Friday 24 April 2020

கள்ள வாரண விநாயகப் பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!

அபிராமிபட்டர் பாடியருளிய திருக்கடவூர் கள்ள விநாயகர் திருப்பதிகம் :

அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், அமிர்தம் அருந்த இந்திராதி தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகப் பெருமானை முதலில் வழிபட மறந்து விட்டனர். இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகப் பெருமான் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.

விநாயகரின் இந்த லீலை பற்றி அறிந்த மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார், "முதலில் விநாயகரை வழிபடுங்கள்; அவரே மனமிரங்கி அமிர்தம் தருவார்" என்று கூறி அனுப்பி வைத்தார். தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர், வழிபாடும் செய்தனர்.

மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார். தேவர்கள் அமிர்தம் உண்டு அமரத்துவம் பெற்றனர். அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் திருக்கடையூர் கோவிலில் உள்ள விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர். நாளடைவில் அது கள்ள விநாயகர் என்று மாறி விட்டது.

இந்த கள்ள விநாயகர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை. ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார்.

அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது. அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது.

இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார். சமஸ்கிருதத்தில் இவரை சோர கணபதி என்று அழைக்கிறார்கள்.

அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் விநாயகரை வணங்கிப் பாடியது திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம். பத்து பாடல்கள் கொண்ட இப்பதிகத்தில் கள்ள விநாயகர் திருவுருவ அழகு, வழிபடும் முறை மற்றும் சிறப்பினைக் கூறுகிறது.

         🙏கள்ள விநாயகர் பதிகம்🙏

1. பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமுமாகி வந்து என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கயமே! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

2. உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
விண்ணும்! புகழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!

3. யாதொன்றை யாகிலும் எண்ணிய போது உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
வேதம் பயில்! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

4. அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
விரவுந் தமிழ்! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

5. துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர் தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலிய வந்து
கதியே தரும் வழிகாட்டிடுவாய்; நின் கருணையினால்
விதியே! புகழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

6. நாகந் துரகம் பலபணி அடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
மோகந் திகழப் பணிந்தோர்க்கு அலாமல் முயன்றிடுமோ?
மேகம் பயில்! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

7. இளங் குஞ்சரச் செழுங் கன்றே! எனச்சொலி ஏத்தி நின்றாய்
உளங் கசிந்தங்கையால் குட்டிக் கொண்டோர்க்கோர் குறையுமுண்டோ?
வளங்கொண்ட மூவர் தமை மறித்தே தமிழ் மாலை கொண்டு
விளங்கும்! புகழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

8. தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக்
கண்டாவி கொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்!
வண்டார வாரஞ் செய்மாமலர்ச் சோலை வளப்பமுடன்
விண்தாவிய! கடவூர் வாழும் கள்ள விநாயகனே!

9. மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்தி முந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;
தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
மேவருஞ் சீர்கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

10. மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்த துதிக்
கைப்பொருளே! என்று கைதொழுவோர்குன் கருணைவைப்பாய்;
பொய்ப்பணியோ அறியாதமுதீசன் புகழுமெங்கள்
மெய்ப்பொருளே! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!

கள்ள வாரண விநாயகப் பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!

No comments:

Post a Comment