Thursday 9 May 2019

அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர்க் காலசம்மாரமூர்த்தி சபதம்

அபிராமிபட்டர் அருளிய
திருக்கடவூர்க் காலசம்மாரமூர்த்தி சபதம்

(சந்த விருத்தம்)

அந்தரத் தமரர் மந்தரத் தையலி அலைக டற்றலை நிறுத்திநின்(று)
அழலுறாக் கடைய அதனிடைத் துடைய அமுத முற்றடையும் அண்ணலார்
கந்த ரத்திடை கறுப்பி னார்கவுரி கண்க ளித்திடு முறுப்பினார்
கால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்
பந்தம் ஆசைய வமான நிந்தையடு பழிப்ப சத்திய மனப்பயம்
படிறு வஞ்சனை அனர்த்தமா கொடுமை பாப மீறுகொலை சஞ்சலம்
தொந்த மோகமவி வேக மாசுசதி துயர மூடமுழு வைரநீள்
தோதகங் குடிலம் அவகுணந் தவறு சோகமுந் தவிரு வார்களே. 1.

வெங்கயத் துரியர் பங்கையர்க் கரியர் வேத வாம்பரியர் தீதிலர்
வீரர் விஞ்சுகர் வினோதர் கஞ்சுகர் வெற்றிமால் மகிழும் அத்தனார்
கங்க ணத்தர்மிகு வெங்க ணத்தலைவர் நளத்தி சைந்தபொரு நிர்த்தனர்
கால காலகடவூரர் கோலமது கண்டு தணடனிட வல்லபேர்
திங்கள் வெண்குடை கவிப்ப மும்முரசு சென்று சென்றெதிர் ஒலிப்பஎண்
திசைபுரக்கு மனர்கை முகிழ்ப்பஇகல் எவ்வருந் திறைய ளப்பமேல்
மங்கை மார்கவரி காலசைப் பநெடு மகர தோரண வளப்பமாய்
மத்த யானைமிசை வெற்றி யாளரென வைய கந்தனில் இருப்பரே. 2.

திருகு வெள்ளெயிறு வரிநெடுங் கயிறு செய்ய குஞ்சியடு நஞ்செனச்
சீறு கோபமுடன் ஏறுதீபவிழி தெறுமிடிக் குரல்மு ழக்கியே
கரும லைக்குநிகர் எருமையிற் பெரிய கால்மலைக் குவடு போல்வருங்
கால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்
பொரும ழுப்படை இலங்கு செஞ்சடை பொருந்து வெள்ளிடை திருந்துவெண்
பூதி யாகமொடு தோகை பாகமழல் பொங்கு நாகமணி கங்கணம்
பெருகு கங்கைநதி முடிவிளங் கிவதி பிஞ்சு மாமதி கொழுந்தழல்
பெய்த பெற்றிபெறும் ஒற்றை நெற்றிவிழி பெற்றிருப் பர்அடை யாளமே. 3.

பெண்ணி டும்பரி புரத்தி னாரொலி பிறந்தி டும்பரி புரத்தினார்
பிறைமு டிக்குளணி கங்கை யார்மறைப் பொருளை வைத்துளணி கங்கையார்
கண்ணி சைந்ததொரு மூன்றினா ருரிய கயிலை தாழநக மூன்றினார்
கால காலகட வூரர் கோலமது கண்டுதண்டனிட வல்லபேர்
மண்ண ளந்தச ரணர்க்கு மென்முளரி மாலை யாபர ணர்க்கு மோர்
வச்சி ரத்திறை வருக்கு எண்டிகிரி மாத்தி ரத்திறை வருக்குமே
விண்ண வர்க்குமிகு பண்ண வர்க்குமுயர் வித்த கர்க்குமதி யத்துவாழ்
மெய்த்த வத்துநிலை பெற்ற வர்க்குமவர் மேலிருப் பர்அடயாளமே. 4.

உரக குண்டலர் நெருங்கி விண்டலர் உறைத்த வண்டுமுரல் கொன்றையார்
உத்த ரீகமல ரொப்பி லாதசிலை ஒத்த நெற்றிமுலை மங்கையார்
கரக பாலர்திரி சூலர் நீலமணி கண்டர் புண்டரிக ஆடையார்
கால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்
விரக மானதில் உணங்கி டார்; உடல் வேத னைப்பட அறிந்திலார்;
வெகுளி யானது செறிந்திடார்; உலகை வேண்டி ஈனரை வணங்கிடார்;
நரக மென்பதினி எய்திடார்; கருமம் நல்ல(து) அல்லதவர் செய்திடார்;
நமனிருந் ததிசை கண்டிடார்; இறுதி நாளுமே பகுதி யாவரே. 5.

துலைநி றுக்குமொரு வணிக னுக்குமது சூதனுக்குமநு நீதிசேர்
தொல்புவிக் கரச னுக்குமிக் கதமிழ் சொல்லுமோர் புலவ னுக்குமெய்க்
கலைய னுக்குமதி நடுவ னுக்குமுனி காத லர்க்குமினி தருள்செயுங்
கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலானார்
முலைய ரும்பிவரு பனசமே இனிய மொழியும் இன்பமுறு வனசமே
முத்தை யத்தமணி மூரலே அளிகள் மொய்த்த தோள்களிள வேரலே
சிலையி ரண்டனைய புருவமே இரதி தேவி யத்தவள் உருவமே
திருமிடற் றழகு சங்கமே அமுது சிந்து மாணடிபு சங்கமே. 6.

விதிசி ரத்தையரி பழியர் அஞ்சுகணை வேளுரத் தையெரி விழியர்மா
மேருவிற் கையினர் நேர்கடுக் கையினர் வேள்வியிற் பணியும் வள்ளலார்
கதிர வன்றனது தந்தம் அம்புவியில் உதிர வன்பொடு புடைத்திடும்
கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலனார்
மதியில் நஞ்சமு மிருக்குமோ கரிய மஞ்சு மாலிகை கரிக்குமோ?
வாளரா அமுதம் ஊறுமோ? கனக வரையிலே புளக மீறுமோ?
எதிர்க லன்பல திருத்துமோ? இடையில் இலகுமே கலைபொ ருந்துமோ?
விளங்கு தோட்கழை வியக்குமோ? இனிமை விண்ட சொற்கழை விளங்குமே. 7.

இகல றிந்துதரு பகையி னார்புரம் எரித்திடுங் கொடிய நகையினார்
எரிம ழுப்படை வலத்தினார் முடியில் ஏறு மீறிய சலத்தினார்
ககன மண்டலமும் உருவி நின்றுவிதி காணொ ணாதொரு தாணுவார்
கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலனார்
முகம திக்குவமை புகலுவார் அளிகள் மொய்குழற் குவமை நுவலுவார்
முலையி னுக்குவமை பகருவார் இனிய மொழியி னுக்குவமை மொழிகுவார்
நகையி னுக்குவமை கூறுவார் சரண நடையி னுக்குவமை பேசுவார்
நயமறிந் திளமை சொல்லுவார் எவரும் நடுவறிந் தவர்கள் இல்லையே. 8.

சிறைய னத்தநறை யெழுவளத் தறிவர் தினமனத் திடைதி யானமே
செய்து தங்கள்வரம் எய்துதற் கரிய தேவ தேவர்பரி பூரணர்
கறைமிடற் றலைவர் அலைகடற் பரியர் கதிதரும் குரவை வெருவிலார்
கால காலகட வூரர் கோலமது கண்டு கைதொழுது கொண்டுகாண்;
எறிதி ரைப்பறை முழக்கி அங்கைதனில் இக்குவார் சிலைவ ணக்கிநீள்
இருதலைக் குமளி நாணி றுக்கிமுன் எழுந்து மீசையை முறுக்கிவேள்
வெறிம லர்க்கணை யெடுத்துங் கொடிய வேகமாயது தொடுத்தும்
மெய்யி னிற்பட விடுத்துஞ் செவியில் விண்டு விண்டுசொல வேணுமே? 9.

குயில்மொ ழிப்புணர் முலைக்கருங் கணொடு கோதை பாதியுறை சோதியார்
கொக்க ரித்துவரு தக்க னாருயிர் குறைத்தெ ழுந்திடு மறத்தினார்
கயிலை நாதர்கண நாதர் பூதியணி காய தாயசுமு மாயினார்
கால காலகட வூரர் கோலமது கண்டு கைதொழுது வண்டுகாள்!
அயிலி னுங்கொடிய அம்பினால் மதுர ஆர வாரமிசை வேயினால்
அந்த ரந்தனில் அசைந்துநின்(று) அடரும் அம்புலிக் கொடிய தீயினால்
துயில்து றந்துமெய் மறந்து வாடிமிக சோக மோகம் பிறந்துளத்
தோதகப் படவும் நானகப் படுதல் சொல்லுவீர் மதனை வெல்லவே. 10.

திருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு

வெண்பா

என்று தொழுவேன் எளியேன்; அளிமுரலும்
கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானே! - துன்றும்
கனற்பொறிகட் பகட்டிலுற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குளுரத்
தனைச்சினத்திட் டுதைத்தபத்மத் தாள். 1.

தொண்டருடன் கூடித் துதித்திரண்டு கண்ணாரக்
கண்டு தொழுவேனோ? கடவூரா! - பண்டோர்
அமுதிருக்குஞ் சிறுகடத்(து) அன்றெழும் உனக்(கு)அன் பரைமருட்டும்
எமனையெற்றும் பரிபுரச்செந் தாள். 2.

பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா! கடவூரா! - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்(து)அங்ககங்கருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள். 3.

மேகங் கவிந்ததுபோல் மேலெழுந்த காலனைக் கண்(டு)
ஆகந் தளர்ந்துநெஞ்சம் அஞ்சாமுன் - மாகடவூர்ப்
பூதநாதா! வேதகீதா! பூவிதாதா! தேடுபாதா!
மாதுபாகா! காலகாலா! வா. 4.

அன்றயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத்
தென்றிசைக்கோன் என்னதவஞ் செய்தானோ? - வென்றிதிகழ்
ஆடரவாளா? நீறணிதோளா! ஆதிரைநாளா! மாதுமணாளா!
தோடவிர்காதா! மாகடவூரா! சொல். 5.

ஆற்றுமோ நெஞ்சத் தடங்குமோ கொண்டமையல்
கூற்றுதைத்த தென்கடவூர்க் கோமானே! - மாற்றுயர்பொற்
கும்பமுலைத் திங்கள்நுதற் கொந்தளகக் கொம்பைவெறுத்(து)
அம்புதொடுத்(து) அங்கசன்விட் டால். 6.

தென்றல் உலவுந் திருக்கடவூர் எம்பெருமான்
மன்றல் செறிந்தே மதுவூறும் கொன்றைக்காப்
பொன்பரவுந்திண் கொங்கையிரண்டும் புண்பட நொந்தும் துன்பமிகுந்தும்
அன்புதிரண்டும்பெண் கொடிநெஞ் சும். 7.

சுடுமோ இளந்தென்றல் தோகையின்மேல் அம்பு
படுமோமெய் வாதை படுமோ? - கடவூரா!
நீரணங்கார் வேணிநம்பா! நீலகண்டா! மேனியின்பால்
ஆரணங்கார் காலசங்கா ரா. 8.

பாலனுக் காவன்று பகடேறி வந்தெதிர்த்த
காலனுக்குக் காலா! கடவூரா! - மேலோர்
கரும்புகொண்டங்(கு) எதிர்ந்துவந்(து)அங் கசன்பொருஞ் செஞ்சரங்கள்கண்டு
மருண்டுநெஞ்சங் கலங்குமென் றன்மான். 9.

நீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும்
ஆதிகட வூரிலுறை அம்மானை - பாதம்
பரவியங்கம் புளகி வணங்கும் பொழுதுநெஞ்சங்

கரவுதுஞ்சுஞ் சமனஞ்சுங் காண். 10.