Tuesday, 2 April 2019

பிரார்த்தனை வழி உடலை தாரை வார்த்து, பிறவித்தளை விலகி இறைவனோடு கலந்துவிடலாமா?

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*கேள்வி:-* பிரார்த்தனை வழி உடலை தாரை வார்த்து, பிறவித்தளை விலகி இறைவனோடு கலந்துவிடலாமா?


*சித்தன் பதில்:-*

ஒரு மனிதனுக்கு எத்தனையோ உடல்கள் உள்ளது. இனி உள்ள ஜென்மங்களுக்கான சூக்ஷும உடல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. இங்கு நாம் பார்க்கும் பௌதீக, பஞ்ச பூத உடலுக்கு "ஸ்தூல" உடல் என்று பெயர். பஞ்ச பூத கலப்பில்லாத உடல்கள் அதனதன் இடத்தில் உள்ளது. இந்த உடலால் செய்யப்படுகிற விஷயங்களின் கர்ம பலனுக்குண்டான நிகழ்வை, இனி எந்த ஜென்மத்தில் அந்த ஒருவன்/ஒருவள் அனுபவிக்க வேண்டும் என இறைவன் தீர்மானித்து அந்தந்த சூக்ஷும உடலில், பதித்து விடுவார். நல்லது செய்தால் நல்ல பலன், தீயது செய்தால், தீய பலன். மறுபடியும், மறுபடியும் பிறவித் தளை. இது எதற்கு என்று மனிதன் யோசிப்பதில்லை. இந்த பிறவித்தளையிலிருந்து விடு பட என்ன செய்ய வேண்டும் எனக்கூட மனிதன் யோசிப்பதில்லை. நல்லது செய்தாலும், தீயது செய்யாமல் இருக்க வேண்டும். நன்மை, தீமை போன்றவற்றின் கர்ம பலனை இறைவனிடமே சமர்ப்பித்து விடவேண்டும். *எனக்கு நன்மையையும் வேண்டாம்/ தீமையும் வேண்டாம், இறைவா நீயே அனைத்தையும் எடுத்துக்கொள்* என்று வேண்டிக்கொள்ளவேண்டும். அவனிடமே, கொடுத்துவிடவேண்டும். இதை எத்தனை பேர் செய்கிறார்கள் என கவனித்துப் பார். அப்போது, நமக்கென காத்திருக்கும் உடல்கள் என்னவாகும் என்ற யோசனை வரும். என்ன செய்தால், அந்த உடல்களையும் தாரை வார்த்துக் கொடுத்து, பிறவித்தளையை விட்டு வெளியே வரமுடியும்? என்று யோசிப்பாய். *அதற்கும் விடை, மிக எளிய ஆத்மார்த்தமான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும்! அனைத்தையும் கழித்து விடலாம்* எனக் கூறி நிறுத்தினார். *இந்த மாதிரி, எத்தனையோ எளிய வழிகள், சித்த மார்கத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது. அதை புரிந்து கொள்ளத்தான், யாருக்கும் மனம் இல்லை! நேரம் இல்லை.*

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*