Saturday, 6 April 2019

வாழ்க்கை நன்கு அமைய என் செய்ய. இறைவனை எப்போது காண இயலும்?

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கேள்வி*

வாழ்க்கை நன்கு அமைய என் செய்ய?

*சித்தன் பதில்*

இலக்கணமே, குறளாயிற்று!  தன் பசி, தன் வேதனை உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு பசிக்கும், வலிக்கும் என்று உணர முடியும். *தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள். வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும்.*

*அடியவர்*:- இறைவனை எப்போது காண இயலும்?

*சித்தன் பதில்*:- உணர்வை கட்டிப்போட்டு, உயர்ந்த நிலைக்கு வழிமாற்று. ஆனால் எதையும் கட்டிப்போட்டு வளர்க்காதே! அது உனக்கு நீயே சேர்த்துக்கொள்ளும் எதிர்கால சிறைவாசம்! சேர்த்துக் கொண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம் வெளிப்படுவது போல், இறைவன் உன்னுள்ளே தோன்றுவான். அன்னம் தானமாயினும், அது நாராயண சேவை! ஆத்மா நீங்கிய உடல் அக்னிக்கு கொடுக்கினும், அது சிவபெருமான் சேவை. *இவ்வுலகில், நிலையானது என ஒன்றில்லை, இறைவதனைத்தவிர.* எண்ணம் இலை மறை காயாய் இருந்தாலும், இறை வாசம் இருந்தால்தான், கனியும். பஞ்சதாயன பூசையில் சுப்ரமணியன் எங்கு போனான் என்று தேடுபவனுக்கு, "பராபரம்" எளிதில் காட்டப்படும்!   சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்கை, ஒன்று சேரும்! *நெல்மணியாய் விளைந்து நில், பவ்யமாய் வளைந்து நில். உன்னுள்ளே "அரிசிவமாய்" இறைவன் இருப்பான்.* எங்கும், இனிப்பே கசப்பானது, காரமே, புளிப்பானது.

*அடியவர்*:- கர்மாவை எளிமையாக விளக்க வேண்டுகின்றேன்?

*சித்தன் பதில்*:- வியாதிக்குள் கர்மா மறைந்திருப்பதுபோல், *பசிக்குள் கர்மா தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்மா தகனம் நடக்கிறது.*

*அடியவர்* இப்படி அவர் கூறிக்கொண்டே செல்லச்செல்ல, கேட்ட நானே அசந்து போனேன். அத்தனையும் ஞாபகத்தில் வைக்க முடியுமா என்ற  எண்ணம் தோன்றியது. அதை புரிந்து கொண்டாற்போல், சிரித்தபடியே நிறுத்தினார்.

சித்தன் பதில் தொடரும்.....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*