Tuesday, 14 May 2019

சித்திரை ஹஸ்தம் - மீன் குளத்தி அம்மன் காவு

குல தெய்வம் மதுரை மீனாட்சி. அதன் காரணமாகவே அவர்கள், மதுரைக்குச் சென்றார்கள். ஆனால் அங்கும் அவர்களால் தங்க முடியவில்லை. அங்கிருந்து புறப்பட வேண்டியதாயிற்று.
அப்போது, அவர்களில் இளையவராக இருந்த மன்றாடியார் ஒருவர் (இனிமேல் இவரை, வைர வியாபாரி என்றே பார்க்கலாம்) மதுரை பொற்றாமரைக் குளத்தில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத் துக்கொண்டார். அதன் மூலம் மீனாட்சி அம்பாளே தன்னுடன் இருப்பதாக, அவருக்கு நினைப்பு. அந்தச் சிறு கல்லும் அவர் மூட்டையில் இடம் பெற்றது.
மதுரையில் இருந்து புறப்பட்ட அவர்களின் பயணம் கேரளா வில் பல்லசேனா என்ற இடத்தை அடைந்ததும் நின்றது.
அங்கிருந்த வளப்பமும், நீர் நிலைகளும், அவற்றுக்கு மேலாக, அங்கிருந் தவர்களின் தூய்மையான உள்ளங்களும், வைர வியாபாரி களின் பயணத்தை நிறுத்தின. எல்லோரும் அங்கேயே நிலைத்து, நன்றாகச் செழித்து வாழ்ந்தார்கள்.
தேடி வந்து கோயில் கொண்டாள்!
மதுரையில் இருந்து கல்லைக் கொண்டு வந்த வியாபாரி, அதைப் பிரியாமல் மீனாட்சியாகவே கருதி வழிபட்டு வந்தார். அதேநேரம், வியாபார நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தால், மதுரைக்குப் போய் அன்னை மீனாட்சியைத் தரிசித்து விட்டே பயணத்தை மேற்கொண்டார்.
வியாபாரம் நன்கு வளர்ந்தது. கூடவே, வைர வியாபாரியின் வைரம் பாய்ந்த உடலில் முதுமையும் வளர்ந்தது. அவர் சொன்ன படியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவரது உடல், இப்போது தான் இழுத்த இழுப்புக்கு அவரை வளைத்துப் பாடாய்ப் படுத்தியது. இந்த நிலையிலும், ஒருமுறை அவர் மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். புறப்பட்டவர், அந்த ஊர்க் குளக்கரையில் மூட்டை முடிச்சுகளை இறக்கிவைத்து விட்டு, அவற்றை மறைத்தாற் போன்று ஒரு பனையோலைக் குடையையும் வைத்துவிட்டு குளத்தில் இறங்கி நீராடினார்.
நீராடும்போது, அவரது உள்ளம் குமைந்தது. ‘தாயே! தேவி மீனாட்சி! உன் தரிசனம் எனக்குக் கிட்டாதா? முதுமை என்னை முடக்கிவிட்டதே! தரிசனம் தரக்கூடாதா தாயே!’ என்று புலம்பிய படியே, நீராடிவிட்டுக் கரையேறினார்.
அதன்பின், கரையில் தான் வைத்திருந்த பனையோலைக் குடையையும், மூட்டை முடிச்சுகளையும் அவர் எடுக்க முயற்சி செய்தபோது, அவற்றை அசைக்கக்கூட முடியவில்லை. உடனே, ஒட்டுமொத்தமாக எடுக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு, மூட்டையில் இருந்த பொருட்களை தனித்தனியே வெளியில் எடுத்தார். கடைசியில்… அவர் மீனாட்சி அம்பாளாகக் கருதி வைத்திருந்த சிறு கல் மட்டும் எஞ்சி இருந்தது. அதை அசைக்கக் கூட முடியவில்லை. அதேபோல் குடையையும் நகர்த்தமுடிய வில்லை!
வைர வியாபாரி மனம் நடுங்கிப்போய், கேரளாவில் அப்போ திருந்த பிரபல ஜோதிடரிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி ‘என்னவோ தெரியவில்லை, அம்பிகைக்கு என் மேல் கோபம்’ எனப் புலம்பினார்.
ஜோதிடர் சற்று நேரம் ஜோதிடம் பார்த்துவிட்டுக் கூறினார்:
‘ஐயா, வைர வியாபாரியே! அம்பாளுக்குப் போய் உங்கள் மேல் கோபமா? கருணையை அள்ளிக் கொட்டியிருக்கிறாள் அவள். உங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, உங்கள் பக்திக்காக அவளே இங்கு வந்துவிட்டாள். அதனால்தான், அவள் குடிகொண்ட அந்தக் கல்லையும் குடையையும் உங்களால் எடுக்க முடியவில்லை. அம்பாள் குடிகொண்ட அங்கேயே கோயில் உருவாகட்டும். அனைவரும் அவளை வணங்கி அருள் பெறட்டும்’ என்றார்.
வைர வியாபாரிக்குக் கண்கள் பனித்தன. கைகளைக் குவித்து ‘தாயே! இந்த எளியேனுக்காகத் தேடி வந்து தரிசனம் தந்தாயா?” என்று நெக்குருகியவர், கல்லும் குடையும் இருந்த இடத்திலேயே அன்னை மீனாட்சிக்கு அழகானதோர் ஆலயம் எழுப்பினார்.
கல்லிலும் குடையிலும் அம்பிகை குடிவந்ததால், அந்த இடம் ‘குடமந்து’ என இன்னும் அழைக்கப்படுகிறது. அம்பிகை அருள் வெளிப்பட்ட, ‘சித்திரை அஸ்தம்’ அன்று இந்த திருத்தலத்தில் வெகு விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது.
கேரளாவில், பாலக்காட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோவில் ‘மீன் குளத்தி அம்மன் கோயில்’ என அழைக்கப்படுகிறது. அன்னை மீனாட்சி, துள்ளிக்குதிக்கும் மீன்கள் நிறைந்த குளத்தின் கரையில் எழுந்தருளி இருப்பதால், ‘மீன் குளத்தி அம்மன்’ என்ற பெயரும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
இத்திருக்கோயிலுக்கு பிள்ளை வரம் கேட்டு வருபவர்கள், கணவன்  மனைவி பிணக்கு தீர வருபவர்கள், குடும்ப ஒற்றுமை வேண்டி வருபவர்கள், ஆரோக்கியம் வேண்டி வருபவர்கள்… எனப் பலரும், குறைகள் நீங்கி மகிழ்வதும், நன்றிக்கடனாக மறுபடியும் வந்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டுப் போவதும் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
‘சந்திரவதனி’ எனத் துதிக்கப்படும் அம்பிகை சந்திரனைப் போன்ற அழகு நிறைந்தவள் மட்டுல்ல, சந்திரனைப் போன்றே குளுமையும் நிறைந்தவள். அப்படியான சந்திரவதனி, நம் தாபத்தை யும், துக்கத்தையும் தணித்து, நமக்கு சர்வ மங்கலங்களையும், நல்லன எல்லாவற்றையும் வழங்கிட, அவளை வேண்டிப் பணிவோம்.

நானூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அம்மன் மீண்டும் இன்னொருவர் கனவில் தோன்றி தனக்கு பெரிய ஆலயம் எழுப்புமாறுக் கூற அவள் கூறியபடி அந்த பழைய ஆலயத்தைத் தள்ளி இன்னொரு பெரிய ஆலயம் அமைத்தனர். அதுவே மீன்குளத்தி மீனாட்சி ஆலயமாயிற்று!!

அம்மன் மீன்கள் நிறைய இருந்த குளத்தின் அருகில் கிடைத்ததினால் அவள் பெயர் மீன் குளத்தி என ஆயிற்று. 

அவளை அனைவரும் மதுரை மீனாட்சியாகவே கருதி அங்கு வழி படுகின்றனர். 

கருணை பொங்கும் தாய்மைப்ப்பெருக்கு நிறைந்த கண்களைத் தரிசித்த உடனே நம் பாரம் எல்லாம் நீங்கிய புத்துணர்ச்சியை உணரமுடியும்.

அம்மனுக்கு அருகில் இருக்கும் சிவ லிங்கத்தை உன்னிப்பாக விழிப்புடன் தேடிப்பார்த்தே தரிசிக்க முடியும். 

தரிசித்து வந்தவர்களை முக்கியமாக நான் கேட்கும் கேள்வியே அருகில் இருக்கும்சிவ லிங்கத்தைத் தரிசித்தீர்களா? என்பது தான். 

அம்மனையே மெய் மறந்து தரிசித்ததால் கண்களில் படவில்லையோ என்னவோ என்று மறுபடியும் வரிசையில் நின்று தரிசித்து வருவார்கள்.

மீன் தன் கண்களின் பார்வையாலேயே தன் குஞ்சுகளைக் காப்பதுபோல் தன் கருணை நிறைந்த கடாட்சத்தாலேயே பக்தர்களைக் காப்பதாலும், மீன்போன்ற கண்ணழகு கொண்டதாலும், அவள் மீனாட்சி. 
கண்ணுக்கு அழகு கண்ணோட்டம் அல்லவா?  

வீடுகட்டும் பிரர்த்தனை நிறைவேறியவர்கள் வீடு மாதிரியும், குழந்தைவரம் பெற்றவர்கள் தொட்டிலும் காணிக்கை அளித்து அங்கே காட்சிப்படுகிறது.

கட்டிய பூக்களை ஏற்பதில்லை. 

உதிரிப்பூக்களே ஏறகப்படுகிறது. 

தர்ப்பையால் தான் பூத்தொடுக்கிறார்கள்.

சிவப்பு நிறமுள்ள மலர்களும், தாமரையும் அம்மனுக்கு விஷேசம். 

கோவிலுக்கு அருகில் மந்திரித்த கயிறும், திருநீறும் கட்டணத்துடன் அளிக்கிறார்கள். 

கோவில் வாசலில் இருக்கும் காவல் தெய்வம் மிக்ப்பெரிய பழமைவாய்ந்த பஞ்சவிருட்சத்தின் கீழ் அருள்கிறார். தரிச்னம் முடித்து தேங்காயை நம் பெயர் நட்சத்திரம் கூறி தலையைச் சுற்றி ஈடு தேங்காயாக உடைத்து திருஷ்டி கழிக்கிறார்கள்.


 










குளத்தில் மிதக்கும் வாத்துக்களும், நீந்தும்மீன்களும் சுற்றி இருக்கும் தென்னை மரங்களும், வழியெங்கும் பச்சைப்பட்டாடை உடுத்த வயல் வெளி, குளங்கள் குளிர்சியான காற்றும் இது கடவுளின் பூமிதான் என்று கட்டியம் கூறும். 


அழகே வடிவமான மீன்குளத்தி பகவதி அஞ்சுகம் ஏந்திய 
அருட்சுடர் மீனாட்சி அன்பின் நிலையாகி அஞ்ஞானம் தீர்ப்பவள் 
அனுதினம் தொழுபவர்க்கருளி அகிலம் காப்பவள்
அருளைப் பொழிந்து அமுதவாரிதியாய் விளங்குபவள்

ஆட்கொண்டு ஆக்கிக்காக்கும் தெய்வம்
ஆனந்தம் அளித்து ஆகமவேதம் காப்பவள்
ஆராதிக்ககத்தக்க ஆதிசக்தித் தெய்வம்
ஆற்றல் மிக்க ஆத்ம ஞானம் அளிப்பவள் 


இச்சை வைத்த என்னின் இஷ்ட தெய்வம் 
இராஜராஜேஸ்வரி நீயே மீன்குளத்தி பகவதி தாயே 
இன்பமான ஜோதியாய் இன்னருள் புரிபவள்
இகபர சுகம் தந்து இசைபட வாழ அருள்பவள்



ஈடில்லா தெய்மவள் ஈர்க்கும் சக்தி மிக்கவள்
ஈஸ்வரியாய் காத்து ஈசனின் இடப்பாகம் அமர்ந்தவள்
ஈகையில் சிறந்தவள் ஈவிரக்கம் கொண்டவள
ஈடற்ற தெய்மவள் ஈடேற்றும் அன்னை

உள்ளத்தில் அமர்ந்து உவப்பளிக்கும் தேவி
உமையின் அவதாரமாய் உள்ளம் கொள்ளை கொள்பவள்
உபாசிப்போர்க்கருளி உயர்நிலை தருபவள் 
உலகு போற்றும் நாயகி உதயன் போல் பிரகாசிப்பவள்

ஊழ்வினை உறுத்தாது ஊதியம் உகப்பவ்ள் 
ஊணையும் உருகச்செய்து ஊர்ஜிதமாய் அருள்பவள்
ஊழிக்காலத்தில் காத்து ஊக்கம் அளிப்பவள் 
ஊறுகளைக் களைந்து ஊன்று கோலாய்த் திகழ்பவள்

என்றும் மங்களமாகி எஞ்ஞான்றும் காப்பவள் 
என்னை ஆட்கொண்ட தெய்வமாய் எங்கும் நிறைபவள்
எதிரியின் பயம் தவிர்க்கும் எழிலான அம்பிகை 
எல்லோரும் போற்ற எல்லையில்லா அருள் தருபவள்
எண்திசை போற்றிப் புகழும் ஏகதந்தனின் அன்னையவள் 

ஏராளமாய் வரம் தரவே ஏற்றிவந்த கல்லில் உறைந்தவள் 
ஏறெடுத்து எனைப்பார்த்து ஏக்கங்கள் தீர்த்திடுவாள்
ஏங்கி ஏத்துமன்பர்களுக்கும் அருளக் காத்திருப்பவள்
ஏற்றமிகு வாழ்வுதரும் ஏகாட்சரி புவனேஸ்வரி 

ஐஸ்வர்யம் தந்து ஐக்கியமாய் வாழவைப்பாள்
ஐந்தெழுத்தரசன் துணைவி ஐயை என்னும் தேவி
ஐங்கரனைத் தந்தவள் ஐயங்களைத் தீர்ப்பவள் 
ஐதிகப்படி மீனாட்சியானாய் மீன்குளத்துப் பகவதி

ஒளிர்கின்ற திருமுகமுடைய ஒயிலான் அம்பிகை 
ஒளிநிறை கிரீடமணிந்த ஒப்பில்லா தெய்வமவள்
ஒட்டியாண்ம் அணிந்தவளே ஒருக்காலும் மறவேன் 
ஒழுக்கத்தின் உறைவிடமே ஒன்று கூடிப் போற்றிடுவோம்

ஓம்காரத்ததுவமாய் ஓம்புகிறவர்க்கருள்பவள் 
ஓங்கி அளந்தானின் சோதரி ஓதி உணரத் தக்கவள்
ஓதும் வேதப் பொருளாகி ஓயாது துதிப்பவர்க்கருள்பவள்

ஔஷதமாய் விளங்கி ஔசித்யம் அருள்பவள் 
ஔவியத்தை அழிப்பவள் ஔடதமின்றிக்காப்பவள்
ஔவை போல் என்னையும் கவிமழை பொழியச் செய்த தேவி அவளே!!