Wednesday, 17 April 2019

வெம்மை மாற்றிடு அம்மையே!

வெம்மை மாற்றிடு அம்மையே!

நிலம் வெம்மை தணிந்துநீர் தண்மை
பெறட்டும்!
மண் வெப்பம் குறைந்து
வெம்மலை மழையில் குளிரட்டும்!

பறவைகூட்டை தென்றல் தழுவட்டும்!
பாம்புபுற்றில் நிலவு தங்கட்டும்!
பச்சைமரங்கள் பருவம் காணட்டும்!
பருவபயிர்கள் குலுங்கி சிரிக்கட்டும்!

சித்திரை சூரியன் கடுந்தவம்
நித்திரையிலா விழிகள்
செம்மை வெம்மை உருமாறி
செந்நிற தேவியானாள் கருமாரி!

அம்மையே உனை வணங்கினோம்!
அன்பால் அழுது புலம்பினோம்!
வெம்மை நீக்கும் வேப்பிலைக்காரி
அம்மை குணமாக்கும் பச்சிலைக்காரி!

மனிதர் சிந்தை நீரருவியாகட்டும்!
மகமாயி அருள்மாரி பொழியட்டும்!
மனக்கோபம் அதில் தணியட்டும்!
மண்ணில் சுகம் மேவட்டும்!

கூழும் மோரும் படைத்தோம்
கூடையில் பழம் கொடுத்தோம்
அனல்காற்று பாதிக்கா வண்ணம்
அணைத்து காப்பாய் அம்பிகையே!

தீச்சட்டியேந்தி நடனமாடி
தீமிதிப்பாள் திரவுபதி அம்மன்!
புழுக்கத்தில் காற்றாய் தழுவி
இறுக்கத்தை விரட்டிடு தாயே!

வெம்மையால் கடுப்பு காய்ச்சல்
தொற்று பரவாது - மழலை
கண்மை கண்ணீரில் கரையாது
காத்திடும் திருநீற்று பதிகம்!

வெய்யோன் வெப்பம் தாங்கி
வெள்ளரி சிரிப்பைத் தருவாள்!
தாகத்தில் தவிக்கும் உயிரை
தடாகக் கண்ணால் மீட்பாள்!

செய்யோன் சூடு பரவி
சருகாய் உதிரும் இலைகள்
சித்திரைதேவியால் தழைக்கும்
பசுங்கிளைகள்!
செந்தமிழ்குழலி மண் குளிரச்செய்வாள்!