Friday, 2 January 2026

காகபுஜண்டர்

 ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றல் நிரம்பிய ஆலயங்கள்


ஜீவசமாதியடையாத ஒரே சித்தர் ஸ்ரீ காகபுஜண்டர் தான்.

ஸ்ரீ காகபுஜண்டர் சித்தரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரம்.


ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் கீழ்க்கண்ட ஆலயங்களில் காகபுஜண்டரை தியான வழியில் வழிபட அவரின் ஆசிகள் கிடைக்கும்.


1. சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம். இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது. இங்கே இன்னும் ஸ்ரீகாக புஜண்டர் தவம் செய்து வருகிறார்.


2. கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்ட லிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கே பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.


3. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது. இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.


4. விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி. இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.


5. நாகப்பட்டிணத்தில்

இருந்து வேளாங்கன்னிக்குச் செல்லும் பாதையில் ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் உள்ளது. இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக தவம் செய்திருக்கிறார்.

இங்கே தான் ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார்.


6. ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை, ஆகும். வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும். இங்கே அமுத கலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார். இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.


7. திருப்பரங்குன்றம் மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே. இங்கே ஏராளமான சித்தர்கள் துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.

இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.


8. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இங்கே மனிதகாலடித் தடம் படாத வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது.


9. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோச மங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகி இருக்கிறார்.


10. சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி. பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவராக அருள் பாலித்து வருகிறார். இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது. ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும் இங்கே பரவிக் கிடக்கிறது.


11. கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்த ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது. தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சிவமந்திரம் ஜபிக்க, வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.


12. சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்டபைரவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.