Monday, 29 April 2019

நிமித்த சாஸ்திரம் - சித்தர் கேள்வி பதில்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—
நிமித்தம் என்பதன் பொருள் என்ன?

*சித்தன் பதில்*:—-
நிமித்தம்" என்கிற வார்த்தையின் அர்த்தமே, இந்த நேரம். அது நிகழ்காலம். அங்கிருந்து உடனடியான எதிர்காலத்தை ஒருவர் சரியாக கணிக்கலாம்.

*அடியவர்*:—-
இதற்கென பயிற்சி ஏதும் உண்டா?

*சித்தன் பதில்*:—
அதற்கென நிறைய சாதனை செய்ய வேண்டும். சிலருக்கு அந்த சாதனை, எளிய மூச்சு பயிற்சி எப்பொழுதும் செய்வதனால், எளிதாக கைவல்யமாகும். இங்கு கவனிக்கப் படவேண்டியது ஒன்று தான். அந்த பயிற்சியை சாதனை செய்பவர், தன் சித்தத்தை ஒரு பொழுதும் கலய விடுவதில்லை. தேவை இல்லாத அதிர்வுகளை, தன்னுள் புக விடுவதில்லை. சித்தம் நிலைத்தவருக்கு, எந்த வித பெரிய இரைச்சலான சூழ்நிலையும், இயல்பானதாக மாறிவிடும். எதுவும் அவரை பாதிப்பதில்லை. எனவே, தன் முழு கவனத்தையும் பஞ்ச பூதங்களின் தனிப்பட்ட சைகைகளின் மீதும், அல்லது பஞ்ச பூதகலவைகளின்  சலனங்கள் மீதும் செலுத்தி, அவைகள் உரைக்கும் பதிலை உணர்ந்து, உரைக்க முடியும்.

*அடியவர் கேள்வி*:—-
அடியேனுக்கு சில உதாரணங்கள் கூற வேண்டுகின்றேன் ?

*சித்தன் பதில்*:—-
உதாரணமாக, ஒரு சித்த வித்யார்த்தியை அல்லது சித்த மார்கத்தில் ஓரளவு முன்னேறிவிட்டவரிடம், ஒருவர் தனக்கு ஒரு வீடு அமையுமா? என்று கேட்கிற நேரத்தில், தன் சுற்றுப்புற சூழ்நிலையில் இயற்கை தெளிவுபடுத்துகிற சமிக்சைகளை உற்று பார்த்து, அவருக்கான பதிலை "ஆம் அல்லது இல்லை" என்று கூற முடியும். அது சரியாகவும் இருக்கும். எப்படி? என்று எதிர் கேள்வி கேட்டேன். அந்த கேள்வியை உள்வாங்கி, உணர்ந்து, ஒரு நிமிடம் கண் மூடி திறக்கும் பொழுது, அவர் ஒரு பூ, செடியிலிருந்து விழுவதை கண்டால், " ஆம்" என்பார். அல்லேல், அக்னியை கண்டால் "இல்லை" என்பார். "மண்" விழுந்தால் நஷ்டம் வரும், பசு நடந்தால், "இறை அருளினால்" உடன் அமையும், என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இப்படி, பஞ்ச பூதங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிற, சமிக்சைகளை, விரிவாக பார்த்து பழக வேண்டும்.

*அடியவர் கேள்வி*:—-
இப்படி கூறினால் காலத்தை மாற்றுவதாகும் இல்லையா?

*சித்தன் பதில்*:—-
கேள்வி கேட்கும் நேரம் யார் ஆட்சி, வந்தவரின் கர்மா, என்றெல்லாம் உணர வேண்டும். அப்படி *பார்ப்பவர் கூட என்னதான் பெரியவராக இருந்தாலும், மனித ஜென்மம் எடுத்து நிற்பதினால், அருகில் உள்ள கேட்டவரின் எதிர் காலத்தை பார்த்துவிட்டபடியால், சாட்சி பூதமாக இருக்கும் "காலம்" நடக்க வேண்டியதை மாற்ற நினைக்கும்.* அதனால் தான், நிமித்தம், ப்ரச்னம், ஜோதிடம் போன்றவற்றை உபயோகித்து பலன் சொல்பவர்கள், பலன் கூறியவுடன்,  ஒரு சில பரிகாரங்களை தொடர்ந்து செய்யச் சொல்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன வென்றால், சாட்சி பூதமான நாராயணன் (காலம்), அந்த பலனை மாற்றிவிடக்கூடாது எனவும், மேலும் கேட்டவர் ஒரு நல்ல கர்மாவினால் (பரிகாரம்) ஒரு புண்ணியத்தை சேர்த்துக்கொண்டு, அந்த பலனை அடையட்டுமே என்கிற நல்ல எண்ணத்தாலும் தான்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1