Thursday, 30 April 2020

குரங்கு சாபம் - மஹா பெரியவர் அருளிய விமோசனம்

*"ஒன்றும் செய்யாதீர்கள்"-குரங்குகளை-பெரியவா*

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு கோடைக்கால ஞாயிற்றுக் கிழமை. காஞ்சீபுரம் ஸ்ரீ மடத்தில், பல்லக்கில் உட்கார்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள், பெரியவா. ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள். தட்டுத் தட்டாகப் பழங்கள், திராட்சை,கல்கண்டு,தேன் பாட்டில்கள் பல்லக்குக்கு வெளியே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

திடீரென்று ஒரு குரங்குப் படை அங்கே வந்தது.

அட்டகாசம்தான்! பழங்களைக் குதறித் தின்றன; தேன் பாட்டில்கள் உருண்டன.

பெரியவாளிடம் போய் விஷமம் செய்யப் போகின்றனவோ? - என்று சிஷ்யர்கள் தவியாய்த் தவித்தார்கள்.

பெரியவா முகத்தில் சஞ்சலத்தின் ரேகையே தென்படவில்லை.

"ஒன்றும் செய்யாதீர்கள்" என்று விரலைச் சொடுக்கி,ஈசுவராக்ஞை! தடிகளைக் கொண்டு வந்த அன்பர்கள்,செயலிழந்து, தடிகளாக நின்று விட்டார்கள்.

ஒரு வழியாகத் தம் வேலைகளை முடித்துக் கொண்டு, ராம காரியத்துக்காகப் போய் விட்டன வானரங்கள்.

பக்தர்களுக்கு, ஒரு சம்பவம் சொன்னார்கள் பெரியவா.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில்,குரங்குகளின் தொல்லை தாங்க முடியவில்லை. அசட்டுத் தனமாக மாட்டிக்கொண்டுவிட்ட, ஒரு குரங்கைத் தடியால் அடித்துவிட்டார், ஒருவர். உட்காயம் ஏற்பட்டு, அந்தக் குரங்கு, சில நாட்களுக்குப் பின் உயிரை விட்டது.

அடுத்ததாக அவருக்குப் பிறந்த குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. பெண் குழந்தை, கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய பருவம் வந்தது.

பெரியவாளிடம் வந்து, செய்த பாவத்தைக் கூறி அழுதார்கள், தம்பதி.

"மண்ணால் குரங்கு பொம்மை செய்து, உங்க ஊர் கிராம தேவதைக் கோயிலில், காணிக்கை மாதிரி சமர்ப்பித்து விடு.மனமொப்பிக் கல்யாணம் செய்து கொள்பவனாகப் பார்த்து விவாஹம் செய்து கொடு"

அப்படியே நடந்தது. வாய் பேசாத அந்தப் பெண்ணுக்கு, சுட்டித்தனமாகப் பேசுகிற குழந்தையும் பிறந்ததாம்.

"குரங்கை அடிக்கக் கூடாது. அவைகளிடம், கருணை காட்ட வேண்டும்.ராம சேவகர்கள் பரம்பரையில் தோன்றியவை. நமக்குத் தொந்தரவு கொடுத்தாலும்,ஆஞ்ஜநேயனை நினைத்துக் கொண்டு இவைகளை விட்டு விடணும்.

பெரியவாளிடமிருந்தே சம்பவத்தையும்,உபதேசத்தையும் கேட்ட அன்பர்கள் உருகிப் போனார்கள்.


No comments:

Post a Comment