Wednesday 15 May 2019

அகத்தியர் வாக்கு - உருவ வழிபாடு, பரம்பொருள்

அகத்தியர் அருள் வாக்கு    இறைவனின் அருளைக்கொண்டு இயம்புகிறோம் இத்தருணம். இறைவன் அருளாலே நல்லாசி, எம்முன்னே அமர்ந்துள்ள சேய்களுக்கு. இயம்புங்கால் “இறைவனை வணங்கி, இறைவனை வணங்கி, இறையை வணங்கி” என்று யாம் துவங்குவதன் பொருள், இஃதொப்ப நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் வடிவம் இப்படித்தான் என்று வைத்துக்கொள்ள இயலாது. இஃதொப்ப வடிவத்தில் மனதை லயிக்க விட்டு, பிறகு, வடிவமற்ற பூரணத்தை உணர்தலே மெய்ஞானமாகும். இஃதொப்ப இறையென்றால் அதற்குள் பூரணம் அனைத்தும் அடங்கியது என்பதாலும், ஓர்ரூபம், ஓர் வடிவம், ஓர் நாமம் இல்லாதானே பரம்பொருள் என்றும், அந்தக் கருத்தினைக் கொண்டே யாம் பொதுவில் ‘இறை வணங்கி’ என்று இயம்புகின்றோம்.

இஃதொப்ப இத்தகு இறைதன்னை மூத்தோனாக, இளையோனாக, முக்கண்ணனாக, மஹாவிஷ்ணுவாக, நான்முகனாக, அன்னையர்களாக இன்னும், இன்னும் பலப்பல ரூபங்களாக மாந்தர்கள் வழிபடுவதும், வணங்குவதும் அஃதொப்ப அந்தந்த மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்ப அவனவன் வணங்கி வருவதும் நன்றுதான். பின்பு என்றுதான் அனைத்தும் பூரணம் ஒன்று என்று உணர்வது ? அந்த ஒன்றினை உள்ளுக்குள் உணர்ந்து, அந்த ஒன்றுக்குள் மனதை ஒன்ற வைத்து, அந்த ஒன்றையே ஒன்றி, ஒன்றி, ஒன்றி, ஒன்றே ஒன்று என்று உணரும் வண்ணம் ஒரு நிலை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வரும் வரை, மனிதன், அவனவன் வழியில் செல்ல, அஃதொப்ப பரம்பொருளே வழிவிடுகிறது.

இஃதொப்ப அத்தகு இறைக்கு, பரம்பொருளுக்கு, பரிபூரண சரணத்தை மனம், வாக்கு, காயத்தால் எந்த மனிதன் வைத்து விட்டானோ, அவனே, அஃதொப்ப சாயுச்சம், சாய்ரூபம், சாய்லோகம், சாமீபம் என்கிற இஃதொப்ப நிலைகளை அடைவான். இஃதொப்ப நிலைதாண்டியும் இறை இருக்கிறது என்பதால், இஃதொப்ப நிலை நோக்கி இஃதொப்ப சேய்கள் தொடர்ந்து வர இறைவன் அருளால் யாம் மீண்டும் நல்லாசிகள் கூறுகிறோம். ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

​சித்தன் அருள்.....தொகுத்தளித்தவர்! Karthikeyan. அகத்தியர் ஞானம்