Wednesday, 29 April 2020

குழந்தையை காப்பாற்றிய மஹா பெரியவர்

"கடவுளின் குரல்" -  தொகுப்பு: ஆர்.என். ராஜன்.

29 /01 /2020  குமுதம் இதழிலிருந்து...

""காஞ்சிப் பெரியவரின் கரு(ம்பு)ணை!""

மகாபெரியவர் காஞ்சிபுரத்தில் அருளாட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம்.

அந்தக் காலகட்டத்தில் பண்டிகையோ திருவிழாவோ வந்தால் மடத்தில் பெரியவாளை தரிசிக்க கூட்டம் அதிகம் வரும்.  காரணம் அந்த சமயத்தில் பண்டிகையின் சிறப்பையும் அதன் புராணத்தையும் விளக்கமாகச் சொல்வார் ஆசார்யா.  அதோடு மடத்தின் சார்பில் பக்தர்களுக்கு விசேஷ பிரசாதங்களும் கிடைக்கும்.

அந்த மாதிரி ஒரு சமயம் மார்கழி மாதத்தின் கடைசி நாள்.  விடிந்தால் பொங்கல் திருநாள் என்ற சந்தர்ப்பத்தில் மகானின் அருள்வாக்கினைக் கேட்கவும் அருளாசியைப் பெறவும் பெரும் பக்தர் கூட்டம் வந்திருந்தது.

வழக்கமான நேரத்தைவிடவும் அன்று அதிக நேரம் தரிசனம் தந்துகொண்டிருந்தார், பெரியவர்.

கனிவர்க்கங்களும் புஷ்பங்களும் என்று பக்தர்கள் மகானுக்கு சமர்ப்பிக்க கொண்டு வந்திருந்தவை நிறைந்து இருந்தன.

மகான், மார்கழி  முடிந்ததும் தை மாதம்  பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லப்படுவதற்கான காரணங்களைச் சொல்லிவிட்டு, சூரியனின் தேர்ப்பாதை தை மாதத்தில் திசை திரும்பும் என்று சொல்ல ஆரம்பித்தார்.

அப்படி தேர்திசை மாறும் தினம் உத்தராயண புண்யகாலம் என்று அழைக்கப்படும் என்பதைச் சொன்னவர், அது தேவர்களுக்கு விடியற்காலை தொடங்கும் நேரம்.  அந்த சமயத்தில் விசேஷமாக பூஜைகள் செய்வது நல்லது என்றும் விளக்கினார்.

உபன்யாசம் நிகழ்த்திக்கொண்டே வந்திருந்த பக்தர்களுக்கு ஆசியும் அளித்துக் கொண்டிருந்த பெரியவா, திடீரென்று தன் உரையை நிறுத்திவிட்டு, கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணியையும் அவள் மடியில் இருந்த குழந்தையையும் உற்றுப் பார்த்தார்.

ஆசார்யாளின் அந்தச் செயலுக்கு காரணம் தெரியாமல் எல்லோரும் திகைப்போடு பார்க்க, தன் பக்கத்தில் இருந்த அணுக்கத்  தொண்டரை அழைத்தார், மகான்.

"அந்தப் பெண்மணியை இங்கே அழைத்துவா...அவளிடம் இருக்கும் குழந்தையை அசைக்காமல் வாங்கி அப்படியே தோளில் சாய்த்துத் தூக்கி வா!" சொன்னார்.

அப்படியே சென்று, குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அதன் தாயையும் அழைத்துவந்தார், சீடர்.

கிட்டே வந்ததும், குழந்தையின் தாயைப் பார்த்து, "குழந்தைக்கு என்ன?" கேட்டார், மகான்.

அவர் கேட்டதும் வியப்போடு விழித்த அந்தப் பெண்மணி, "எதுவும் இல்லையே...குழந்தை அசதியில தூங்கிக்கொண்டு இருக்கிறான்...அவ்வளவுதான்...என்றார்.

"இல்லையே..வரும்போது அவனுக்கு என்ன வாங்கி கொடுத்தாய்?" கேட்டார், மகான்.

"பஸ்ஸுல வரும்போது அடம்பிடிச்சு அழுதான் என்று ஒரு கரும்பு வாங்கித் தந்தேன்..வேறு எதுவும் வாங்கித் தரவில்லை!"

அந்தப் பெண்மணி சொல்ல, "குழந்தையை அப்படியே தோளில் போட்டுக் கொண்டு முதுகைத் தடவிக் கொடு.  தலை கொஞ்சம் தாழ இருக்கட்டும்.!"  பெரியவா சொல்ல, அப்படியே செய்தார் சீடர்.

அடுத்த சில நிமிடங்களில் நடந்ததுதான் ஆச்சரியம். தூங்குவதுபோல் இருந்த குழந்தை மெதுவாக இருமத் தொடங்கி, பெரிதாக ஒரு சத்தத்தோடு கனைக்க, அவனது வாயில் இருந்து வெளியே வந்து விழுந்தது ஒரு சிறிய கரும்புத் துணுக்கு!

கரும்பைத் தின்றபோது  குழந்தை சரியாகத் துப்பாமல் சக்கையைக் கொஞ்சம் விழுங்கியதால், அது தொண்டையில் அடைத்துக் கொண்டு, சுவாசம் குறைந்து, குழந்தை மயக்கத்தில் இருந்திருக்கிறான் என்பது அதன் பிறகுதான் அந்தத் தாய்க்கே தெரியவந்தது.

இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால், குழந்தைக்கு என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால், தன் சன்னதிக்கு வந்த பக்தரைக் காப்பது தன் கடமை என்று யாரும் சொல்லாமலே அனைத்தையும் அறிந்து குழந்தையைக் காத்த மகாபெரியவாளின் தீர்க்க தரிசனத்தை நேரடியாகப் பார்த்தவர்கள் அனைவரும் பரவசத்தில் ஆழ்ந்தார்கள்.

கரும்பு வில்  ஏந்திய காமாட்சியின் செல்லக் குழந்தையான மகாபெரியவருக்கு, கரும்பினால் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டிருந்த சங்கடம் எப்படித் தெரியும் என்பதை நாமெல்லாம் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமா என்ன?     

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏

No comments:

Post a Comment