Thursday, 23 February 2023

சிவ ராத்திரி அன்று இரவு 12 மணி அளவில் கோபுரம் மேல் பாம்பு ஒன்று கோவில் நிகழ்ச்சியில் பாடும் பாட்டுக்கு நடனம் ஆடியது. திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில்

 சிவ ராத்திரி அன்று இரவு 12 மணி அளவில் கோபுரம் மேல் பாம்பு ஒன்று கோவில் நிகழ்ச்சியில் பாடும் பாட்டுக்கு நடனம் ஆடியது. திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில்



Tuesday, 21 February 2023

முடிகொண்டான் ஸ்வாமிகள்

 *முதலைக்கு அருள்*


*ஆலங்குடி பெரியவா* என்ற மஹாத்மா தென் தமிழகத்திலும் தஞ்சை, கும்பகோணம் ஆகியவற்றைச் சுற்றியும் சுற்றித் திரிந்து வந்தார். ஸ்ரீ மத் பாகவதமே அவரது உயிர்‌மூச்சு. யார் அழைத்தாலும் அங்கு சென்று ஸ்ரீ மத் பாகவதம்‌ சொல்ல ஆரம்பித்துவிடுவார். திகம்பரராக சுற்றித் திரிந்த அவரிடமிருந்து அனவரதமும் ஸ்ரீ மத்பாகவத ஸ்லோகங்கள் வந்துகொண்டே இருக்கும். அவரது உபன்யாசத்தைக் கேட்ட சிலர், அவரிடம் வந்து,


நீங்க ரொம்ப அழகா பாகவதம்‌சொல்றேள். திகம்பரரா இருந்துண்டு சொல்றதால‌ பொது மக்களும்‌, பெண்களும் வந்து கேக்கணும்னு ஆசையிருந்தாலும், சங்கடப்படறா.


என்றதும்,


அப்டின்னா  சந்நியாசம்‌ வாங்கிக்கறேன். எல்லாரும் பாகவதம்‌ கேக்கணும்‌ அவ்ளோதான் 

என்று சொல்லி சந்நியாசம்‌ வாங்கிக்கொண்டுவிட்டார். 

ஒரு சமயம்‌ ஒரு கிராமத்தில், கஜேந்திர மோக்ஷம்‌ சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைக்கேட்ட நாஸ்திகனான ஒருவன்,


முதலை காலைப் பிடிக்குமாம், ஸ்லோகம் சொன்னா‌ விட்டுடுமாம். என்ன கதை விடறார் இவர் என்று நினைத்தான்.


பெரியவா ஊர்க்குளத்தில் அதிகாலை ஸ்நானம் செய்யப்போவார். ஒரு நாள் அவரை சோதனை செய்ய வேண்டி, அந்த துஷ்டன், ஊர்க்குளத்தில் ஒரு குட்டி முதலையைக் கொண்டு வந்து விட்டுவிட்டான்.


சரியாக பெரியவா ஸ்நானம்‌ செய்யும் படித்துறையில் அவன்‌ முதலையை விடவும், அவர் ஸ்நானத்திற்கு வரவும்‌ சரியாக இருந்தது. பெரியவா ப்ரார்த்தனை செய்து, நீரைப் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு நீரில் காலை வைத்ததும் முதலை அவரது காலைக் கவ்வியது. 

குருதியாறு ஓட ஆரம்பித்தது. யார் காலையோ முதலை கவ்வியதுபோல் 

பெரியவா, பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க அந்த துஷ்டன் அவரருகில் வந்தான்.


பெரியவரே, அன்று உபன்யாசத்தில் சொன்னீங்களே. ஸ்லோகம்‌ சொன்னா முதலை விட்டுடும்னு. சொல்றதுதானே. மறந்துபோச்சா? 


என்று கேலி செய்தான். 

*காலை‌ முதலை கல்விக் கொண்டிருக்கும் போதும் கதறாமல் அவர் வேடிக்கை பார்ப்பது அவன் புத்திக்கு எட்டவில்லை.*


அப்போதுதான் பெரியவருக்குப் புரிந்தது, அவன் சோதனை செய்ய வந்தவன்‌ என்று. 


ஓ, சொல்றேனே‌ என்று கூறி


ஏவம் வ்யவஸிதா புத்த்யா ஸமாதாய மனோஹ்ருதி| 

ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக்ஜன்மனி அனுஸிக்ஷிதம் ||


என்று ஸ்ரீ மத்பாகவதத்தில் அஷ்டமஸ்கந்தம், மூன்றாவது அத்யாயத்தில் வரும் கஜேந்திர ஸ்துதியை கானம் செய்ய ஆரம்பித்தார்.


சரியாக

சந்தோமயேன கருடேன ஸமுஹ்யமான: 

சக்ராயுதோப்யகமதாசு யதோ கஜேந்த்ர:||

அதாவது, 


பகவானான ஹரி கருடன் மீதேறி விரைந்து வந்து, முதலையின் மீது சக்கரத்தை ஏவி கஜேந்திரனைக் காத்தான்

என்ற வரியை பெரியவா சொல்லும்போது அவரது காலைப் பிடித்திருந்த முதலை திடீரென வெட்டுப் பட்டது போல் துடிதுடித்து இறந்தது.


பார்த்துக்கொண்டேயிருந்த அந்த நாஸ்தீகனுக்கு பயம் வந்துவிட்டது.


அவரது காலைப் பிடித்துக்கொண்டான்.


மன்னிச்சிடுங்க ஸ்வாமி, தெரியாம தப்பு பண்ணிட்டேன். பெரியவங்களை சோதிக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியல.

என்று கதறி அழுதான்.


பெரியவா என்ன செய்தார்?

தன்னைச் சோதனை செய்வதற்காகக் குளத்தில் முதலையைக் கொண்டுவிட்டுவிட்டு இப்போது கதறியழும் அந்த மனிதனைக் கருணையோடு பார்த்தார் ஆலங்குடி பெரியவா. 


நீ ஒன்னும் தப்பு பண்ணலப்பா. அழாத. நான் சொன்னது நிஜம்தானா சரிபாக்கறது ஒரு தப்பா. அழாத. என்றார்.


இப்படிக்கூட ஒருவர் இருக்கமுடியுமா? முதலை கடித்து காலில் குருதி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும்போது, எவன் அதற்குக் காரணமோ அவனிடம் இவ்வளவு கருணையோடு ஒருவர் பேசமுடியுமா?


சாதுக்களால் மட்டுமே இயன்ற விஷயம் அது.


அவன் அழுதுகொண்டே சொன்னான்.


நீங்க உடனே வாங்க. இதுக்கு மருந்து போடலாம். உங்களுக்கு வேணும்னா முதலை கடிச்சாக்கூட வலிக்காம இருக்கலாம். ஆனா இதுக்குக் காரணமான என்னால் உங்க காலில் ரத்தம் வரதைத் தாங்கமுடியாது..


பெரியவா அவனைக் கருணை பொங்கப் பார்த்துவிட்டுச் சொன்னார்,


நான் கஜேந்திர மோக்ஷம் மட்டுமா சொன்னேன்? அதுக்கு முன்னாடி ஜடபரதர் சரித்ரமும் சொன்னேனே. ஆத்மா வேற சரீரம் வேறன்னு உபதேசம் பண்ணினேனே. அதுவும் நிஜம்தானே. அதனால், உடம்பில் இருக்கும் காயம் என் ஆனந்தத்தை பாதிக்காது. கவலைப் படாதே


நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நான் உங்களை இந்த உடலின் வழியாத்தானே பாக்கறேன். என்னை நீங்க மன்னிச்சுட்டது நிஜம்தான்னா, என்னுடைய சமாதானத்துக்காகவது வைத்தியம் பண்ணிக்கணும்.


சரி, உனக்காக வைத்தியம் பண்ணுவோம். ஆனா, நான் சொல்ற வைத்தியந்தான். சரியா?


சரி.


அதற்குள் இன்னும் சிலர் வந்துவிட்டனர். 

பெரியவா சில மூலிகைகளின் பேரைச் சொல்லி,

அதையெல்லாம் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி எடுத்துண்டு வா. கொதிக்கற எண்ணெய்யை இந்தப் புண்ணில் விட்டா சீக்கிரம் சரியாகும்.


அவர் வாயால் சொன்னதற்கே, கொதிக்கும் எண்ணெய் மேலே பட்டாற்போல் துடித்துப் போனார்கள் அனைவரும்.

முதலை கடித்து ரணகளமாயிருக்கும் காலில் கொதிக்கும் எண்ணெய்யை விடுவதா?


பெரியவா? இதென்ன முரட்டு வைத்தியம்? 


இதைப் பண்றதா இருந்தா பண்ணுங்கோ. இல்லாட்டா வேற வைத்தியம் வேண்டாம்.


அத்தனை பேரும் உறைந்துபோயிருக்க, 

மூலிகையையும் எண்ணெயையும் கொண்டுவரச் சொல்லி, தானே காய்ச்சி, அதைக் கொதிக்க கொதிக்க தன் காலில் சிரித்த முகத்துடன் தானே விட்டுக்கொண்டார் ஆலங்குடி பெரியவா. 


அவரது காலில் புண்ணும் வெகு சீக்கிரமாக குணமாகிவிட்டது.


சற்றேறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்த ஆலங்குடி பெரியவரின் சமாதி முடிகொண்டானில் உள்ளது. இவர் முடிகொண்டான் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார்.


Sri Math Bagavath Paravasana Mandapam https://maps.app.goo.gl/W2pcDRKDS58wzEYv6



🌹 👣  🕉️ 🙏

-ஜெகத்குரு பீடாதிபதி

பரமாச்சாரியார்

காஞ்சி காமகோடி

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


ஹர ஹர ஹர சங்கரா!

ஜெய ஜெய ஜெய சங்கரா!

சிவ சிவ சிவ சங்கரா!


*குருவே சரணம்*

*குருவே துணை*

*குருவே போற்றி!.*

ராமாயண நிறைவு காட்சி

 படித்ததில் பிடித்தது.


ராமாயணத்தில் இறுதி பகுதி ஒன்று உண்டு. இந்த பகுதி நம்மில் பலருக்கு தெரியாது.


சீதையை பூமாதேவி பூமியை பிளந்து அழைத்து சென்றதுடன் ராமாயணம் முடிந்தது என்பதே நமது எண்ணம்.


ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமானது.


அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் பெரியவா துணையில் படித்ததை பக்தி மார்க்க நண்பர்களுக்காக இங்கு பதிவிடுகிறேன்.


மிதிலைராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர்.அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா.


அயோத்தியிலிருந்து தூதுவன் 

கொண்டு வந்திருந்த செய்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி. 


ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஏதொன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார். 


அவர் ராஜரிஷிஅவர் முகத்தில் அந்த செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.


ஆனால் ஓலையை வாங்கி வாசித்த,

சுனயனாதேவியின் விழிகளிலிருது, சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனையெத்தனைத் துயரங்களை தாங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்.


பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்றபோது, அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். 


ஆனால் சிறிது காலத்திலேயே, ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட போது அவள் மாளாத துயரமடைந்தாள்.


சில ஆண்டுகளுக்கு பிறகு, லவ குசன்  என்ற இரண்டு ஆண்மக்களைப் பெற்றெடுத்து, அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் நாயகன் ராமனிடம் ஒப்படைத்த சீதை, அயோத்தி வராமல்,  கானகத்திலேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள்.


சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது.


லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன்,

சரயு நதியில்* இறங்கி சித்தி அடைந்தான். லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின்  நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள்.


இதெல்லாம் முடிந்ததே, இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால், இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை. 


ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்களாம்.


சீதை காலமானாலும், தன் மகனைப் போன்ற  ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைவாள் சுனயனா.


இனி அது நடக்காது. அவளது மூன்று புதல்விகளான மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாய்த்தான் இனி வாழவேண்டும்.


ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். அவர்களுக்கு நேரில் சென்று,அந்த சந்தர்ப்பத்தில் கூட இருந்து ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை!’ என உணர்ச்சியற்ற குரலில் முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர்.


தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும் பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். ஒரு பெருமூச்சோடு அரியாசனத்தை விட்டு எழுந்த அவள், தேரைப் பூட்டச் சொல்லுங்கள். நாம் அயோத்தி செல்வோம்’எனப் புறப்பட்டாள்.


அவர்கள் இருவரையும் ஏற்றிச் சென்ற தேர் மிதிலையிலிருந்து உருண்டோடி  அயோத்தி மாநகரை வந்தடைந்தது.


அயோத்தி வீதிகளில்மக்கள் இல்லாததால் வெறிச்சென்று தென்பட்டன. 


மக்களெல்லாம் சரயு நதிக்கரைக்குச் சென்றிருக்கவேண்டும்._


நேரே தேரை, சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார்  ஜனகர்.தேரோட்டி சாட்டையை சொடுக்கியதும் புரவிகள் பறந்தன. தேர் நதிக்கரைக்குப் போகும் வழியெங்கும் மக்கள் வெள்ளம்.


நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும்  தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள்.


மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி, எந்த சலனமும் இல்லை. 


அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற  அவர்கள், மெல்ல நடந்தார்கள்.


பரதன், சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் 

விடை பெற்றுக் கொண்டார்கள்.


மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சி நடந்தது. 


அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத்தொடங்கியது._


தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதை உணர்ந்த மக்கள் “ராமா ! ராமா !”என பிரலாபிக்கலானார்கள்.


ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். 


தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது.


ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு கேட்டாள்:_


தந்தையே ! ஸ்ரீராமர் நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரிந்துவிட்டாரே ! இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே ! உங்களுக்கு வருத்தமாக இல்லையா ?”


ஜனகர் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவல் இழையோடியது.சுனயனா ஜனகர் என்ன பதில் சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவர் தரும் பதிலின் மூலம் தன் மனதில் ஓர் ஆறுதல் கிட்டாதா ? என அவள் ஏங்கினாள்.


மாண்டவி, சுருதகீர்த்தி  

இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்கள். 


எங்கும் அமைதி நிலவியது. ஜனகர் சாந்தம் தவழும் முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்கச் சொன்னார்:


மனித உடல் என்பது உறை, ஆன்மா 

என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன கையில் வைத்து கொள்கிறது. அவ்வளவுதான்.


வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே, இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.


ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள். தாங்கள் வந்த கடமை முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள். அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள்.


ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும், தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது, அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்பட வில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால், நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம். !”


சுனயனா வியப்போடு கேட்டாள் . அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா ?என் செல்ல *வளர்ப்பு மகள் சீதை தெய்வமேதானா ?


ஆமாம். ஒன்றை யோசி. அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும் ?. மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று விட்டன. 


ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும்.”


இதெல்லாம் உண்மைதானா ? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா ?”


சாட்சி என்ன, என் தெய்வம் ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் !”_


ஜனகர் ஒரு கட்டளை போல் இந்த வாக்கியத்தை கூறினார். 


பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள்.


எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே, விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன.


லட்சுமணன் உடல் ஒரு கணத்தில் 

ஆதிசேஷனாக மாறியது. ராமன் 

திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக 

மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள்.


ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை, இப்போது லட்சுமி தேவியாக விண்மகளானாள். அவள் திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள்.


மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன._


மக்களனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு, ஜெய் ஸ்ரீராம் ‘ என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன.


ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும், இன்னதென்றறியாத சாந்தியிலும், நிறைவிலும் ஆழ்ந்தன. 


அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள்._


ராஜரிஷி ஜனகரின் மனம் ‘ராம ராம’ என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.

Monday, 20 February 2023

சண்டி ஹோமம்

 சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்.

------------------------------------------------------


"கலெள சண்டி வினாயகெள" அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள் என்பது பழமொழி.


துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள். துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது. இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது. எழுநூறு சுலோகங்களை கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர். இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது. இதை தான் ஒவ்வொரு வருடமும் குமுக்கன் ஆற்றங்கரையில் மஹா காளி தேவி முன்னிலையில் சண்டி ஹோமமாக இன்று வரை  உலக நன்மைக்காக செய்யப்படுகிறது. இவ்வருட சண்டி ஹோமம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 26/02/2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தினசரி அல்லது நவராத்திரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும். இந்த மாபெரும் ரகசியத்தை உலகம் அறிய சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்......


ஸ்ரீதேவி மாஹாத்மிய ரகசியம்:

--------------------------------------------------------


துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது. 


சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.


சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம்.


சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும்  பாஸ்கர ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.


டாமர தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.


யக்ஞங்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கிறார்.


"யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா" என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. 

               அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும்.


சண்டி ஹோமம்  என்றால் என்ன?

(1) மஹாகாளி சண்டிகை:

                எமபயம், நோய், ஆகியன நீக்கி நீண்ட ஆயுள் அருள்பவள்.

(2) மஹாலக்ஷ்மி சண்டிகை:

               பொருளாதாரக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீக்கி செல்வ வளம் அருள்பவள்.

(3) சங்கரி சண்டிகை:

               மனக்குழப்பங்கள், மன நோய்கள் அனைத்தையும் நீக்கி அமைதி அருள்பவள்.

(4) ஜெயதுர்க்கை சண்டிகை:

                தோல்விகளை நீக்கி வெற்றி தருபவள்.

(5) மஹா சரஸ்வதி சண்டிகை:

                 ஞாபக மறதி, அறியாமையை நீக்கி நல்லறிவு தருபவள்.

(6) பத்மாவதி சண்டிகை:

                 பயம் நீக்கி துணிவைத் தருபவள்.

(7) ராஜமாதங்கி சண்டிகை:

                 பதவி உயர்வும் செழிப்பும் அருள்பவள.

(8) பவானி சண்டிகை:

                சகல பாவங்களையும் நீக்குபவள்.

(9) அர்தாம்பிகை சண்டிகை:

                 கணவன் மனைவிக்குள் ஒற்றுமையைத் தருபவள்.

(10) காமேஸ்வரி சண்டிகை:

                 குழந்தை பாக்கியம் அருள்பவள்.

(11) புவனேஸ்வரி சண்டிகை:

                  இயற்கை சீற்றங்களைப் போக்குபவள்.

(12) அக்னி துர்கை சண்டிகை:

                   எதிரிகளால் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பவள்.

(13) சிவாதாரிகை சண்டிகை:

                     பிறவா நிலையையும் முக்தியையும் அருள்பவள்.


                     இந்த 13 சக்திகளும் இணைந்த சக்திதான் மஹா சண்டிகா பரேமஸ்வரி. இந்த யாகங்கள் முறத்தினாலே (சுழகு) செய்யப்படும். மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களினால் இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் செய்வதனால், உலக நன்மை சத்ரு பயம் நீங்கும். லட்சுமி தேவியின் அனுக்ரஹம் கிட்டும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி. இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அனைத்து விதமான பாபங்களும், எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சண்டி யாகத்திலே சொல்லபடுகிறது.


அசுரர்களை அழித்து, தர்மத்தை காக்க பல்வேறு வடிவங்களை எடுத்திருக்கும் தேவிதான் சண்டிதேவி. சண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது ஒரு மாபெரும் சக்தி மாற்றம்.


எனக்கு தெரிந்து இந்த சண்டி ஹோமத்தை முறையாக இன்றுவரை உரிய விதிகளுடன் நடத்தி தருபவர் என் பெறுமதிப்புக்குரிய இலங்கை யாழ்ப்பாணம் இனுவில் தர்ம சாஸ்தா குருகுல வேத வாத்தியார் ஸ்ரீ வத்சாங்க குருக்கள் அவர்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் யார் கேட்டாலும் அவரை தான் பரிந்துரை செய்வேன். முறையாக செய்தால் நீங்களே எதிர்பார்க்காத அளவு பலன்கள் உண்டு. முறையாக நிகழா விட்டால் பாரிய எதிர்மறை தாக்கம் உண்டு.

   

முறையாக 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்யப்படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் போது ஒரு மாபெரும் சக்தி மாற்றம் அந்த பூமியில் இயல்பாக உண்டாகும். அந்த மண்ணே ஒரு மாபெரும் சக்தி பீடமாக உருவாகும் என சொல்கிறார் மார்க்கண்டேய மகரிஷி. இந்த மந்திரங்கள் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும்.


மிக முக்கியமாக சண்டி ஹோமத்தில் 13 தேவதைகளுக்கும் ப்ரியமான இந்த 13 திரவியங்களே பிரதானமாக இடப்பட வேண்டும். அவற்றை இடுவதால் என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என சொல்லபடுகிறது.


நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.....

(1) விளாம்பழம் (சத்ரு நாசம் மற்றும் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி)

(2) முழு தேங்காய் (அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் குபேர வாழ்வும் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றியும் பதவி உயர்வும்)

(3) தாமரை பூ + துரிஞ்சி நாரத்தை (சந்ததி விருத்தியும், புத்ர விருத்தியும் வாழையடி வாழயாக தொடரும்)

(4) பாக்கு பழம் (அனைத்து விதமான நோய்களிலும் இருந்து விடுதலை, அனைத்து விதமான நோய் தாக்கங்களில் இருந்தும் விடுதலை)

(5) கொய்யா பழம் (வாக்குப் பலிதம், ஞானானந்தகரம், வித்தை கலைகளில் விருத்தி என்பன ஏற்படும்)

(6) அகில் + சந்தன கட்டை (ராஜ வசீகரணம், சுய வசீகரணம், பேரழகு என்பன ஏற்படும்)

(7) நீத்து பூசணிக்காய் (எப்பேற்பட்ட திருஷ்டி தோஷங்களும், பில்லி ஏவல் போன்ற கொடிய தாக்கங்களும் தவிடு பொடியாகும்)

(8) செங்கரும்பு (சர்வ வஸ்யம்)

(9) தேவதாரம் + கருங்காலி (சோகநாசம், மனதில் உள்ள சோகங்கள், சஞ்சலங்கள், கவலைகள் தீரும்)

(10) மாம்பழம் (நினைத்த காரியம் ஜெயம்)

(11) மாதுளம்பழம் (மனதில் நினைக்கின்ற தூய பிரார்த்தனைகள் அனைத்தும் சித்தியாகும்)

(12) வில்வம்பழம் (அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் விடுதலை, மன தைரியம் உண்டாகும்)

(13) செவ்வாழை (ஞான விருத்தி)


இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி  உபதேசித்ததாக கூறுவர்.


தான் நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும் காட்டில் சந்திக்கின்றனர். இருவரும் கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே ஏமாற்றப்பட்டும் தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின் தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதையும் விளக்கி கூறினார். 


முன்னொருகாலத்தில் விஷ்ணு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது அவருடய காது மலத்திலிருந்து மது கைடபன் என்று இரு அசுரர் தோன்றி திருமாலின் நாபிகமலத்திலுள்ள பிரம்ம தேவனை கொல்ல முற்பட்டனர். பயந்த பிரம்மன் விஷ்ணுவின் யோகமாயை ராத்ரி ஸுக்தம் என்ற ஸ்துதியால் துதித்தார். யோகமாயை விலகி விஷ்ணு சக்தி பெற்று அவ்வசுரர்களுடன் போரிட்டார். மயங்கிய அசுரர் வரம் அளிக்கிறோம் பெற்று கொள் என்றனர். "நீங்கள் என்னால் கொல்ல படவேண்டும் இதுவே என் வரம்" என்று விஷ்ணு கூற, வஞ்சிக்க பட்ட மது கைடபர்கள் எங்கும் ஜலமயமாக இருப்பதை கண்டு, "ஜலத்தால் நனையாத இடத்தில் எங்களை கொல் என்றனர். விஷ்ணுவும் தனது மடியில் வைத்து அவர்களை கொன்று மதுசூதனன் என பெயர் பெற்றார். கைடபஜித் என்ற பெயர் மாலுக்கும், யோகமாயை விலக்கி அவருக்கு சக்தி உண்டாக்கினமையால் சக்திக்கு மதுகைடபஹந்த்ரி என்றும் பெயர் விளங்குகிறது.


மகிஷாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாலிடமும், சிவனிடமும் முறையிட அப்போது சகல தேவர்களின் சரீரங்களில் உள்ள சக்திகள் யாவும் வெளிப்பட்டு ஒன்று சேர்ந்த ஒரு தேவியின் உருவம் பெற்றது. 


தேவர்கள் யாவரும் தங்களது அனைத்து ஆயுதங்களையும், படைகளையும் தேவிக்கு தந்தனர். அன்னை போருக்கு ஆயத்தமானாள். மகிஷாசுரன் போர் தொடுத்தான். கோடிகணக்கான யானை, தேரில் குதிரை, காலாட்படைகளுடன் வந்து சிக்ஷுரன், சாமரன், உதக்ரன், மஹாஹநு, அசிலோமன், பாஷ்கலன், பிண்டாலன் முதலிய அசுர சேனாதிபதிகள் கத்தி, தோமரம், பிண்டிபாலம், வில், வேல் சூலம் முதலிய பல ஆயுதங்கள் கொண்டு தேவியுடன் போரிட்டு தோற்றனர். 


வாகனமாகிய சிங்கம் கோடானுக்கோடி பேரை கொன்றது. அசுரர்கள் உடலின் உறுப்புக்களை இழந்து பல திக்குக்களில் ஒட்டமெடுத்தனர். போர்களத்தில் குருதி வெள்ளம் நிரம்பி செல்ல முடியாமல் கடல் போல் சூழ்ந்தது.

சேனைகள் நாசமடைந்தது கண்ட சிக்ஷுரன், சிங்கத்தை அடித்து அம்பிகையை வாளால் வெட்டினான். ஆனால், கத்தி தூள்த்தூள் ஆனது. யானை மீது வந்த அசுரனை பூமியில் தள்ளி சிங்கமே அவனை கொன்றது. 


முற்கூறிய அத்தனை சேனை தலைவர்களும் மாண்டனர். சைதன்யம் அழியவே அசுர அரசன் எருமை மாட்டின் உருவம் கொண்டு கொம்பாலும், வாலாலும், முகத்தின் அசைவிநாலும், குளம்பினாலும் தேவியின் பல கணங்களை போரிட்டு வீழ்த்தினான். தேவி பாசத்தால் அவனை கட்டிய போது சிங்க ரூபமாக, யானை ரூபமாக, மனித ரூபமாக எல்லா ரூபங்களிலும் போரிட்டு முடிவில் எருமை ரூபத்தோடு போரிட்டான். தேவி வீரபானம் அருந்தி அவன் கழுத்தில் காலை ஊன்றி, சூலத்தால் அடித்து, வாளால் வெட்டி வீழ்த்தினாள்.


தேவர்கள் தேவியை துதித்து சூலேனயாகி என்று தொடங்கிய நான்கு ஸ்லோகங்களும் கவசமும் நீயே... உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணமும் நீயே, உன்னை சேவிப்போருக்கு வறுமை, பிணி, துக்கம் உண்டாகாது. பக்தரிடம் தயையும், பகைவரிடம் உன் வீரமும் ஒப்பற்ற ன. நீயே லக்ஷ்மி, நீயே கௌரி, நீயே துர்க்கை, எங்களை எவ்வகையிலேனும் எங்கள் உடலின் எல்லா இடங்களிலும் துன்பமின்றி காக்க வேண்டும் என்று மலர்களால் அர்ச்சித்தனர். மகிழ்ந்து பிரசன்னமான தேவியிடம் எங்களுக்கு எந்த குறையும் இல்லை, ஆனாலும் உன்னை நினைத்தபோதெல்லாம் எங்களை காப்பாயாக. மேலும், இந்த ஸ்தோத்திரம் துதிப்போருக்கெல்லாம் சகல வித நன்மையும் அருள வேண்டும் என்று துதித்தனர். அவ்விதமே அருள் செய்து அந்த மகிஷாசுரமர்த்தினி மறைந்தாள்.


இது முதல் கடைசி வரை உத்தம சரிதம் எனப்படும். பின்னொருக்காலத்தில் சும்பநிசும்பர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் இமயம் சென்று முன்பு தேவி வரம் கொடுத்ததை நினைத்து துதித்தனர். இந்த ஸ்துதி தேவி ஸ்துதி எனப்படும். கங்கையில் நீராட வந்த பார்வதியின் சரீரத்திலிருந்து ஒரு தேவி தோன்றினாள். கொசத்திலிருந்து தோன்றினமையால் கௌசீகி என பெயர் பெற்றாள். கௌசீகி தோன்றிய பிறகு பார்வதி கருப்பாக ஆகி காளிகா என பெயர் பெற்றாள். கௌசீகியின் அழகு ரூபத்தை கண்ட ஒற்றர் இருவர், சும்ப நிசும்பர்களிடம் சென்று அவள் அழகை வர்ணித்து சிறந்த பொருட்களுக்கு இடமாக இருக்கும் அரசரிடத்தில் சிறந்த பெண்மணியும் இருக்க வேண்டும் என்றனர். சபலமடைந்த அரசன் சுக்ரீவன் என்ற தூதனை தேவியிடம் அனுப்பினான். அவன் அசுர அரசனின் பெருமைகளை கூறி தேவியை வரும்படி அழைக்கிறான். அதற்கு தேவி "என்னை போரில் வேல்பவனையே நான் மணப்பதாக முன்பே உறுதி கொண்டேன், ஆதலில் அசுரர் என்னை போரில் வென்று கைபற்றட்டும்" என்றாள். "தேவி கர்வம் கொள்ளாதே, அசுரர் பலசாலிகள் பிறகு அவமானம் அடைவாய்" என்று தூதன் மறுமுறை கூறினான். "அறிந்தோ, அறியாமலோ நான் சபதம் பூண்டுவிட்டேன், என் உறுதி மாற்ற முடியாதது, அவர்களை சீக்கிரம் வரச்சொல்" என்றால் தேவி.


சும்பாசுரனால் ஏவப்பட்ட தூம்ரலோசனன் தேவியை வரும்படி அழைக்கிறான். "நீ பலவான் பலவானால் அனுப்பப்பட்டவன், சேனையுடன் வந்துள்ளாய், பலாத்காரமாய் என்னை இழுத்து செல்லலாம்" என்றாள். அசுரன் ஆவேசத்துடன் ஓடி வரும் பொழுது ஹூங்காரத்தால் அவனை மடிய செய்தாள்.


சேனை யாவும் வாகனமாகிய சிங்கத்தால் அழிந்தது. அசுர மன்னன் சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை மறுபடியும் தேவியிடம் அனுப்பினான்.


வந்த சண்ட முண்டர்களை கண்டு கோபித்த கௌசீகியின் நெற்றியிலிருந்து காளி தோன்றினாள். கையில் கத்தி குழிந்த கண்கள் புலித்தோல் ஆடை அகன்ற வாய் நாக்கை நீட்டி அடிக்கடி தொங்க விடுகிறாள்,


பயங்கரமான சப்தம், இப்படிய தோற்றத்துடன் காளி பல ஆயுதங்கள் கொண்டு அசுர படையெல்லாம் அழித்து சண்ட முண்டர்களையும் கொன்று, சண்டனுடைய தலையையும், முண்டனுடைய முண்டத்தையும் அம்பிகை முன் காணிக்கையாக்கி வணங்கினாள், "கௌசீகி சண்ட முண்டர்களை கொன்றமையால் நீ சாமுண்டா என்ற பெயருடன் விளங்குவாயாக" என்று அருளினாள்...


பின் கூட்டமாக சகல அசுர அரசர்களும் ரக்தபீஜன் என்ற அசுரனை துணையாக கொண்டு வருகின்றனர். ரக்தபீஜன் உடலிலிருந்து ரத்தம் பூமியில் விழுமாயின் அவனை ஒத்த பலமுடைய அசுரர்கள் ஒரு சொட்டிற்கு ஒருவர் வீதம் உண்டாவர் என்பது அவன் பெற்ற வரம். தேவி சிவனை அசுரரிடம் தூது அனுப்பினால். "அசுரர் பாதாளம் செல்லட்டும், இந்திரன் த்ரிலோகத்தை ஆளட்டும், இல்லாவிட்டால் போரில் என்னை சூழ்ந்துள்ள நரிகள் உங்களை தின்று திருப்தி அடையும்" என்ற தேவியின் வாக்கை கேட்ட பிறகும் அசுரர் போரிட்டனர். சக்திகளால் அடிபட்ட அசுரனின் ரத்தத்திலிருந்து பல அசுரர் தோன்ற உலகம் நிறைந்து விட்டது. தேவர் பயந்தனர். அம்பிகை சாமுண்டா தேவியை அழைத்து, "நான் அவனை அடிக்கிறேன், பெருகுகின்ற ரத்தத்தை நீ கீழே விழாதபடி பருகு, அதனால் அவன் ரத்தமின்றி இறப்பான்" என்றாள். சாமுண்டா தேவி அப்படியே செய்யவும் அவன் இறந்தான். தேவர் மகிழ்ந்தனர். சிவனை தூதாக அனுப்பிய அம்பிகைக்கு சிவா தூதி என பெயர் உண்டாயிற்று.


தேவிக்கும் சும்ப நிசும்பர்களுக்கும் கடும் போர் நடந்தது. தேவி நிசும்பனுடைய ஹ்ருதயத்தில் குத்தின பொழுது அங்கிருந்து அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் தோன்றும் போதே தேவியின் கத்திக்கு இரையானான். மகேஸ்வரி, வாராகி முதலிய சக்திகளும் பல அசுரர்களை வீழ்த்தினர். தம்பி இறந்தது கண்ட சும்பன் பிறருடைய பலம் கொண்டு சண்டை இட்டு வீண் கர்வம் கொள்ளாதே என்று கூறினான். அதற்கு தேவி பதில் சொன்னாள் "உலகில் நான் ஒருவளே இவர்கள்லெல்லாம். என் விபூதியே என்னுள் இவர்களை அடக்கி கொள்கிறேன்" என்று கூறி தன்னுடலுள் யாவரையும் அடக்கி கொண்டாள். சும்பனும் தேவியும் பூமியிலும் வானத்திலும் மாறி மாறி சண்டை இட்டனர். இறுதியில் தேவி சூலத்தால் குத்தி வீழ்த்தினாள். இதுவரை இருந்த பல அபசகுனங்கள் விலகின. காற்று இனிமையாக வீசியது, கதிரவன் ஒளிவிட்டான்.


இவ்வத்தியாயம் நாராயணி ஸ்துதி எனப்படும். சரணடைந்தவர்களை காப்பவள் நீயே, உலகிற்கு ஆதாரமாய் இருப்பவளே, சுவர்க்க மோட்சங்களையும் அளிப்பவளே, பஞ்சக்ருதியும் புரிபவளே. மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, நாரஸிம்ஹி, ஐந்த்ரி, சிவதூதி, கௌமாரி, சாமுண்டா, பிராம்மணி முதலிய ரூபங்களுடன் அசுரரிடம் போரிட்டு உலகை காத்தவளே திருடன் முதலியவர்களிடம் இருந்தும் எங்களை காப்பவளே, உனக்கு வணக்கம் என்று துதித்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கி மூவுலகிற்கும் சகல வித நன்மையும் அளிப்பதாக தேவியே கூறினாள். நந்தா விந்த்யசலவாசிணி, பீமா பிரைமரி துர்கா, ரக்ததந்திகா சதாக்ஷி முதலிய பல அவதாரங்கள் எடுத்து தேவ சத்ருக்களை அழிப்பேன், அனைத்துயிரையும் காப்பேன் என்கிறாள்.


தேவி மகாத்மியமாகிய இந்த என் சரிதத்தை படிப்போருக்கு எல்லா வித துன்பங்களையும் போக்குவேன், பரம புருஷார்த்தங்களையும் அளிப்பேன். அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் பூஜை, ஹோமம், ஜபம், புராணங்களால் மிகவும் மகிழ்வேன். தேவி மஹாத்மியம் படிக்குமிடத்தில் நான் எப்போதும் நடமாடுவேன். வம்சம் அபிவ்ருத்தி அடையும். என்னை நோக்கி எனக்காக தூப தீபமிட்டு நைவேத்யம், அபிஷேகம் பல வித தானங்கள் எல்லாம் செய்து வருட கணக்காக செய்கின்று பூஜையினால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை, ப்ரீத்தியை தேவி மகாத்மியத்தை ஒரு தரம் மிகுந்த பக்தியுடன் படித்தால் அல்லது படிக்க கேட்டாலே யான் அதைவிட சந்தோஷித்து மகிழ்வேன். தேவி ஸ்துதி, பிரம்ம ஸ்துதி, பிர்மரிஷி ஸ்துதி இவைகளை ஜெபிப்பதால் நல்ல புத்தி உண்டாகும். என்னை நினைத்த மாத்திரத்தில் எல்லா விதத்திலும் எல்லா வித ஆபத்திலிருந்தும் காப்பேன் என கூறி மறைந்தாள்.


தேவர்கள் சுவர்க்க லோகம் சென்றனர். இந்த தேவி தான் உங்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி நாடு, மனைவி, மக்களிடம் அன்பு கொள்ள செய்தவள். அவளை வணங்கி பூஜித்து நற்கதியை அடையுங்கள் என்று முனிவர் கூறி முடித்தார்


முகவுரை:-

            மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திர வடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு மந்திரங்களடங்கியதால் ஸப்தசதீ என்றும் கூறப்படும்.  இது இமயம் முதல் கன்யாகுமரி வரை பாரததேசம் முழுதும் பாராயணத்திற்கும் ஜபத்திற்கும் ஹோமத்திற்கும் உலக ஷேமத்திற்காகவும் அரிஷ்ட நிவிருத்திக்காகவும் தொன்றுதொட்டுப் பெரிதும் கையாளப்பட்டு வருகிறது.


பூர்வ பாகத்தில் கவசம், அர்க்கலம், கீலகம், ராத்ரி ஸூக்தம், நவாக்ஷரீ விவேசனம் ஆகியனவும் நடுவில் முன்று சரித்திர வடிவில் தேவீ மஹாத்மியமும், கடைசியில் தேவீ ஸூக்தம், ரஹஸ்யத்ரயம் ஆகியனவும், அநுபந்தமாக துர்க்கா ஸப்த ச்லோகீ, துர்க்கா ஸூக்தம், இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம், துர்க்கா ஆபதுத்தாராஷ்டகம், தேவ்யபராக்ஷமாபன ஸ்தோத்ரம் இப்படி பாராயணம் செய்ய வேண்டும்.


பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே என்பதைக் கருத்தில் கொண்டு தேவீ மஹாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பிரம்ம வித்தையான வேதாந்தம் கூறும் உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவர வழிகாட்டுவது ஸ்ரீ வித்தை. மந்திரமும் தந்திரமும் ஸ்ரீ வித்தையில் அடக்கம்.


ததா தாம் தார - மித்யாஹூ - ரோமத்மேதி பஹுச்ருதா : தாமவே சக்திம் ப்ருவதே ஹ்ரீ - மாத்மேதி சாபரே 


ஒரே பரம்பொருள் தான் ஓம் என்ற பிரம்மவித்யா மந்திரத்தாலும் ஹ்ரீம் என்ற ஸ்ரீ வித்யா மந்திரத்தாலும் கூறப்படுகிறது. பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரிக்க முடியாதாதலால் ஒங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீம் என்பது மாயா பீஜம் அல்லது புவனேசுவரீ பீஜம் எனப்படும். விதையிலிருந்து முளை, கிளை, அரும்பு, மலர், காய், கனி முதலியன தோன்றுமாப் போல் புவனேசுவரீ பீஜத்திலிருந்து மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ தோன்றுகின்றனர். அவர்களுடைய ஸமஷ்டி மந்திர வடிவங்களில் முக்கியமானவை இரண்டு - நவாக்ஷரீ மந்திரதீøக்ஷ பெற்றவர் நவார்ண ஜபத்திற்கு அங்கமாக ஸப்தசதீ பாராயணத்தையும், ஸப்தசதீ மந்திரதை முக்கியமாய்க் கொண்டவர் அதற்கங்மாக நவாக்ஷரீ ஜபத்தையும் அனுஷ்டிப்பது காணப்படுகிறது.


சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறியது: 

                   தேவியே! ஸப்தசதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், சின்மயமான திரிபுரா மூன்று வடிவு கொண்டாள். அசுரர்களை போக்கித் தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளியுருக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் தோன்றினாள். அவள் வரலாறு பதின்மூன்று அத்தியாயங்களில் எழுநூறு மந்திரங்களில் மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுளது, அதைப் படிப்பவர் எல்லா உபத்திரவங்களினின்றும் விடுபட்டு ஸகல சௌக்கியங்களையும் அடைவர்.


கிரதுக்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமரதந்திரம் கூறுகிறது.

                 (யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா) வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. 


ஸகாம பக்தன் இதனால் மனதில் கருதியதை அடைவான். நிஷ்காம பக்தன் மோக்ஷத்தை அடைவான். 


ஸூரத மகாராஜனுக்கு மேதாமஹரிஷி கூறியதாவது: 

             பரமேசுவரியைச் சரணடைவாய், அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள். அரசன் தன் அரசாட்சியை மீண்டும் பெற்று இன்ப வாழ்வெய்தி எதிர்காலத்தில் மனுவாக விளங்கப்போகிறான் என்றும் ஸமாதி என்ற வைசியன் ஞானம் பெற்று மோக்ஷமடைந்தான் என்றும் கூறி தேவீ மஹாத்மிய வரலாறு முடிவடைகின்றது.


இப்படி 13 அத்தியாயங்களில் மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி சிவனையே தூதராக  சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன் மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.


அவரின் அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான், வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால் களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை ஆராதிக்கிறோம். 


இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.


முறையாக குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும். நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது  மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது. 


இவ்வாறு குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள், ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள். இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.


ஸர்வ ரூபமயீ தேவீ ஸர்வம் தேவீ மயம் ஜகத்


ஸ்ரீ துர்கா சப்த சதி

---------------------------------


"ஸ்ரீ துர்கா ஸப்தசதி" என்று சொல்ல கூடிய தேவீ மஹாத்ம்யமானது 13 அத்யாயங்களை கொண்டது, அதிலே மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளது. அந்த 700 ஸ்லோகங்களிலும் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஒரு சக்தி வாய்ந்த பீஜாக்க்ஷரம் அடங்கியுள்ளது. சண்டீ நவாக்க்ஷரீ மஹா மந்த்ரத்தில் உள்ள ஐம் என்ற பீஜம் மஹாகாளியையும், ஹ்ரீம் என்ற பீஜம் மஹாலக்ஷ்மியையும், க்லீம் என்ற பீஜம் மஹா ஸரஸ்வதியையும் குறிக்கிறது.

ப்ரதம சரித்ரம் 104 ஸ்லோகங்களை உடையது அதிலே 104 சூக்ஷ்ம ரஹஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. மத்யம சரித்ரம் 113 ஸ்லோகங்களை உடையது அதிலே 113  சூக்ஷ்ம பீஜங்கள் அடங்கியுள்ளது, உத்தம சரித்ரம் 483  ஸ்லோகங்களை உடையது, அதிலே 483 சூக்ஷ்ம ரகஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. ஆகமொத்தம் 700 ஸ்லோகங்களில் 700 பீஜ மந்த்ரங்கள் மறைவாக புதைந்துள்ளது. நித்யமும் தேவீ மஹாத்மியத்தை பாராயணம் செய்பவர்கள் இகலோகத்தில் பரம ஸௌக்யத்தயும், உடல் ஆரோக்யமும்,  மன நிம்மதியும், செல்வ செழிப்பும் பெற்று விளங்குவதுடன் பர கதியும் முக்தியும் இறுதியில் பெற்றிடுவார்கள். அம்பிகை யுத்தகளத்தில் போரிடும்பொழுது அவள் நிகழ்த்திய அஸுர வதங்களையும் அவளின் பராக்ரமத்தின் பெருமையையும் விளக்கும் "ஸப்தஸதி" 'ஸ்ரீ வித்யா உபாஸகர்களின் பொக்கிஷமாக விளங்குகிறது. துர்கா ஸப்தஸதி "சாக்த கீதை" எனப்படுகிறது. இந்த மந்த்ரங்களை கொண்டு வருடம் 1 முறையாவது தர்பணம் மற்றும் ஹோமங்களை அந்தந்த ஊர்களில் உள்ள க்ராம தேவதைகளின் ஆலயங்களில் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதினால் விவசாயம் தழைக்கும், #ஊர்களில் #பரவும் #தொற்றுநோய்கள் தடுக்கப்படும், சரியான காலத்தில் தேவைக்கேற்ற மழைப்பொழிவு இருக்கும், பெரும் இயற்கை சீற்றங்கள் மற்றும் அழிவுகள் நிகழாமல் காக்கும், தனிமனித ஒழுக்கம் மேம்படும். ஒற்றுமை நிலைக்கும்.


தேவி மஹாத்மியம் கேட்ட சுரதன் என்ற வேந்தனும், சமாதி என்ற வைசியனும் நதியின் திட்டில் மூன்ராண்டு காலம் நியமத்துடன் மண்ணால் உருவம் செய்து வைத்து தேவியை பூஜித்து வந்தனர். அம்பிகை தோன்றினாள், என்ன வரம் வேண்டும் என கேட்டாள். 

வைசியன் வைராக்யம் மேலிட்ட ஞானத்தை வேண்டினான், அரசனோ மறுபிறவியிலும் பக்தி நீங்காமலிருக்கும்படி இழந்த அரசை வேண்டினான். அம்பிகை அவ்விதமே அருளினாள். 


அவ்வரசனே மறுப்பிறப்பில் சூரியனுக்கு பிறந்த சாவர்ணி என்ற மனுவாக ஆனான். எழுபத்தி ஒரு தேவயுகம் கொண்டது ஒரு மனுவின் காலம். இதையே மன்வந்திரம் என்று கூறுவது வழக்கம். 


காமதேனுவை போன்ற எல்லாவற்றையும் சளைக்காமல் கொடுக்கவல்ல தேவியை வழிபட்டு அவள் அருளுக்கு பாத்திரராகுதல் மனித பிறவி எடுத்ததன் பயன். ஆதலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த தேவி மஹாத்மியத்தை படியுங்கள், அத்தோடு இயன்றவரை துர்க்கா சப்தச்லோகியையும் பாராயணம் செய்து வந்தால் மகாசக்தியின் பேரருளால் அனைத்து நலன்களும் அசுரவேகத்தில் சித்திக்கும்..


                   - சித்தர்களின் குரல் shiva shangar

Thursday, 16 February 2023

சிவபுராண பொருள் விளக்கம்

 சிவபுராண பொருள் விளக்கம்


திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! அதன் வடிவாக

விளங்கும் இறைவன் திருவடி வாழ்க!

இமைக்கும் நேரமும்கூட என் மனத்தினின்றும்

நீங்காதவனின் திருவடி வாழ்க!

திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை

ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க!

ஆகம வடிவாகி நின்று இனிமையைத்

தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க!

ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடிவாழ்க! 05


மனஓட்டத்தைத் தொலைத்து, என்னை அடிமை

கொண்ட முழுமுதற்கடவுளது திருவடி மேம்படுக!

பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக்கழல்

அணிந்த திருவடிகள் மேம்படுக!

தன்னை வணங்காத அயலவர்க்கு எட்டாதவனாய்

இருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக!

கைகூப்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற

இறைவன் திருவடிகள் மேம்படுக!

கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரப்

பண்ணுகின்ற சிறப்புடையவனது திருவடி மேம்படுக!

*1 பிஞ்ஞகன் -பிறை, கங்கை,அரவம் முதலிய தலைக்கோலங்களை உடையவன், 10


ஈசனது திருவடிக்கு வணக்கம்; எம் தந்தையின்

திருவடிக்கு வணக்கம்.

ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்.

நிறைந்த மங்களம் உடையவனது திருவடிக்கு வணக்கம்.

அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற

மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்.

நிலையாமை உடைய பிறவியை ஒழிக்கின்ற

அரசனது திருவடிக்கு வணக்கம்.

சிறப்புப் (அழகு)பொருந்திய திருப்பெருந்துறையின் கண்

எழுந்தருளியுள்ளநம் கடவுளின் திருவடிக்கு வணக்கம். 15


தெவிட்டாத (வெறுக்காத) இன்பத்தைக் கொடுக்கின்ற மலை போலும் கருணை உடையவனுக்கு வணக்கம்.

சிவபெருமானாகிய அவன், என் மனதில் நிலைபெறிருந்ததனால்

அவனுடைய திருவருளாலே அவனுடை திருவடியை வணங்கிச்

சிந்தை (மனம்) மகிழும்படி சிவனது அநாதி முறைமையான பழைமையை முற்பிறப்பில் செய்யப்பெற்ற வினைகளுள்

முகந்து கொண்ட வினை முழுமையும்

*3நீங்க யான் சொல்லுவேன்.

*2 மோய- மோசனம் என்னும் வடசொல்லின் திரிபு.

*3'ஓய' என்று கொண்டு 'கெட' என்றும் பொருள் கொள்வதுண்டு. 20


நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான்,

தன் அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்தடைந்து,

நினைத்தற்கு அரிய அழகுவாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், வானமாகி நிறைந்தும், மண்ணாகி நிறைந்தும்,

மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி,

மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே!

உன்னுடைய மிக்க சிறப்பைக் கொடிய வினையை உடையவனாகிய யான், புகழ்கின்றவிதம் சிறிதும் அறிகிலேன். 25


புல்லாகியும் பூடாகியும், புழுவாகியும், மரமாகியும்,

பலவிலங்குகள் ஆகியும், பறவையாகியும், பாம்பாகியும்,

கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும்,

பூதகணங்களாகியும், வலிய அசுரராகியும், முனிவராகியும்,

தேவராகியும் இயங்குகின்ற இந்த அசையாப் பொருள், அசையும்

பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே... 30


எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன்,எம்பெருமானே!

உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக்

கண்டு, இப்பொழுது வீடு பேறு பெற்றேன்,

நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடப வாகனனே! 1 மறைகள்

ஐயனே! என்று துதிக்க, உயர்ந்து ஆழ்ந்து, பரந்த நுண்பொருளானவனே! (எங்கும் வியாகபமாய் நிற்பவனே) 35


வெம்மையானவனே தண்மையானவனே,

ஆன்மாவாய் நின்ற குற்றமற்றவனே!

நிலையாத பொருள்கள் யாவும் என்னைவிட்டு

ஒழியக், குருவாய் எழுந்தருளி,

மெய்யுணர்வு வடிவமாய் விளங்குகின்ற உண்மை ஒளியே!

எவ்வித அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே!

அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே! 40


தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே!

எல்லா உலகங்களையும் படைப்பாய், நிலைபெறச் செய்வாய்,

ஒடுக்குவாய் அருள்செய்வாய்! பிறவியிற் செலுத்துவாய்,

அடியேனை உன்தொண்டில் புகச் செய்வாய்!

மலரின் மணம் போல, நுட்பமாய் இருப்பவனே!

தொலைவில் இருப்பவனே, அண்மையில் இருப்பவனே!

சொல்லும், மனமும் கடந்து நின்ற வேதப்பொருளாய் உள்ளோனே! 45


கறந்த பாலும் சர்க்கரையும், நெய்யும் கூடினது போல

சிறந்த அன்பரது மனத்துள் இன்பம் மிகுந்து நின்று

எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எங்கள் பெருமானே!


*4 ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க,

அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே! எம்பெருமானே!

வலிய வினையை உடையவனாகிய என்னை..


*4 நிறங்கள் ஐந்து . இறைவன் ஐந்து பூதங்களிலும் நிறைந்திருக்கிறான்.

ஐந்து பூதங்களுக்கும் நிறங்கள் உண்டு.

அவை மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும்,

நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும் வானுக்குப்

புகைமையும் எனச் சாத்திரங்கள் கூறும்.


''பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல்

சிகப்பு வன்கால் கருமை, வளர்வான் தூமம்''என்பது

உண்மை விளக்கம். மேலும் சிவபெருமானின் திருமுகங்கள் ஐந்தும்,

ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம் உடையதாய் இருப்பதையும் இது குறிக்கும் என்பர்.


ஈசானம்- படிகநிறம்; தத்புருஷம்- பொன்நிறம்;

அகோரம்-கருநிறம்; வாமம்-குங்குமம் அல்லது செந்நிறம்;

சத்யோசாதம்- அதிவெள்ளை நிறம். 50


மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய

(இருள் மாய) ஆணவம் கெடுதற் பொருட்டு,

புண்ணியம், பாவம் என்கின்ற, அறுதற்கு

அருமையாகிய கயிற்றினால் கட்டப்பெற்று,

வெளியே தோலால் மூடி, எவ்விடத்தும் புழுக்கள்

நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய,

மலம் ஒழுகுகின்ற *5 ஒன்பதுவாயிலை

உடைய உடம்பாகிய குடிசை,

குலையும்படி, ஐந்து புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,


.*5. செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய், கருவாய், எருவாய் 55


உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே, மாசற்றவனே!

உன் பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய்,

மனம் கசிந்து உருகுகின்ற நன்மை இல்லாத சிறியேனுக்குக்

கருணை புரிந்து பூமியின் மேலே எழுந்தருளி,

நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத், 60


தாயினும் மேலாகிய தயையை உடையவனாய்

நின்ற உண்மைப்பொருளே! களங்கமற்ற, சோதியாகிய மரத்தில்

பூத்த பூப்போன்ற சுடரே! குருமூர்த்தியே!

(ஒளியாய் இருப்பவனே!) தேனும், அரிய அமுதமும் போல இனியவனே!

பாசமாகிய தொடர்பை அறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய

அருளைச் செய்து, என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழியப்.. 65


பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய ஆறே!

தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே!

ஆராயதார் மனத்தில் மறைகின்ற

(உன்னை உணராதவர்க்குத் தோன்றாமலே இருக்கின்ற) ஒளியை உடையவனே!

என் மனத்தை நீர்போல் உருகச்செய்து, என் அரிய உயிராய் நின்றவனே!

சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே!

அன்பர் பொருட்டு அவற்றை உடையவனே! 70


அன்பர்களிடத்து அன்புள்ளவனே, கலப்பினால்

எல்லாப் பொருள்களும் ஆகித், தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை உடையவனே !

(சக்தியாய் நிற்பவனே! ஒளி-சக்தி; சிவஞான சித்தியார்)

செறிந்த (நிறைந்த) இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமையுடையவனே!*6 முதல்வனே!

முடிவும் நடுவும் ஆகி, அவையல்லாதும் இருப்பவனே! இழுத்து

(வலிய வந்து உலகியல் வாழ்வைத் தடுத்து) என்னை ஆட்கொண்டருளிய

எனக்கு ஞானத்தந்தையான பெருமானே!

மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும்......


*6 துன்னிருளே தோன்றாப் பெருமையனே. உயிர்கள் போல்

ஆணவமலத்தால் அணுகப் பெறாத பெருமைஉடையவனே என்றும் பொருள் சொல்லப்பெறுகிறது.. 75


எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே!

ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத,

இயல்பாகவே நுட்பமாகிய அறிவே!

இறப்பும் பிறப்பும்), நிற்றலும்

(இன்ப துன்ப நுகர்ச்சிகளும்) (அறவடிவினனே!)


எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே!

(உயிர்கள் உன்னுடைய நிலையை முழுவதும் காண்பதற்கு இயலாத)

பெரிய ஒளியே! மகாநதி போன்ற இன்பப் பெருக்கே!

(பேரின்பத்திற்குக் காரணமானவனே!) அப்பனே!

மேலோனே!நிலைபெற்ற தோற்றத்தை உடைய, விளங்குகின்ற ஒளியாகியும்,

சொல்லப் பெறாத நுட்பமாகிய அறிவாகியும்...

-மிகுந்து வளர்ந்து நின்ற என்ரும் பொருள்சொல்வர். 80


மாறுபடுதலை உடைய உலகத்தில்,வெவ்வேறு பொருளாய்க்

காணப்பெற்று வந்து அறிவாய் விளங்கும்

தெளிவானவனே! தெளிவின் தெளிவே! என் மனத்துள்

ஊற்றுப் போன்ற, பருகுதற்கு அரிய அமிர்தமே! தலைவனே!

வெவ்வேறு விகாரங்களை உடைய ஊனால் ஆகிய உடம்பின்

உள்ளே தங்கிக் கிடக்கப் பொறுக்கமாட்டேன் எம் ஐயனே! சிவனே! ஓலம் என்றுமுறையிட்டு... 85


வணங்கி, நின் திருப்புகழை ஓதியிருந்து,

அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள்,

மறுபடியும் இவ்வுலகில் வந்து வினைப்பிறவியை அடையாமல்,

வஞ்சகத்தை உடைய ஐம்புலன்களுக்கு இடமான

உடம்பாகிய கட்டினை அறுக்க (அடியோடு நீக்க) வல்லானே! நடு இரவில்

(செறிந்த இருளில்) மிகுந்து (சூக்கும) நடனம் செய்கின்ற இறைவனே!

திருத்தில்லையில் ஆடல் வல்லானே!

தென் பாண்டி நாட்டை உடையவனே! 90


துன்பப் பிறவியை அறுப்பவனே!

ஓலம் என்று முறையிட்டுத்

துதித்ததற்கு அருமையானவனை, யான் அறிந்த அளவில்

போற்றித் துதித்து, அவனது திருவடியின்மீது

பாடிய பாட்டின் பொருளை அறிந்து துதிப்பவர்,

சிவநகரத்தில் உள்ளவராய்ச், சிவபெருமன்

திருவடிக்கீழ்ச் சென்று எல்லோரும் துதிக்க,

வணங்கி நிலை பெறுவர்

Tuesday, 7 February 2023

கடவுள் நம்பிக்கை

 #சிறுவயதில்_கடவுள்_மறுப்பு_கோஷ்டியினர்_கேட்கும்_கேள்விகளை_நான்_என்_அப்பாவிடம்_கேட்டிருக்கிறேன்

#எழுத்தாளர்_சுஜாதா


எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!” 


இந்தப் பதில் இன்னும் குழப்பும்.  அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும். 


“நீ ஏதோ டபாய்க்கிற.!” என்பேன்.


“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்”, என்பார். 


அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும், மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது,  “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார்.  இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது. 


சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது. 


புளி டப்பாவைத் திறந்தபோது,  அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது.  ஏர்-டைட் டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.!  அதற்குள் பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன்.  நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?” என்றார்கள். தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று மேலும் பலமாகச் சொறிந்துகொண்டேன்.  ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள்.  குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன்.  சின்ன ஓட்டையில் எப்படியொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன். மீண்டும் குழப்பம்.  


கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பது தெரியாமல் இருக்க, தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.? பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு நரசிம்மருக்கு யார் தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.? 


இந்தக் கேள்விகளுக்கு ஆழ்வார் பாசுரங்களையும் ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.  ஸ்வாமி தேசிகன் நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், அதனால் அவருடைய தாய் அந்தத் தூண் தான் என்கிறார்.  தேசிகன் கூறிய பிறகு அதை மறுத்துப் பேச முடியுமா.? 


(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ அதே போல் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எது செய்தாலும் அதில் தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். ஆசாரியன் கூறிய பிறகு அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம். 


வள்ளுவர்


எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு


என்கிறார்.  இதற்குப் பொருள், “எந்தப் பொருளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு”. அதாவது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும்.  எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார்.  கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று அவர்களின் பி.எச்.டியை வைத்துக்கொண்டு கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.


நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.  நம் அறிவு என்பது எவ்வளவு சின்னது என்று ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré, "சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார்.  இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. அதனால் நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :


இன்று தூங்கி நாளை எழுந்துகொள்ளும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...உங்கள் அப்பா,  அம்மா,  நாய்குட்டி, விடு,  கோயில்,  செடி,  தட்டு, அரிசி,  பேனா,  பென்சில், சட்டை,  அணுக்கள்,  நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், ஏன் நீங்களும் பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.


மறுநாள் காலை நீங்கள் எழுந்த பிறகு எல்லாம் பெரிசாகிவிட்டது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...முடியாது  என்கிறார் Jules henri. அவ்வளவு தான் நம் அறிவு.


சாதாரணமாக இதையே அளக்க முடியாதபோது பெருமாளை இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.


ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,

ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,

கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்

நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.


-  திருப்பாணாழ்வார்


எழு உலகையும் உண்டு ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது உலகை உண்ட பிறகு அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.


கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம். அதே போல மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.


( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )


எப்படி என்று இதை எல்லாம் யோசிக்கவே முடியாது.  முயற்சியும் செய்யாதீர்கள்.! இது தான் அகடிதகடனா சாமர்த்தியம். (லிஃப்கோ தமிழ் அகராதியில் - “perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள். ). 


நம் இரைப்பையில் ‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா.? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.! ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது.  நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.!  இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.?  பேன் தலையில் இருந்தால் அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம். இச்சிங்கோ, டச்சிங்கோ நாம் அதை உணர்வது எப்படி.? உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு  விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது. 


நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும்.  தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம். ‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  ஆனால் என்றாவது எனக்கு ’அறிவு இல்லை, அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை, காரணம் நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.


இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தைப் பார்க்கலாம். 


அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய

நெறி எல்லாம் எடுத்து உரைத்த, நிறைஞானத்து ஒரு மூர்த்தி

குறிய மாண் உரு ஆகி, கொடுங் கோளால் நிலங் கொண்ட

கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே.


நிறை ஞானத்து மூர்த்தியான கண்ணன் உலகில் உள்ள அறிவு படைத்த நமக்குக் கீதையை அருளினான் என்று இதற்குப் பொருள் கூறினால் அது தப்பு.  ‘அறிவில் குறைவில்லை’ என்று சொல்லும் அறிவில்லாதவர்களுக்குக் கீதையை உரைத்தான் என்று படிக்க வேண்டும்.


கட்டுரையின் கடைசிக்கு வந்துவிட்டோம்.  மீண்டும் நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். 


உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்

மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன் அவன்

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்

துயர் அறு சுடர்-அடி தொழுது எழு என் மனனே.!


என்ற பாசுரத்தைப் படிக்கும்போது, நம்மாழ்வாரும் நம்மைப் போலக் கேள்விகள் தான் கேட்கிறார் என்று தோன்றும்.  ஆனால் இந்தப் பாசுரத்திலேயே பதில் இருக்கிறது.!  இந்தப் பாசுரத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம். 


உயர்வு அற உயர் நலம் உடையவன் எவனோ,

அவனே மயர்வு அற மதி-நலம் அருளினன் எவனோ

அவனே அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவனோ

அவனையே துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே.!


ஏன் நம்மாழ்வார் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு அதே பாசுரத்தை இப்படிப் படிக்க வேண்டும்.


உயர்வு அற உயர் நலம் உடையவனான அவனே,

அயர்வு அறும் அமரர்களுக்கு அதிபதியான அவனே நம்மாழ்வாருக்கு

மயர்வு அற மதி நலம் அருளினான் ஆகையால் நம்மாழ்வார் கூறும்

அறிவுரைகளின் படி அவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழ வேண்டும். 


சில சமயம் கேள்வியே பதிலாக இருக்கும்.....

பௌர்ணமி 05.02.2023



 






































Monday, 6 February 2023

கொக்கரையான் கோயில்:

 🌞செய்த பாவங்கள் அனைத்தும் விலகி சொர்க்க லோகத்தை அடைய  தகுதி பெற்றவன் ஆக்கும் கொக்கரையான் கோயில்:


🌟இப்படி ஒரு திருகோயிலா? தலமா ?


⭐எமதர்மராஜன் தன் உதவியாளர்கள் அன்று எடுத்து வந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் , உங்களில் யார்  கொக்கரையான் கோவில் கோபுரதரிசனம் செய்துள்ளீர்கள்??


🌷இதற்கு என்ன காரணம்?


🌷எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற் செயல்களையும் செய்யாவிடினும் ....


🌷ஒருவன் கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான் எனில் , அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அந்த நொடியில் விலகி சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான் என்பதே காரணம்.


🌷இந்த கோவில் எங்கு உள்ளது ? 


🌷நம் கொங்கு நாட்டில் தான் ..

திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


🌷இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....


🌷திருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.


🌷சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


🌷இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது. 


🌷சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.


🌷இத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.


🌷இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.


🌷 இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.


🌷"கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.


🌷ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.


🌷ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், 

ஸ்ரீ தட்க்ஷணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமார்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம். 


🌷சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.


🌷சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டு வந்த கிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏

பிரம்மலிங்கேசுவரர் கோயில் https://maps.google.com/?cid=3953184172646914049&entry=gps






சிவபெயரச்சி

 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


*இன்று, சிவ பெயர்ச்சியுடன் கூடிய இனிய திங்கட்கிழமையில் அம்பிகை,  சிவ பெருமான், அருளோடு காலை வணக்கம்.* 


*இன்று சந்திரனுக்குரிய சோமவாரத்தில் அம்பிகை, சிவ பெருமான், மற்றும் சந்திர பகவானை  வணங்கி அருள்பெறுவோம்.*


*⚪ஸ்ரீ சந்திர காயத்ரீ🌼*


 *🕉️ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேமரூபாய தீமஹி!! தன்னோ சோமப் ப்ரசோதயாத்!!!🔯*

*இன்று பிப்ரவரி மாதம் (06.02.2023) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி..!*


*சனிப்பெயர்ச்சி., குரு பெயர்ச்சி., ராகு கேது பெயர்ச்சி கேள்விபட்டிருப்பீர்கள்..!*


*சிவ பெயர்ச்சி கேள்வி பட்டுள்ளீர்களா..?*


*ஆம் சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது*


*ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்*


*பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமார ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே “சிவப்பெயர்ச்சி”*


*ஒவ்வொரு வருடமும் தை மாதம் கடைசி திங்கட்கிழமை நாளில் வருவதே இந்த சிவப்பெயர்ச்சி..!*


*இந்த சிவப்பெயர்ச்சி தினத்தில் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும்.*


*இன்றைய கலியுகத்தில் கடன்., வியாபாரம் என பல வித மன அழுத்தத்தால் மனித குலம் அதீத கோபத்திற்கு ஆளாகிறது.*


*அப்படிபட்ட கோபத்தை அழித்து சாந்தம் அன்பு கருணை குணம் மாறக்கூடிய தினமே சிவப்பெயர்ச்சி.*


*ஏழரை சனி.,  அஷ்டமசனி,ஜென்ம குரு., ராகு.,கேது தீவினைகள் என எல்லாவித கிரஹ தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதத்தில் வரும் கடைசி திங்கட்கிழமையே..!!*


*அனைத்து ராசியினரும் சிவப்பெயர்ச்சி அன்று சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்., நோய்., விலகும்., சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும்.*


*மனம் அமைதி பெறும். கோபம் குறையும்., வீட்டில் அமைதி தங்கும்*


*பிப்ரவரி 6 ஆம் தேதி 2023 (தை 23 )தை  மாதத்தில் வரும் கடைசி திங்கட் கிழமையன்று* *அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள்.*


*சிவப்பெயர்ச்சிக்கான விஷேச ஸ்தலம் எங்கு உள்ளது தெரியுமா?*


*மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள* *“ஸ்ரீமஹாபலீஸ்வரர்” சிவன் கோவிலே சிவப்பெயர்ச்சிக்கான விஷேச ஸ்தலம் ஆகும்.*

ஸ்ரீமஹாபலேஸ்வரர் ஆலயம்,முட்டம் https://maps.app.goo.gl/1yCGECphfhnBFLjH8

*இது மஹாபலி சக்கரவர்த்தி தான் இழந்த செல்வம்., புகழ்., சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலமாகும்.*


*பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம்.*


💐💐💐💐💐💐💐💐💐💐

Wednesday, 1 February 2023

சென்னை காளிகாம்பாள் ஆலயம்


 #அன்னை_காளிகாம்பாள் #கோயில்_பற்றி_சில_தகவல்


1.காளிகாம்பாள் ஆலயம் மிகப் பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.


2. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.


3. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.


4. சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.


5. காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.


6. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


7. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். 


8. காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.


9. ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள்.


10. காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.


11. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.


12. அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.


13. காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.


14. காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் "சொர்ணபுரி'' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.


15. நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.


16. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.


17. பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.


18. இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.


19. காளிகாம்பாள் கோவிலில் 18-7-14 தொடங்கி 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


20. இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.


21. இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் "சுவாசினி சங்கம்'' அமைக்கப்பட்டுள்ளது.


22. இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.


23. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.


24. இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.


25. திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.


26. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.


27. இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.


28. இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், "குண வாயில்'' என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் "குட வாயில்'' என்றும் அழைக்கப்படுகிறது.


29. சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.


30. இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது. 


31. இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி. 


32. காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.


33. இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.


34. "உள்ளம் உருகுதய்யா... முருகா...'' என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.


35. இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது. 


36. வசந்த நவராத்திரியை முன்னிட்டு கடந்த 31.3.2014 முதல் 8.4.2014 வரை குங்கும லட்சார்ச்சனை நடந்தது. இந்த குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


37. காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


38. கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. 


39. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமாணவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


40. காளிகாம்பாலுக்கு "நெய்தல் நில காமாட்சி'' என்றும் ஒரு பெயர் உண்டு. 


41. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது.


42. இந்திரன், குபேரன், வருணன், வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கீரேசர், புலஸ்தியர், விராட புருஷன் விஸ்வகர்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.


43. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


44. இத்தலத்துடன் தொடர்புடைய சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகள் கோவிலில் அதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.


45. இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.


46. சிவனுக்கும், பார்வதிக்கும் ஏற்பட்ட ஊடலை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் முடிந்து சிவன்-பார்வதி திரும்பி வரும்போது, ஊடல் உற்சவம் நடத்தப்படுகிறது.


47. விராட புருஷ விஸ்வகர்மா சன்னதியில் வழிபடும் போது "ஓம் தேவ தேவ மகா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம'' என்று சொல்லி வழிபாடு செய்யலாம். 48. இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன.


49. இத்தலத்தில் மொத்தம் 33 பஞ்சலோக சிலைகள் உள்ளன. தொல் பொருள் ஆய்வுத் துறையினர் இதை பதிவு செய்துள்ளனர்.


50. இந்த கோவில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும், எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை.


51. தினமும் இரவு இத்தலத்தில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.


52. அம்பாள் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாரிடமும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும்.


53. இத்தலத்தில் பக்தர்கள் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. 


54. சமீபத்தில் இத்தலத்துக்காக அருகில் உள்ள மூன்று மனைகள் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் வாங்கப்பட்டன. அந்த இடத்தில் தற்போது ஆலய விஸ்தரிப்புப் பணி நடந்து வருகிறது.


55. தினமும் இத்தலத்தில் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 


56. மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் இத்தலத்தில் கோலாகல பூஜைகள் நடத்தப்படும். அதுவும் காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும்.


57. இத்தலம் தோன்றி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.


58. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளி நாடுகிளல் இருந்தும் பலர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.


59. காளிகாம்பாள் சன்னதி முன்பு 12 கால் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.


ஓம் ஆதி சக்தி போற்றி