Tuesday 2 April 2019

தன்னலம் கருதாமல், எப்பொழுதும், பொது நலம் கருதி பிரார்த்தனை செய்யச்செய்ய, உன் கர்மா வேகமாக கரையும்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

பயணிக்கும் பொழுது, அவசர ஊர்தி சென்றால் "இறைவா! யார் என்றறியேன்! போதும் அவர்கள் கர்ம வசத்தால் வேதனை அடைவது. ஒன்று, குணப்படுத்திவிடு, இல்லையேல், மோக்ஷத்தை கொடுத்துவிடு" என வேண்டிக்கொள். மற்றவை இறைவன் தீர்மானத்துக்கு விட்டுவிடு.

போகும் வழியில் ஏதேனும் ஒரு ஜீவன் உடலை நீத்திருந்தால் "இந்த உடலில் இருந்த ஆத்மாவுக்கு மோக்ஷத்தை கொடுத்துவிடு. போதும் மறுபடியும் பிறப்பை கொடுத்து விடாதே! உன் பாதத்தில் பிடித்து வைத்துக் கொள்!" என வேண்டிக்கொள்.

ஏதேனும் இடத்தில் உயிரினங்களை வதைத்து உணவு வியாபாரத்துக்காக வைத்திருந்தால் "இறைவா! இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு. இங்கு உயிரிழந்த அனைத்து ஆத்மாவுக்கும், இனி மறு பிறப்பை கொடுக்காதே! இவர்கள் செய்கிற தவறுகளை மன்னித்து, திருத்தி, காத்தருள்!" என வேண்டிக்கொள்.

இயற்கையை, பஞ்ச பூதங்களை அழிக்கிற சூழ்நிலையை கண்டால், "இறைவா! காப்பாற்று! மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு!" என வேண்டிக்கொள்.

மருத்துவமனையை கடந்து செல்லும் பொழுது, அனைவரையும் சீக்கிரம் குணப்படுத்தி விடு, இறைவா" என வேண்டிக்கொள்.

பேராசை படுகிற மனித சூழ்நிலையை கண்டால், "இறைவா! சீக்கிரமே நல்ல புத்தி கிடைக்கட்டும் இவர்களுக்கு" என்று வேண்டிக்கொள்.

கோவில்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான் சமாதிகளுக்கு சென்றால் "லோகம் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று வேண்டிக்கொள். இப்படி, *தன்னலம் கருதாமல், எப்பொழுதும், பொது நலம் கருதி பிரார்த்தனை செய்யச்செய்ய, உன் கர்மா வேகமாக கரையும், உடல், மனம் சுத்தமாகும், இந்த உலகில் மனிதனாக பிறக்க விதிக்கப் பட்ட தண்டனை காலத்தை விரைவில் கடக்கலாம், ஆத்மா வேகமாக பல நிலைகளை கடந்து மிக, மிக சுத்தமாகும். அப்படிப்பட்ட நிலையில், ஒரு சூழ்நிலையை கண்டு, "ஓம்" என மனதுள் நினைத்தாலே, உடனேயே இறைவன் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றி விடுவான். இதுதான் எளிய வழி.*


*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*