Saturday 18 April 2020

பிணி பயம் போக்கும் #காலசம்ஹார மூர்த்தி!


பிணி பயம் போக்கும் #காலசம்ஹார மூர்த்தி!

மனத்தைச் செம்மையாக்க வேண்டும் என்று பெரியோர்கள் பலரும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், சாதாரண நிலையிலிருக்கும் மனிதர்களுக்கு அது அவ்வளவு எளிதான காரியமா என்ன...

நடப்புச் சூழல்கள் பலவும் அவன் மனத்தை ஆக்கிரமித்து ஓர் அமைதி யின்மையை அவனுக்குள் உருவாக்கிவிடுகின்றன. வாழ்வின் பொருட்டு ஏற்படும் பயம் அவன் மனத்தை அலைக்கழிக்கிறது.

இதோ... தொற்று நோயொன்று உலகையே பீதியில் ஆழ்த்தியிருக்க, தனிமனிதன் அமைதியாக இருந்துவிட முடியுமா? மனித குலமே அச்சத்தில் தவிக்கிறது. இப்படிச் சூழல்கள் தன் கைமீறும் நிலையில் அனைவரும் சரண்புக விரும்புவது இறைவனிடம்தான். அந்தவகை யில், மருந்தில்லா பிணிகளால் பெரும் அச்சம் தோன்றும் நிலையில், வாழ்க்கை வரமும் பிணியில்லா நீடித்த ஆயுளும் வேண்டி நாம் வழிபட வேண்டிய தெய்வம் காலசம்ஹார மூர்த்தி என ஞான நூல்கள் வழிகாட்டுகின்றன.

சிவபிரானின் அம்சமான இந்தக் கால காலரின் திருவடிவ மகிமை களைச் சிந்தித்தாலே போதும்; நோய்களும் அதனால் உண்டாகும் மரண பயமும் நம்மைவிட்டு விலகியோடும். நாமும் அறிந்துகொள்வோமா காலசம்ஹாரரின் மகிமைகளை!

எவருக்கும் காத்திராமல் ஓடிக்கொண்டி ருப்பது காலம். அசையும் அசையாப் பொருள் களுக்குள்ளும் ஓயாது மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது காலம். அந்தக் காலத்தை சிவபெருமான் நடத்திச் செல்வதால் அவரை ‘கால காலன்’ என்றும், ‘மகா காலன்’ என்றும் அழைப்பர். நொடிக்கு நொடி இறந்துகொண்டே இருக்கும் காலத்தை சம்ஹாரம் செய்வதால், அவர் காலசம்ஹாரர் எனப்படுகிறார்.

காலத்தைக் கணக்கிட்டு, உயிர்களை மரணம் அடையச் செய்ய ஈசனால் நியமிக்கப்பட்டவன் காலன். காலம், எதையும் பார்க்காமல் உயிர்களைப் பறித்து விடுகிறது. அதனால் உயிர்கள், மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றன. மணி, மந்திர, ஒளஷதங்களால் சித்தர்கள் தம் உடலையும் உயிரையும் நிலைநிறுத்த விரும்புகின்றனர். யோகிகள் மூச்சுக்காற்றை முறைப்படுத்தி, தவயோகத்தால் மரணத்தை வெல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த வல்லமையைத் தரவல்லவர் காலசம்ஹாரர்.

`கால்’ என்பதற்கு இயங்குவது என்று பொருள். ஓரிடத்தில் நில்லாது தொடர்ந்து இயங்குவதால், காற்றுக்கும் கால் என்று ஒரு பெயர் உண்டு. உயிர்கள் காற்று இல்லாமல் ஒரு கணமும் இருக்க முடியாது. காற்றில் உயிர்களின் பிராண சக்தியாக விளங்குபவர் ஈசன். அதனால் அவருக்குக் ‘கால காலன்’ என்று பெயர்.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த யமன், யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தருமத்தின் வழியே நின்று கடமை ஆற்றுபவன். அதனால், அவன் ‘யம தருமன்’, ‘நியாயாதிபதி’ என்றும் அழைக்கப்படுகிறான். அவனுக்குப் பல சந்தர்ப்பங்களில் அகந்தை உண்டாகிறது. அப்போது அவன், சிவனருளால் காலத்தை வென்றவர்களையும் தனது பாசக்கயிற்றால் கட்டி, தனது அதிகாரத்துக்கு உட்படுத்த விரும்புகிறான். தன்னைச் சரண் புகுந்த அன்பர்களுக்காக சிவபெருமான் மரணத்தை விலக்கி, அருள்புரிகிறார்; ஜனன- மரணச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கிறார்

இங்ஙனம், யமதருமன் சிவனடியார்களைக் கவர வரும்போது அவனை அழித்து அருள்புரிவதால், சிவபெருமானை ‘யம சம்ஹாரர்’ என்பர். ‘மிருத்யு’ எனும் மரணத்தை வெல்பவர் அவர். எனவே, அவரை ‘மிருத்யுஞ்ஜயர்’ என்றும் போற்றுவர். உயிர்களை அழிக்கும் யமனுக்கும் காலனாகத் திகழ்பவர் சிவபெருமான். அதனால் அவரை காலாந்தகர், காலாரி, கால காலர், காலசம்ஹாரர், காலகண்டன் என்ற பல பெயர்களால் அழைப்பர்.

#காலசம்ஹாரர் வரலாறு சைவத் திருமுறை களில் பல இடங்களில் பேசப்படுகிறது. அம்சுமத்பேதாகமத்தில் இந்த வடிவம் நான்கு அல்லது எட்டு திருக்கரங்களுடனும், காமிகாகமத்தில் சிவபெருமானின் இடப் பாதம் யமனை உதைப்பதாகவும், வலப் பாதம் பூமியில் ஊன்றியும், வலக்கரச் சூலம் யமனது கழுத்தில் குத்திச் செல்வதாகவும் அமைந்திருக்கும்.
தீய சக்திகளையும், அசுரர்களையும் அழிக்கும் பெருமான், அடியவர் ஒருவருக்காக காலனையே உதைத்தவர். கௌசிக முனிவரின் புதல்வர் மிருகண்டு. அவர் மனைவி மருத்துவதி. அவர்கள், ஆண் மகவு வேண்டி தவம் செய்தனர். அப்படி அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயன். அவனுக்கு வயது 16 மட்டுமே என்பது பிரம்மன் கணக்கு.

மார்க்கண்டேயன் வயது 16 ஆனதும் அவன் உயிரைக் கவர்ந்து செல்ல யமன் வந்து சேர்ந்தான். சிவபூஜையில் ஆழ்ந்திருந்த மார்க்கண்டேயன், யமன் அழைத்தபோது அப்படியே சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டான். யமன் , மார்க்கண்டேயனுடன் சிவலிங்கத்தையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுத்தான். சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை உதைத்தார். காலன் வீழ்ந்தான். மார்க்கண்டேயன் ‘என்றும் 16’ எனும் வரம் பெற்றான்.

இறைவன் மார்க்கண்டேயருக்கு வரங்கள் தந்த பின் அந்த லிங்கத்திலேயே மறைந்தார். இறைவன் இவ்வாறு வரம் அருளிய நாள் பங்குனி மாதம், ரேவதி நட்சத்திரம், சுக்கிரனும் குருவும் உச்சம் பெற்ற நாளில் மிதுன லக்ன வேளை.

மார்க்கண்டேயருக்காக இறைவன் யமனை அழித்த தலங்களில் முதன்மையானது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள #திருக்கடவூர். ஊழிக் காலத்தைக் கடந்து நிற்பதாலும், கால பயத்தை கடக்க உதவும் தலம் ஆதலாலும் கடவூர் என்று பெயர்.

மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் வெளிப்பட்டு யமனை அழித்தது காசியில் என்றும், #மார்க்கண்டேயர் தவம் செய்த இடம் கோமதி ஆறும் சரயு நதியும் சேரும் இடம் என்றும், இதனை `மார்க்கண்டேய ஆச்ரமம்’ என்றும் புராணங்கள் கூறுகின்றன.

காசியில் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பின் மார்க்கண்டேயர் கங்கை நீரையும், பிஞ்சிலம் (என்ற மல்லிகைக்) கொடியையும் எடுத்துக் கொண்டு வந்து பல தலங்களை தரிசித்து இறுதியில் திருக்கடவூரை அடைந்தார். அங்கே பிஞ்சிலக் கொடியை நட்டதுடன் கமண்டல நீரை ஒரு கிணற்றில் ஊற்றினார். அங்கு கங்காதேவியை எப்போதும் வாசம் செய்யும்படி வேண்டிக்கொண்டார். அது தற்போது, ‘அசுபதி தீர்த்தம்’ என்றும் மார்க்கண்டேய தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் திருக்கடவூருக்குக் கிழக்கே திருக்கடவூர் மயானம் தலத்தில் உள்ளது. இந்த நீரைக் கொண்டு வந்து தினமும் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

#திருக்கடவூர் அருகிலுள்ள மணல்மேடு தலத்தில் மார்க்கண்டேயர் பூஜித்த சிவாலயத்தின் இறைவன் மார்க்கண்டேஸ்வரர் என்றும் அம்பிகை மருத்துவதி (மார்க்கண்டேயரின் தாயார் பெயர்) என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு மார்க்கண்டேயருக்குத் தனிச் சிற்றாலயம் உள்ளது. இதில் சிவலிங்கத்தைப் பூஜை செய்பவராக மார்க்கண்டேயர் காட்சியளிக்கிறார்.

#திருக்கடவூர், #திருச்செங்காட்டங்குடி, #திருவீழிமிழலை முதலிய தலங்களில் உள்ள காலசம்ஹாரரின் திருவுருவங்கள் கல்லிலும் பஞ்ச லோகத்திலும் அமைந்துள்ளன. அட்ட வீரட்டத் தலங்களில் காலசம்ஹார மூர்த்தியை மட்டும் நடனக்கோலத்தில் அமைத்துள்ளனர்.
#சிதம்பரம், #மதுரை கோயில்களில் இந்த வடிவம் அற்புதமாக உள்ளது. திருவீழிமிழலை, #திருவெண்காடு, #திருவையாறு, #திருவைகாவூர் ஆகிய தலங்களும், கால சம்ஹாரத் தலங்களே. திருவீழிமிழலையில் சுவேத கேதுவுக்கு அருள் புரிந்த வடிவம், திருவையாற்றில் ‘ஆட்கொண்டார்’ வடிவம் ஆகியனவும் காலசம்ஹார மூர்த்தியாகப் போற்றப்படுகின்றன.

யமனை சம்ஹரித்ததால், பூமியில் எவரும் மரணம் அடையவில்லை. பாரம் தாங்காது வருந்திய பூமாதேவி, திருமாலை வேண்ட... திருமாலும், பிரம்மனும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளின்படி யமனை உயிர்ப்பித்து அவனிடம் மீண்டும் அழித்தல் தொழிலைத் தொடர ஆணையிட்டார். இதனால் அவருக்கு ‘அதிகாரவல்லபர்’ என்று பெயர். திருச்சியை அடுத்த #திருப்பைஞ்ஞிலி தலத்தில் இவரது சந்நிதி அமைந்துள்ளது. அருகில் யம தருமன் அமைத்த ‘யம தீர்த்தம்’ உள்ளது.

யமன் அதிகாரம் செல்லாத தலம்

மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள பாடல் பெற்ற தலம் திருக்கோடிக்கா. ‘ருத்ரகோடி சம்ஹிதை’யில் இந்தத் தலம் வேத்ரவனம் என்று புகழப்படுகிறது. இங்கு வாழ்பவருக்கு யமவாதனை இல்லையென்றும், யமன் இவர்களை தண்டிப்பதில்லை என்றும் அது குறிப்பிடுகிறது. அதனால், இந்த ஊரில் மயானம் கிடையாது. இங்கு இறப்பவர்களைக் காவிரியின் தென்கரைக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்கின்றனர். காசி போன்ற சில சிவ தலங்களிலும் யமனின் அதிகாரம் செயல்படுவதில்லை.

யம பைரவர்

#திருமீயச்சூர் (லலிதாம்பிகை பிரசித்தமான தலம்) அருகில் கொடியனூர் எனும் தலத்தில் ஆனந்த வல்லியுடன் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு பைரவர் ஸ்தானத்தில் வீற்றிருப்பவர் யமன். இங்கு யம தருமன் அருகில் பைரவரும் யமனின் சகோதரன் சனைச்சரனும் எழுந்தருளியுள்ளனர்.

No comments:

Post a Comment