Sunday 26 April 2020

திருப்புகழ் - 1118 செட்டாகத் தேனை

தத்தா தத்தா தத்தா தத்தா

தத்தா தத்தத்

தன தான

*திருப்புகழ் - 1118 செட்டாகத் தேனை  (பொதுப்பாடல்கள்)*

செட்டா கத்தே னைப்போ லச்சீ
ரைத்தே டித்திட் ...... பமதாகத்

திக்கா மற்பா டுற்றா ரிற்சீ
ருற்றா ருக்குச் ...... சிலபாடல்

பெட்டா கக்கூ றிப்போ தத்தா
ரைப்போல் வப்புற் ...... றுழலாதே

பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்
சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ

எட்டா நெட்டா கத்தோ கைக்கே
புக்கோ லத்திட் ...... டிமையோர்வா

னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா
னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா

முட்டா மற்றா ளைச்சே விப்பார்
முற்பா வத்தைக் ...... களைவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.

*விளக்கம்*

பொறுக்கி எடுத்தாற் போல் சிக்கனமாக, தேன்போல் இனிக்கும் சிறப்புள்ள சொற்களையும், கருத்தையும் நாடி, திண்மையான வாக்கினால் தங்கு தடை இல்லாமல் பாடுதலைக் கொண்டவர்கள் போல, நானும் செல்வம் படைத்தவர்களிடம் சென்று சில பாடல்களை மயக்கம் வல்ல பொய்யான மொழியில் பாடி, ஞான அறிவு கொண்டவர்களைப் போல பாவனை செய்து வீணாகக் காலத்தைப் போக்கித் திரியாமல், என்னைப் பெற்ற தாய் தந்தையரைப் போல அன்பு காட்டித் துணை நிற்பவனே, உனது நல்ல திருவடிளைச் சிறிதளவாவது போற்றும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது பாய்ந்து ஏறி, எங்களைக் காத்தருள்க, அபயம் என்று கூச்சலிட்டு, தேவர்கள்  விண்ணிலும், பூமியிலும் உன்னைச் சூழ்ந்து நிற்க, சூரனை அணுகி அவனை வெட்டிச் சண்டை செய்யும் வேலனே,  தங்கள் வழிபாட்டில் தடை இன்றி உனது திருவடியைச் சேவிப்பவர்களின் முந்தைய தீவினையை நீக்கி அருள்பவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.


2 comments:

  1. ஐயா வணக்கம்

    வாசி யோகம் உங்களின் முதல் அனுபவம் பற்றி ஒரு பதிவு இடுங்கள்..
    வாசி யோகம் அனைவரும் பயிற்சி செய்யலாமா அல்லது குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட ராசிகள் க்கு மட்டும் சித்தி ஆகுமா .. வாசி யோகம் கைகுடியது என்று எப்படி தெரிந்து கொள்வது

    உங்களின் முதல் வாசி யோகம் பயிற்சி யின் சிரமங்கள் மற்றும் அதன்பின் அதில் இருந்து மீண்டு வந்த அனுபவம் பற்றியும் விளக்கவும்.. குரு இல்லாமல் வாசி யோகம் பயிற்சி செய்யலாமா..வாசி யோகம் எத்தனை காலம் ஆகும் அதன் பலன் எப்படி தெரியும் என்று விளக்கவும் மற்றும் உடல்நலம் எந்த எந்த மாற்றம் ஏற்படும் என்று முழுமையான ஒரு பதிவு இடுங்கள் நன்றி..

    ReplyDelete
  2. THanks ayya - same comment was found in different post also - I replied in that comment, so I am not repeating here. i have only very limited small knowledge.

    ReplyDelete