Friday, 17 May 2019

குகை நமசிவாயம்

குகை நமசிவாயரைப் பற்றி அறிந்துகொள்வோம் எங்கே இருக்கிறது குகை நமசிவாயரின் ஜீவ சமாதி?

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் ஸ்ரீஅண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பதன் திரிபு) அருகே சக்தி தியேட்டர் அமைந்துள்ளது. இதை ஒட்டிய சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால் மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே ஸ்ரீகுகை நமசிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும். மலையடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை அடைந்துவிடலாம்.

மாபெரும் சித்த புருஷரான குகை நமசிவாயரின் குருபூஜை 500 ஆண்டுகளையும் தாண்டிவிட்டது. அருணகரிநாதருக்கும் முற்பட்டவர் இவர் என்று கூறப்படுகிறது. குகை நமசிவாயரின் 17-ஆவது வாரிசுதாரும், 18-ஆவது வாரிசுதாரரும் தற்போது இந்த ஜீவ சமாதி ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள்.

ஸ்ரீசைலத்தில் இருந்து தெற்கே வந்த கன்னட தேசத்து வீர சைவ மரபைச் சேர்ந்தவர் குகை நமசிவாயர். கன்னட தேசத்தில் திருப்பருப்பதம் என்கிற புண்ணிய க்ஷேத்திரத்தில் அவதரித்தார். நமசிவாயர். தாய்மொழி கன்னடம், லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள், ஆண், பெண், என்று லிங்காயத்துப் பிரிவில் உள்ள அனைவருமே கழுத்தில் சைவச் சின்னமான லிங்கத்தை ஒரு கயிற்றில் கோத்து அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்குத்தான் முதல் வழிபாடு நடத்துவர்கள்.

நமசிவாயர் பக்திப் பாரம்பரியத்துடன் வளர்ந்தார். இவர் குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே ஈசன் ஆட்கொண்டுவிட்டார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். உரிய பருவம் வரும்போது திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையாரிடமிருந்து அழைப்பு வந்தது. ஞான குருவாக நீ விளங்குவதற்கு இங்கேயே தங்கியிருத்தல் கூடாது. உடனே திருவண்ணாமலை புறப்படு. தாமதிக்காதே என்று ஒரு நாள் நமசிவாயரின் கனவில் தோன்றி அவருக்கு உத்தரவிட்டார் ஸ்ரீஅண்ணாமலையார்.

கனவிலிருந்து விழித்தெழுந்தார். ஆனந்தம் கொண்டார். தன்னை வழிநடத்தும் ஈசனை வணங்கினார். திருவண்ணாமலை க்ஷேத்திரத்தைத் தான் தரிசிக்கும் நாள் எந்நாளோ என்று ஆவலுடன் இருந்தார்.

ஈசன் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அடுத்த நாளே திருவண்ணாமலை நோக்கித் தன் யாத்திரையைத் தொடங்கினார் நமசிவாயர். சிவனருள் பெற்ற இந்த சீலரின் மகத்துவம் புரிந்து சில அடியார்களும் சேர்ந்துகொண்டனர். திருவண்ணாமலை என்கிற சித்தர் பூமியில் தவம் இருந்து சிவனருள் பெறுவோம் என்கிற வைராக்கியத்துடன் நமசிவாயரைத் தொடர்ந்து சென்றனர் அந்த அடியார்கள். செல்லும் வழி எங்கும் அண்ணாமலையனுக்கு அரோஹரா எனும் சிவ கோஷம் வானை நிறைத்தது. யாத்திரை காலத்தில் சிவ பூஜை இல்லாத நாள் இல்லை. சிவ நாமம் உச்சரிக்காத வேளை இல்லை.

பல கிராமங்களைக் கடந்து பயணித்தனர். நமசிவாயரையும் அவருடன் வரும் அடியார்கள் கூட்டத்தையும் கண்ட கிராமத்தவர்கள் இன்முகத்துடன் வரவேற்றார்கள். அப்படிப் போகின்ற வழியிலேயே நமசிவாயரின் ஸித்துத் திறமைகளை வெளிக்கெணர ஈசன் விரும்பினான் போலும்.

அது ஒரு கிராமம்.... அங்கே ஒரு வீட்டின் முகப்பில் வாழைமரம், தோரணம் கட்டப்பட்டு மங்கலகரமாக இருந்தது. நமசிவாயருடன் சென்ற அடியார்கள் ஆர்வத்துடன் விசாரித்தபோது அந்த வீட்டில் திருமணம் அப்போதுதான் முடிந்தாகத் தகவல் சொன்னார்கள்.

முகம் நிறைய தேஜஸோடு, நெற்றியிலும் உடலிலும் திருநீறு பூசிக் கொண்டு, சிவப்பழமாக ஒரு தவசீலர் தன் அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலை சென்றுகொண்டிருக்கிறார் என்கிற தகவலை அறிந்த திருமண வீட்டுக்குச் சொந்தக்காரர், வீதிக்கு வந்து நமசிவாயரின் திருப்பாதங்களில் விழுந்து பணிந்தார். புன்னகைத்த நமசிவாயர் அவரை ஆசிர்வதித்து, திருநீறு கொடுத்தார். விபூதியைத் தன் நெற்றியில் அணிந்துகொண்ட அந்த வீட்டுத் தலைவர், நமசிவாயரைப் பார்த்து, சிவனருட் செல்வரே, இப்போதுதான் என் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தருளி, எல்லோருக்கும் திருநீறு தந்து ஆசிர்வதிக்கவேண்டும். மணமக்கள் வாழ்வாங்கு வாழ உங்களின் ஆசி வேண்டும் என்று கொஞ்சும் முகத்துடன் வேண்டுகோள் வைத்தார்.

எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்கிற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த நமசிவாயரும், அவரது வேண்டுகோள்படி திருமண வீட்டுக்குள் நுழைந்தார். அங்கிருந்த அனைவருக்கும் திருநீறு கொடுத்துவிட்டு, சிவ நாமம் முழங்கிக் கொண்டு வெளியே வந்தார். அடுத்த கணம் நடந்த செயல், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

திருமண வீடு திடுமெனத் தீப்பற்றி எரிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை!

வீட்டுக்குள் இருந்த மணமக்கள் உட்பட அனைவரும் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தனர். அவர்களில் ஒருவன், தோ...இந்தச் சாமியார் கொடுத்த திருநீற்றினால்தான் வீடு தீப்பற்றி எரிந்தது என்று நமசிவாயரின் அருள் புரியாமல் கொளுத்திப் போட்டு வைக்க.... ஒட்டுமொத்தக் கூட்டமும் சேர்ந்து, நமசிவாயரைத் திட்டித் தீர்த்தது. அடியார்கள் கூட்டத்தையும் ஆத்திரத்துடன் பார்த்தது.

மனம் ஒடிந்தார் நமசிவாயர். அதே இடத்தில் அமர்ந்து சிவ தியானத்தில் ஈடுபட்டார். கயிலைவாசனே.... நான் என்ன தவறு செய்தேன்? ஏன் எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வாங்கித் தருகிறாய்? இவர்கள் என்னை மட்டுமா அவமதிக்கிறார்கள்? உன்னையும் சேர்த்தல்லவா அவமதிக்கிறார்கள்? இந்தப் பழியும் பாவமும் உனக்குதானே வந்து சேரும்? ஈசா....கருணைக் கடலே.... கண் திறந்து பார்க்க மாட்டாயா? என்று கண்ணீர் மல்க பிரார்த்திக..... அடுத்த விநாடியே, எரிந்து போன வீடு, பழைய நிலைமையை அடைந்தது.

சற்று நேரத்துக்கு முன் அந்த வீடு, தீயினால் பாதிக்கப்பட்டதற்கு உண்டான எந்த ஒரு சுவடும் இல்லை. திருமண வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் கலகலப்பானர்கள். சுற்றிலும் நின்று இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திக்பிரமை அடைந்தனர்.

ஆஹா.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை. சிவபெருமானே இவரது உருவில் வந்திருக்கிறார். நம்மை எல்லாம் ஆசிர்வதித்திருக்கிறார். இவரை எல்லோரும் நமஸ்கரியுங்கள் என்று ஊர்க்காரர்கள் பரவசம் மேலிடச் சொல்லி, விழுந்து வணங்கினார்கள், கூனிக் குறுகி வெளியே நடந்தார் நமசிவாயர். தன்னை ஈசனோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. இனி நான் எவர் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டேன் என்று ஆக்ரோஷமாக ஒரு சபதம் செய்துவிட்டு யாத்திரையைத் தொடங்கினார்.

திருவண்ணாமலை நோக்கி வந்த அவர் வழியெங்கும் தென்பட்ட பக்தர்களை ஆசிர்வதித்தார். பலரது பிணிகளைத் தீர்த்தார்.
எண்ணற்ற ஸித்து விளையாடல்களை நிகழ்த்திக்கொண்டே வந்தார்.

பூந்தமல்லியை அடைந்து யாத்திரைக் குழு. தினமும் காலை வேளையில் எந்த ஊரில் தங்கியிருக்கிறார்களோ. அந்தக் கிராமத்திலேயே சிவலிங்கத்துக்கு பூஜை செய்துவிட்டுப் புறப்படுவது நமசிவாயர் மற்றும் குழுவினரது வழக்கம். இதற்காக ஒரு சிவலிங்கம் நமசிவாயர் வசம் இருக்கும். பூந்தமல்லியில் தங்கிய குழுவினர், சிவ பூஜைக்காக நமசிவாயர் வேண்டுகோள்படி அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று மணம் வீசும் மலர்களைப் பறிக்க ஆரம்பித்தனர். இப்படி ஊரில் உள்ள எல்லா மலர்களையும் இவர்கள் பறித்து, தங்கள் பூஜைக்குக் கொண்டுவந்தனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ஊர்க்காரர்கள். ஏதேனும் கொஞ்சம் பூக்களையாவது தங்கள் ஊரில் உள்ள ஆலய இறைவனுக்கு விட்டு வைப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த அடியார் குழுவினர் ஒட்டுமொத்த நந்தவனம் மற்றும் மலர்த் தோட்டங்களில் உள்ள பூக்கள் அனைத்தையும் பறித்துவிட்டனரே? ஆத்திரத்தோடு ஊர்த் தலைவரிடம் சென்று முறையிட்டனர் ஊர்க்காரர்கள். அவரும் நமசிவாயர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தார்.

நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தைத் துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா ஒரு நிமிடம்.... என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார்.

ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள், என்ன உமது கேள்வி? என்றார்.

கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்துப் பூச்செடிகளிலிருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர்.

எல்லாம் சிவனே.... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன. எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக.

உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக்கொள்ள மாட்டான். நீங்கள் தவறிழைத்துவிட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர்.

எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக்கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம்.

இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால், அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்றால். உமது செயலை நான் ஏற்றுக்கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த்தலைவர்.

அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார் நமசிவாயர்.

இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழவேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான்மனமார ஏற்றுக்கொள்கிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் பெருங்குரல் எழுப்பி இதை ஆமோதித்தனர்.

குருநாதரின் பதில் இதற்கு என்னவோ? என்கிற குழப்பத்துடன் அடியார்கள் நமசிவாயரைப் பார்க்க, அந்த மகானும் இதற்கு ஒப்புக்கொண்டார். அப்படியே ஆகட்டும். எம் கூற்றும் செயலும் உண்மை என்பதை இதோ, இந்த இறைவன் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்றால், நீர் சொன்னது அப்படியே நடக்கும் என்று கண்களை மூடி சிவ தியானம் செய்யலானார் நமசிவாயர்.

இந்த நேரம் பார்த்து ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர், இறைவன் திருமேனியில் இருந்த மலர்மாலையில் ஒரு உறுதியான கயிற்றைப் பிணைத்து, அதன் மறுமுனையை ஒருவரிடம் கொடுத்து, இறுக்கிப் பிடித்திருக்கச் சொன்னர்கள். சபாஷ்.... இப்படிப்பட்ட நிலையில் சிவன் கழுத்தில் இருக்கும் மாலை எப்படி நமசிவாய கழுத்தில் போய் விழும்? அதையும்தான் பார்த்துவிடுவோம் என்று கிண்டலாகப் பேசியபடி நடக்கின்ற நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காகத் தயாரானார்கள் ஊர்க்காரர்கள்.

அடியார்கள் அனைவரும் மனதுக்குள் சிவ நாமம் துதித்தபடி அமைதியாக இருந்தனர்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

எல்லாவற்றையும் பார்த்தார் நமசிவாயர். அவருக்குத் தெரியாதா சோதனைகள் எப்படி இருக்கும் என்று? ஈசனது பஞ்சாட்சர மந்திரத்தை மனமுருக ஜபித்தபடி லிங்கத் திருமேனியின் முன் கரம் கூப்பியபடி நின்றிருந்தார் நமசிவாயர். ஊர்த்தலைவர், கிராம மக்கள், நமசிவாயருடன் வந்திருந்த அடியார்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற ஆர்வத்திலும் படபடப்பிலும் இருந்தனர்.

தன்னையே நம்பி, தனக்கே சேவை செய்து வரும் பக்தன் ஒருவனை எந்த ஒரு தெய்மாவது ஏமாற்றியது உண்டா? அவமானப்படுத்தியது உண்டா? இல்லை என்றுதானே புராணங்கள் சொல்கின்றன.

அதுதான் நமசிவாயரின் வாழ்க்கையிலும் நடந்தது. ஒரு க்ஷண நேரத்தில் இறைவனின் கழுத்தில் இருந்த மாலையைக் கயிறு மூலம் பிடித்துக்கொண்டிருந்தவரின் பிடி திடீரெனத் தளர்ந்து. கயிறு அறுப்பட்டு, அந்த மலர்மாலையானது பலரும் காணும்படியாக நமசிவாயரின் கழுத்தில் வந்து அழகாக விழுந்தது. நமசிவாயரின் கண்கள் கலங்கிவிட்டன. கைகள் உயர்த்தி, அந்த ஈசனுக்கு நன்றி சொன்னார்.

உடன் நின்றிருந்த அடியார்கள் அனைவரும். சிவ கோஷம் எழுப்பினார்கள். ஊர்த் தலைவர் ஓடி வந்து நமசிவாயரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். தவிர, கிராம மக்கள் அனைவரும் இவரது பக்தித் திறனைப் போற்றி, தங்கள் தவறைப் பொறுத்தருள வேண்டினர். அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டு, அங்கிருந்து யாத்திரையைத் துவக்கினார். திருவண்ணாமலையை அடைந்தார். தனக்குக் கனவில் அழைப்பு விடுத்து ஆட்கொண்ட ஸ்ரீஅருணாசலேஸ்வரரைக் கண்டு ஆனந்தம் கொண்டார். பக்தியில் தன்னை இழந்தார். கன்னட மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருந்த நமசிவாயருக்குத் தமிழ்ப் புலமையைத் தந்து அருளினான் ஈசன். நல்ல கவிகளை இயற்றும் புலமையையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் நமசிவாயருக்கு வழங்கினான் இறைவன்.

நமசிவாயர் என்றே அழைக்கப்பட்டவர், எப்போது குகை நமசிவாயர் ஆனார்?

ஸ்ரீஅண்ணாமலையார் ஆலயத்துக்குச் சென்று அவரை மனமுருக தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணி ஆயிற்று. அவரது இந்தப் பணிக்கு எண்ணற்ற சீடர்களும் உடன் இருந்து உதவி வந்தனர். கிரிவலப் பாதையிலும் கோபுர வாசலிலும் நந்தவனத்திலுமாக மாறி மாறித் தங்கிவந்தார் நமசிவாயர்.

திருவண்ணாமலைக்கு நமசிவாயரை வரச் சொன்ன இறைவன் இவருக்கென்று ஓர் இடத்தைத் தராமல், அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டே இருந்தார். இது அந்த ஈசனுக்கே உடன்பாடில்லை போலும். இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் கனவில் தோன்றி, மலையடிவார குகைக்கு வந்துவிடு. இனி, அதுவே உன் இருப்பிடமாக இருக்கட்டும். பணிகள் அங்கேயே தொடரட்டும் என்று அருளி மறைந்தார்.

எம்பெருமான் ஈசனார் கனவில் சொன்ன அடையாளத்தை வைத்து, மலையடிவார குகைக்குச் சென்று அங்கேயே தங்க ஆரம்பித்தார். அதுதான் இன்று நாம் தரிசிக்கும் குகை நமசிவாயர் ஜீவ சமாதித் திருக்கோயில் அமைந்துள்ள இடம். இந்தக் குகையில் தங்க ஆரம்பித்த பிறகு குகை நமசிவாயர் என அழைக்கப்பட்டார். ஈசனே இந்தத் திருநாமத்தை வழங்கியதாகவும் சொல்வர்.

தங்க இடம் கொடுத்தவன் பிற வசதிகளையும் செய்து தரவேண்டாமா? குகை நமசிவாயர் நீராடவும் நித்ய அனுஷ்டானங்களைச் செய்யவும் மூன்று தீர்த்தங்களை தெய்வங்களே அருளினவாம். அவை; தன் பாதத்தால் ஈசன் ஏற்படுத்திய பாத தீர்த்தம், உண்ணாமுலையம்மன் ஏற்படுத்தித் தந்த திருமுலைப்பால் தீர்த்தம், திருமால் தன் சங்கினால் ஏற்படுத்திக் கொடுத்த சங்கு தீர்த்தம். இந்த மூன்று தீர்த்தங்களையும் மலைமேல் இன்றும் நாம் தரிசிக்கலாம்.

சுமார் முந்நூறு சீடர்கள் குகை நமசிவாயருடன் எப்போதும் இருந்துவந்தாகச் சொல்லப்படுவதுண்டு என்றாலும். அவர்களில் முக்கியமானவர்கள் விருபாட்சித் தேவரும் குரு நமசிவாயரும் ஆவார்கள். குகை நமசிவாயரின் பார்வைக் குறிப்புகளை உணர்ந்து. அதைச் செயல் படுத்துவதில் இந்த இரு சீடர்களுமே சிறப்பாகத் திகழ்ந்தார்கள்.

பூந்தமல்லியில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வரும்போது மாற்று மதத்து மன்னன் ஒருவன் ஆட்சி செலுத்தும் பிரதேசத்தைக் கடக்கவேண்டியிருந்தது. குகை நமசிவாயர் மற்றும் அவரின் அடியார்களின் காதில் படும்படியாக இந்து மதத்தைப் பற்றி இழிந்து பேசினான் அந்த மன்னன். தேவையே இல்லாமல் யாத்திரை செல்லும் இந்த அன்பார்களை வம்புக்கு இழுத்தான். பிறகு குகை நமசிவாயரைப் பார்த்து, எங்கே உங்கள் இந்து மதம் உயர்ந்தது என்றால், இதோ பழுக்கக் காய்ச்சிய இந்த இரும்பைக் கையில் பிடித்துக்கொண்டு, உங்கள் இந்து மதம் உலகிலேயே உயர்ந்தது என்று சொல்லுங்கள். நான் ஒப்புக் கொள்கிறேன் உங்கள் மதத்தை என்றான்.

மாற்று மதத்து மன்னனுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுமாறு. அதாவது மன்னன் கேட்டுக் கொண்டதைச் செய்யுமாறு குகை நமசிவாயர் உத்தரவுவிட்டது விருபாட்சித் தேவருக்கு. குருநாதரின் கண்ணசைவைப் பார்த்ததும், பழுக்கக் காய்ச்சிய அந்த இரும்பை சிவ நாமம் சொல்லி எடுத்துக்கொண்டார். தகிக்கும் அந்த இரும்பைத் தன் உடலோடு அணைத்துக் கொண்டு, சைவ சமயமே சமயம். அந்தச் சமயத்தைச் சார்ந்திருக்கும் சிவனே பரம்பொருள் என்று குரலில் உறுதியுடன் சற்றும் கலக்க மில்லாமல் சொன்னார். அதோடு விட்டுவிடவில்லை அந்தச் சீடர். பழுக்கக் காய்ச்சிய அந்த இரும்பை தன் வாயினுள் போட்டு ஏதோ ஸ்வீட் சாப்பிடுவது மாதிரி உட்கொண்டுவிட்டார் விருப்பாட்சித் தேவர் அதன் பின் அந்த மன்னன், அதிர்ந்துபோய் நமசிவாயரின் கால்களில் விழுந்தான். விருபாட்சித் தேவரின் கால்களைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டான். அனைத்து அடியார்களுக்கும் உரிய மரியாதைகளைச் செய்து. சில நாட்களுக்குத் தன் ஊரிலேயே தங்க வைத்தான். வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தான்

குகை நமசிவாயரின் மற்றொரு சீடரான குரு நமசிவாயரும் சாதாரண ஆள் இல்லை. சிவனருள் பெற்ற சீலர். ஒரு நாள் குருவான குகை நமசிவாயருக்குக் கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார் சிஷ்யரான நமசிவாயர். அப்போது திடீரென அவரது ஆடையைப் பிடித்துக் கசக்கினார். சிஷ்யனின் இந்தச் செயல் கண்டு, ஏன் இவ்வாறு செய்தாய்? என்று குகை நமசிவாயர் கேட்க.... தில்லை மாநகரத்தில் திருச்சிற்றம்பலத்தான் சந்நிதியில் தொங்கவிட்டிருக்கக்கூடிய திரைச்சீலை திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீயை அணைப்பதற்காகவே ஆடையை இப்படிக் கசக்கினேன் என்றார் சிஷ்யர்.

ஆம்! உயர்ந்த ஒரு குருவைப் பெற்ற பாக்கியத்தால், சிதம்பரத்தில் அந்தத் திரைச்சீலை எரிவதைத் திருவண்ணாமலையில் இருந்தே கண்டார் சிஷ்யர். சீடனது அபார ஞானம் கண்டு வியந்த குகை நமசிவாயர் அவரை அப்படியே ஆரத் தழுவினார். பிறகு, எனக்கு குருவாக இருக்கக்கூடிய பெருமையை இன்று நீ பெற்றாய் என்று பாராட்டி ஆசிர்வதித்தார். அதன் பிறகு இந்த சிஷ்யர் குரு நமசிவாயர் என்றே அழைக்கப்பட்டார். சிதம்பரத்துக்கு அருகே இவரது ஜீவ சமாதி இருக்கிறது.

குகை நமசிவாயரின் சில அருள் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

திருவண்ணாமலையில் ஜனங்கள் கூடும் ஓரிடத்துக்கு இடையன் ஒருவன் வந்தான். அவன் தோளில் சற்று நேரத்துக்கு முன் இறந்துபோன ஒரு சினை ஆடு தொங்கிக்கொண்டிருந்தது. அதன் வயிற்றில் இரண்டு குட்டிகள் இருந்தன. தாய் ஆடு இறந்த பிறகு குட்டிகளை வைத்து வளர்க்கப் பிடிக்காதவன். இறந்துபோன அந்த ஆட்டை விற்க முற்பட்டான். ஐயா, ஜனங்களே... என் தோளில் இருக்கிற இந்தத் தாய் ஆடு இறந்துவிட்டது. ஆனால், இதன் வயிற்றுக்குள் இரு குட்டி ஆடுகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ஒரு தொகை கொடுத்து இதை வாங்கிக் கொள்ளலாம் என்று குரல் உயர்த்திச் சொன்னான்.

ஆனால், எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றார்களே தவிர, எவரும் இறந்துபோன ஆட்டை விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. அந்தக் கூட்டத்தில் தீயவன் ஒருவனும் இருந்தான். அண்ணாமலையாருக்கு அனுதினம் ஆராதனை செய்து, இறை பக்தியில் தன்னை ஈடுபடுத்தி வரும் குகை நமசிவாயரைக் கண்டாலே இந்தத் தீயவனுக்குப் பிடிக்காது. தங்கத்தைக் கண்டால், இரும்புக்குப் பொறாமை வரும்தானே! குகை நமசிவாயரைத் தகுந்த நேரம் பார்த்து மட்டம் தட்டவேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தான். அதற்கான சந்தர்ப்பம் இதுதான் என்று தீர்மானித்தான். இடையனைப் பார்த்து, அடேய்.... உன் ஆட்டை விலை கொடுத்து வாங்கக்கூடிய ஒருவர் இங்கே குகை அடிவாரத்தில் இருக்கிறார். அவர் ஒரு சாமியார். மாமிசம் சாப்பிடுவதென்றால், அவருக்கு கொள்ளைப் பிரியம். அவரிடம் போய் உன் ஆட்டை விற்றுவிடு என்று சொல்லி அனுப்பினான். கூடியிருந்த நல்லவர்கள் அதிர்ந்துபோனார்கள். கெட்டவர்கள் கும்மாள மிட்டார்கள்.

தீயவனின் வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஆட்டிடையனும் மலையடிவாரத்துக்குச் சென்று குகை நமசிவாயரைச் சந்தித்தான். ஐயா.....இந்த ஆட்டை நீங்கள் வாங்கிக்கொள்வீர்கள் என்று ஒரு ஆசாமி சொல்லி, என்னை அனுப்பி வைத்திருக்கிறான். தாங்கள் என்னை ஏமாற்றாமல் இந்த ஆட்டை வாங்கிக் கொள்ள வேண்டும். என் குடும்பச் செலவுக்குப் பணம் தந்து உதவ வேண்டும் என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டான்.

இடையனைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது குகை நமசிவாயருக்கு அப்பனே அந்த ஆட்டை இங்கேயே விட்டுச் செல். அதற்குண்டான தொகையை நாளைக் காலை வந்து என்னிடம் வாங்கிக்கொள் என்று சொல்லி இடையனை அங்கிருந்து அனுப்பினார். பிறகு, அண்ணாமலையாரைத் தன் மனதில் துதித்து, இறந்து போன ஆட்டை எதற்கு என்னிடம் அனுப்பினாயப்பா என்று கேட்டு, இனிய வெண்பா ஒன்றை பாடினார். பாடி முடித்ததும், திருநீற்றை எடுத்து, இறந்துபோன ஆட்டின் மீது தெளித்தார். என்னே ஆச்சிரியம்! இறந்துபோன சினையோடு துள்ளி எழுந்தது. அடுத்த விநாடியில் அதன் வயிற்றில் அசைவு தெரிய..... அழகான இரண்டு குட்டிகளைப் பிரசவித்தது. எல்லாம் இறைவனின் திருவுளம் என மகிழ்ந்த குகை நமசிவாயர் இலைதழைகளைப் பறித்து ஆட்டுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.

மறுநாள் குகை நமசிவாயரைத் தேடி இடையான் வந்தான். ஆட்டை விற்றதற்குப் பணம் வாங்கவேண்டுமே! வந்தவன் அதிர்ந்தான்.

இறந்துபோன ஆடு, தன் குட்டிகளுடன் மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தான். குகை நமசிவாயரின் ஸித்து வேலைகளை அறிந்து, அவருடைய கால்களில் விழுந்தான். பிறகு, அந்த ஆட்டையும் குட்டிகளையும் அவனிடம் கொடுத்து, இதை வைத்து நன்றாகப் பிழைத்துக்கொள் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் குகை நமசிவாயா. சந்தோஷமாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு தன் வீடு வந்தான். மகானின் ஆசியுடன் அவன் வாழ்க்கை நன்றாகப் போனது.

செத்துப்போன ஆட்டை குகை நமசிவாயர் உயிர்ப்பித்த விஷயம் அந்தத் தீயவனுக்குத் தெரிந்தது. இதெல்லாம் பம்மாத்து வேலை. அவருக்கு நான் ஒரு பாடம் எடுக்கிறேன், பார் என்று தன் சகாக்களிடம் சொல்லிவிட்டு, ஒர் ஆசாமியைத் தயார் செய்தான். அவனிடம், இதோ பார்..... ஒரு பாடையில் உன்னைக் கட்டி வைத்து இறந்துபோனவனாகக் கருதி, அந்தச் சாமியாரிடம்(குகை நமசிவாயர்) அழைத்துச் செல்வேன். அவர் உன்னை எழுப்ப முயல்வார். ஆனால், நீ இறந்தவனாகவே நடிக்க வேண்டும் எழுந்திருக்கவே கூடாது. உனக்கு நிறைய பணம் தருகிறேன் என்று சொன்னான். அவனுடைய கெட்ட நேரமோ என்னவோ, இதற்கு சம்மதித்து வைத்தான்.

தங்கள் திட்டப்படி அந்த ஆசாமியை ஒரு பாடையில் கட்டி வைத்துக்கொண்டு, குகை நமசிவாயரின் இருப்பிடம் நோக்கிச் சென்றனர். தீயவன் அந்த மகானை நெருங்கி, சாமீ, இவன் செத்துப்போயிட்டான். உயிரை வரவழைச்சுக் கொடுங்க பார்க்கலாம் என்றான் கிண்டலாக.

குகை நமசிவாயருக்குத் தெரியாதா இதெல்லாம்? தீயவன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களது பொய்ச் செயல்களையும் புரட்டு வேலைகளையும் கண்டு மனம் வெதும்பினார். பிறகு, அண்ணாமலை ஆண்டவனைத் துதித்துவிட்டு, போனவன் போனவனே...... இனி அவன் எழுந்திருக்க மாட்டான் என்றார் அனைவரையும் பார்த்து.

தீயவன் சிரித்தான். என்ன சாமீ, இவன் செத்துப்போயிட்டான்னா சொல்றீங்க? என்று நக்கலாகக் கேட்டான்.

ஆமாம் அன்பனே.... இவன் இனி எவருக்கும் உதவ மாட்டான். மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாருங்கள். தகவல் சொல்ல வேண்டியவர்களுக்குத் தகவல் அனுப்புங்கள் என்றார் குகை நமசிவாயர். அந்த க்ஷணம் வரை உயிரோடு இருந்தவனை, அடுத்த விநாடியே எமன் வந்து கூட்டிச் சென்றுவிட்டான். இதை குகை நமசிவாயா தவிர, வேறு எவருமே அறிந்திருக்கவில்லை.

தீயவன் தன் சகாக்களைப் பார்த்து, டேய்.....சாமி பொய் சொல்றாருடா..... இவன் செத்துப்போயிட்டானாம்.... உயிரோட இருக்கிறவன் எப்படிச் செத்துப்போவான்? என்று சொல்லிவிட்டு, பாடையில் படுத்திருப்பவனைப் பார்த்து, டேய் எழுந்திருடா.... நடிச்சது போதும் என்று தான் கூட்டி வந்தவனை எழுப்ப முயல.... அவன் எழுந்திருக்கவே இல்லை. உயிர் இருந்தால்தானே அசைவு இருக்கும்!

மகான்களது திருவாக்குப் பொய்க்காது. அந்தத் திருவாக்குகள் என்றுமே இறைவனின் அருள்வாக்குதான்!

பிறகுதான், குகை நமசிவாயரைப் பற்றி புரிந்துகொண்டனர்.

இத்தகைய தீய ஆசாமிகளைப் பார்த்த பிறகு, குகை நமசிவாயருக்குத் திருவண்ணாமலை என்கிற திருத்தலம் மீது ஒரு வெறுப்பு வந்துவிட்டது. குறும்பர்கள் வாழும் ஊர், ஒருவனைக் கொன்றாலும் ஏன் என்று கேட்காத ஊர், மிகக் கொடிய காளைகள் கதறும் ஊர், பழியைச் சுமக்கும் ஊர், தேளுக்கு ஒப்பான பாதகர்கள் வசிக்கும் ஊர் என்றெல்லாம் சொல்லிவிட்டுப் பிறகு, என் சொல்லால் அழியப் போகின்ற ஊர் என்று கடைசி வரி பாட வாய் எடுத்தார். அப்போது அண்ணாமலைப் பெருமான் அவசர அவசரமாக அவர் முன் தோன்றி, அடேய்....என் சொல்லால் அழியப் போகின்ற ஊர் என்று பாடப் போகிறாயே.... இந்த ஊரில் நான் ஒருவன் இருந்து வருகிறேண்டா. வரியை மாற்றிப் பாடு என்று திருவாய் மலர்ந்தருளினாராம்.

ஈசனே வந்து கேட்டுக்கொண்ட பின் தன் சினம் தணிந்த குகை நமசிவாயர், அழியாவூர் அண்ணாமலை என்று அந்த வெண்பாவை முடித்தார்.

கோளர் இருக்குமூர், கொன்றாலும் கேளாவூர்

காளையரே நின்று கதறுமூர் - நாளும்

பழியைச் சுமக்குமூர், பாதகரே வாழுமூர்

அழியும் அழியாவூ ரண்ணாமலை

என்பதே அந்த வெண்பா ஆகும்.

குகை நமசிவாயரின் பெருமைகள் ஊரெங்கும் பரவியது. திருவண்ணாமலையில் ஒரு மகான் இருக்கிறார்.... பல அற்புதங்கள் நிகழ்த்துகிறார் என்கிற தகவல் கேள்விப்பட்டு. நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள்.

அதுபோல் குகை நமசிவாயருக்குத் தொல்லை செய்து வந்த தீயவர்களும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, தங்கள் இருப்பிடத்தையே மாற்றிக்கொண்டார்கள்.

குகை நமசிவாயரின் அருள் நிகழ்வுகள் சிலவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கொடூரப் பசி கொண்ட ஒரு புலியின் வாயில் சிக்கி, இரையாகக் கிடந்த பசுமாட்டையே காப்பாற்றியிருக்கிறார் குகை நமசிவாயர். சிலிர்க்க வைக்கும் அந்த நிகழ்வைப் பார்ப்போம்.

மாடு மேய்க்கும் இடையன் ஒருவன், ஒரு நாள் குகை நமசிவாயர் தங்கியிருந்த மலைச் சாரலை ஒட்டிப் பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். இரை தேடி வனத்துக்குள் அலைந்த புலி ஒன்று திடீரெனப் பசுக் கூட்டத்துக்குள் நுழைந்து. நன்கு கொழுத்த ஒரு பசுவைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு ஓடி மறைந்தது, புலியை எதிர்த்துப் பசுக் கூட்டத்தால் போராட முடியவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி ஓடிவிட்டன.

இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இடையன் அழுது கொண்டே, குகை நமசிவாயரிடம் வந்து, தனது பசுவை மீட்டுத் தருமாறு வேண்டினான். இடையனின் வேண்டுகோளைக் கேட்ட குகை நமசிவாயர், மனமுருகினார். அண்ணாமலையாரைத் துதித்து ஒரு வெண்பா பாடினார். என்னே அதிசயம்.... பாடல் பாடத் துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே தான் கவர்ந்து சென்ற பசுமாட்டை அப்படியே கொண்டுவந்து விட்டுவிட்டு ஓடியது புலி. பசுவின் உடலில் எந்த சேதாரமும் இல்லை. மீண்டு வந்த பசுவைக் கட்டிக்கொண்டு தன் அன்பைப் பரிமாறி மகிழ்ந்தான் இடையன். குகை நமசிவாயரின் திருவடிகளைப் பதறியபடி அவருக்கு நன்றி சொன்னான். கண்ணீரைக் காணிக்கை ஆக்கினான்.

குகை நமசிவாயரின் அருளால் தன் பசு மாடு காப்பாற்றப்பட்ட விவரத்தை ஊர் முழுதும் சொன்னான். அண்ணாமலை அடியவர்களின் சிவ பக்தியால் இயலாதது என்று எதுவுமே இல்லை என்று ஊர்மக்கள் அனைவரும் குகை நமசிவாய ரைப் போற்றினார். அண்ணாமலையார் மீது அவருக்குள்ள அபரிமித பக்தித் திறனைக் கண்டு வியந்தனர்.

அவர் ஒரு வைணவ குரு. வைணவத்தின் மீது மட்டுமே அவருக்குத் தீவிரப் பற்று இருந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து வடதிசை நோக்கித் தன் பல்லக்கில் பயணித்துக்கொண்டிருந்தார். திருவண்ணாமலைப் பகுதியை நெருங்கும்போது அந்த மலை அவருக்கு திருக்காளத்தி மலைபோல் தரிசனம் தந்தது. சிவ பக்தியில் தான் கொண்டிருக்கும் பக்தியை வெளிக் காட்ட தன் கண்களையே காணிக்கை ஆக்கிய கண்ணப்பனின் இறை சக்தியைப் பறைசாற்றும் மலை அல்லவா காளத்தி மலை? மீண்டும் பார்வை தந்து அருளிய மலை அல்லவா? அந்த மலையைத் திருவண்ணாமலையில் இருந்தபடியே தரிசனம் செய்யும் பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்? வைணவ குருவுக்கு அந்தப் பேறு கிடைத்தது.

ஆனால். வைணவ குருவான அவர் திருக்காளத்தி மலையை தரிசிக்க விரும்பவில்லை. பல்லக்கில் இருந்த திரையை இழுத்து மூடுமாறு பல்லக்குத் தூக்கிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.

என்ன மாயமோ தெரியவில்லை.... ஒரு சில விநாடிகளில் பல்லக்கின் உள்ளே இருள் சூழ்ந்தது. வைணவ குரு தடுமாறினார். அவரது கண்களுக்கு எதுமே தெரியவில்லை. திரையை மெள்ள விலக்கிப் பார்த்தார். உஹும்...... அப்போதும் எதுவும் தெரியவில்லை. பல்லக்குத் தூக்கிகளைப் பார்க்க விரும்பினார். அங்கும் இருளாகவே இருந்தது. போதிய வெளிச்சம் இருக்கின்ற நேரத்திலேயே எல்லாத் திசைகளிலும் இருள்! அப்போதுதான் தன் பார்வை திடீரெனப் பறிபோன விவரத்தை உணர்ந்தார் வைணவ குரு. காரணம் தெரியாமல் துடித்துப்போனார். இதே விவரத்தைத் தன் ஞான திருஷ்டியால் அதே நேரத்தில் அறிந்தார் குகை நமசிவாயர். மலையை வணங்குவதற்கு மனம் பேதலித்தது ஏனோ? என்று கவலைப்பட்டார்.

தனக்கு ஏற்பட்ட இந்தத் துயரத்தைப் போக்க வல்லவர் திருவண்ணாமலையில் இருக்கும் குகை நமசிவாயரே என்பதை ஊர்மக்கள் மூலம் அறிந்தார் வைணவ குரு. அவர் இருக்கும் இடம் நோக்கிப் பல்லக்கைத் திருப்பச் சொன்னார். குகை நமசிவாயரைச் சந்தித்துத் தன் குறையைச் சொல்லிக் கதறினார். எந்த மலையின் தரிசனம் உமக்குக் கிடைத்தும் அதைப் பார்க்க விரும்பாமல் திரையிட்டு மூடி மௌனியாக இருந்தீரோ, அந்த மலைக்கே செல்லுங்கள். காளத்திநாதனை வழிபாடுங்கள். உமக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்று அருளினார்.

இதையெடுத்து, திருக்காளத்தி நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். வைணவ குரு. காளத்திநாதனை மனமுருகு வணங்கினார். அடுத்த கணமே இழந்த அவரது பார்வை திரும்பக் கிடைத்தது. கண்களில் நீர் பெருக்கெடுத்தோட ஈசனை வணங்கி, நன்றி சொன்னார்.

திருவண்ணாமலைப் பகுதியை ஆண்டுவந்த முகிலன் என்ற அரசன். ஒரு நாட்டை ஆள்வதற்கு உண்டான தகுதிகள் அனைத்தையும் இழந்து விட்டவன். அதாவது, மன்னனாக இருந்து மக்களைக் காப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு எண்ணற்ற துன்பங்களை அடுத்தடுத்து விளைவித்து வந்தான். சாஸ்திரம் சொன்னபடி திருவண்ணாமலையில் நெறிமுறை பிறழாமல் வாழ்ந்து வந்த அந்தணர்களைப் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கினான். சிவாலயத்தில் நடந்துவரும் பூஜைகளுக்கு இடையூறு விளைவித்தான்.

ஆன்மிக அன்பர்களும் அந்தணப் பெருமக்களும் முகிலனின் அட்டூழியத்தால் மீள முடியாத அளவுக்கு அவஸ்தைப்பட்டனர். ஒரு கட்டத்தில் நன்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, குகை நமசிவாயரைச் சந்தித்து, முகிலனின் அட்டகாசத்துக்கு ஒரு முடிவு கட்டுமாறு வேண்டினர். குகை நமசிவாயர் என்ன செய்வார்? பக்தர்களின் இந்தக் கோரிக்கையை ஸ்ரீஅண்ணாமலையாரிடமே வைத்தார். இந்தப் பிரார்த்தனையை வைத்த, மறுகணமே அண்ணாமலையார் அங்கு யானை வடிவில் தோன்றி, கவலை வேண்டாம். இந்தப் பணியை எம் புதல்வன் கணேசன் பார்த்துக்கொள்வான் என்று அருளி மறைந்தார்.

ஈசனின் உத்தரவுப்படி ஸ்ரீவிநாயகப் பெருமானே யானை உருவெடுத்து, ஒரு நாள் முகிலனைத் துரத்த ஆரம்பித்தார். உயிர் தப்பிப்பதற்காக எங்கெங்கோ ஒடிய மன்னன் முகிலனை யானை விடுவதாக இல்லை. இறுதியில் ஸ்ரீஅண்ணாமலையார் சந்நிதிக்கே சென்று அவரிடம் சரண் அடைந்தான்; தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டினான். அதன்பின் யானையும் முகிலனை மன்னித்து வெளியேறியது. இதன் நன்றிக்கடனாக நூற்றுக்கணக்கான யானைகளை வாங்கி, ஸ்ரீஅண்ணாமலையார் ஆலயத்துக்கு அர்ப்பணித்தானாம் முகிலன். அதன்பின் மக்கள் பாராட்டும்படி வாழ்ந்தான்.

இதேபோல் நகித் என்கிற மன்னன் ஒருவன் திருவண்ணாமலைக்கு வந்தான். மோசமான குணங்களைக் கொண்ட இந்த மன்னன். நல்ல ஒரு க்ஷேத்திரத்துக்கு வந்தும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அங்குள்ள பெண்களை தன் இச்சைக்கு அடிமைபடுத்தினான். இன்னும் சில பெண்களை நிரந்தரமாகத் தன் காவலில் வைத்தான். அண்ணாமலையார் திருக்கோயிலுக்குள் சென்று அதன் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் சில அசிங்கம் செய்தான். திருவண்ணாமலையில் வசித்து வந்த மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளானார்கள். இந்த நகரின் பெருமையையும் ஆலயத்தின் புனிதத்தையும் காத்தருள வேண்டும் என்று குகை நமசிவாயரிடம் சென்று பிரார்த்தித்தார்கள்.

இந்த மன்னனைத் தண்டிக்கும் பொறுப்பையும் அண்ணாமலையாரிடமே பிரார்த்தனையாக வைத்தார் குகை நமசிவாயர். மூன்று சுடர்களையும் மூன்று கண்களாகக் கொண்ட சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணும் ஆழ்ந்த உறக்கம் கொண்டுவிட்டதோ என்று பொருள்படும்படியாக.

நெற்றி விழி கண்மூன்று நித் திரையோ சோணேசா

பற்றுமழு சூலம் பறிபோச்சா-சற்றும்

அபிமான மின்றோ அடியார்கள் எல்லாம்

சபிமாண்டு போவதோ தான்.

என்று பாடினார். அவ்வளவுதான்..... குகை நமசிவாயரிடம் இருந்து கோரிக்கை வந்த பின் அதைப் பரிசீலிக்காமல் இருப்பாரா அண்ணாமலையார்? அன்றிரவே நகித் கனவில் ஒரு முனிவர் வடிவில் போய் முதுகில் லேசாக ஒரு குத்து குத்தினார் இறைவன். பொசுக்கென்று விழித்தான் நகித். தன் முதுகில் திடீரென்று ஏதோ பட்டது போல் இருக்கிறதே என்று தடவிப் பார்த்தான். வேர்க்குரு போல் சிறு புள்ளியாக இருந்தது. லேசாக எரிச்சல் தெரிந்தது, நேரம் ஆக ஆக அதன் அவஸ்தை அதிகமானது. முதுகில் இப்படியும் அப்படியும் சொறிந்துகொண்டே அவஸ்தைப்பட்ட நகித்தைப் பார்த்து. இந்த வேதனையுடன் நீ ஆலயத்தினுள் தங்கியிருத்தல் கூடாது. அது பாவம் என்று சில பெரியோர்கள் அறிவுரை சொல்லி, அவனை வெளியே அனுப்பிவிட்டார்கள். எதிர்ப்பு வலுக்க, வேறு வழி தெரியாமல் வெளியேறிவிட்டான் நகித்.

ஆலயத்தில் இருந்த அர்ச்சகர்கள் அனைவரும் மகிழ்ந்து. பீடை ஒழிந்தது என்பதாகச் சில பரிகாரங்களைச் செய்து திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தினார்கள். அண்ணாமலையாருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். பக்தர்கள் நிம்மதியாக இறைவனை வழிபட்டு. திருவருள் பெற்றனர். வேர்க்குரு போல் இருந்த புள்ளி, மெள்ள வளர்ந்து பெரிய கட்டியாகி, வலியால் துடித்து ஒரு கட்டத்தில் இறந்தே போனான் நகித்.

நகித்தின் இறப்பால் திருவண்ணாமலை நகரமே குதூகலித்தது. இந்த இறப்பை ஆனந்தமாகக் கொண்டாடினார்கள் ஊர்மக்கள் அனைவரும். குகை நமசிவாயரைச் சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

தன் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு, அவளது வேண்டுகோளுக்கிணங்க அவனை உயிர்ப்பித்தே தந்தார் குகை நமசிவாயர். அன்றைய தினம் ஆலயம் சென்று அண்ணாமலையானை வணங்கிவிட்டு, தன் குகை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார் குகை நமசிவாயர். எதிரே ஒரு பெண்மணி கண்ணீரும் கம்பலையுமாக வந்து கொண்டிருந்தாள். அருளே வடிவாக வந்து கொண்டிருக்கும் குகை நமசிவாயரைப் பார்த்தும், அழுகையை அடக்க முடியாமல் அவரது திருவடிகளில் விழுந்து கதறினான்.

என்னம்மா, உன் சோகம்? ஏன் அழுகிறாய்? என்று கேட்டார் குகை நமசிவாயர்.

உத்தம சீலரே..... உங்களை நேரில் தரிசித்து என் சோகத்தைச் சொல்லத்தான் ஓடோடி வந்து கொண்டருக்கிறேன். எனக்கு ஒரே ஆதரவாக இருந்த என் கணவனை இழந்து தவிக்கிறேன். அவர் என்னை விட்டுப் பிரிந்து சிவ பதம் அடைந்துவிட்டார். அவரது பிரிவு என்னை வாட்டுகிறது, அவரை எப்படியேனும் உயிர்ப்பித்துத் தாருங்கள். உயிர்ப்பிச்சை தாருங்கள் என்று வேண்டினாள். அழுகையின் ஊடே மன்றாடினாள். இந்த உத்தமியின் கண்ணீர், குகை நமசிவாயரைக் கலங்கடித்துவிட்டது. எழுந்திரு பெண்ணே..... என் ஆயுளின் ஒரு பகுதியை இப்போதே உன் கணவனுக்குத் தந்தேன். போ வீட்டுக்கு. அங்கே உன் கணவன் உன்னை வரவேற்கக் காத்துக் கொண்டிருப்பான். சந்தோஷமாக குடும்பம் நடத்து என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.

புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சந்தோஷத்துடன் வீட்டை நோக்கி ஓடினாள் அந்த யுவதி. குகை நமசிவாயரின் சத்திய வாக்கு பலித்தது. அங்கே-இவளது கணவன் புன்னகையுடன் நின்றபடி இவளை வரவேற்றான். கணவனைக் கட்டிக் கொண்டு கதறினாள். பிறகு, இருவரும் சேர்ந்தே குகை நமசிவாயரின் இருப்பிடத்துக்குச் சென்று அவரை வணங்கி, ஆசி பெற்றனர். வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

அண்ணாமலையார் மீது அதீத அன்பும் பக்தியும் கொண்டவர் குகை நமசிவாயர். நூறு ஆண்டு முடிந்ததும் ஜீவ சமாதி ஆக இருந்த குகை நமசிவாயரை ஆட்கொண்டு, இன்னொரு நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு உண்டான ஆயுளை அண்ணாமலையார் வழங்கினாராம். அப்படி என்றால், ஈசனுக்கும் ஈசனின் அடியாரான குகை நமசிவாயருக்கும் இருந்து வந்த அன்பைப் பாருங்கள்!

இருவருக்குமான நட்பின் வெளிப்பாட்டைச் சொல்ல இன்னொரு உதாரணமும் சொல்லப்படுகிறது. உத்ஸவ காலங்களில் ஸ்ரீஅண்ணாமலையார் வீதி வலம் வரும்போது அவருக்குப் பின்னே குகை நமசிவாயர், விருபாட்சித் தேவர் ஆகியோர் தனித் தனிப் பல்லக்குகளில் உத்ஸவ மூர்த்திகளின் பின்னே வலம் வருவது வழக்கமாம். அப்படி ஒரு முறை வீதி வலம் சென்று கொண்டிருக்கும்போது. தனக்குப் பின்னால் குகை நமசிவாயர் வருகிறாரா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாராம் அண்ணாமலையார். ஒரு கட்டத்தில் குகை நமசிவாயரைப் பார்த்து அண்ணாமலையார். நீ எனக்கு முன்னாலே போ. நீ வருகிறாயா இல்லையா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வருவதால் என் கழுத்து வலிக்கிறது என்றாராம். அதன்படி ஈசனுக்கு முன்னால் போனதாம் குகை நமசிவாயரின் பல்லக்கு. எந்த அளவுக்குஇருவருக்கும் இடையே ஒரு நட்பு இருந்து வந்திருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது அல்லவா?

உத்ஸவ காலங்களில் குகை நமசிவாயர் பயன்படுத்திய பல்லக்கு சென்ற தலைமுறை வரை இருந்து வந்தாகவும், விசேஷ காலங்களில் அந்தப் பல்லக்குக்கு சிறப்பு பூஜைகள் நடந்தாகவும் சொல்கிறார்கள். அண்ணாமலையாரின் அற்புதங்களை அனுதினமும் பருகியபடி எண்ணற்ற ஸித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள் புரிந்து வந்த குகை நமசிவாயர். ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவ சமாதி ஆக விரும்புவதாகும், தன்னை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டினார். அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா..... எல்லாம் சரிதான். உன் காலத்துக்குப் பிறகு உனக்கு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், குகை நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடும் செய்தார்.

ஸ்ரீசைலத்தில் இருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை திருவண்ணாமலைக்கு வரவழைத்து, இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் அண்ணாமலையார். சில காலத்துக்குப் பிறகு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே, ஸ்ரீஅண்ணாமலையாரின் ஓப்புதலின்பேரில் தான் வாழ்ந்த மலை குகையிலேயே ஜீவ சமாதி ஆனார் குகை நமசிவாயர். இவருக்கு உண்டான பூஜைகளை அவரது வாரிசே ஏற்று நடத்தினார். குகை நமசிவாயரின் குருபூஜை 500 ஆண்டுகளையும் தாண்டிவிட்டது. குகை நமசிவாயருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். தற்போது 18-வது பரம்பரையைச் சேர்ந்த இளைஞர்கள் வரை இந்த வழிபாடு தொடர்ந்து வருகிறது.

தமிழே அறியாமல் ஸ்ரீசைலத்தில் வசித்து வந்த குகை நமசிவாயரை திருவண்ணாமலைக்கு வா என்று உத்தரவிட்டதே இந்த அண்ணாமலையார்தான். இந்த ஈசனே குகை நமசிவாயருக்கு குருவாக இருந்து வந்தார்; தரிசனம் தந்தார்; தம்மைப் பற்றி பாடல்கள் இயற்றுவதற்கு அருளாசி வழங்கினார். திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீஅண்ணாமலையாரின் மேல் ஏரளாமான பாடல்கள் எழுதி இருக்கிறார் குகை நமசிவாயர். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவை குறிப்பிடத்தக்கவை. தவிர இவர் எழுதிய பல ஓலைச் சுவடிகள் கால வெள்ளத்தில் கரைந்தும் காணாமல் போயும் இருக்கின்றன என்பது சோகமே!

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் குருபூஜை நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் குகை நமசிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச் சுவடிகளை குருபூஜையின்போது வைத்து வணங்குகிறார்கள். திருவண்ணாமலையில் வசிப்பவர்களும், வெளியூர் அன்பர்களும் அவ்வப்போது வந்து குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை வணங்கி, அவரது குருவருள் பெற்றுத் திரும்புகிறார்கள். எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி வந்த இந்த மகான், இன்றும் தன் பக்தர்களின் குறைகளைப் போக்கி அவர்களை வாழ்வதற்கு வாழ்வித்து வருகிறார். தன்னை தரிசிக்க வரும் பக்தரிகளிடம் குகை நமசிவாயர் அடிக்கடி சொல்வது இதுதான்; ஸ்ரீஅண்ணாமலையாரின் பாத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி..... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி..... நீ புனிதம் அடைந்து விடுவாய். ஆம்! ஈசன் அடியைத் தவிர வேறு எந்த நிழல் நமக்கு வேண்டும்! பெறற்கரிய பாக்கியம் அல்லவா அந்த நிழலை நாம் அடைவது?!

திருவண்ணாமலைக்குச் செல்லுங்கள். ஸ்ரீஅண்ணாமலையாரின் அருட் சந்நிதியையும், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியையும் தரிசித்து. திருவருளையும் குருவருளையும் பெறுங்கள். ஆனந்த வாழ்வு பெறுவதற்கு இவர்கள் உங்களை ஆசிர்வதிப்பார்கள்!

Guhai Namashivayar Temple

https://maps.app.goo.g/YanwZGFLW53AP7xD6

எற ஆரம்பிக்க வேண்டிய இடம், பேய் கோபுரம் எதிரில்

https://maps.app.goo.gl/btAhK89WnCapeKeZ6