Wednesday, 8 April 2020

தினம் ஒரு ஆலயம் -திருக்கோளிலி

*தினம் ஒரு ஆலயம்*



*🚩🔔274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்🌙🔱*

*186. திருக்கோளிலி (திருக்குவளை)*



*சிவஸ்தலம் பெயர்*

*திருக்கோளிலி (தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது)*

*இறைவன் பெயர்*

*கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர்*

*இறைவி பெயர்*

*வண்டமர் பூங்குழலி*

*தேவாரப் பாடல்கள்*

*சம்பந்தர்*

*1. நாளாய போகாமே நஞ்சணியுங்*

*அப்பர்* 

*1. மைக்கொள் கண்ணுமை*

*2. முன்ன மேநினை யாதொழிந்*

*சுந்தரர்*

*1. நீள நினைந்தடி யேனுமை*

*எப்படிப் போவது*

திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.

*ஆலய முகவரி*

அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில்
திருக்குவளை
திருக்குவளை அஞ்சல்
திருக்குவளை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN 610204
தொடர்புக்கு: 04366 - 245 412
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*தல வரலாறு*



இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.

நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.

திருக்கோளிலி தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது. பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிராகாரத்திற்கு எதிரே மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன

இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய aற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

*சிறப்புகள்*



சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.

இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)

இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரமகத்தி உருவமும் உள்ளது.

சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

இறைவன் வெண் மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார்.

இங்குள்ள நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன.

ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.

இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார்' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.


*🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻*


No comments:

Post a Comment