Thursday 16 April 2020

திருமணத்தடை நீங்கி, ஆண்,பெண் இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய திருப்புகழ்

திருப்புகழ் 1296 நீலங்கொள் (பொதுப்பாடல்கள்)

திருமணத்தடை நீங்கி, ஆண்,பெண் இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய திருப்புகழ்

ஜீவான்மாவின் துன்பம் நீங்குமாறு பரமான்மாவாகிய தேவரீரது திருமார்பிலணிந்துள்ள மலர்மாலையைத் தந்து காத்தருள வரமாட்டீரோ? என இறைவனை இறைஞ்சுகிறார் அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் கவிச்சுவையும் , கருத்தாழமும் ஒருங்கே ததும்பி நிற்கின்றன. இத்திருப்புகழ் பாடலை அனுதினமும் பாடி முருகனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும்

தானந்த தானத்தம் ...... தனதான

......... பாடல் .........

நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

(நீல நிறத்தைக் கொண்ட மேகத்தைப் போன்ற மயில் மேலே நீ எழுந்தருளிவந்த புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால் உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே, வீரம் மிக்க சூரர்களின் குலத்துக்கே யமனாக விளங்கியவனே, ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக விளங்கியவனே, எல்லா உயிர்களுக்கு உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே.

இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாட்டு.)

....... சொல் விளக்கம் .........

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ... நீல நிறத்தைக் கொண்ட
மேகத்தைப் போன்ற மயில் மேலே

நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ... நீ எழுந்தருளிவந்த
புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால்

மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ... உன்மீது ஆசை
கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க

மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ... மார்பில் தங்கி விளங்கும்
மாலையைத் தந்து அருள்புரிவாயாக.

வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ... உன்
வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,

வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ... வீரம் மிக்க சூரர்களின்
குலத்துக்கே யமனாக விளங்கியவனே,

நாலந்த வேதத்தின் பொருளோனே ... ரிக், யஜூர், சாம,
அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக
விளங்கியவனே,

நானென்று மார்தட்டும் பெருமாளே. ... எல்லா உயிர்களுக்கு
உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத்
தட்டிக் கொள்ளும் பெருமாளே.

No comments:

Post a Comment