Tuesday 28 April 2020

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் ! கஜேந்திர மோக்ஷம்

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் !

கஜேந்திர மோக்ஷம் !

விசிஷ்டாதவைத்தின் மைய கருத்தே பூரண சரணாகதிதான் .அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் "ஆதி மூலமே" என்று அலறிய அடுத்த கணமே வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்த பகதவத்சலன். ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்த கஜேந்திர மோக்ஷம்.

எல்லா வைணவத்தலங்களிலும் பௌர்ணமியன்று கருட சேவையுடன் கஜேந்திர மோக்ஷம் சிறப்பாக நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் சித்ரா பௌர்ணமியன்றும் பல் வேறு தலங்களில் ஆனி கருடன், ஆடி கருடன் என்று அந்தந்த மாதங்களில் பௌர்ணமி தினங்களிலும் கருட சேவையுடன் கஜேந்திர மோட்சம் சிறப்பாக நடைபெறுகின்றது. பெருமாள் கருட சேவை தரும் மற்ற சமயங்கள் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

இனி பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் எவ்வ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போமா? கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே த்னது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.

பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன் ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது. ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர். மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு வீடு வரை மனைவி வீதி வரை உறவு காடு வரை பிள்ளை என்று ஓடிவிட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம் பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான். அந்த ஸ்தோத்திரத்தின் சாரம் பரம புருஷனே உனக்கு நமஸ்காரம், உன்னிடமிருந்துதான் சகலமும் தோன்றியது, அனைத்துக்கும் ஆதாரம் நீயே, அனைத்தும் உன்னுள்ளே அடக்கம், உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன, சில ஒளிர்கின்றன, சில அழிகின்றன. பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே. உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதி மூலமே! என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டு அலறியது கஜேந்திரன்.

கஜேந்திரனின் அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் வேத சொருபனான ஓடும் புள்ளேறி ( கருடனில), கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்த வத்சலன். உங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ. 
முதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன? முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யனாக பிறந்து மஹா விஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்துருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான். அதனால் கோபமடைந்த துர்வாசர், என்னை மதிக்க்காமல் மதம் கொண்டு நடந்த நீ , மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் கொண்ட பக்தி தொடரவேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து அந்த மஹா விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.

இனி முதலை , முற்பிறவியில் அவன் கூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலை பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தான். ஒரு சமயம் தேலவர் முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவின் சுத்ர்சன சக்கரம் பட்டு உன்க்கு சாப விமோசனம் ஏற்படும் என்று சாப விமோசனம் அளித்தார். 
கஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது. மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான் நமது உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போது தான் அவன் அருள் நமக்கு கிட்டும்.

பெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்தும் உடனே வந்து காத்திருக்கக் கூடாதா? அது வரை கஜேந்திரன் தனது வலிமையின் மேலும் தனது பிடிகள் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால்தான் பகவான் தனது பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும் அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார். ஏன் தானே வந்திருக்க வேண்டும் சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே , அவரது சௌலப்பியத்தையும், ப்கத வத்சல குணத்தையும் காட்டவேதான். பாகவதத்தில் அந்த அருமையான ஸ்தோத்திரங்கள் உள்ளன அவற்றை காலையில் ஒதுபவர்களுக்கு சகல வித நன்மைகளும் கிடைக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதற்கு இணையானது அது. 
பூரண சரணாகதி அடைந்த கஜேந்திரனை பெருமாள் காப்பாற்றியதைப் போல் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று அவர் கூறியபடி அவர் அடி சரணடையும் தன் பக்தர்கள் அனைவரையும் அவர் காப்பாற்றுவார் என்பதே இந்த கஜேந்திர மோக்ஷம் நமக்கு உணர்த்தும் பாடம்.

இனி இந்த கஜேந்திர மோக்ஷத்தை ஆழ்வார்கள் எப்படி பாடியுள்ளனர் என்று பார்ப்போமா?

தாழைத் தண்ணாம்பல் தடம் 
பெரும் பொய்கைவாய் 
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண் 
வேழந் துயர்கெட விண்ணோர் பெருமானாய் 
ஆழிப்பணி கொண்டானாலின்று முற்றும் 
அதற்கருள் செய்தானாலின்று முற்றும்.

என்று கோபியர்கள் யசோதையிடம் சென்று கண்ணன் மேல் குற்றம் கூறுவது போல் உண்மையில் அவரது பெருமையைப் பாடுகின்றார் பெரியாழ்வார்.

பெண்ணுலாம் சசடையினானும் 
பிரமனுமுன்னைக் காண்பான் 
எண்ணிலாவூழியூழி தவம்செய்தார்வெள்கிநிற்ப 
விண்ணுளார் வியப்பவந்து ஆனைக்கருளையீந்த 
கண்ணறா உன்னையென்னோ? களைகணாக்கருதுமாறே 

என்று பிரமனுக்கும் சிவனுக்கும் கிடைக்காத பாக்கியத்தை யானைக்கு அருளியதை போற்றுகின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த 
கானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ 
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை 
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.

என்று பெருமாள் கஜேந்திர வரதராகவும், கரி வரதராகவும் வரத ராஜராகவும் போற்றப்படுவதை பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

ஓம் நமோ நாராயணா !

No comments:

Post a Comment