Wednesday, 3 April 2019

வாசியோகம்* மற்றும் *தசவாசலை நோக்கிய பயணம்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிகளின் அடியவர் கேள்வி*:-

*வாசியோகம்* மற்றும் *தசவாசலை* நோக்கிய பயணத்தை, சற்று விரிவாக கூறுங்களேன்"

*சித்தன் பதில்*:- "ஒன்றை அடிப்படையாக மனதுள் வைத்துக்கொள். எத்தனைதான் இங்கு கூறினாலும், எதையுமே, அவனவன் உணர்ந்தால் அன்றி உணர முடியாது. சரிதானே!"

*அடியவர்*:-“ஆமாம்!"

*சித்தன்*:- "ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் தலையை தொட்டு பார்த்திருக்கிறாயா?"

*அடியவர்*'ஆமாம்! பார்த்திருக்கிறேன்!"

*சித்தன்* "எப்படி இருக்கும் என்று கூறேன்?"

*அடியவர்*:- "தலையின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! தோல் அதை மூடியிருக்கும். தடவினால், ஒரு சிறு பள்ளத்தை உணரலாம்!" என்றேன்.

*சித்தன்* “உண்மை! ஒரு குழந்தையின் பிறப்பின் வழி இறைவன், மறுபடியும், மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூடே வாழ்க்கையை நடத்தும் பொழுது, உடலை விட்டு நீங்கும் போது, இந்த *தசவாசல்* வழி வெளியே வந்தால், உனக்கு மோட்சம் என்று கூறுகிறான். ஒரு மனிதனின் தலை உச்சியை, பெரியவர்கள் "சஹஸ்ராரம்" என்று கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு மனிதனின் உடலுக்கு உள்ளே செல்கிற வழிகள் ஒன்பது இயற்கையாகவே, இறைவன் கொடுத்தது. அத்தனையையும் கட்டுப்படுத்தி, *அனைத்திலும் ஊறும் சக்தியை திரட்டி, பத்தாம் வாசலுக்கு செல்ல வேண்டும்.*
அந்த திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பெற்றவர்கள், அது வேகமாக இணைய வேண்டும், இல்லையேல் ஏதேனும் பிரச்சினை வந்துவிடும் உடலுக்கு என்று, எண்ணெய் தடவி குளிர வைப்பார்கள். அதுவும் குளிர்ந்து மிக குறைந்த காலத்திலேயே மூடிவிடும். *ஒரு பிறப்பு காட்டித்தந்த அந்த பத்தாம் வாசலை நோக்கி, உள்ளிருந்து, கவனத்தால், மூச்சு காற்றால், தடவி, தடவி, சேர்ந்த மண்டையோட்டை கரைப்பதுதான், வாசி யோகத்தின் ஒரே முனைப்பு.* இதற்கான முயற்சியை தொடங்கி நடந்து செல்லும் பொழுதே, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். *இறைவன், சித்தர்கள், வெளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ரகசியங்கள், அரிய விஷயங்கள், என ஒவ்வொன்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்தொடங்கும். காலம் செல்லச் செல்ல, அவனிடம் அத்தனை அரிய விஷயங்களும் சேர்ந்துவிடும்.* இத்தனையையும் சொன்னால் மனிதன் குழம்பிப் போய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பெரியவர்கள் *"மூக்கின் நுனியை கவனி! உள்போகும், வெளிவரும் மூச்சை கவனி"* என்றார்கள். என்ன செய்ய! அதுவும், இப்பொழுது நல்ல வியாபாரமாக ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னகைத்தபடியே நிறுத்தினார்.

*அடியவர்* “இதை, காலத்தின் கட்டாயம் என்று கூறலாமே.

*சித்தன்* “இல்லை! ஒருவனுக்கு என்ன தெரியவில்லை என்றுணர்ந்து, அதை இன்னொருவன் வியாபாரம் செய்கிறான்! அதை விடு! தொடங்கிய விஷயத்துக்கு வருவோம்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*