Sunday, 7 April 2019

சித்தர்களின் ஆசாரம்

*சித்தர்களின் ஆசாரம்
*


*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவரின் கேள்வி*:— கர்மாவை விளக்க வேண்டுகின்றேன்?

*சித்தன் பதில்*:— முதலில் கர்மா என்பது ஒருவன் செய்கிற செயலினால் விளைவது. அது நல்ல செயலினாலும் உருவாகும், கெட்ட செயலினாலும் உருவாகும். பின்னர், அந்த கர்மாவின் பலனை, எப்பொழுது, எந்த ஜென்மத்தில், எப்படி அந்த ஆத்மா அனுபவிக்க வேண்டிவரும் என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறார்.

*அடியவர் கேள்வி*:— ஒருவரின் கர்மா எப்போது கரையும்?

*சித்தன் பதில்*:— ஒரு ஆத்மாவின் கர்மாவானது இரு விதங்களில் கரையும். ஒன்று *கர்ம பரிபாலனம்.* இரண்டாவது *கர்ம பரிவர்த்தனம்.* "கர்மபரிபாலனம் என்பது அந்த ஆத்மாவே கர்ம பலனை அனுபவித்து தீர்ப்பது. அனுபவித்து தீர்ப்பதால் கர்மா குறைகிறது. கர்ம பரிவர்த்தனம் என்பது ஒரு ஆத்மாவின் கர்மாவை இன்னொரு ஆத்மா ஏற்றுக்கொண்டு அனுபவிப்பது. இங்கும், ஒரு ஆத்மாவின் கர்மா கரைகிறது. தானே அனுபவிப்பதற்கு, உதாரணம் தேவை இல்லை.

*அடியவர் கேள்வி*:— புரியவில்லை. ஒருவர் அனுபவிக்காமல் எவ்வாறு கர்மா கரைய இயலும். ?


*சித்தன் பதில்*:— எல்லோருக்கும் சந்தேகம் வருவது இரண்டாவது முறையில். அதெப்படி முடியும்! என்கிற எண்ணம் வரும். உனக்குத் தெரிந்த எந்த பெரியவர்களின் வாழ்க்கையை பார்த்தாலும், அது புரியும். உதாரணமாக, ஒரு சிலரை கூறுவதென்றால், இராமலிங்க அடிகளார், ரமண மகரிஷி, ராம்  சூரத்குமார் போன்ற பெரியவர்களை கூறலாம். இவர்கள் இந்த மனித குலத்துக்கு என்ன செய்தார்கள் என்று யாருக்கும் புரியாது. இப்படி எத்தனையோ மஹான்கள் இந்த கர்மபூமியில். அதனால்தான் மனிதகுலம் எத்தனையோ பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது, என்பது உண்மை" என்று நிறுத்தினார்.

*அடியவர் கேள்வி*:— இது அடியேன் இதுவரை அறியாத ஒன்று. இன்னும் சற்று விளக்கம் வேண்டுகின்றேன்?

*சித்தன் பதில்*:— கர்மாவின் இரண்டு வகை கரைதலை பார்த்தோம்.ஒரு மனிதனின் மொத்த கர்மாவில் 95 சதவிகிதம் பிறருக்கு கொடுப்பதினால், பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வதினால் வருகிறது என்று முன்னரே பார்த்தோம்.  இந்த 95இல் பாதிக்குப் பாதி உணவினால் வருகிறது. மீதி அவன் செயல்களினால். செயலும், உணவும் சிறந்தால், அவன் சிறப்படையலாம். உணவை சமைக்கிற சூழ்நிலை, உணவு பொருட்களை தருவிக்கிற சூழ்நிலை, உணவை அளிக்கும் சூழ்நிலை, உண்பவன் மனநிலை, இப்படி எத்தனையோ சூழ்நிலைகளில் உருவகப்படுகிற கர்மாவானது, உணவு வழி ஒருவனுக்கு சென்று, அவன் செயல்களை/எதிர்காலத்தை/ அவனின் புண்ணிய/பாவக் கணக்கை  தீர்மானிக்கிறது. தவறான உணவு, உதாரணமாக, அசைவ உணவு, மிருகத்தன்மையைத்தான் ஒருவனுக்கு வளர்த்தும். ஏன் எனில், எந்த உடல் சமைக்கப் பட்டதோ, அதனுள்ளும் ஒரு ஆத்மா இருந்து, தன்னால் இயன்றவரை தன்னை காத்துக்கொள்ள கடைசிவரை போராடியிருக்கும். அந்த போராட்டத்தின்/திணறலின் வீச்சத்தை அந்த உடல் பதிவு செய்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவை ஒருவன் உண்பானேனில், அவனுக்கு சாத்வீக உணர்வு எப்படி வரும். *முதலில் சாத்வீகத்தை அடைந்து, அங்கேயே நின்றால்தானே, தெய்வம், தெய்வீக உணர்வை அவனுள் புகுத்தும்.* பிறகுதானே அவனுக்கு வாழ்வில் முன் செல்ல இயலும்?

*அடியவர் கேள்வி*:— உண்மை. நாம் உண்ணும் உணவு கர்மாவை அதிகரிக்குமா?

*சித்தன் பதில்*:— இன்னொன்றை புரிந்து கொள்! நீ  சாப்பிடுகிற உணவானது சைவமாக இருந்தாலும், அதை சமைத்தவன் அல்லது பரிமாறுகிறவர், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்கள் அசைவம் சாப்பிட்ட தோஷத்தின் பங்கு, அவர்கள் தயார் செய்து, சைவ உணவை மட்டும் சாப்பிடுகிற உனக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இங்கு நடப்பது கர்ம பரிபாலனம்" என்றார்.

*அடியவர் சிந்தனை*:— இதைக் கேட்ட அடியேன் ஒரு நொடி அதிர்ந்து போனேன். எங்கெங்கோ பயணம் செய்து, சைவ உணவை தேடிப்போய் உண்டு, புண்ணிய தல யாத்திரைகளை செய்த வேளை, தெரியாமலேயே பாபங்களை சேர்த்துக் கொண்டிருக்கலாம். அதெப்படி அவ்வளவு நுணுக்கமாக பார்த்து, இந்த காலத்தில் வாழ முடியும்? எனத்தோன்றியது. அதை கேள்வியாக்கினேன். "மன்னிக்கவும், அடியேனின் கேள்வியில் தவறிருந்தால். இத்தனை வளர்ந்து போய்விட்ட மனித சமூகத்துள், எவ்வளவு தூரம் இதை பார்த்து நடப்பது. சரி! அப்படியே ஒருவர் இருந்திட தீர்மானித்தாலும், பாபம் சேர்ந்த உணவா, இல்லையா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் சொல்கிற சாத்வீக வழி, நடைமுறையில் சாத்தியமா?"


*சித்தன் பதில்*:— “நடைமுறைக்கு சாத்தியம்" என்றார் திடமாக.

*அடியவர் கேள்வி*:— என்னென்னவோ நல்ல வழிகளை ஆராய்ச்சி செய்து நடை முறைப்படுத்தி அனுபவம் பெற்றிருக்கிறார், இவர். அதனால்தான், இத்தனை திடமாக, கேள்வி முடிந்த வினாடியில், பதில் கூறுகிறார் என்று உணர்ந்தேன். "சரி! நம்புகிறேன்! ஆனால் அதை தெளிவு படுத்துங்களேன்!"

*சித்தன் பதில்*:—  "சித்தர்கள் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. *கருவாட்டைக்கூட, கத்திரிக்காயாக மாற்றத் தெரிந்தவன், சித்தன்* என்று. அது மாயாஜாலத்தை குறிப்பதல்ல. அதை பற்றி முடிந்தால் பிறகு பார்ப்போம். "ஆசாரம்" என்கிற ஒரு வழக்கத்தை மேன்மை பொருந்திய மனிதர்கள் தொடர்வதை கேள்விப்பட்டிருக்கிறாயா?என்றார்.

*அடியவர*:—  ஆம்! இறை வழியில் செல்பவர்கள், ஒரு பொழுதும் நிலை தடுமாறாதிருப்பவர்கள் ஒரு சில முறைகளை தொடர்ந்து செல்வதை "ஆசாரமான மனிதர்கள்" என்று கூறக்கேட்டிருக்கிறேன்" என்றேன்.

*சித்தன் பதில்*:— "ஆ" என்றால் இறைவனை குறிக்கும். "சாரம்" என்பது "சார்ந்திருத்தலை" குறிக்கும். இறைவனை சார்ந்திருத்தல் என்பது, இறைவனின் மன எண்ணப்படி, இறைவனாகவே வாழுகிற ஒரு முறை. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று தேடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வதே "ஆசார முறை" ஆகும். அப்படியாயின், எந்த உயிருக்கும் ஒரு பங்கமும் செய்யாமல் வாழ்வது கூட ஒரு ஆசார முறைதான், இல்லையா."

*அடியவர்*:—
ஆமாம்!"

சித்தன் பதில் தொடரும்....


*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*