Friday, 24 April 2020

தீப்பாச்சியம்மன் திருக்கோயில்

,இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி – 627 003. திருநெல்வேலி மாவட்டம்.

மூலவர் தீப்பாச்சியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வண்ணாரப்பேட்டை., திருநெல்வேலி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள் இவர்கள். இவர்களைத் தெய்வமாகக் கொண்டாடும் வழக்கம் தமிழரிடையே உண்டு. கண்ணகிக்கு தனிக்கோயில் இருப்பது போல, திருநெல்வேலியில் தீப்பாச்சியம்மன் என்ற பெண் தெய்வம் அருள்பாலிக்கிறாள்.

எட்டயபுரம் பகுதியில் வசித்த அக்கம்மாள், இளவயதிலேயே அதிக தெய்வ பக்தியுடையவளாக திகழ்ந்தாள். அவளுக்குப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாள். இருவரில் யாரில்லாவிட்டாலும் இன்னொருவர் இல்லை என்ற அளவுக்கு அன்பு.

ஒருநாள், அவள் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அருகில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம்,”இப்போது எனக்கு ஒரு செய்தி வரும்” என்றாள். உடனிருந்தவர்களுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. தங்கள் பணியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் சில உறவினர்கள் அங்கு வந்தனர். அக்கம்மாவை வீட்டிற்கு அழைத்தனர். அவள் காரணம் கேட்டாள். அவர்கள் ஏதும் சொல்லாமல் உடன் வரும்படி கட்டாயப்படுத்தினர். அப்போது அவள்,”வேலை செய்வதற்காக, வெளியூர் சென்றிருந்த என் கணவன் இறந்து விட்டார். அதற்காகத்தானே அழைக்கிறீர்கள்” என்றாள்.

நடந்த உண்மையும் அதுதான்.
அவளது சொல்லைக்கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் அக்கம்மா வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அழவில்லை.


“இப்படி கல்லாய் நிற்கிறாளே. கணவன் மீது சற்றும் பாசமில்லையே” என்பது போல் ஊரார் அவளைப் பார்த்தார்கள். “நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது. நான் எதற்காக அழ வேண்டும். உடல்தானே மடிந்திருக்கிறது. எங்கள் ஆன்மா ஒன்றோடு ஒன்று இணைந்து உள்ளது. நானும் அவரோடு ஒன்றாகக் கலக்கப்போகிறேன். புரியவில்லையா? உடன்கட்டை ஏறப்போகிறேன்” என்றாள்.

அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் இதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும், அக்கம்மாள் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தாள்.

இச்செய்தி எட்டயபுரம் மன்னருக்கு சென்றது. அவரும் அக்கம்மாவிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். நம் இந்து தர்மத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை, வட இந்தியாவில் சிலர் உடன்கட்டை ஏறினர், அது முஸ்லீம் படையெடுப்பி்ன் போது, கணவன் போரில் இறந்த நிலையில் அவர்களிடம் தன் மானத்தை இழக்க விரும்பாமல் அவர்களாகவே சூழ்நிலையின் காரணமாக எடுத்த முடிவு, என்று சொல்லிப்பார்த்தார்.  ஆனால், அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தாள். தனது கணவரின் உடலுக்கு புண்ணியநதியாம் தாமிரபரணிக் கரையில் எரியூட்ட விரும்பினாள்.

தாமிரபரணியில் நீராடினாள். தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அப்போது அசிரீரி ஒலித்தது, சிவனும் பார்வதியுமாகிய நாங்கள், ஒரு காரணத்திற்காக இங்கு வாழ்ந்து வந்தோம், எங்கள் வேலை முடிந்தது, இங்கு நாங்கள் குடி கொண்டு தேடி வந்து வணங்கும் மக்களின் குறை தீர்ப்போம் என்று சொன்னது,  அதன்படி மக்கள் அவளது பத்தினித்தன்மையை உணர்ந்து அவ்விடத்தில் அவளுக்கு கோயில் கட்டினர். அவளோடு இளவயது முதல் பழகிய தோழி இலட்சுமியும், அவளது பிரிவைத்தாங்காமல் தீயில் பாய்ந்து இறந்தாள்.

தீயில் பாய்ந்தவள் என்பதால், “தீப்பாய்ந்த அம்பாள்” என்று பெயர் பெற்றாள். காலப்போக்கில், “தீப்பாச்சியம்மன்” என்று பெயர் மருவியது.

இக்கோயிலில் தீப்பாச்சியம்பாளுடன் அவளது கணவனும் அருகில் இருக்கிறார். தோழி இலட்சுமியம்பாளுக்கும் சன்னதி இருக்கிறது. இலட்சுமியுடன் அவளது கணவன், குழந்தையும் இருக்கின்றனர்.

முன்மண்டபத்தில் விநாயகர் இருக்கிறார். வாழும்காலம் வரை இணைந்தே வாழ விரும்பும் தம்பதியர் இந்த அம்பிகையை வழிபடுகின்றனர்.

திருவிழா:

சிவராத்திரி, பங்குனி உத்திரம்.

தீப்பாச்சியம்மனை வணங்குபவர்கள் சிவராத்திரியிலும், இலட்சுமியம்மனை வழிபடுபவர்கள் பங்குனி உத்திரத்திலும் விழா கொண்டாடுகின்றனர்.

பெண்கள் நல்ல கணவன் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

அம்பிகைக்குப் புத்தடை அணிவித்து, விசேட பூசை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி :

திருநெல்வேலி சந்திப்பு – பாளையங்கோட்டை சாலையில் வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. புதிய, பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் உண்டு.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ தீப்பாச்சியம்மன் தாயே போற்றி ௐ


No comments:

Post a Comment