Thursday 9 May 2019

அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் அமுதகடேசுவரர் பதிகம்

அபிராமிபட்டர் அருளிய
திருக்கடவூர் அமுதகடேசுவரர் பதிகம்

(ஆசிரிய விருத்தம்)

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத் துழையும் தும்பிகள் இடையிடை நுழையும்
தும்பமா லிகைபும் வம்புவார் சடையும் துண்டவெண் பிறையுமுந் நூலும்
நடனபங் கயமும் கிரணகங் கணமும் நங்கைபங் கமர்ந்தசுந் தரமும்
நயனமூன் றுடைய கோலமுங் கண்டோர் நமனையுங் காணவல் லவரோ?
கொடிபல தொடுத்த நெடியமா மணிபொற் கோபுரம் பாரிடந் தொடுத்துக்
கொழுந்துவிட் டெழுந்து வாணில வெறிப்பக் கொண்டல் வந் துலவியே நிலவும்
கடிமலர்த் தடமுஞ் சுருதியோ திடமும் கன்னிமா மாடமுஞ் சூழ்ந்து
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 1.

தண்டமுங் கயிறுஞ் சூலமும் புகைந்த தழலுமிழ் கண்களும் வளைந்த
தந்தமுஞ் சிவந்த குஞ்சியுங் கரிய சைலமே அனையமே னியுமாய்
அண்டிய சமனைக் கண்டுள மயங்கி அறிவழிந் திருவிழி களும்பஞ்(சு)
அடைந்துவாய் புலர்ந்து மெய்மறந் திடும்போ(து) அம்பிகை தன்னுடன் வருவாய்!
வண்டுகள் முரன்று முகைமுறுக் குடைந்து மதுமழை பொழிந்துதா தளைந்து
மடல்விரிந் தலர்ந்து பொன்னிறம் பொதிந்த மண்டலங் கொன்றைவார் சடையாய்!
கண்டவர் உளமுங் கண்ணுமே கவருங் கனதன வனிதையர் நெருங்கும்
கனவளஞ் செறிந்த கடமைவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 2.

தனபதி யனைய செல்வமே பெறினும் சதமகன் போகமே பெறினும்
தாரணி சுமக்குஞ் சேடனே நிகராய்த் தக்கதோ ரறிவெலாம் பெறினும்
அனகனையத்த அழகுதான் பெறினும் அருமறைக் கிழவனே எனினும்
ஐய! நின் கடைக்கண் அருள்தவ றியபேர் அங்கையோ டேந்திநின் றுழல்வார்;
பனககங் கணத்தாய்! அளப்பெருங் குணத்தாய்! பார்வதி வாமபா கத்தாய்!
பவளநன் நிறத்தாய்! தவளதூ ளிதத்தாய்! பரிபுரம் அலம்புபொற் பதத்தாய்!
கனகமுந் துகிலுந் தரளமும் வயிரக் கலன்களும் நிலந்தொறு மிடைந்த
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 3.

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத் தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
தனத்தையெள வனத்தை இன்பபோ கத்தைத் தையல்நல் லாள்பெறுந் திறத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி ஆழ்கடற் படுதுரும் பாகி
அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி ஆட்கொள நினைத்திலாய் அன்றோ!
சிந்தைநந் துருக இன்னிசை படித்துச் சிலம்பொலி யாரவே நடித்துச்
செழும்புனற் சடைமேற் கரந்தையை முடித்துத் திருவெணீ(று) உடலெலாந் தரித்துக்
கந்தைகோ வணம்தோல் பொக்கணந் தாங்கிக் கபாலமொன் றேந்திநின் றவனே!
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 4.

வஞ்சகக் கிணறாய்த் துன்பவா ரிதியாய் வறுமையென் பதற்கிருப் பிடமாய்
மறம்பொதி குடிலாய் அசத்திய வினதயாய் மயல்விளை கழனியாய்ப் பாவ
சஞ்சிதவடிவாய்ச் சருச்சரைப் புரமாய்ச் சங்கட நோய்க்களஞ் சியமாய்த்
தலைதடு மாறித் திரியுமென் றனக்குன் தண்ணருள் கிடைக்குமோ? அறியேன்;
நஞ்சமும் பகுவாய்ச் சுடிகைமுள் ளெயிற்று நகைமணிப் பாந்தளஞ் சூழ்ந்த
நளிரிளம் பிறையோ டொளிர்செழுஞ் சடையாய்! நங்கையர் முழுமதி முகத்தைக்
கஞ்சமென் மலர்கள் கண்டுவா யடுங்கும் கந்தமுந் தியதடஞ் சூழும்
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 5.

பிரமனுஞ் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப் பேதையர் கண்(டு) அசங் கதிக்கப்
பிணிகளூம் பகைக்க மூப்புவந் தலைக்கப் பின்றொடர்ந்(து) ஆசைசென் றிழுக்கத்
தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத் தாரணி சுமந்துநொந் திளைக்கச்
சகடெனச் சுழலும் கறங்கெனக் கொடிய சடலம தெடுக்கநான் இலக்கோ?
குடுமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில் கோட்டிள மோட்டுமா மேதிக்
குலங்கள்போய் படிந்து நலங்கிளர் செழுந்தேன் குவளைமென்(று) ஒழுக்கிய தோற்றம்
கரியமா கடலிற்புகுந்துநீர் அருந்துங் காளமே கங்களோ வெனவாய்க்
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 6.

மறுகுவெஞ் சினத்தர் தெருமவ குணத்தர் வஞ்சகம் பொதிந்தநெஞ் சகத்தர்
வழக்கமொன் றில்லாப் பிணக்குறு மூடர் மதியிலாப் பதிதர்பால் அணுகிப்
பொறுமையில் தருமன் நெறியினில் சேடன் புலமையில் குறியமா முனிவன்
புரந்தரன் எனவும் நிரந்தரம் புகழ்ந்து பொழுதவம் போக்கினன் அந்தோ
வெறிமலர்ப் பிரசஞ் சொரிந்துவண் டினங்கள் மிடைந்துமா முகிலினைக் கிழித்து
மேலிடத்(து) இரவிப் பசும்புர விகளாய் விளங்கியே விண்டல முகட்டைக்
கருவினின் றோங்கிச் செறியும்ஐந் தருக்குள் கற்பகத் தருவினை யப்பாய்!
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 7.

நெஞ்சகக் குழைந்து பணிவிடைக் கிசைந்து நீறொடு கண்டிகை புனைந்து
நிலவுபொற் கோயி லதைவலம் புரிந்து நெகிழுமுன் நாண்மலர் எடுத்து
வஞ்சமா மயக்கில் மயங்கும்ஐம் புலனாம் மாற்றலர் வலிமையைக் களைந்துன்
மலர்ப்பதத்(து) இருத்தி அலக்கணைத் துரத்தி மதிமிகு வாழ்வளித் திடும்ஒம்
சுஞ்சகர் எனுநற் றூயமூன் றெழுத்தைச் சுகிர்தமாய் கொண்டருச் சனைசெய்
தொண்டர்கள் உறவைக் கொண்டுனைப் பணியச் சுணங்கனாம் எனக்கருள் புரிவாய்;
கஞ்சமென் மலர்மீ(து) அஞ்சமே படரக் கார்மயில் ஓரமாய் நடிக்கும்
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 8.

மைக்கயல் விழியால் மயக்கியுள் ளுருக்கி மஞ்சளால் முகத்தினை மினுக்கி
மணிநகை பெருக்கி ஆசையுண் டாக்கி வளரிள முலைத்துகில் இறுக்கிப்
பக்கல்வந் தமர்ந்து மென்மொழி பகர்ந்து பரவசம் அடைந்துமேல் விழுந்து
படிற்றுளம் உணர்த்தாச் சத்திய முரைத்துப் பறித்திடப் பயிலுபா வையர்க்காய்த்
துக்கசா கரத்தில் அழுந்திநா டோறும் தோதகப் பட்டபா தகனைத்
துய்யசெங் கமலச் செய்யதா ளிணைக்கே தொண்டுகொண் டால்குறை யுமோ?
கைக்கழங் காடுந் திறத்தினை நிகராய்க் கமலமென் மலர்மிழை அறுகால்
களியடு சுழலுங் கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 9.

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த் திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய் உண்டு தெவிட்டல்நை வேதனம் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத் துவந்து துள்ளுவெள் விடையினில் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டருங் காணத் தோகையோ(டு) எனக்குவந் தருள்வாய்;
வயல்கரம் புறைந்த கடைசியர் முகத்தை மதியம்என்(று) அதிசய மிகுந்து
வரும்பக லிடத்தும் இரவினும் குவளை வாயடுங் காமலே விளங்கும்
கயனெடுந் தடமுங் கமுகமுங் கமுகைக் காட்டிய கன்னலும் பொதிந்த
கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 10.