Wednesday, 17 April 2019

சித்த மார்கத்தில் மனிதனுக்கு புரியட்டும் என்பதற்காக "எல்லோரும் பத்தே கால்" என சுருக்கமாக கூறுவோம்"

பின் வரும் பதிவு மிகவும் ஆழமான ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும்...

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் - கேள்வி*:—
"எத்தனையோ நல்ல விஷயங்களை, மிக எளிதாக உலகம் உய்யுற, மனிதன் மேம்பட வேண்டி கூறினீர்கள். இத்தனையையும் அல்லது இவற்றில் நிறைய விஷயங்களை ஒருவன் தன் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால், நிச்சயமாக சித்த மார்கத்தில் உயர்வான நிலையை அடைய முடியும். இல்லையா?"

*சித்தன் பதில்*:—-
நிச்சயமாக உயர் நிலையை அடைய முடியும். ஆனால், அந்த ஒருவன், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை பொருத்து இருக்கும். மனிதனை ஆட்டிப் படைப்பது, அவன் பௌதீக விஷயங்களில் செலுத்தும் கவனமும், அவற்றின் மீது வைக்கும் பற்றும் தான். சற்று முன் அவன் வசம் இருந்தது, அடுத்த நொடி இல்லாமல் போனால், மிகவே பதற்றமடைகிறான். அதற்கு காரணம், அது இருந்தால்தான், தன்னால் அடுத்த நிமிடம் வாழ்க்கையை நடத்த முடியும் என்கிற, அதை சார்ந்த மன நிலைதான். தெளிவுக்காக, ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்"

*சித்தன் சிறிய யோசனைக்குப்பின் கேட்ட கேள்வி*:—-
10 மணிக்கு இருந்த ஒருவரை "அப்பா" அல்லது "அம்மா" என்றழைத்த மனிதன், 10.05க்கு அவர் உயிர் நீத்தால், பின்னர் அந்த உடலை "பிணமாகத்தான்" பார்க்கிறான். இல்லையா?"

*அடியவர் பதில்*:—-
உண்மை! அவன் அப்படி அழைக்காவிடினும், அவனை சுற்றி இருக்கும் சமூகம் "எத்தனை மணிக்கு உடம்பை எடுக்க போறீங்க? என்றுதான் கேள்வி கேட்கும். என்னடா இது, என் தகப்பனை இவர்கள் இப்படி பேசுகிறார்களே, என்று கூட மனம் வருத்தப்படும்"

*சித்தன் பதில்*:—-
ஹ்ம்ம்! அதுதான் உண்மை. அன்று வரை வாழ்ந்த பொழுது, அந்த ஆத்மா, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தி, தன்னை அண்டியவரை கனிவுடன் அரவணைத்து, சென்றிருந்தால், அதனால் விளையும் புண்ணியத்துடன் மேல் நிலைகளுக்கு செல்லும், என்பதே உண்மை. இதைத்தான், சித்த மார்கத்தில் மனிதனுக்கு புரியட்டும் என்பதற்காக "எல்லோரும் பத்தே கால்" என சுருக்கமாக கூறுவோம்"

*அடியவர் சிந்தனை கேள்வி*:—
அந்த "பத்தேகால்" என்கிற வார்த்தை சுருக்கென என்னுள் புதைந்தது. மேலும் தெளிவாக வேண்டி அவரிடமே கேள்வியை எழுப்பினேன். "அதென்ன பத்தேகால்! சற்று விளக்குங்களேன்?”.

*சித்தன் பதில்*:—-
இங்கு உறையும் அனைத்து ஜீவன்களுமே, "பத்தேகால்". உயிர் பிரிந்து வெற்றுடலான பின் மயானத்தில் எரித்தால் மிச்சம் கிடைப்பது, அந்த கால மதிப்பில் பத்து ரூபாய் மண் பானைக்குள் கால் கலமாகத்தான் இருக்கும். இதில் என்ன, உயிருடன் இருக்கும் பொழுது, நான், எனது, என் சொந்தம், சுற்றம், ஜாதி, வர்ணம் போன்றவை. ஒவ்வொருவரும் இதை உணரவேண்டும். அரசனே ஆயினும், ஆண்டியாயினும் "கால் கலம்" தான் மிஞ்சும். வாழும் போதே இதை உணர்ந்தவன், மிக பாக்கியசாலி. ஏன் என்றால், அவனிடம் நிம்மதி குடி கொண்டுவிடும், பற்றறுப்பது எத்தனை எளிது என உணருவான். சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலை அமையும், பதற்றம் போய்விடும், சித்தம் நிலைக்கும். அவனுக்கு, அது முதல் வாழ்க்கையே, ஒரு நல்ல தவமாக மாறிவிடும். தனியான பயிற்சிகள் அவனுக்கு தேவை இல்லை. பத்து மணிக்கு கோடீஸ்வரனாக இருந்தவன், எதை கொண்டுவந்தான்? 10.05க்கு பிணமானபின், எதை கொண்டு போகிறான்?  பௌதீகமாக எதுவுமே இல்லை என்பதே உண்மை. பின்னர் எதற்கு இந்த இரைச்சலான வாழ்க்கை வாழுகிறான், மனிதன்" ?

*அடியவர் எதிர் கேள்வி*:—-
இது முற்றிலும் உண்மை. ஆனால், ஒரு மனிதன் வாழ்வதே, வரும்கால தலைமுறைக்கு வேண்டித்தானே. அவர்களுக்காக சேமித்து வைக்க வேண்டும் என்பது, மனித வாழ்க்கையின் நியாயமான எண்ணம்தானே?"

*சித்தன் பதில்*:—
உண்மைதான். அதில் ஒன்றும் தவறில்லை. சேர்வதின் மீது வைக்கும் பற்றுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த பற்று, இறைவன் மீது வைக்க வேண்டிய கோணத்திலிருந்து விலகி, சொத்தின் மீது அடங்காத ஆசையாய் போன பொழுது, அவன் செயல்களில் இருந்த தர்மம், அதர்மமாக மாறிப்போகிறது. பின்னர் அவன் மனநிலையே மாறி, எவன் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. இதிலிருந்து, கலிபுருஷன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து எப்படி ஒருவனை கெடுக்கிறான் என்பது தெளிவாக புரியும்." என்று நிறுத்தினார்.

சித்தன் பதில்
 தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*