Tuesday, 2 April 2019

இங்கிருப்பவர் (பாரத பூமியில் உள்ளவர்கள்) பிரார்த்தனை உடன் பலனளிக்கும், வெளி நாட்டில் இருந்தால் எந்த கர்மா செய்தாலும் பலன் கிடைப்பதில்லை என பெரியவர்கள் கூறுவதின் அர்த்தம் என்னவோ?

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

கேள்வி:- இங்கிருப்பவர் (பாரத பூமியில் உள்ளவர்கள்) பிரார்த்தனை உடன் பலனளிக்கும், வெளி நாட்டில் இருந்தால் எந்த கர்மா செய்தாலும் பலன் கிடைப்பதில்லை என பெரியவர்கள் கூறுவதின் அர்த்தம் என்னவோ?

*சித்தன் பதில்:-*
நீ பிரார்த்தனையை கூறுகிறாயா? அல்லது கர்மா செய்வதை கூறுகிறாயா? இரண்டும் வேறாகினும், ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது தானே! ஆம்! இரண்டும் வேறு வேறு தான். ஆயினும் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. உன் கேள்வி புரிகிறது. *பாரத கண்டத்தை கர்ம பூமி என்கிறார்கள். அங்கு செய்யப்படும் கர்மாக்கள், பிரார்த்தனைகள் எளிதில், விரைவில் நிறைவேறிவிடும்.* இந்த வித்யாசத்தோடு, ஏன் இறைவன் படைத்தான் என்று கேட்க வருகிறாய்! அப்படித்தானே! *அந்த படைப்பு ஒரு தெய்வ ரகசியம்.* ஏன்,

*பாரத கண்டத்தை "கர்ம பூமி" என இறைவன் வரையறுத்து, மிச்ச இடங்களை (அனைத்து நாடுகள்) போக பூமி என்று பிரித்தாளுகிறான் என பலருக்கும் புரியவில்லை.* ஒரு வீடு கட்டினால், மனிதன், வாசல், திண்ணை, நடு அறை, மாடி, பின்புறம் என பல இடங்களாக பிரித்துக் கொள்கிறான்? அவன் வசதிக்காக, மேலும் சொல்லப்போனால், சமூகம் ஒப்புக்கொண்ட ஒரு முறை. அல்லவா. ஒரே கல் தான், ஒன்று படியாகிறது, இன்னொன்று தெய்வம் குடிகொள்ளும் சிலையாகிறது. ஏன் என்று, அந்த சிற்பியிடம் கேட்டால் என்ன சொல்வான். அது சிலைவடிக்கும், பக்குவம் கொண்டது. ஒன்று போதும், இன்னொன்று பக்குவம் இருப்பினும் படியாகட்டுமே என்று தீர்மானித்தேன், என்பான். அது போல், இறைவன் தேர்ந்தெடுத்த இடங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட பக்குவம் உடையது. தெரிவு செய்வது, இறைவன் உரிமை. அதில் கேள்வி கேட்க்கும் உரிமை நமக்கில்லை, என்பதே உண்மை.

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*