Friday, 10 April 2020

பாசுபத விரதம்

லிங்க புராணம் - பகுதி 14

பாசுபத விரதம்
=============

நந்திகேச்வரர் சனத்குமாரருக்கு உபதேசித்த பாசுபத விரதம் பற்றி சூதர் முனிவர்களுக்கு விவரிக்கலானார். பிரமாதி தேவர்கள் கைலயங்கிரி வாசனை கைகூப்பித் தொழுது பசுபாசம் அகன்றிட அருள்புரியுமாறு பிரார்த்திக்க ஈசன் பாசுபத விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூற அவர்களும் அந்த விரதத்தை அனுஷ்டித்து பசுத்தன்மை நீங்கப்பெற்றனர். பாசுபத விரதம் என்பது ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனைத் தரக்கூடியது. சித்திரைத் திங்களில் படிக லிங்கத்தில் ஈசனை ஆவாகனம் செய்து, அபிஷேகம் செய்து, அலங்கரித்து பொற்றாமரை நடுவில் வைத்து நறுமண மலர்கள் கொண்டு அர்ச்சித்து, தூப தீப நைவேத்ய உபசாரங்கள் செய்து, இறைவன் நாமத்தை உளமுருக ஜபித்து வணங்க வேண்டும். தென்திசையில் அகில், மேற்கில் மனோசிலை, வடக்கில் சந்தனம், கிழக்கில் அரிதாரம் ஆகியவற்றை பீடத்தின் அருகில் வைத்து ஈசனை ஆராதிக்க வேண்டும். வைகாசியில் வைர லிங்கத்தை வைத்தும், ஆனியில் மரகத லிங்கம், ஆடியில் முத்துலிங்கம், ஆவணியில் நீலலிங்கம், புரட்டாசியில் மரகத லிங்கம், ஐப்பசியில் கோமேதக லிங்கம், கார்த்திகையில் பவள லிங்கம், மார்கழியில் வைடூர்ய லிங்கம், தையில் புஷ்பராக லிங்கம், மாசியில் சூரியகாந்தத்தால் ஆன லிங்கம், பங்குனியில் பளிங்குக் கல்லினால் ஆன லிங்கம் என்று வைத்து பரமனைத் தொழ வேண்டும்.

ரத்தினங்களுக்குப் பதிலாக பொன், வெள்ளி, செம்பினால் ஆகிய லிங்கங்களையும் பூஜிக்கலாம். இவ்வாறு பன்னிரண்டு மாதங்களும் நன்கு பூசை செய்து, அந்தணர்களுக்கு உணவு முதலிய உபசாரங்கள் செய்து அவர்களை ஈசன் வடிவாக எண்ணி அர்ச்சித்து வணங்கி லிங்கங்களைத் தானம் செய்ய வேண்டும். பூஜித்த லிங்கங்களைச் சிவாலயத்தில் சேர்க்கலாம். பின்னர் வியபோகன தோத்திரத்தால் சிவனைத் துதிக்கவேண்டும். அவ்வாறு செய்பவர்கள் பசுபாசம் நீங்கி சிவலோகம் அடைவர்.

நம: சிவாய சுத்தாய நிர்மலாய யசஸ்விநே:
துஷ்டாந்தகாய ஸர்வாய பவாய பரமாதிமநே
என்று தொடங்கும் துதி வியபோகன ஸ்தோத்திரம் ஆகும்.

உமாமகேசுவர விரதம் : அஷ்டமி, சதுர்த்தசி ஆகிய நாட்களில் உபவாசமிருந்து ஓராண்டு விரதம் இயற்றிய பின் பொன்னாலோ, வெள்ளியாலோ லிங்கத்தை அழகுடன் செய்து உமையுடன் பிரதிஷ்டித்து என் வினை தீர்த்தருள்வாய் என்று பிரார்த்தித்து மேள தாளங்களுடன் லிங்கத்தைச் சிவாலயத்துக்கு எடுத்துச் சென்று மறையோர்க்குப் பொருள்களுடன் தானம் செய்ய வேண்டும். பசும்பொன்னால் அமைந்த லிங்கத்துடன் ரிஷபமும், சூலமும் அமைத்து ஓராண்டு வழிபடுவோர் சிவலோகப் பிராப்தி அடைவர். இந்த உமாமகேசுவர விரதத்தை ஆண் பெண் இருபாலாரும் பக்தியுடன் கடைபிடிக்கலாம். ஈசன் திருவருளை வேண்டி அனுஷ்டிக்கும் விரதத்தின் முடிவில் பஞ்சாக்ஷரத்தை பக்தியுடன் பூஜிக்க வேண்டும்.

தொடரும்...

#ப்ரம்மா முராரி சுரர்ச்சித லிங்கம்!


*திருச்சிற்றம்பலம்*

*பன்னிரு திருமுறை*

*வினை தீர்த்தல்*

*முதல் திருமுறை*

*திருவலிதாயம்*

புந்தியொன்றிநினை வார் *வினையாயினதீரப்* பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.

*இரண்டாம் திருமுறை*

*திருமழபாடி*

களையும் *வல்வினை யஞ்ச* நெஞ்சே கரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியு ளண்ணலே.

*மூன்றாம் திருமுறை*

*கோயில்*

தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர்
பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழ
*இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே.*

*நான்காம் திருமுறை*

*திருப்பூந்துருத்தி*

உருவினை யூழி முதல்வனை யோதி நிறைந்து நின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய
*பொருவினை யெல்லாந் துரந்தனைப்* பூந்துருத் திய்யுறையும்
கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே.

*ஐந்தாம் திருமுறை*

*திருஅண்ணாமலை*

கருவி னைக்கடல் வாய்விட முண்டவெம்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
*அருவி னையடி யேன்மறந் துய்வனோ.*

*ஆறாம் திருமுறை*

*திருவாரூர்*

*செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்*
    சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
    புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
    அம்மானே ஆருரெம் மரசே யென்றும்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
    கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

*ஏழாம் திருமுறை*

*திருவாலங்காடு*

வண்டார் குழலி உமைநங்கை
    பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த
    விடையாய் வேத நெறியானே
*பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்*
    பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாஉன்
    னடியார்க் கடியேன் ஆவேனே

*எட்டாம் திருமுறை*

*திருவாசகம் - சுட்டறுத்தல்*

*வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று  போதுநான் வினைக்கேடன் என்பாய் போல*
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன்நின் றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோநான் ஆன வாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே

*திருக்கோவையார் - வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல்*

கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்(கு)அம் பலத்(துஐ அமிழ்தாய்
*வினைகெடச் செய்தவன்* விண்தோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தனம் ஆயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறும்உண் டோஇத் திருக்கணியே.

*ஒன்பதாம் திருமுறை*

*திருவிசைப்பா - திருமுகத் தலை*

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே ! முகத்தலை அகத்தமர்ந்(து) *அடியேன் வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே.*

*திருப்பல்லாண்டு*

எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே.

*பத்தாம் திருமுறை - கல்லாமை*

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் *பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.*

*பதினோராம் திருமுறை - நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருஈங்கோய்மலை எழுபது*

ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள் கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை இனம்இரிய முல்லைநகும் ஈங்கோயே *நம்மேல் வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு.*

*பன்னிரண்டாம் திருமுறை - தடுத்தாட்கொண்ட புராணம்*

*“பாசமாம் வினைப் பற்று அறுப்பான்* மிகும் ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர் தேசின் மன்னி என்சிந்தை மயக்கிய ஈசனார் அருள் எந்நெறி நெறிச் சென்றதே".

*திருச்சிற்றம்பலம்*

No comments:

Post a Comment