகள் உமிழும் முத்தும்" என பிரிந்து வரும். அதாவது ஏல என்றால் இணையானது என பொருள், பொருந்தியிருக்கும் பெரும் யானையின் தந்தங்களும் அது கொட்டும் முத்தும் (இது வேழமுத்து) இன்பனைகள் எனும் மூங்கிலில் இருந்து விழும் முத்துக்களும் என்பது பொருள்.
அடுத்தவரி தொடர்கின்றது....
"இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருந்"
இது பிரிந்து "இனி வாடை மான் மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவம் ஆரும்" என பொருள்படும் அதாவது இனி வாடை என்றால் இனிய மணமிக்க என பொருள், மான் மதம் என்றால் மானில் இருந்து வரும் கஸ்தூரி, மணமிக்க அகில் மற்றும் சந்தணம், இலவங்கபடை, நறவம் எனும் மயக்கும் தேன் போன்றவற்றையும்.
அடுத்தவரி தொடர்கின்றது...
"தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
தருவநிதை மகிழ்நன் ஐயன்"
இந்த வரி "தாலம் மா மரம் முதல் பொருள் படைத்திடும் எயினர் தரு வநிதை மகிழ்நன் ஐயன்" என பிரியும். அதாவது தாலம் என்றால் பனைமரம் அப்ப்டியே மாமரம் என பல சொத்துக்களை வைத்திருக்கும் எயினர் எனும் வேடர்குலம் தந்த பெண்ணான வள்ளியுடன் மகிழும் தலைவன் என பொருள்..
இனி அடுத்த வரி வருகின்றது...
"தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவண குமரன் வேலே"
இது புரிந்துகொள்ள சிரமமான வரி அல்ல, போர்களத்தில் தனியாக நடனமாடும் முருகன் அறுமுகன் குகன் சரவணன் குமரன் என்பவன் வேலே.
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்:-
அசுரர்க்கு விஷமாகவும் தேவர்க்கு அமுதமாகவும் விளங்குவதும், சூரியன் போல தகிக்கும் தவயோகிகளுக்கு நிலவினை போல குளிர்ச்சி அளிப்பதும், அடியார்களின் முன்வினைகளான நல்வினை தீவினையெல்லாம் அறுத்தெறிவதும், இந்திரனுக்கும் கிடைக்காத பெரும் முக்தி நிலையினை நிரந்தரமான ஆனந்தத்தை அளிப்பதும் மூன்று அண்டங்களாலும் புகழபடுவது எது?
அது பெரும் யானை தந்தமும் யானை முத்துக்களும் மூங்கில் முத்துக்களும் விளைவதும், கஸ்தூரி அகில் சந்தணம் தேன் என கொட்டுவதும், பனை மாமரம் என பெரும் சொத்துக்களை கொண்டவர்களான வேடர்களால் வளர்க்கபட்ட வள்ளியோடு மகிழ்ந்திருப்பவனும் போர்களத்தில் தனியாக நின்று ஆடுபவனுமான முருகன் அறுமுகன் குகன் என்பவனி வேலாயுதமே அது...
(இங்கே ஒரு கேள்வி எழலாம், முத்து என்பது யானையிடமும் மூங்கிலிடமும் உருவாகுமா என்பது,
உலகில் 7 வகையான முத்துக்கள் உண்டு, அது யானை, மூங்கில், மேக முத்து, நாக முத்து, சிப்பி முத்து, மீன் முத்து மற்றும் வராகம் எனும் பன்றியில் விளையும் முத்து....
(1) மேகமுத்து என்பது மேகத்தில் கட்டும் நீரால் சில நேரம் அபூர்வமாக உருவாவது வெகு அபூர்வமாக அது உருவாகும்,
(2) பாம்பின் விஷம் இறுகி ஒரு முத்து உருவாகும் அது நாகரத்தினம் நாகமுத்து என்றாகும்,
(3) சிப்பியில் உள்ள முத்து எல்லோரும் அறிந்தது,
(4) திமிங்கலம் போன்ற மீன்களின் தலையில் ஒருவித திரவம் சுரக்கும். அந்த திரவம் வயதான காலத்தில் இறுகி முத்தாகும்,
(5) இப்படியே பெரும் காட்டு பன்றியின் தலையிலும் முத்து உருவாகும்,
(6) யானையின் மதநீரானது வயதான காலத்தில் அதன் மந்தகங்களில் முத்தாக மாறும், தந்தத்தின் மேற்பாகம் அது அமைந்திருக்கும்,தந்தத்தை விட விலை மதிப்பான முத்து அது,
(7) மூங்கிலின் உள்ளே விளையும் ஒரு சில விதை போன்றவை இறுகி முத்து போல் மின்னும் அவைதான் மூங்கில் முத்து என்றழைகபடும் இதுவும் விலை உயர்ந்தது)
இந்தபாடல் எளிமையாக முருகனின் வேலாயுத பெருமையும், அப்படியே வள்ளி பிறந்த மலையின் செல்வத்தை மட்டும் சொல்லவில்லை பெரும் ஞானபோதனையினையும் சொல்கின்றது அந்த மறைபொருளை இனி காணலாம்...
பக்தியால் யோகம் எழும், அந்த யோகத்தால் ஞானம் வரும், அந்த ஞானம் முருகனின் தனிபெரும் கருணையாகும், அந்த யோகத்தினால் எழும் ஞானத்தின் விளைவினைத்தான், முருகனின் அருளால் கொட்டும் ஞானமழையின் பலனைத்தான் இந்த பாடலில் விளக்குகின்றார் அருணகிரியார்...
முருகனின் வேல் என்பது அவன் வழங்கும் பெரும் ஞான அருளை குறிப்பது, முருகன் அருளால் எழும் ஞானம் என்பது அசுரருக்கு விஷமாகும் என்றால் அதற்கு மானிட மனதில் அடக்க முடியாமல் எழுந்து பேயாட்டம் ஆடும் ஆசை, பேராசை , வஞ்சகம், அதிகாரம் என எல்லாவற்றையும் அழிக்கும் என்பது பொருள், ஆம் அந்த ஞானம் அசுர குணம் எனும் மாயையில் சிக்கிய ஆசையினை அழிக்கும்.
அப்படியே அன்பு, பக்தி, கருணை, நேயம் என தேவர்களுக்குரிய குணங்களான நல்ல குணங்களை அது வளர்க்கும், ஞானமிருக்கும் இடம் அன்பும் கருணையும் தானே வளரும்
சூரிய வெப்பம் போல வெம்மையான முனிவர்க்கு நிலவு போல வரும் வேல் என்பது கொஞ்சம் கவனிக்கதக்கது
எல்லாவற்றிலும் ஒரு சமநிலை பேணவேண்டிய உலகிது, வெப்பம் மிகுதியானால் வாழமுடியாது அப்படியே குளிர் மிகுதியானால் அதிலும் வாழமுடியாது இரண்டும் சரியாக அமைந்தால்தான் அது சரியான சூழல்
ஆச்சரியமாக பூமி அப்படித்தான் சூரியனில் இருந்து சரியான தொலைவில் நிறுவபட்டிருக்கின்றது, அதில்தான் உயிர்கள் வாழ்கின்றன
தவம் எனும் யோகம் செய்வது உடல் வெப்பத்தை கூட்டும், மூலாதாரத்தில் இருந்து எழும் அக்னி எனும் வெப்பம் உடல் வெப்பத்தை கனிசமாக்கும்
யோகம் செய்வோர் பல சிக்கலை எதிர்கொள்வது இதனாலே, உஷ்ணம் காரணமாக எழும் எல்லா சிக்கலையும் அவர்கள் எதிர்கொள்வாகள், சிலருக்கு யோகம் பல சிக்கலை கொண்டுவரும்
ரமண மகரிஷி உடல் உஷ்ணத்தை கட்டுபடுத்தும் கடுக்காயினை மிக விரும்பினார் என்பது கண்முன் உள்ள எடுத்துகாட்டு
உஷ்ணம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அந்த ரத்த ஓட்டம் சிந்தையினை மாற்றும் அந்த சிந்தை குழப்பத்தில் சிலர் வீழவும் கூடும், சில யோகிகள் பல இடங்களில் வீழ்வது இதனாலே
அந்த உஷ்ணத்தை முருகனின் அருளால் கட்டுபடுத்தலாம், முருகன் சிவ அம்சமானவர், சிவன் தவகோலத்தில் இருப்பவர் அவரும் முழு அக்னியாக கருதபடுபவர் ஆனால் தலையில் கங்கையும் பிறைசந்திரனும் சூடியிருப்பவர் என்பது மானிட மனதுக்கும் உடலுக்கும் உஷ்ணகட்டுப்பாடு அவசியம் எனும் தத்துவத்தை குறிக்கும்
இன்னும் அழுத்தமாக சொன்னால் ஜாதகரீதியாக ஒருவரின் மனநிலையினை கட்டுபடுத்துவது சந்திரனே, இதைத்தான் சிவன் தலையில் வைத்து சொன்னார்கள் இன்னும் பல இடங்களில் இந்துக்கள் சொன்னார்கள்
முருகனை சிந்தித்து தியானித்தால் மனதாலும் உடலாலும் எந்த குழப்பமும்வராது முருகனின் அருளும் ஞானமும் நல்ல மனமும் தெளிவான சிந்தனையும் ஆரோக்கியமான உடலும் கொடுக்கும்
அடுத்து அடியாரின் முற்றுபெறா வினைகளை முருகனின் வேல் அறுத்தெறியும் என்பது வினைபயன்களை சொல்கின்றது, ஒரு மானிட பிறவிக்கு அவர்களின் வினைபயன் முக்கியமானது அந்த வினைபயன் விளைவாக பூமியில் மீண்டும் மீண்டும் மானிடன் பிறக்கும் அவசியம் உண்டாகும்
முருகனின் அருளும் ஞானமும் அந்த வினைபயனை தீர்க்கும் , நல்வினை தீவினை எனும் இரு வினைகளையும் அறுத்தெரியும், அந்த வினைகள் அறுத்தெறியபட்டால் பறவையின் காலில் இருக்கும் கயிறு அறுந்தது போல தளையில் இருந்து ஆன்மா விடுதலை அடையும்
இதைத்தான் சொல்கின்றார் அருணகிரியார்
இந்த ஞானம் முருகன் வழங்கும் பிரபஞ்ச ஞானம் இந்திரனும் அடையமுடியா பேரானந்த நிலையினை அருளும் என்கின்றார் அந்த வரி முக்கியமானது
இந்திரன் போகத்துக்கு அதிபதி அப்படியே தவமிருப்போர் தவத்தையெல்லாம் கலைப்பது அவனது வாடிக்கை
அந்த இந்திரனை வெல்லாமல் தவத்தை வெல்லமுடியாது என்பது மாய ஆசைகளை வெல்லாமல் முக்திநிலை அடையமுடியாது முழு தவபலன் பெறமுடியாது என்பது. அதை வெல்லும் சக்தியினை முருகனின் வேல் எனும் ஞானம் தரும் என்பதை குறிப்பிட்டு சொல்கின்றார் அருணகிரிநாதர்
இந்த பாடல் தவமிருப்போருக்கும் யோகத்தால் இறைவனை அடைய விரும்புவோருக்கும் முருகனின் துணை அவசியம், முருகனின் ஞானமின்றி வெற்றி இல்லை என்பதை வலியுறுத்தில் சொல்வதாயினும் அந்த ஞானத்தால் சம்பாரபந்தத்தில் இருப்போருக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதையும் மறைமுகமாக சொல்கின்றார்
யோகிகளுக்கு முருகன் அருளால் ஏகபட்ட நன்மைகள் விளைவதை போல் இல்லறவாசிகளுக்கு என்னென்ன பலன் வரும் என்பதையும் சொல்கின்றார்
யானைமுத்து என அவர் சொல்வது முருகனை வணங்கினால் மிகபெரிய அதிகாரமும் செல்வாக்கும் வரும் என்பது, மூங்கில் முத்து என்பது மூங்கில் போல் கிளைபரப்பி சொந்தபந்தங்களோடு சுற்றம் சூழ வாழும் ஆசீர்வாதத்தை குறிப்பது
கஸ்தூரி சந்தணம் அகில் என சொல்வதெல்லாம் முருகனை வணங்கும் ஒருவனுக்கு தீரா புகழ் உண்டாகும் என்பதை குறிப்பால் சொல்வது. இதில் கவனிக்கதக்க விஷயமும் உண்டு
மானின் கழிவுதான் கஸ்தூரி, எரிந்து மணம் தருவது , சந்தணம் தேய தேய மணம் தருவது, முருகன் தன் அடியார்களுக்கு அனுவத்தால் புகழ் தருவான், சிரமம் கூட அவர்களுக்கு தீரா புகழாய் முடியும் என்கின்றார் அருணகிரியார்
பனை, மாமரம் என சொல்வது நீண்ட ஆயுளை குறிப்பது. பனை மரம் உயரமாக வளரும் மாமரம் நிழல் கொடுத்து கனிகொடுத்து வளரும், முருகன் அருளால் எல்லா வகை நலன்களும் பயன்களும் கிடைக்கும் என்கின்றார் அருணகிரியார்
முருகனின் அருளாகிய பெரும் ஞானம் யோகிகளுக்கு எல்லையில்லா நலமும் அருளும் பலனும் கொடுத்து இறைபதம் சேர்க்கும் அப்படியே இல்லறத்தாருக்கு லவுகீக வாழ்வில் எல்லா பெரும் ஐஸ்வர்யங்களையும் வழங்கும் என்பதே பாடலின் பொருள்....
வேல் விருத்தம்: 06
---------------------------------
"பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
பாடலினொ டாடலின்எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்
தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரஉப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே."
பாடலின் பொருளை ஒவ்வொரு வரியாக காணலாம்....
"பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
பாடலினொ டாடலின்எலாம்"
இவ்வரி "பந்து ஆடலில் கழங்கு ஆடலில் சுடர் ஊசல் பாடலினொடு ஆடலில் எலாம்" என பிரிந்து வரும். அதாவது பந்தாட்டம் கழங்கு ஆட்டம் ஊஞ்சல் ஆட்டம் ஆகிய ஆட்டங்களின் பொழுது பாடபடும் பாடலில் எல்லாம் என பொருள்......
அக்காலத்தில் பெண்கள் பல வகையான பந்து செய்து விளையாடுவார்கள், பூக்களால் செய்த பந்துகள், கொடிகளை சுற்றி செய்யபட்ட பந்துக்கள், இளமூங்கில் நார்களை வளைத்து செய்யபட்ட பந்துக்களை கொண்டு அவர்களுக்குள்ளாக எறிந்து விளையாடுவார்கள் அந்த பந்தாட்டத்தை சொல்கின்றார்.
கழங்கு ஆடல் என்பது தட்டாங்கல்லை குறிப்பது சில இடங்களில் அதை சுட்டிக்கல் என்பார்கள், பெண்கள் சிறு கற்களை கைகளிலால் மேலும் கீழும் போட்டு விளையாடும் விளையாட்டு அது, அதனை கழங்கு ஆடல் என்கின்றார்....
சுடர் ஊசல் என்பது பொன்னூஞ்சல் ஆடும் விளையாட்டு,
இந்த முதல்வரியில் அருணகிரியார் என்ன சொல்லவருகின்றார் என்றால், அக்காலத்தில் பெண்கள் கூடி விளையாடும் பொழுதெல்லாம் பாடல்களை பாடியபடிதான் ஆடுவார்கள். அது பந்து விளையாட்டு, தட்டாங்கல், ஊஞ்சல், கும்பி, கோலாட்டம் என எதுவானாலும் பாடலை பாடி ஆடுவார்கள்.
அப்படி பாடபெறும் பாடல்களெல்லாம் என முதல் வரியினை முடித்து அடுத்த வரிக்கு செல்கின்றார் அருணகிரியார், அடுத்தவரி இப்படி வரும்....
"பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே"
இந்த வரி "பழம் தெவ்வர் கட்கம் துணித்து இந்திரற்கு அரசு பாலித்த திறல் புகழ்ந்தே" என பிரிந்து வரும். தெவ்வர் என்றால் பகைவர், இங்கே பகைவர் என்பது அசுரர்களை குறிப்பதாகின்றது, பழம் தெவ்வர் என்றால் நெடுநாள் பகைவரான அசுரர் என பொருள்.
கட்கம் என்றால் வாள். ஆனால், சாதாரண வாள் அல்ல சிவனிடமிருந்து பெறும் அபூர்வமான வாள். துணித்து என்றால் அதை அடக்கி வென்று.....
ஆக இரண்டாம் வரியின் பொருள் என்னவென்றால் "தேவர்களின் நீண்டநாள் எதிர்களான அசுரரின் பலமான வாளை வென்று இந்திரனுக்கு மறுபடி அரச பதவி வழங்கிய ஆற்றலை எண்ணி" என பொருள்.....
மூன்றாம் வரி இப்படி வருகின்றது,
"சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்"
இவ்வரி "சந்தம் ஆரு நாள் மலர்க் குழல் அரம்பையர்களும் சசிமங்கை அனையர்தாமும்" என பிரிந்து வரும். அதாவது அழகான ஆரு (அன்றை நாள்) புது மலர்களை கொண்ட பூக்களை தலையில் சூட்டிய அரம்பையர் (ரம்பை, ஊர்வசி போன்ற தேவ கன்னியர்) , சசிமங்கை (இந்திரன் மனைவி இந்திராணி) அனையர் தாமும் (முருகபெருமானை வளர்த்த கார்த்திகை பெண்கள் போன்ற அன்னையரும்) என பொருள்....
தேவ கன்னியரும், சப்த கன்னியரும், தேவ லோக ராணியான இந்திராணியும், கார்த்திகை பெண்களும் அன்னையரும் என்பதோடு முடியும் மூன்றாம் வரி நான்காம் வரியினை தொடங்குகின்றது....
"தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்"
இவ்வரி "தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும் தலைமையும் பெற்ற வைவேல்" என பிரிந்து வரும்....
இவ்வரி புரிந்துகொள்ள சிரமானது அல்ல, தன்னை அன்போடும் பெருமைமிக்க கீர்த்தியோடும் புகழ்ந்துபாடும் முதன்மையானவன் கையின் வேல் அது, யாருடைய வேல் அது?
அதனை ஐந்தாம் வரியில் இருந்து காணலாம்....
"மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரஉப தேச நல்கும்"
இந்த வரி "மந்தாகிநித் தரங்கச் சடிலருக்கு அரிய மந்த்ர உபதேச நல்கும்" என...
மந்தாகினி தரங்கம் என்றால் அலைமோதி ஆர்பரிக்கும் கங்கைய என பொருள், சடிலருக்கு என்றால் அதனை ஜடாமுடியில் கொண்ட சிவனுக்கு என பொருள், அரிய மந்த்ர உபதேசம் என்றால் யாருக்கும் கிடைக்காத மந்திர பெரும் பொருளை உபதேசித்தவன் என பொருள்....
அடுத்தவரி தொடர்கின்றது,
"வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்"
இவ்வரி "வரதேசிகன் கிஞ்சுகச் சிகா அலங்கார வாரணக் கொடி உயர்த்தோன்" என பிரியும், அதாவது சிறந்த ஆச்சாரமும் உபதேசசியுமானவனும் சிவந்த கொண்டை கொண்ட சேவலை (வாரணம் என்றால் சேவல் என பொருள் உண்டு) தன் கொடியாக கொண்டவனுமான....
இனி அடுத்தவரி,
"கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்"
அதாவது "கொந்து ஆர் மலர்க் கடம்பும் செச்சை மாலையும் குவளையும் செம் காந்தளும்" என பிரியும், கொத்து கொத்தாக கடம்ப மாலையும், இருவாச்சி (செச்சை) மாலையும், குவளை பூவும் செந்தாந்தள் பூவும் சூடியவனும் என வரும் பாடல் கடைசி வரியினை தொடுகின்றது....
அதாவது "கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கை வேலே."
நீலசங்கு புஷ்பம் (கூதாளம்) எனும் பூவினையும் மார்பில் சூடியவன் கையில் இருக்கும் வேல் அது என்பது பொருள்
ஆக பாடலின் முழு பொருள் இதுதான்:-
"பந்து விளையாட்டு, தட்டாங்கல், ஊஞ்சல், கும்பி, கோலாட்டம் என எதுவானாலும் பாடலை பாடி ஆடும் பெண்கள் எந்த வேலின் புகழை பாடுகின்றார்கள் தேவர்களின் நீண்டநாள் எதிர்களான அசுரரின் பலமான வாளை வென்று இந்திரனுக்கு மறுபடி அரச பதவி வழங்கிய ஆற்றலை எண்ணி தேவ கன்னியரும், சப்த கன்னியரும், தேவ லோக ராணியான இந்திராணியும் , கார்த்திகை பெண்களும் அன்னையரும் தன்னை அன்போடும் பெருமைமிக்க கீர்த்தியோடும் புகழ்ந்துபாடும் முதன்மையானவன் கையின் வேல் அது
அது யாருடைய வேல்?
அலைமோதும் கங்கையினை தலையில் தாங்கிய சிவனுக்கு அபூர்வ மந்திர உபதேசனை செய்தவனும்,சிறந்த ஆச்சாரமும் உபதேசசியுமானவனும் சிவந்த கொண்டை கொண்ட சேவலை தன் கொடியாக கொண்டவனும், கொத்து கொத்தாக கடம்ப மாலையும், இருவாச்சி (செச்சை) மாலையும், குவளை பூவும் செந்தாந்தள் பூவும் நீலசங்கு புஷ்பம் அணிந்தவனுமான முருகபெருமானின் வேல் அது....
ஆம், இப்பாடல் முருகனின் வேல் பெருமையினை பூலோக பெண்களும், வானலோக பெண்களும் போற்றி பாடுவதாக உள்ளதை கவனிக்கலாம், இது பெண்கள் முருகனின் வேலை போற்றுவது போல் அருணகிரியாரால் பாடபட்டிருந்தாலும் அதன் மறைபொருள் மிக நுணுக்கமானது. இந்த பாடலில் பெண்கள் முருகனின் வேல் ஆயுதத்தை போற்றுகின்றார்கள். அதுவும் ஒரு சில அடையாளங்களோடு போற்றுகின்றார்கள் என்பது சாதரணமாக சொல்லும் வார்த்தை அல்ல...
இந்துமதம் பெண்ணை இயக்கும் மூல சக்தியாக காட்டியமதம், அன்னை ஆதிபராசக்தி என மூலபெரும் இயக்கசக்தியினையும் அதை தொடர்ந்த முப்பெரும் தேவியரையும் அது இயக்கும் பெரும் சக்தியாக காட்டிற்று, அந்த சக்திகள் முருகனின் ஞானத்தை வணங்குகின்றன என்பதுதான் பாடலின் அடிப்படை பொருள், பந்து வீசும் பெண்கள் என்பது வானவெளி கிரகங்களை இயக்கும் பராசக்தி, தட்டாங்கல் ஆடும் பெண்கள் என்பது நட்சத்திரங்களை மின்னவைக்கும் பராசக்தி என்பது இப்பாடலின் மறைபொருளாகும்.
இன்னும் நுணுக்கமாக சொல்கின்றார் அருணகிரியார்,
அந்த பெரும் சக்தி வானத்தையும் பூமியினையும் ஆளும் பராசக்தி ஞானத்தை போற்றுவது மட்டுமல்ல, அது சிவனின் தலையிலே குடியிருக்கின்றது சிவனின் பாதியாக ஆளுகின்றது அந்நிலையிலும் சிவனோடு சேர்ந்து ஞானம் படிக்கின்றது என்கின்றார்.
ஆம் சிவனுக்கு முருகன் பாடம் சொன்னான் என்பது, சிவனுக்கானது மட்டுமல்ல சிவன் தலையில் கங்கையாகவும் உடலில் சக்தியாகவும் இருக்கும் அன்னைக்கும் சேர்த்தே சொன்னான் என்பதே சரி, அன்னை சக்தியின் அம்சமே வானலோக சப்த கன்னியர், இந்திராணி என்பவர்கள் அவர்களும் வேல் புகழ் பாடினார்கள் என்பது, அன்னை சக்தியே வேல் ஆயுதத்தை கொண்டாடினாள் என்பதை சொல்கின்றது......
இந்த இடத்தில் மெல்லிய சந்தேகம் எழும், அன்னைதானே முருகனுக்கு வேல் கொடுத்தாள் பின் ஏன் அன்னையே அதனை போற்ற வேண்டும் என்பது, ஆம் அது அன்னை கொடுத்த ஞானம்தான். ஆனால் முருகனுக்கு அது கிடைத்தபின் இன்னும் அதன் ஒளியும் தெளிவும் பிரகாசிக்கின்றது, மிகுந்த ஒளிமிக்கதாக மாறுகின்றது. சிவனின் நெற்றி ஒளியில் உதித்த முருகன் அன்னையின் ஞானவேலை பெற்றபின் இருவரும் கலந்த மிகபெரிய ஞான சக்தியாகின்றான் ,அந்த ஞானத்தில்தான் சிவனுக்கே போதிக்கின்றான்.
முருக வழிபாடு என்பதும் வேல் வழிபாடு என்பதும் சாதாரணம் அல்ல, அது அன்னை பராசக்தியே தன் இன்னொரு அம்சத்தில் செய்யும் வழிபாடு. அதை தானும் செய்வதாக மனபூர்வமாக மகிழ்கின்றார் அருணகிரி நாதர். இங்கே இன்னும் கவனிக்க வேண்டிய விஷயம் உண்டு மண்ணுலக பெண்கள் விண்ணுலக பெண்கள் என இரு சக்தியினை சொல்கின்றார் பட்டர்.
அதாவது முருகன் தேவலோக பெண், பூலோக பெண் என இருவரை மணந்தவன். விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் முதல் இணைப்பினை கொடுத்தவன். அதன் தாத்பரியமான பொருள் என்னவென்றால் தேவலோக ஞானமும் பூலோக ஞானமும் ஒருங்கே கொண்டவன் முருகன், அந்த முருகனை போற்றி வணங்கினால் அவனை நினைத்து வழிபட்டால் தேவலோக அருளும் பூலோக செல்வமும் ஒருங்கே கிடைக்கும் என்பதே....
பாடலின் கடைசி வரியும் வெறும் மலர்களை மட்டும் சொல்லிவிட்டு நகரவில்லை, மலர் வழிபாடு என்பது வெறும் மணத்துக்கோ அடையாளத்துக்கோ சமர்பிக்கபடுவதில்லை, இந்துமரபில் மலர்ந்த மலர் மானிட மனதையும் வாழ்வின் நிலையாமையினையும் குறிக்கும் குறீயீடாக இருந்தாலும் இன்னும் சில விஷயங்களும் பூச்சூடுதலில் உண்டு. இந்துக்கள் சொன்ன ஒவ்வொரு மலரிலும் மனரீதியான உடல்நீதியான மருத்துவ சக்திகளும் உண்டு, அம்மாதிரி பூக்களைத்தான் பூஜையில் வைக்க சொன்னார்கள்.....
முருக வழிபாட்டில் கடம்ப மலர் உள்ளிட்டவை மிக முக்கியமானவை இன்னும் சில மலர்கள் உண்டு. முருகன் அதை விரும்பி சூட்டியதாக சொன்ன இந்துமதம் அதன் மூலம் மானிடரும் பெரும் பலனை பெற வழி சொன்னது, மலர்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை, சில மலரின் மணங்கள் மனதுக்கு அமைதியும் இனம்புரியா உற்சாகத்தையும் தெளிவையும் கொடுப்பவை, அப்பொழுது சிந்தனை தெளிவாகும் தெளிந்த சிந்தனை செயலை வெற்றியாக முடித்து கொடுக்கும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இங்கு கடம்பமலர், செங்காந்தள், இருவாச்சி , குவளை, சங்கு புஷ்பம் என பாடுகின்றார் அருணகிரியார்....
ஆம் கடம்ப மலர் நல்ல ஆரோக்கியம் தரும் செங்காந்தள் பூ பெரும் தைரியம் தரும், இருவாச்சி கவலையினை ஒழிக்கும், குவளை பூ செல்வாக்கு தரும், நீல சங்கு புஷ்பம் தரித்திரத்தை ஒழிக்கும்.
பாடலின் மறைபொருள் இதுதான்,
இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் அந்த பெரும் சக்தி வானத்தையும் பூமியினையும் இயக்கும் அதே சக்தி முருகபெருமானின் புகழை பாடி அவன் வேலை வணங்குகின்றது, சிவனே அந்த வேல்தாங்கிய நாதனிடம் இருந்து உபதேசங்களை பெற்று கொள்கின்றார்.
அந்த ஞானம் மிக உன்னதமானது தேவர்களும் மும்மூர்த்திகளுமே பெற்றுகொள்ள காத்திருக்கும் அளவு அதி உன்னதமானது, அந்த வேல் எனும் பெரும் ஞானத்தை தாங்கி நிற்கும் முருகனை வணங்கினால் தேவர்களும் மும்மூர்த்திகளும் பராசக்தியும் பெற்ற ஞானத்தை நாமும் அடையலாம் என உருகி பாடுகின்றார் அருணகிரியார்.
இப்பாடல் யோக சித்தாந்தித்திலும் பொருள்படும்,
பூமியில் உள்ள இந்த உடலில் பிரபஞ்ச சக்திகளும் குடியிருக்கின்றன, முறையான யோகத்தில் இந்த உடலை அடக்கினால், பந்து போலவும் , தட்டாங்கல் போலவும் அலைபாயும், யோகத்தில் மூவகை குணங்களையும் அடக்குதல் அவசியம், சேவல் அடையாளம் என்பது அதிமுக்கியமான ரஜோ குணத்தை கொண்டிருப்பது, முருகன் அருளால் அக்குணம் அடங்கி சாத்வீக குணம் ஓங்கும் என்பதுதான் சேவலை குறிக்கும் வரியின் பொருள். இந்த மனதை முருகன் பெயரால் அலையவிட்டு அடக்கி சிந்தையினை அடக்கி ஒருமுகபடுத்தினால் யோகத்தில் மேல் எழலாம், ஒவ்வொரு சக்கரம் துலங்கும் பொழுதும் மானிட நிலையில் இருந்து தேவர்கள் நிலைக்கு செல்லலாம். அந்த யோகத்தின் கடைசி சக்கரம் துலங்கும் பொழுது சிவன் முருகனிடம் பெற்ற அதி உன்னத உபதேசத்தை, பிரம்மன் பெற்ற மந்திரத்தை நாமும் பெறலாம் என்பது இன்னொரு சூட்சும பொருளாகும்.
வேல் விருத்தம்: 07
---------------------------------
"அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
அநந்தமா யினுமேவினால்
அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
அறியாது சூரனுடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்
கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன்மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே"
முதல் வரியில்,
"அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிர அநந்தமா யினுமேவினால்" என ஒலிக்கின்றது, அது.... "அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி அநந்தம் ஆயினும் மேவினால்" என பிரிந்து வரும்.
அதாவது ஒரு கோடி அண்டங்கள் என்றாலும், எண்ணமுடியா அளவு (அனந்தம்) பெரும் மலைகள் என்றாலும் அவை எதிர்த்து வரும் பொழுது (மேவினால்) என பொருள்.....
இரண்டாம் வரியில்,
"அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக்" என வரும், அது "அடைய உருவி புறம் போவது அல்லது தங்கல் அறியாது சூரன் உடலை" என பிரிந்து வரும்.
அவற்றுக்குள் நுழைந்து (அடைய உருவி) அதாவது முன் சொன்ன அண்டத்துக்குள்ளும் மலைகளுக்குள்ளும் உருவி சென்று துளைத்து பின்புறமாக வருமே தவிர அங்கே குத்தி தங்கி நிற்காது (தங்கல் அறியாது) என்பது பொருள். அதாவது எவ்வளவு பெரிய அண்டம் , கணக்கில்லா மலைகள் என்றாலும் முருகபெருமானின் வேல் துளைத்து சென்று மறுபுறம் வரும் அளவு ஆற்றல் வாய்ந்தது அதை தடுக்கும் சக்தி யாருக்கும் எதற்கும் இல்லை என்பது பொருள்...
மூன்றாம் வரியில்,
"கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியு மதுசெங்" என வரும், அது "கண்டம் பட பொருது காலனும் குலைவு உறும் கடிய கொலை புரியும் அது செம்" என பிரியும்,
அதாவது சூரபத்மனை (முந்தைய வரியின் முடிவு வார்த்தை) துண்டு துண்டாக (கண்டம்) வெட்டி எமனும் அச்சபடும் வண்ணம் போர்களத்தில் எதிரிகளை கொடிய வகையில் கொல்லும் என்பது பொருள், எமனே அஞ்சும் வண்ணம் சூரனின் உடலை துண்டு துண்டாக்கியது என பொருள்...
நான்காம் வரியில்,
"கநக அசலத்தை கடைந்து முனை இட்டு கடுக்கின்ற துங்க நெடு வேல்" என வரும், அது "கநக அசலத்தை கடைந்து முனை இட்டு கடுக்கின்ற துங்க நெடு வேல்" என பிரந்து வரும்,
அசலம் என்றால் மலை, முந்தைய வரியில் செம் எனும் வார்த்தை முடிவதை கவனிக்கலாம், ஆக செம் கநக அசலம் என்றால் பொன் மயமான மலை என பொருள் அது திருகயிலாயத்தை குறிப்பது. அந்த கயிலாயத்தினை பெயர்த்து கடைந்து முனையாக கொண்டது போல் கூர்மையான முனை கொண்ட உறுதியான வேல் என பொருள், அதாவது மிக பரிசுத்தமான வேல் என பொருள்....
அடுத்து ஐந்தாம் வரியில்,
"தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன்" என வரும், அது "தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட தானவ அந்தகன் மாயவன்" என பிரிந்து பொருள் தரும்,
அதாவது தண்டம் என்றால் கதாயுடம், தநு அல்லது தனு என்றால் வில், திகிரி என்றால் சக்கரம், சங்கு என்றால் எல்லோரும் அறிந்தது, கட்கம் என்றால் வாள், ஆக கதாயுதம் வில் சங்கு வாள் என எல்லாம் கொண்டவனும் அசுரர்க்கு எமன் (தானவ அந்தகன்) போன்றவனும் யாயரூபமானவனும் என பொருள்.....
பகவான் விஷ்ணுவினை இப்படி குறித்து சொல்கின்றார் அருணகிரியார், இன்னும் சொல்கின்றார் அடுத்த வரியில்,
"தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல்" அதாவது "தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல்" என பிரிந்து வரும்,
தழல்விழி என்றால் நெருப்பு கண்கள், கொடுவரி என்றால் வளைந்த பெரிய கோடுகள், பருவுடல் என்றால் பெரும் உடல், பல தலை என்றால் ஏராளமான தலைகள், தமனிய (பொன்னிறமான சுருள்) சுடிகையின் (படுக்கையின்) மேல் படுத்திருப்பவர் என பொருள் இதுவும் விஷ்ணுவினை குறிக்கின்றது.....
ஏழாம் வரியில்,
"வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே" என வரும். அது "வண்டு ஒன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை மங்கையும் பதம் வருடவே" என பிரிந்து பொருள் தரும்,
அதாவது வண்டாடும் கமலம் (வண்டு பொய்க்கும் தாமரையில்) இருக்கும் மங்கையும், கடலை ஆடையாக கொண்ட மங்கையும் வருடம் பாதம் என்பது பொருள்...
இந்த வரியில் சீதேவியும் பூமாதேவியும் அவர் காலடியில் அமர்ந்திருக்கின்ற கோலம் கொண்ட பெருமாளை சுட்டிகாட்டும் அருணகிரியார் இறுதி வரியினை பாடுகின்றார்...
"மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கை வேலே" அதாவது " மதுமலர் கண் துயில் முகுந்தன் மருகன் குகன் வாகைத் திருக் கை வேலே" என பிரிந்து பொருள் தரும்....
மதுமலர் கண் துயில் என்றால் தேனை கொண்ட மலர்கள் போல கண்களை மூடி உறங்கும் முகுந்தன் எனும் விஷ்ணுவின் மருமகனும் குகமூர்த்தி (முருகன்) வெற்றி காணும் கையில் விளங்கும் வேலாயுதம் அது என்பது பொருள்....
ஆக பாடலின் முழு பொருள் இதுதான்,
"பெரிய அண்டங்களையும் கணக்கில்லா பெரும் மலைகளையும் துளைத்து சென்று மறுபுறம் ஊருவி வரும் வேல் எது, எதனாலும் தடுக்கமுடியாத வேல் எது?
பொல்லா சூரனின் உடலை களத்தில் எமனும் அஞ்சுமாறு துண்டு துண்டாக வெட்டி போட்ட வேல் எது?
திருகயிலாயம் எனும் மேரு மலையினை கடைந்து செய்தாற்போன்ற மிக புனிதமான வேல் எது?
அது யாருடைய வேல் என்றால்,
கௌமோதகி எனும் கதை, சாரங்கம் எனும் வில், சுதர்சன சக்கரம், பாஞ்சான்யம் எனும் சங்கு, நந்தகம் எனும் வாளை கொண்டவனும், அசுரர்களுக்கு எமன் போன்றவனும், நெருப்பை உமிழும் கண்களும் வளைந்த பெரும் கோடுகளும் பருத்த உடலும் பல தலையும் கொண்டவனும், தங்கம் போல் ஜொலிக்கும் படுக்கையில் படுத்திருப்பவனும், வண்டு மொய்க்கும் தாமரையில் இருக்கும் சீதேவியும், கடலையே ஆடையாக கொண்ட பூமாதேவியும் பாதம் பணிபவனும், தேன் சிந்தும் பூக்களை போல கண்களை மூடி துயிலும் விஷ்ணுவின் மருகமானான குகன் எனும் முருகபெருமானின் வெற்றிகரத்தில் இருக்கும் வேல் அது"
இதுதான் பாடலின் பொருள்,
இந்த பாடலில் முருகனின் வேல் பெருமையினை சொல்லும் அருணகிரியார் அப்படியே ஞான பெரும் போதனையினையும் உலகை காக்கும் பெரும் வடிவின் தத்துவத்தையும் சொல்கின்றார். ஆம், முருகனின் வேல் எல்லா அண்டங்களையும் துளைக்கும் எண்ணற்ற மலைகளை தகர்க்கும் என்பதெல்லாம் அவர் எல்லா மாய ஆசைகளையும் மயக்கங்களையும் மாய உலகங்களையும் முருகனின் ஞானம் துளைத்து ஒழிக்கும் என்பதாகும், கணக்கற்ற பெரும் மலைகள் என்பது பெரும் தடையாக வரும் துன்பங்களும் கலக்கமுமாகும். எவ்வளவு பெரிய மாயலோகத்தையும் உடைக்கும் ஞானம் முருகனுடையது, அதை தடுக்கும் மாய சக்தியோ இல்லை இதர சக்தியோ எதுவுமில்லை, யோகம் எனும் மாபெரும் போராட்டத்தில் முருகனின் ஞானவேல் எல்லா இக்கட்டையும் உடைத்து வெற்றிதரும் அதில் தோல்வியே இல்லை என்பது முதல் பொருள்.....
சூரபத்மன் மாயாதேவியின் மகன், மாயையினால் உருவான பெரும் பிம்பம் அந்த மாயையினை முருகனின் வேல் வீழ்த்தி எமனுக்கே அச்சம் கொடுத்தது என்பது எதை குறிக்கின்றது. யோக ஞானம் என்பது மாயையினை வீழ்த்தி நிலைபெறும், யோக ஞானத்தில் நிலைபெற்றோருக்கு முழு ஞானம் பெற்றோருக்கு மரணமே இல்லை என்பதை சூசகமாக சொல்கின்றார் அருணகிரியார்...
முருகனை போற்றும் பாடலில் அவன் ஞானத்தை போற்றும் பாடலில் ஏன் திருமாலை அதுவும் அந்த பள்ளிகொண்ட காட்சியில் அழகாக சொல்கின்றார் அருணகிரியார் பாடலின் முழு பொருளும் அதில்தான் அடங்கியிருக்கின்றது. எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் உபதேசத்துக்குரியவர்கள் அதாவது உபதேசத்தால் தெளிவு கொடுத்தவர்கள் முருகனும் விஷ்ணுவும்,
முருகன் பிரம்மனுக்கும் சிவனுக்குமே போதித்தார், திருமாலின் போதனைகள் பலவானவை என்றாலும் கீதையில் அவர் சொன்ன போதனை ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உரியது. இங்கு சூசகமாக ஏன் விஷ்ணு தூங்குகின்றார் என அருணகிரியார் சொல்கின்றார் என்றால், இந்த உலகின் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அல்ல மொத்த உலகுக்குமே காவல் காக்கும் பொறுப்பு விஷ்ணுவுடையது. அந்த பகவான் விஷ்ணு பாம்பு படுக்கையில் ஏன் நிம்மதியாக உறங்கமுடிகின்றது என்றால், எல்லாவற்றையும் காக்க என் மருமகனான முருகன் இருக்கும் பொழுது தான் ஏன் விழித்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும் நிம்மதியிலும் கண்மூடி உறங்குகின்றாராம்....
கீதையில் "அர்ஜூனா யுத்தகளத்தில் நான் ஸ்கந்தன்" என்ற வரியினை கொஞ்சம் மாற்றி கவித்துவமாக சொல்கின்றார் அருணகிரியார்.
கண்ணன் ஞானகடல், அவனின் கீதை அந்த கடலின் ஒரு துளிதான். பெரும் ஞானத்துக்கும் அதன் மூலம் உலகை காக்கவும் பொறுப்பானவன் அந்த நாராயணன்...
அந்த நாராயணனே முருகன் இருக்கும் நம்பிக்கையில் ஒய்வெடுக்கின்றான் என்றால், முருகனின் ஞானம் அந்த நாராயணின் ஞானத்துக்கும் காவலுக்கும் ஈடானது. முருகன் மும்மூர்த்திக்கு ஈடான தெய்வம். அவன் ஞானம் கீதையின் தெளிவினை கொடுக்கும் ஆத்ம தெளிவினை கொடுக்கும் என பாடலில் சொல்கின்றார் அருணகிரியார்....
ஞானம் எனும் பெரும் தெளிவும் பக்குவமும் கீதையில் கிடைப்பது போலவே முருகனின் அருளில் அவன் புகழ் பாட பாட கிடைக்கும் யோகம் அதனால் கைகூடும் என்கின்றார் அருணகிரியார் , கீதையும் சில யோக வழிகளை போதிக்கின்றது, அந்த பலனை முருகன் பக்தியிலும் பெறலாம் என்கின்றார் யோகியான அருணகிரியார்....
வேல் விருத்தம்: 08
---------------------------------
மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்
தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா
உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்
சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்
சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா
தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.
இனி பாடலின் பொருளை ஒவ்வொரு வரியாக காணலாம்.....
"மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்"
என்பது முதல் வரி , இது "மா முதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய் வலிய தானவர் மார்பு இடம்" என பிரிந்து பொருள் தரும்.
அதாவது "மா முதல் தடிந்து" என்றால் பெரிய மரமாக நின்றிருந்தவனையும் (சூரபத்மனை), "தண்கு மல்கு கிரி ஊடுபோய்" என்றால் குளிர்ந்த ஏழு மலைகளையும் ஊடுருவி, "வலிய தானவர் மார்பு இடம்" என்றால் வலிமையான அசுரர் (தானவர்) இடது மார்பில் (இதயம் வழியாக) ஊடுருவி சென்றதுதும்....
இனி இரண்டாம் வரி அது இப்படி வரும்,
"வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்"
இந்த வரி "வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத்" என பிரிந்து பொருள் தரும்.
அதாவது "வழி கண்டு" என்றால் முந்தைய வரியின் தொடர்ச்சியாக சூரன பிளந்து அப்புறமாகச் சென்றும்,
"கமலபவத்தனை" என்றால் தாமரைப் பூவினில் வாசம் செய்யும் பிரமனை, "சிறை இட்டு" பிரணவப் பொருளை தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்தும் , "மகவான் தன்னை சிறைவிடுத்து" என்பது மகா யாகங்கள் (100 அஸ்வவமேத யாகங்கள்) செய்த இந்திரனை சிறைவிடுத்ததும் என பொருள்
அதாவது சூரனின் மார்பில் புகுந்து வெளிவந்ததும், பிரணவ மந்திரத்தை மறந்த பிரம்மனை சிறையில் அடைத்ததும், இந்திரனை சிறைவிடுவித்ததும் என பொருள்...
அடுத்த மூன்றாம் வரி இப்படி வரும்,
"தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா"
இந்த வரி "ஓம இருடி தலைவர் ஆசி பெற்று உயர் வானில் உம்பர்சொல் துதி பெற்று நா" என பிரிந்து பொருள்தரும்,
அதாவது "ஓம இருடி தலைவர் ஆசி பெற்று" யாகங்கள் செய்யும் முனிவர்களின் வாழ்த்து பெற்று, "உயர் வானில் உம்பர் சொல் துதி பெற்று" வானில் வசிக்கும் தேவர்களால் துதிகளை பெற்றதுமான என பொருள்.....
நான்காம் வரி இதோ,
"உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்"
இந்த வரி "உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்" என பிரிந்து வரும்.
அதாவது "நா வன்னை உடைய கீரனின் துதி பாடல்களைப் பெற்று" என்பது மதுரை தமிழ்சங்கத்து தலமை புலவராக இருந்த நக்கீரரை குறிப்பது, அவரின் துதிபாடல்கள் என்பது திருமுருகாற்றுபடையினை குறிப்பது, திருமுருகாற்றுபடையில் போற்றபெற்றதும், இந்த உலகில் யாருக்கும் இல்லா புகழை கொண்ட வேல் அது"......
இனி ஐந்தாம் வரி வருகின்றது,
"சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்"
இந்த வரி "சோமகலச ப்ரபா அலங்கார தர ஜடா சூடி கால அந்த காலர்" என பொருள் தரும்,
"சோம கலசம்" என்றால் சோமபானத்தை வைத்திருக்கும் கிண்ணம் போன்ற பிறைச் சந்திரன் என பொருள், சந்திரன் மயக்கம் தருவது என்பதை இப்படி கவித்துவமாக சொல்கின்றார் அருணகிரியார். "பிரபா அலங்கார" என்றால் ஒளிவீசும் அலங்காரத்தை , "ஜடா சூடி தர "ஜடா முடியில் தரித்துள்ளவரும் என பொருள் இது வெள்ளி போன்ற கங்கையினை சூடியிருப்பதை சொல்கின்றது......
"கால அந்த காலர்" என்றால் எமனுக்கே எமனானவர் என பொருள்....
அதாவது சந்திரனையும் கங்கையினையும் ஜடாமுடியில் அணிந்தவரும் எமனுக்கே எமனானவருமான சிவன் என பொருள்....
அடுத்து 6ம் வரி,
"துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்"
இதன் பொருள் "துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசம் சூலம் துரக கேசரம் அம்பரம்" என வரும்,
அதாவது "துங்க ரட்ச துரோண" என்றால் பலமான உலகை பாதுகாக்கும் வில் என பொருள், "கட்கம் குலிசம் சூல" என்றால் வாள், வஜ்ராயுதம் சூலம் இவைகளைக் கொண்டுள்ளவர், "துரக" என்றால் குதிரை உருவம், கேசரம் என்றால் சிங்கம் , அம்பரம் என்றால் வானம் கடல் போன்ற பிரமாண்டம் என பொருள். அதாவது மிக பலமான வில்லும், சக்திவாய்ந்த வாளும் வஜ்ராயுதம் சூலம் இவற்றை கொண்டவரும், குதிரைஉருவத்தை கொண்டு சிங்கத்தின் கம்பீரத்துடன் வானத்தையும் கடலையும் காப்பதும்....
இனி ஏழாம் வரி வருகின்றது,
"சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா"
இதன் பொருள் "சேம வடவாம் அம்புயம் பரண சங்கு ஆபரண திகம்பர த்ரியம்பக மகா" என பிரிந்து வரும், சேம என்றால் பாதுகாத்தல், வடவா என்பது இங்கு வடவாமுக்கினி எனும் அக்கினியினை குறிக்கின்றது, இது பெண்குதிரை வடிவில் கடலுக்கு அடியில் இருப்பதாகவும் ஊழி காலத்தில் இந்த அக்னி எழுந்து வரும் என்பதும் ஐதீகம்
அந்த வடவாமுக்கினியினையே அபிஷேகமாக கொண்டவரும் (அம்புய), "சங்கு ஆபரண" என்றால் சங்கை ஆபரணமாக அணிந்தவரும், திகம்பர என்றால் ஆடை மேல் கூட பற்றற்றவருமானவரும், திரியம்பக என்றால் முக்கண்ணன் என பொருள்.....
ஆக வடவாமுக்கினியால் அபிஷேகம் செய்யபடுபவரும், சங்கு ஆபரணத்தை தரித்தவரும், பற்றற்ற கோலம் கொண்டவருமான முக்கண்ணன்....
இனி எட்டாம் வரி,
"தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே"
இது "தேவ நந்தன கஜாநந சகோதர குகன் செம்பொன் திருக்கை வேலே" என பொருள் தரும்,
அதாவது முந்தைய வரியின் முடிவான மகா என்பதை சேர்த்து "மகாதேவ நந்தனும்", மகாதேவனின் குமாரனும், "கஜானாய சகோதரன்" விநாயகபெருமானின் சகோதரனுமாகிய, " குகன் செம்பொன் திருக்கை வேலே" குகன் எனும் முருகபெருமானின் தங்க திருக்கையில் இருக்கும் பொன்வேலே......
ஆக பாடலின் பொருள் இதுதான்,
"பெரிய மரமாக நின்ற சூரனை பிளந்து, ஏழு மலைகளையும் ஊடுருவி அங்கு வசித்த அசுரர்களின் இடபாகத்தில் ஊடுருவி சென்றதும், தாமரை பூவில் வாழும் பிரம்மன் பிரணவ மந்திரத்தை மறந்ததால் அவனை சிறையில் இட்டதும், நூறு பெரும் யாகங்களை செய்த இந்திரனை சிறையில் இருந்து விடுவித்ததும் யாகங்கள் செய்யும் முனிவர்கள் வாழ்த்தும் வானலோகத்தின் தேவர்கள் வாழ்த்தும் தலமை புலவரான நக்கீரரின் பாடலினால் பாடபெற்று அழியா புகழ்கொண்டது எது?
அது தலையில் சந்திரனும் கங்கையும் கொண்டவரும், எமனுக்கே எமனானவரும், பெரிய வில், வாள், சூலம், வஜ்ராயுதம் எல்லாம் கொண்டவரும், குதிரைமுகம் கொண்ட வடாவாமுகாக்கினியை அபிஷேகமாக கொண்டவரும், வெண்சங்கை ஆபரணமாக அணிந்தவரும், எத்திசையிலும் பற்றற்றவரும்,முக்கண் கொண்டவரான சிவனின் மகன், விநாயகரின் தம்பியான குகன் எனும் முருகபெருமானின் திருகையில் விளங்கும் வேல் என்கின்றார் அருணகிரியார்.....
பாடலின் நேரடி பொருள் இது என்றாலும் அதன் சூசகமாக மறைபொருளை தியானித்தால் அறிந்து கொள்ளலாம் அது சூட்சுமமானது, அது யோகதியானத்தில் இறைவனை வழிசெய்யும் சூட்சுமத்தை சொல்கின்றது,
மாமரம் என்றால் பெரிய மரம், சூரன் மரமாக தளைத்தான் என்பது மாய ஆசைகள் மரம்போல் ஆழ வேர்விட்டு பெரிதாகி நிற்கும் அதனை அகற்றுவது சுலபமல்ல, அதுவும் ஏகபட்ட வேர்கள் கொண்ட மரம் வெட்ட வெட்ட தளிர்க்கும் அது கிளைபரப்பி பல வகை பறவைக்கும் விலங்குக்கும் இடம் கொடுத்திருக்கும் அதைஅழிப்பது சுலபமல்ல என்பதை குறிப்பது,
பெரிய மரத்தை அழிக்க முடியாதது போல, அழித்தாலும் அதன்வேரில் இருந்து அது துளிர்க்கும் என்பது போல மாயைகள் மனதில் நிரம்பியிருக்கின்றன, சூரனை பிளந்த வேலானது ஞானவேலாக மானிட மனதின் மாயை அகங்காரங்களையும் தன் ஞானத்தால் துடைத்தெறியும் என்பது முதல் பொருளாகும்...
ஆம், முருகனை தியானிக்க அவன் அருளில் மனதில் நிலைத்து நிற்கும், வெட்ட வெட்ட துளிர்க்கும் அசுர குணம் ஒழியும். ஏழு மலைகளை துளைத்து செல்வது என்பது உடலில் இருக்கும் சக்கரங்களை சொல்வது. மூலதாரம், சுவாஷிஸ்தானம், மணிபூரகம், அனாகம், விசுத்தி, ஆக்யா, துரியம் எனும் ஏழு சக்கரங்களை குறிப்பது, முருகனின் ஞானம் இந்த ஏழு சக்கரங்களையும் தூண்டி முழு யோக சித்தி கொடுக்கும் மூலாதார சக்தியினை துரியம் எனும் ஏழாம் சக்கரம் வரை கொண்டுவந்து பெரும் ஞானநிலை கொடுக்கும் என்பது இரண்டாம் பொருள்....
அதில் சூசகமாக அரசுரரை இடபக்கம் துளைத்த வேல் என்பது, மனதின் எல்லா மாயைகளையும் வேறறுத்து ஞானம் கொடுத்த வேல் என்பதை குறிக்கின்றது. பிரம்மன் பிரணவ மந்திரத்தை மறந்ததால் சிறையிடபட்டான் என்பது ஓம் எனும் பிரணவ மந்திரம் சொல்லாத யோகம் சித்தியாகாது, யோகத்தில் ஓம் எனும் பிரணவமந்திரம் அவசியம் என்பது மூன்றாம் பொருள்....
இந்திரன் சிறைபட்டான் என்பது ஆத்மாவின் மேலான சிந்தனைகள் மாயையினாலும் ஆசை மயக்கத்தாலும் சிறைபட்டிருக்கின்றன அதனை முருகனின் ஞானம் வெட்டி வீழ்த்தி நல்ல மேல்நோக்கிய சிந்தனைகளை வளர்க்கும் என்பது நான்காம் பொருள்.....
தேவர்களை முருகன் விடுவித்தான் என திருமுருகாற்றுபடை சொல்வது ஆத்மா மாயகட்டுகளில் இருந்து முருகனால் மீட்கபட்டது என்பதையே அப்படிபட்ட ஞானத்தை அருள்பவன் முருகன்,
இன்னும் இப்பாடல் முருகன் சிவனின் மகன், விநாயகனின் தம்பி என்பதை ஏன் அழுத்தி சொல்கின்றதென்றால் விஷயம் இல்லாமல் இல்லை. சிவன் எப்பொழுதும் தவகோலத்தில் இருப்பவர், மனசஞ்சலத்தை கொடுக்கும் சந்திரனையே தன் முடியில் கட்டி வைத்து தவமிருப்பவர், ஊழிதீயான வடவாமுக்கினியினை தன் மேல் அபிஷேகமாக கொள்ளும் அளவு தவவலிமை கொண்டவர், எமனுக்கே எமனானவர். அந்த சிவனின் நெற்றிகண்ணில் இருந்து உதித்தவன் முருகன் என்பது சிவனின் சக்தியினை தன்னில் கொண்டிருப்பான் முருகன் என்பதை சொல்கின்றது.....
சிவன் எனும் மாபெரும் தவகோல இறைவனுக்கு , எதிலும் பற்றோ பாசமோ இல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சக்திமிக்க இறைவனுக்கு மகனான முருகன் அதே தவவலிமையினை கொண்டிருப்பான், அந்த சக்தியால் தன்னை அண்டியவர்கள் அனைவரையும் காத்து அருள்புரிவான், சிவனுக்குரிய தவவலிமை எல்லாம் முருகனுக்கும் உண்டு அதை பெற்று கொள்ளலாம் அந்த சக்தி யோகத்தை தரும் என்பது இன்னொரு பொருள்....
இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்றால் ஒவ்வொரு ஆன்மாவிலும் சிவ தத்துவம் உண்டு அந்த தத்துவத்தில் முருகனும் ஒவ்வொருவனுக்குள்ளும் உண்டு யோகத்தால் அதை காணலாம் என்கின்றார் அருணகிரியார்.
சிவன் எமனையே வென்றவர் என்பது தன்னை அண்டியோருக்கு மரணமில்லா பெருவாழ்வினை வழங்குவார், சித்தர்கள் போல இன்னும் யோகிகள் போல அழிவில்லா வாழ்வை வணங்குவார் என்பது பொருள், முருகனை அண்டியோருக்கும் அதே ஞானபெருவாழ்வு கிடைக்கும் என்கின்றார் அருணகிரியார். அப்படியே முருகன் விநாயகருக்கான தம்பி என்பது இன்னும் நுணுக்கமானது, விநாயகர் சக்தியில் இருந்து பிரிந்த வடிவம், அவர் முழுஞான வடிவம் அந்த ஞானமும் முருகனிடம் உண்டு அவர் சிவனும் சக்தியும் விநாயகரும் கொண்ட ஞானத்தின் முழுவடிவம் , அவரை வணங்க வணங்க ஞானமும் தெளிவும் வரும், யோகத்தில் முருகனை நினைந்து அமர்ந்தால் ஒருமுகமாக அவனை வணங்கினால் யோகம் சித்தியாகும் என்பதே பாடலின் முழு பொருள்.....
Copied from