Thursday, 16 April 2020

திருவாமத்தூர் - நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. பசுக்களாகிய உயிர்களுக்கு தாயாக இறைவன் இருந்து அருளும் தலம்

*"சம்பந்தப் பெருமான் தேவாரம்*

*திருவாமாத்தூர் திருப்பதிகம்*

குறிப்பு: விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 6 கி.மீ. தூரத்தில் பம்பையாற்றின் வடகரையிலுள்ளது *"திருவாமாத்தூர்"*

 விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் ஏறி *"திருவாமாத்தூர்"* சென்றடையலாம், இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. பசுக்களாகிய உயிர்களுக்கு தாயாக இறைவன் இருந்து அருளும் தலம்.

இவரது திருப்பெயர் *"அழகிய நாதர்"* இத்திருப்பெயரைத் இத்தல திருக்குறுந்தொகையிலும் தாண்டகத்திலும் அப்பர்பெருமானார் எடுத்து ஆண்டிருப்பது மகிழ்தற்கு உரியதாகும்

பிருங்கி முனிவர் அம்மையின் பெருமையறியாது இறைவரை மட்டுமே வழிபடுபவர் அம்மையாரை வழிபடாதவர்; அம்மையார் ஒருபாகத்தைப் பெற்ற போதும் வண்டு உரு எடுத்துத் துளைத்துச் சிவனையே வழிபட்டார். அதனால் அவரை அம்மையார் வன்னிமரம் ஆகுமாறு சபித்தார். பின்னர் இத்தலத்தில் முனிவர் அம்மையாரை வழிபட்டு அவர் அருளால் சாபநீக்கம் பெற்றனர்.

இது, *"மூவர் தேவாரமும்  பெற்றது இத்தலம்"*,

இத்திருக்கோயிலானது பாதைக்கு இரு புறமாகக் கட்டப்பெற்றுள்ளது. மேல்புறம் சுவாமி, கீழ்புறம் அம்மன் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கின்றன. சுவாமியின் முன்கோபுரம் பூர்த்தியாகவில்லை. சுவாமி கோயிலுக்கு நேர் வழியில்லை. தெற்குவாயில் வழியே சென்று பிறகு மேற்கே திரும்பவேண்டும். ஸ்ரீராமபிரான் இங்கு இறைவரை வழிபட்டதால் அவருக்கு சுவாமி சன்னதி எதிரில் கோயில் இருக்கின்றது

இத்தல குறுந்தொகையில் *"குரா மன்னுங் குழலாள் ஒரு கூறனார் அரா மன்னுஞ் சடையான் திருவாமாத்தூர் இராமனும் வழி பாடு செய் ஈசனை நிராமயன் தனை நாளும் நினைமினே"* என்று இராமன் வழிபட்ட செய்தியை இத்தல குறுந்தொகையில் அப்பர் பெருமானும் அருளுகின்றனர்

கண்தெரியாமல் வாழவழியின்றி இருந்த மனிதர்களை திரட்டி அவர்களுக்கு தேவாரப்பதிகங்களை ஓத கற்றுதந்து இவ்வாலயத்தில் பூசை வேளைகளில் பாடுவதற்கு நியமித்திருந்த தமிழ் அரசர்களின் *"சமூக சிந்தனை சார்ந்த பக்தி வெளிப்பாட்டை"* இவ்வாலயக் கல்வெட்டுகளில் காணமுடிகின்றது

*"மூன்று சந்திகளிலும், திருப்பதிகம் பாடி வருவதற்குக் குருடர்கள் பதினாறு பேர்களும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவரும் ஆகப் பதினெண்மர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்குத் தலைக்கு நெல் பதக்காக (இரண்டு மரக்கால்) நாளொன்றுக்கு முக்கலமாக நாள் 360க்கு நெல் ஆயிரத்து எண்பதின் கலமும், புடைவை (வேட்டி) முதலுக்குப் பேரால் காசு ஒன்றாக காசு பதினெட்டுக்கு, காசு ஒன்றுக்கு நெல் இருபதின் கலமாகவும் வந்த நெல் 1440 கலத்துக்கு, வேலி ஒன்றுக்கு நெல் நூற்று இருபது கலமாக ஆமாத்தூர் இறைவர் தேவதானம் கடுவனூரில் பன்னிரண்டு வேலி நிலம் காணியாகக் கொடுக்கப்பட்டு வந்தது"* என்பது அக்கல்வெட்டு செய்தியாம்

*"யோகமார்க்க நாயகராக காட்டப்பெறும் சுந்தர மூர்த்தி சுவாமிகள், ஒற்றியூரில் கண்ணிழந்த நிலையில் இங்கெழுந்தருளி வழிபாடு ஆற்றி "காண்டனன் காண்டனன்" என்றெடுத்து பாடியுள்ளனர்"*

*"நாடுவன் நாடுவேன் நாபிக்கு மேலேயொரு நால்விரல்"* என்று இப்பதிகத்தில் நம்பிகள் அருளிச் செய்தமை யோகமார்க்கத்தில் அகப்பூசை செய்யும் முறையாகும்

*"அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே"* என்ற மகுட வாக்கியம் கொண்டு இறைவர் பலிதேர வருங் காட்சியையே பாடல்முழுதும் வைத்து *"வண்ணங்கள் தாம்பாடி"* என்றெடுத்து அப்பர்பெருமான் பாடி அருளியுள்ளார்கள்

சந்தவேந்தராம் புகலிவேந்தர் இத்தலத்தில் *"குன்ற வார்சிலை நாண் அராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்"* என்று எடுத்து பாடிய பாடல் நம் இதயத்தில் சென்று இனிக்கும் இன்தமிழ் சந்தமாம், அப்பதிகப் பாடல்கள் இவை

பண்: சீகாமரம்

*பாடல்*

குன்ற வார்சிலை நாணரா வரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடையேறும் வேதியனே
தென்றலார் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.

பரவி வானவர் தான வர்பலரும் கலங்கிட வந்த கார்விடம்
வெருவ வுண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே!!
கரவின் மாமணி பொன்கொழித்து இழி சந்து காரகில் உந்து பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.

நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடு மாண்பதுவென்
பூண்ட கேழன் மருப்பரா விரி கொன்றை வாள்வரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.

*பொருள்*

தென்றல் ஆர்கின்ற அழகிய மாடமாளிகைகளின் சூளிகைக்கு மேலாக நீண்டுயர்ந்த பனைமரத்தில் அன்றில் பறவை வந்து தங்கி மகிழும் ஆமாத்தூர் இறைவனே! விடைமீது ஏறிவரும் வேதியனே! மேருமலையை நீண்ட வில்லாகவும் வரிகளைஉடைய பாம்பை நாணாகவும், மிக்க எரியை அம்பாகவும், காற்றை ஈர்க்காகவும் கொண்டு முப்புரங்களை வென்றது எவ்வாறு?

மறைவில்லாமல் சிறந்த மணிகளையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு, தன்பால் வீழ்ந்த சந்தனம் கரிய அகில் ஆகியவற்றை அடித்துக்கொண்டு வரும் பம்பையாற்று நீர் ஒழுக்கு வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே! விண்ணவனே! தேவர்களும் அசுரர்களும் கலங்கும்படித் தோன்றிய கரியவிடத்தைக் கண்டு வெருவிப்பரவ அவ்விடத்தை நீர் உண்டு மகிழ்ந்த கருணைக்குக் காரணம் யாதோ?

பன்றிக் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றை மலர் மாலை, ஒளியும் வரியும் பொருந்திய ஆமை ஓடு ஆகியவற்றை அணிகலனாகப் பூண்டு ஆட்கொள்ளும் தலைவனே! ஆமாத்தூர் இறைவனே! நீண்ட சடை அவிழ்ந்து தொங்க, உமையம்மை பாட, திருநீற்றை மெய்யில்பூசித் திருமால் பிரமன் முதலானோர் மாண்ட கடைஊழியில் நீண்ட சுடலையில் நடமாடும் மாட்சிக்குக் காரணம் யாதோ?

No comments:

Post a Comment