Friday, 3 May 2019

சுப்ரமணியர் அகத்தியருக்கு உபதேசித்த சுத்த ஞானம்

சுப்ரமணியர் அகத்தியருக்கு உபதேசித்த சுத்த ஞானம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.  மிக எளிய தமிழ்.  நான் உணர்ந்து கொண்ட வரையில் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

அந்த இரு செய்யுள்

"அப்பனே ஐயிந்தெழுத்தில் ஐயிந்தும்சேரும்
ஆத்துமமே பராபரத்திற் சேரும் சேரும்
ஒப்பில்ல பரபிரம வஸ்துவப்ப
ஓகோகோ அண்டபிண்ட சராசரங்கள்
மெய்ப்புடனே அவர் படைத்த தல்லால் வேறே
விதிபிர்ம தேவனுமே படைத்தானென்று
நைப்புடனே பொய் சொல்லி வேதாந்தம் தோறும்
நாட்டிவிட்டன் மாஹாதேவா வியாசன் தானே

வேத வியாசன் கட்டை நம்பவேண்டாம்
மேன்மையென்று மூவர்களை வணங்கிவந்தால்
ஆதரவாய் உங்களுக்கு வரமீவாரோ
அவராலே இல்லையட அதிகாரன் தான்
நீதமுடன் கேட்ட வரம் ஈவோமென்று
நிசமாய் எய்த்தவர்கள் - வலைக்குள்ளாக்கி
சாதகமாய் நெடுகலுமே கெடுத்து பின்னும்
தமியோர்கள் மாண்டபின்பு விலகிப்போவார்!

மிக பெரிய ஒரு நாடகம் இறைவன் உத்தரவால், நம்மை சுற்றி நடக்கிறது.  இங்கு இறைவன் என்று குறிப்பிடுவது மூவர்களை.  பிரம்மா, விஷ்ணு, சிவன்.  இது அடிப்படை உண்மை.  இனி பாடலுக்கு செல்வோம்.

இந்த உலகத்தில் உள்ள உயிர்களுக்கு பௌதீக உடலை பஞ்ச பூதங்களிருந்து இறைவன் எடுத்து கொடுக்கிறான்.  இதை புரிந்துகொள்ள முடியுமே!  அப்படிப்பட்ட உடலை விட்டு உயிர் விலகும் போது, பஞ்ச பூதங்களும் உடலை விட்டு பிரிந்து மறுபடியும் "நமச்சிவாய" என்பதில் சென்று சேரும்.  ஆத்மா மட்டும் இறைவனுக்கும் மேற்ப்பட்ட பராபரத்தில் சென்று சேரும். இதிலிருந்து, ஒரு உண்மை விளங்குகிறது.  இறைவனுக்கும் அப்பாற்பட்ட ஒரு பராபரம் ஒன்று உள்ளது.  அது தான் இந்த மூவரையும், லோகத்தையும் நம்மையும் உருவாக்க காரணமாக இருக்கிறது.  இந்த பராபரம் என்பது ஒப்பில்லா பர பிரம்ம வஸ்து.  எல்லா அண்ட பிண்டங்களும் இந்த பரப்ரம்மம் படைத்ததல்லால், பிரம்மா படைத்ததல்ல.  இந்த அண்ட பிண்டங்களை, பிரம்மா படைத்தான் என்று வேத வியாசர் புராணங்கள் அனைத்திலும் பொய்  சொல்லி வைத்துள்ளார். இதை சொல்ல வைத்தது மூவர் என்று உணர்க.

வேத வியாசன் இயற்றியதை நம்பவேண்டாம்.  மேன்மையான வழி என்று மூவர்களை நம்பி வணங்கி வந்தாலும், உங்களுக்கு பராபரத்தை காட்ட வாரம் தரமாட்டார்கள்.  ஏனென்றால் அவர்களுக்கு அதை கட்டும் அதிகாரம் இல்லை.  நேர்மையாக நீங்கள் கேட்ட வரம் தருவோம் என்று சொல்லி, ஏமாற்றி, நம்மை வலைக்குள் சிறைவைத்து (வாசனை) மீதம் இருக்கும் வாழ்க்கையில் நம்மை நடத்தி சென்று, கெடுத்து, உயிர் விலகிய பின்னே, நம்பிவந்த நம்மை விட்டு அந்த மூவரும் விலகிபோவார்கள்.

இப்படி விலகும் நேரத்தில், நாம் நிறைய வாசனைகளை சேர்த்து கொண்டிருப்போம்.  அதனால் நம்மை பிறவி தளையில் மாட்டி விட்டு மறுபடியும் ஜென்மத்தை கொடுத்தபின், அவர்கள் நினைத்து நடத்திய நாடகம் வெற்றி பெற்று விட்ட பின், மறுபடியும் சந்திப்போம் என்று சொல்லாமல் செல்வார்கள்.

இதை படித்த பின் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும்.  நாம் நம்பிக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும், நம்மை பராபரத்தில் (அது தான் இயல்பான தன்மை) சேர விடாமல் உலகியில் வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்க, நம்மை மயக்கி கெடுக்கிறார்கள்.

இவர்கள் நாடகத்துக்கு நாம் தான் கருவிகளாக கிடைத்தோமா?  உண்மை சொன்ன முருகனுக்கு நன்றி!