Sunday 21 April 2019

சித்தர் பதில் - எத்தனையோ பேர்கள், எத்தனையோ முறை இறைவனிடம் பிரார்த்தித்து, மன்றாடியும், மனிதனுக்கு பிரச்சினை தீரவில்லையே.

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—-

“பிரார்த்தனையை விட மிக உயர்ந்த ஒரு விஷயம் இவ்வுலகில் இல்லை", என சித்தர்களும், உங்களை போன்றவர்களும் உரைத்துள்ளார்கள். எத்தனையோ பேர்கள், எத்தனையோ முறை இறைவனிடம் பிரார்த்தித்து, மன்றாடியும், மனிதனுக்கு பிரச்சினை தீரவில்லையே.
ஒன்று விட்டு ஒன்று என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், மேற் சொன்ன கூற்று, இந்த கலியுகத்துக்கு பொருந்தாதா?”

*சித்தன் பதில்*:—-

சற்று நேரம், முகவாயை கையில் தாங்கி பிடித்தபடி இருந்தவர், ஒரு புன்னகையுடன் பேசத்தொடங்கினார். "இது எல்லா யுகத்துக்கும் பொருந்தும், வாசகம்தான். பிரார்த்தனை பலிக்காத அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், மனிதனுக்கு வெறுப்புதான் வருகிறது. ஆனால், அவன் செய்த தவறை, சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை. ஒன்று, சில சூழ்நிலைகள், இறைவனால் விதிக்கப்பட்ட கடமைகள் என்று உணராதது. இரண்டு, பிரார்த்தனையை சரியான முறையில் சமர்ப்பிக்காதது. மூன்று, விதி விலகி இடம் கொடுக்காதது. இவை தான் காரணம். விதி விலகாததும், கடமைகள் என்று உணராததும் ஆன சூழ்நிலைகள், சத விகிதத்தில் மிக குறைவு. 5% என வைத்துக் கொள்ளலாம். மீதி 95%மும் பிரார்த்தனையில் உள்ள தவறுதான் காரணம். உதாரணமாக, முன்னரே கூறினேன், "நான்/எனது" போன்ற உறவுமுறைகளை உண்மையாகவே ஆழ் மனதிலிருந்து விலக்கி, எல்லாமே உன்னுடையது, எல்லோருமே உன் குழந்தைகள் என்கிற உண்மையான தாத்பர்யத்துடன் சமர்ப்பித்தால், இறைவன் நிச்சயம் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவான். ஆனால், சிறிதளவு கூட, அந்த பிரார்த்தனையில், ஒரு பழுதும் இருக்கக்கூடாது. சோதனைகள் வரலாம், துவண்டுவிடக்கூடாது. முயற்சி செய்து பார்! உனக்கு விளங்கும்"

*அடியவர் அனுபவம்*:—
கானகத்தை விட்டு வந்தபின்னர் பஒருமுறை, அவகாசம் கிடைத்தவுடன், இந்த சித்த பெரியவர் சொன்ன, இந்த கூற்றை பரிசோதித்து பார்த்தேன்! கிடைத்த அனுபவத்தை கண்டு அசந்து போனேன்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1