Monday 20 April 2020

கிருஷ்ண தர்மம் - மஹாபாரத கதை

*கண்ணன் அளித்த அபயம்.*

கண்ணன் சென்ற தூது பலிக்கவில்லை. அப்படியும் சொல்வதிற்கில்லை. ஒரு வேளை அவன் போரைத்தான் விரும்பியிருப்பானோ. சகாதேவன் உள்ளத்தில் இந்த ஐயம் இருக்கத்தான் செய்தது. அர்ஜுனன் , பீமன் போன்றவர்கள் வெளியில் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை கண்ணா உன் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன் என்று உதட்டளவில் சொன்னாலும் போருக்கு வழி செய் என்றுதானே மனதில் வேண்டியிருப்பார்கள். திரௌபதி தன் முடியாத கூந்தலை கண்ணன் கவனம் படும்படியாக விரித்துப் போட்டு   கொண்டு இருப்பது   என் முடியை முடிய முடியுமா என்றுதானே கேட்காமல் கேட்பதற்குத்தானே. ஆனால் துரோணர் , விதுரர், பீஷ்மர் போன்றவர்கள் போரைத் தடுக்கும்படித்தானே வேண்டினார்கள். இவர்களில் ஒருவர் விருப்பத்தை நிறைவேற்றினால் மற்றவர் வேண்டுதலுக்கு செவி சாய்க்க முடியாதே. ஆக கண்ணனால் கூட அனைவரின் பிரார்த்தனைக்கும் செவி சாய்க்க முடியாது போலும். சகாதேவன் சிரித்துக் கொண்டான்.

அருகில் இருந்த அர்ஜுனன் தம்பி. இன்னும் இரண்டு நாட்களில் போர் தொடங்க இருக்கின்றது. இப்போது கூட போர் நடக்க இருக்கும் புண்ணிய பூமியான குருக்‌ஷேத்திரத்துக்குதான் போகின்றோம். கண்ணன் அதைப் பற்றிய சிந்தனையோடு நம் தேரினை செலுத்திக் கொண்டு இருக்கின்றான். என் மனமும் நடக்க இருக்கும் போரைப் பற்றியே சிந்திக்கின்றது. ஆனால் நீ சிரித்துக் கொண்டிருக்கின்றாய். எனக்குப் புரியவில்லை.

அர்ஜுனா. சகாதேவனை நீ சாதாரணமாக நினைக்காதே. உன் பாணங்களை விட அவன் எண்ணங்கள் கூர்மையானது. நீ பெற்றுள்ள அஸ்திரங்களைவிட அவன் கற்ற சாஸ்திரங்கள் பெருமை உடையது. அவன் சிரிப்புக்கு எதாவது காரணம் இருக்கும் என்ற கண்ணனும் சிரித்தான். அர்ஜுனன்  ,கண்ணா. நான் எதைக் கண்டேன். உன்னைத்தவிர. நீ விரல் காட்டும் பாதைதான் என் வழி என்று பணிந்து சொன்னான்.

இந்த மரத்தின் அடியில் நான் தேரினை நிறுத்துகின்றேன். நீ போய் இந்த தர்ம ஷேக்திரமான போர் பூமியைப் பார்த்து வா. இனி வரும் நாட்களில் இப்பூமியை இப்படி அமைதியாகப் பார்க்க முடியாது. மயான அமைதிதான் மிஞ்சி இருக்கும் என்றான் கண்ணன். உடன் புறப்பட்ட சகாதேவனை இரு. நீ எங்கு போகின்றாய். நாம் சிறிது பேச வேண்டும் என்று தடுத்தான் கண்ணன். கண்ணன் பேச்சுக்கு மறு வார்த்தை பேசி அறியாத சகாதேவன் கண்ணனுடன் தங்கினான்.  எதோ ஒரு நாடகத்தை கண்ணன் அரங்கேற்றப் போகின்றான் என்பதை சகாதேவன் அறிவான். கண்ணன் தேரினை மரத்தில் சற்று இடித்து நிறுத்த அர்ஜுனன் தேரிலுருந்து குதித்து இறங்கினான்.

சற்று நேரத்தில் போர் பூமியை சமப்படுத்த யானைப் படை வந்தது. அதில் ஒரு யானை மரத்தில் மோத மரத்தில் இருந்து பறவைக்கூடு ஒன்று கீழே விழுந்தது. அதனுள் ஐந்து அப்போதே பிறந்த குஞ்சுகள்.

அடேடே.என்று பரிதாபப்பட்டபடி சகாதேவன் அதைக் கையில் எடுத்தான். உள்ளே அப்போதே பிறந்த நான்கு பறவைக் குஞ்சுகள் கண்களைத் திறக்காமல் இருந்தன. நல்ல வேளை குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றான் சகாதேவன். ஆம். இப்போதைக்கு பிழைத்தன என்றான் கண்ணன்.

அப்படிச் சொல்லாதே . கண்ணா என்ற குரல் கேட்டு பார்த்தான் கண்ணன். ஒரு பறவை. இந்த குஞ்சுகளின் தாய்ப் பறவை. அது பேச ஆரம்பித்தது

ஹே. ! பரந்தாம. இதோ இந்த மரத்தில் என் கூடு இரூகின்றது. நானும் என்னுடய ஐந்து குஞுகளும் வசிக்கின்றோம். இப்போதே பிறந்தவை என் குழந்தைகள்.அவைகளுக்கு நான் உணவை ஊட்டினால்தான் சாப்பிடவே தெரியும். அவை பறக்கும் திறனை அடைய இன்னும் சில வாரங்கள்   ஆகும். இங்குதான் பாரதப் போர் நடக்க இருப்பதாக அறிகின்றேன். போர் நடந்தால் என் குஞ்சுகள் அழியும். ஒரு பாவமும் அறியாத அவை ஆக  வேண்டுமா? நீயே சரண். காப்பாயாக என்று வேண்டியது.

பறவையே. காடு பற்றி எரியும் போது எல்லாமே வெந்துதான் போகும். அதில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் நெருப்பு பார்ப்பதில்லையன்றோ. அது இயற்கை. இயற்கையை நான் எப்படிக் கட்டுப்படுத்துவேன். காலச்சக்கரம் சுழல்கின்றது. அதில் பிறப்பும் இறப்பும் வரத்தான் செய்யும்.
நானே பிறந்தவந்தான். ஒரு நாள் இறக்க போகின்றவந்தான் என்றான் கண்ணன் சகாதேவன் கவனிக்கின்றானா என்று பார்த்தவாறு.

புருஷோத்தமா. உன்னுடய தத்துவங்கள் எனக்கெப்படி புரியும்.? உன்னை தஞ்சமடைந்தோம்.
காலச்சக்கரம் என்று உண்டா என்பது எனக்குத் தெரியாது. அப்படியே ஒன்று இருப்பினும் அதை
இயக்குபவன் நீயாகத்தான் இருக்க வேண்டும். என் குழந்தைகளை உன் வசம் விட்டேன். அவை வாழ வேண்டுமா. மாள வேண்டுமா என்பது உன் விருப்பம். நீ செய்வது ஏதாகினும் எங்களுக்கு நன்மையே என்றது பறவை. ஆஹா. என்ன ஒரு பக்தி என்று வியந்து போனான் சகாதேவன்.
ஆனால் அவனது சாஸ்திர அறிவு பறவையைப் போல.  அப்படியே ஒப்புக் கொள்ளவிடவில்லை.

கண்ணா. உன்னுடய மாயப் பேச்சுகளை அப்பறவை நம்பலாம். என்னவோ இயற்கைக்கு மாறாக நீ எதுவுமே செய்யாதது போல பேசுவது விந்தை. முன்பு காண்டவணத்தை அழித்து இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்கிய பொழுது பெரும் தீயிலிருந்து இதே போல ஒரு பறவைக் குடும்பத்தைக் காக்கவில்லையா. பின்னர் ஒரு சமயம் பிமண்ணா உங்களுக்குக்காக பெரிய
பாத்திரத்தினை அடுப்பு ஏற்றி தண்ணீரைக் கொதிக்க வைத்தார். அப்பொழுது பாத்திரத்தில் இருந்த தவளை ஒன்று உங்களைப் பிரார்த்திக்க தண்ணீர் கொதிக்காமல் செய்து காக்கவில்லயா? அது போல இப்பறவையின் குஞ்சுகளையும் காப்பாற்றினால் என்ன?

அப்படியா சொல்கின்றாய் என்று கேட்ட கண்ணன் பறவையைப் பார்த்து ஒன்று செய். உனக்கும் உன் குஞ்சுகளுக்குமாகுமளவுக்கு மூன்று வாரங்களுக்கான உணவை சேமித்து வைத்துக் கொள் என்றான். அப்படியே என்று சொல்லி பறவை கண்ணனை வணங்கிப் பறந்து சென்றது.

திரும்பி   வந்த அர்ஜுனனை நோக்கி பார்த்த. உன் வில்லையும் அம்பினையும்  கொடு என்றான். அர்ஜுனன்னுக்கு வியப்பு. ஜனார்த்தனா. போரில் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்றாய். ஞாபகம் இருக்கட்டும் என்றான்.இருக்கட்டும். என்று சொன்னவாறு அந்த யானையைக்குறி பார்த்தான். கண்ணன் செலுத்திய அம்பு யானையைத் தாக்காமல் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய மணியைத் தாக்கியது. மணி யானையின் கழுத்திலிருந்து உருண்டு போனது.

கேசவா. இது என்ன காரியம். எதற்காக அந்த யானையை அம்பினால் தாக்கினாய். ஏன் உன் குறி தப்பியது. என்னிடம் சொல்லியிருந்தால் நான் குறி தவறாமல் அடித்திருப்பேனே என்றான்
அர்ஜுனன். தன் குறி தவறாது என்ற கர்வம் அவனுக்கு.

அதுவா . இந்த யானை மரத்தில் மோதியது. அதனால் பறவையின் குடும்பமே அழிய இருந்தது.
அதனால் அதன் மீது கோபம் கொண்டு அம்பு எய்தினேன். என்ன காரணமோ தெரியவில்லை. குறி தவறிவிட்டது. வா போகலாம் என்று சொல்ல மூவரும் கிளம்பினார்கள். சகாதேவனுக்கு கண்ணனின் நாடகம் என்று புரிந்தது. பொருள் புரியவில்லை.

பதினெட்டு நாள் போர் நடந்தது. பூமியெங்கும் பிணங்கள். ரத்த ஆறு. கண்ணன் அர்ஜுனன் சகாதேவனுடன் பூமிக்கு வந்தான். அர்ஜுனா. அன்று ஒரு யானையை நான் அம்பினால்
அடிக்க ஒரு மணி மட்டும் உருண்டுபோனதே.ஞாபகமிருக்கின்றதா என்றான். ஆம். என்றான் அர்ஜுனன்.

அந்த மணியை எனக்காக தேடி கண்டுபிடிப்பாயா என்று கேட்டான் கண்ணன். வாசுதேவனை வியப்புடன் பார்த்து சகாதேவன் கேட்டான். இவ்வளவு பெரிய  போர் நடந்து முடிந்த பூமியில் அதை எங்கு தேட என்று அர்ஜுனன் சற்றே சலிப்புற்றான். கண்ணன் சொன்னால் பொருள் இருக்கும் என்று தேடினான் சகாதேவன். சற்று நேரத்தில் கிடைத்தது.

சகாதேவா. மணியின் உட்புறத்தைப் பார் என்றான் கிருஷ்ணன். அப்படியே செய்தான் சகாதேவன். மணியைக் கவிழ்த்துப் பிடித்தான்.

என்ன ஆச்சரியம் !ஒன்று . இரண்டு. மூன்று .நான்கு .ஐந்து .என்று குஞ்சுப் பறவைகள் பறக்க ஆறாவதாக தாய்ப்பறவை வெளிப்பட்டு கண்ணனை வணங்கிப் பறந்தது.

கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவுக்கு வழி செய்த இறைவன் இவைகளை மணியினுள் வைத்துக் காத்தானே என்று சகாதேவன் கண் கலங்கி கை கூலி நின்றான்.

கண்ணன் அவனைப் பார்த்து சிரித்தான்.

அந்த சிரிப்பில் ஐந்து குஞ்சுகளை அந்த தாயின் வேண்டுகோளுக்காக காத்த எனக்கு , என் அத்தை குந்தியின் வேண்டுதலுக்காக உங்களைக் காப்பாற்றினேன். கௌரவர்கள் மாள வேண்டும் என்பது விதி. அதனால் உங்களைக் காப்பாற்ற முடிந்தது. என் காரியங்களுக்கு சாஸ்திரங்களால் அறியவோ புரிந்து கொள்ள முடியாது. நான் எது செய்கின்றேனோ அதுவே தர்மம் என்ற செய்தி இருப்பதை சகாதேவன் புரிந்து கொண்டான்.

ஆம்.கிருஷ்ணன் தர்மம் சனாதனம்.

No comments:

Post a Comment