Wednesday 29 April 2020

அஸ்வத்தாமன் சரித்திரம்

#ஒரு_நீண்ட_பயணம்

#பாவம்_இவன்_ஒரு_சிரஞ்சீவி

#அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன், பலி, வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர். இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள். சிலர் மார்கண்டேயனையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இவர்கள் எழுவரும் சிவாலய பாதுகாவலர்கள். சிவனையும் பாதுகாப்பவர்கள். நாம் சிவாலய தரிசனம் முடிந்து ஐந்து நிமிடமாவது கோவிலில் அமர்ந்து திரும்புவோம். அப்போது அந்த எழுவரும் நம் பாதுகாப்பாக நம் வீடுவரை வருவார்களாம். அதனால் கோவிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

மகாபாரதத்தில் வெல்ல முடியாத வீரர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் ஆனால் மரணமில்லாத வீரர்கள் யாருமே கிடையாது ஒருவரைத்தவிர, அவர்தான் குரு துரோணரின் ஒரே புதல்வன் அஸ்வத்தாமன்.

பரசுராமரின் சீடனும், பரத்வாஜ முனிவரின் புதல்வனுமான துரோணருக்கும் கொளதம மகரிஷியின் பேத்தியும், முனிவர் ஷரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் புத்திர பாக்கியம் இல்லை.அதனால் சிவனை நோக்கி கடும் தவம் புரிகிறார் துரோணர்.  அவர் முன் தோன்றும் ஈசன் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்க "அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வனாக நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்கிறார்.

அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும்வரை சாகா வரம் பெற்ற மனிதனாக துவாபர யுகத்தில் தனது ருத்ர அவதாரத்தை எடுக்கிறார் எல்லாம் வல்ல ஈசன். அதன்படி அஸ்வத்தாமன் உயிருடன் இருக்கும் வரை மனித குலம் அழியாது என்று அமைந்தது.

குதிரையைப்போல் கனைக்கும் திறன்  பெற்றதால் "அஸ்வத்தாமன்" என்று பெயர் சூட்டப்படுகிறார்.மிகவும் ஏழ்மையில் வாழ்ந்த துரோணரை அஸ்திநாபுரத்தின் இளவரசர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் குருவாக நியமிக்கிறார் பீஷ்மர். பாண்டவர், கொளரவர்களோடு அஸ்வத்தாமனும் அரிய வித்தைகளை கற்றுக்கொள்கிறார்.

அதுமட்டுமின்றி தன் தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் தனுர் வித்தையும், தன் தாய் மாமன் கிருபாச்சாரியாரிடம் வியூக நுணுக்கங்களையும் கற்றுக்கொள்கிறார்.ஈசனுக்கு நெற்றிக்கண் போல இவர் நெற்றியில் ஒரு ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) உண்டு, அது இருக்கும் வரை எந்த உயிரினமும் அவரை கொல்லமுடியாது, அதுமட்டுமின்றி தன் தவ வலிமையால் அதர்வணம் என்ற வேதத்தை உருவாக்கி அந்த வேதத்தின் வித்தகனாக விளங்கினார்.

தன் தந்தை குரு துரோணர் அர்ஜுனன் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதை அவரால் தாங்க முடியவில்லை, அவரை பாண்டவர்கள் ஏளனம் செய்யும்போதெல்லாம் துரியோதனன் அவருக்கு துணை நின்றான்.அதுவே துரியோதணனுக்கு அவரை நெருக்கமான நண்பனாக மாற்றியது.

பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது பகவான் கிருஷ்ணனை பார்க்கச்செல்கிறார் அஸ்வத்தாமன், அவரை வரவேற்ற கிருஷ்ணன் "என்ன வேண்டும் கேள் குரு மைந்தனே" என்று கேட்க " தங்களுடைய சுதர்சனச் சக்கரத்தை எனக்கு தானமாக தர வேண்டும்" என்று கேட்கிறார்.

சிரித்தவாரே "எடுத்துக்கொள்" என கிருஷ்ணர் சொல்ல, ஆவல் கொண்டு அதை எடுக்கிறார் அஸ்வத்தாமன் ஆனால் அவரால் அதை அசைக்ககூட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் அதை நகர்த்தக்கூட முடியவில்லை, அஸ்வத்தாமனின் முயற்சியைக் கண்ட பகவான் "எதற்காக உனக்கு இது தேவை நண்பனே" என்று கேட்க "இன்னும் சிறிது காலத்தில் பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் போர் நடக்கும், அதில் நான் துரியோதனனை காக்க வேண்டும், பகவானாகிய நீங்கள் பாண்டவர்களுக்கு துணை நிற்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும், நீங்கள் இருக்கும் வரை அவர்களை வெல்லமுடியாது என்பதும் எனக்கு தெரியும் ஆகவே அன்புக் கடவுளே உம்மை வதைக்கவே உமது சுதர்சனம் எனக்கு வேண்டும்" என்று சொல்ல, மெய்சிலிர்த்து போகிறார் பகவான் பரந்தாமன்.

"உன் வீரம் கண்டு நான் வியக்கிறேன் அஸ்வத்தாமா, சுதர்சனம் கொண்டு என்னை கொல்ல இயலாது ஆனால் போரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் கொன்று உன் நண்பனைக் காப்பாற்ற என்னுடைய அஸ்திரமான நாரயண அஸ்திரத்தை உனக்கு வரமாகத் தருகிறேன். இந்த அஸ்திரத்தை நீ செலுத்திய அடுத்த நொடி முப்பத்து முக்கோடி தேவர்களும் உன் பின்னே தோன்றி உனக்கு எதிராக ஆயுதம் ஏந்தி நிற்கும் அத்தனை வீரர்களையும் வீழ்த்துவார்கள்" என வரமளிக்கிறார்.

ஆயினும் இந்த அஸ்திரத்தால் மனம் திருப்தியடையாத அஸ்வத்தாமன் தன் தவ வலிமையைக்கொண்டும், தன்னால் உருவாக்கப்பட்ட அதர்வண வேதத்தின் சக்தியைக்கொண்டும் எல்லாம் வல்ல ஈசனையும் சக்தியையும் முதற்கடவுளாக உருவேற்றி பாசுபதாஸ்த்திரம் என்று சொல்லப்படும் சிவ பாணத்தை உலகிலேயே மிகவும் சக்திமிக்க ஒரு அஸ்திரமாக மாற்றுகிறார்.

பாசுபதாஸ்த்திரம் - எல்லாம் வல்ல பரமேஸ்வரனால் உருவாக்கப்பட்டு ராமாயணத்தில் இராவணனின் மைந்தன் மேகனாதனுக்கும், மகாபாரதத்தில் அர்ஜனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் கொடுக்கப்பட்டது, மற்ற அஸ்திரங்களைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது, தன்னைவிட பலம் அதிகம்கொண்ட எதிரியின்மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும், (தர்ம வழியில் நடப்பவர்களால் மட்டுமே இதை எதிரிகள் மீது பயன்படுத்தமுடியும்). எப்படிப்பட்ட இலக்கையும் அழிக்க வல்ல பாசுபதாஸ்த்திரம் கொண்டு பாண்டவர்களை அழிப்பேன் என்று சூளுரைக்கிறார் அஸ்வத்தாமன்.

பாசுபதாஸ்திரம் மற்றும் நாராயண அஸ்த்திரத்தை முறையாக கற்றபின் தன் தந்தையிடம் பிரம்மாஸ்திரத்தையும் கற்றுக்கொள்கிறார். துவாபர யுகத்தில் மும்மூர்த்திகளின் அஸ்திரங்களைப் பெற்ற ஒரே மாவீரனாக திகழ்கிறார் (ராமாயணத்தில் இராவணனின் மகன் இந்திரஜித்துக்குப் பிறகு மூன்று அஸ்திரங்களையும் வரமாகப் பெற்றவர் அஸ்வத்தாமன் மட்டுமே). துரியோதணனுக்கு பக்க பலமாக இருக்கும் 7 அதிமகாரதிகளில் இவரும் ஒருவர்.

ரதி = 5000 போர் வீரர்களுக்கு சமமான வீரன்
அதிரதி = 10,000 போர் வீரர்களுக்கு சமமான வீரன்
மகாரதி = 60,000 போர் வீரர்களுக்கு சமமான வீரன்
அதிமகாரதி = 12 மகாரதிகளுக்கு சமமான வீரன் (7,20,000 வீரர்களுக்கு சமம்)
மகாமகாரதி = 24 அதிமகாரதிகளுக்கு சமம் (1,72,80,000 வீரர்களுக்கு சமம்,)

இந்த பூமியில் இதுவரை மகாமகாரதிகள் பிறக்கவில்லை)

(இக்கால ரோபோக்களைப் போல அந்தக்காலத்திலேயே மனிதர்களே ரோபோக்களைப் போன்ற சக்தி படைத்தவராய் இருந்திருக்க கூடும் என்று தோன்றுகிறது)

மகாபாரதப்போரில் பாண்டவர்களை அழித்து துரியோதனனை முன் நின்று காப்பேன் என்று களம் இறங்கும் இவர் பீஷ்மரால் தென் திசைப் படையை வழிநடத்தும் வீரனாக நியமிக்கப்படுகிறார். 10ம் நாள் போரில் பீஷ்மர் வீழ்ந்தப்பிறகு தன் தந்தை துரோணரால் துரியோதணின் மெய்க்காப்பாளனாக மாற்றப்படுகிறார். 12ம் நாள் போரில் அர்ஜூனன் மகன் அபிமன்யுவை நேருக்கு நேர் போரிட்டு மண்ணைக் கவ்வ வைத்து ஓடவிடுகிறார். 13ம் நாள் போரில் அபிமன்யுவின் கோர மரணத்திற்கு காரணமான 6 அதிமகாரதிகளில் இவரும் ஒருவர் (6 அதிமகாரதிகள் ஒன்றாக இணைந்தால்தான் தன்னைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றவன் அபிமன்யு)

மகாபாரத யுத்தத்துக்காகவே பிறந்தவன்போல், போரில் பெரும் பங்காற்றினான் அஸ்வத்தாமா; பீமனின் புதல்வன் கடோத்கஜனையும், அவனுடைய மகன் அர்ஜனபர்வாவையும் அழித்தான்; இதனால், பீமனின் பரம்பரையே நிர்மூலமானது. அதுமட்டுமா ? துருபத ராஜகுமாரன், சத்ரும்ஜயன், பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், அரசன் சிருதாஹு போன்றவர்களை அழித்து, துரியோதனனுக்கு உரமூட்டினான். குந்திபோஜனின் பத்து மகன்களையும் அழித்து, எதிரிகளுக்கு தனது வீரத்தை உணர்த்தினான்.

பதினான்காம் நாள் போரின் முடிவில் ஜயத்திரதன் கொல்லப்பட்டதும் பாண்டவர் போர்விதியை மீறியதாகக் கோபங்கொண்டு சூரியன் மறைவிற்குப் பிறகும் போரைத் தொடரும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார் துரோணர். துரோணரின் உக்கிரமான போரினால் சோர்ந்து போயிருந்த பாண்டவர் படையினர் துரோணரை வீழ்த்த ஆழ்ந்த யோசனையிலிருந்தனர். துரோணரை தோற்கடித்தால் மட்டுமே கௌரவப்படையை வெல்ல முடியும்,துரோணரின் பலமே அவரது மகன் அசுவத்தாமன் தான். அவன் மீது அதீதமான பாசம் வைத்திருந்தார். அந்தப் பாசத்தை அவரிடமிருந்து பிரித்தால் அவரை வீழ்த்துவது எளிது என முடிவு செய்து, “அசுவத்தாமன் இறந்து விட்டான்” என்று பாண்டவர்களைச் சொல்ல வைத்தார் கிருட்டிணன்.

துரோணர் இதை நம்ப மறுத்தார். உத்தமர் யதிஷ்டிரனைப் பார்த்து இது உண்மையா? என்று கேட்டார். யுதிஷ்டிரன் கிருட்டிணனைப் பார்த்தார். தருமரின் எண்ண ஓட்டத்தை அறிந்த கிருட்டிணன் புன்னகை புரிந்தார். துரோணருக்கு விடுதலை தருவதாகிய நன்மைக்குப் பொய் சொல்வதில் தவறில்லை எனப் பலவித நியாயங்களைத் தருமனுக்கு போதித்தார். கனத்த மனதுடன் "அஸ்வத்தாமா ஹதா குஞ்சரகா" என்று சொல்லும்போது குஞ்சரகா என்ற கடைசி வார்த்தையைத் துரோணரின் காதில் விழாதவாறு கிருட்டிணன் தனது சங்கை எடுத்து ஊதினார். "அஸ்வத்தாமா ஹதா" என்ற சொல் மட்டும் துரோணரின் காதில் விழுந்தது. கிருட்டிணனின் ஆணைப்படி பீமன் அசுவத்தாமன் என்ற யானையைக் கொன்றிருந்தான், கிருட்டிணனின் அந்த சதி நல்ல பலன் தந்தது, துரோணர் சோர்ந்து போய்த் தேரைவிட்டுக் கீழே இறங்கி ஆயுதத்தைப் போட்டுவிட்டு இறக்கத் தயாரான மாதிரித் தரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிவிட்டார்.

தரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்த துரோணரைக் கொன்றுவிடு எனக் கூறினார் கிருட்டிணன். ஆனால் அருச்சுனன் "அவர் எனது ஆசான், ஒரு பிராமணர், அவரைக் கொல்வது மிகக் கொடியசெயல்"(பிரமஹத்தி தோஷம்) என்றான். "அவர் ஒரு பிராமணரின் மகனாகப் பிறந்தார், அவ்வளவுதான். அவர் சுகபோக வாழ்க்கைக்கும், அதிகாரத்துக்காகவும், பழி தீர்த்துக் கொள்வதற்கும் ஒரு சத்திரியனாகவே வாழ்ந்தார். அவர் போர்க்களத்தில் ஒரு சத்திரியன் போன்றே சாகட்டும்" என்று கிருட்டிணன் கூறினார். அர்ஜுனன் உடன்படவில்லை. ஆனால் பாண்டவர் படைத்தளபதிகளில் ஒருவரான துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன் தனது வாளால் ஒரே வீச்சில் துரோணரின் தலையை வெட்டி எடுத்தான். துரோணரை வதம் செய்வேன் என்று சபதம் எடுத்திருந்தவன் அவன்.

15ம் நாள் போரில் தன் தந்தை துரோணாரை ஏமாற்றி கொலை செய்யும் பாண்டவர்களை அழித்தே தீருவேன் என்று அஸ்வத்தாமா சத்தியம் செய்கிறார், பாண்டவசேனையின் ஒரு பகுதியை தன் திவ்ய அஸ்திரங்கள் கொண்டு அழிக்கிறார்.சிகண்டியின் மகன்கள் அனைவரையும் தன் கரங்களால் வதைக்கிறார். 16ம் நாள் போர்க்களத்தில் தன் தந்தையின் சாவுக்கு பழிதீர்க்க எண்ணி பகவான் விஷ்ணுவின் நாராயண அஸ்திரத்தை விண்ணை நோக்கி செலுத்தி பாண்டவ சேனையை அழிக்க உத்தரவு இடுகிறார். நாராயண அஸ்திரத்தால் முப்பத்துமுக்கோடி தேவர்களும் விண்ணில் தோன்றி பாண்டவ சேனைமீது அஸ்திரம் தொடுக்கிறார்கள்.33 கோடி அம்புகள் தங்கள் சேனையை நோக்கி வருவதைக் கண்டு செய்வதறியாது திகைக்கிறார்கள் பாண்டவர்கள்.

அந்த ஆயுதம் "நம் அனைவரையும் அழித்துவிடும்" என்று அலறினார் தருமர். கிருட்டிணன் பாண்டவரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம், அந்த ஆயுதத்தை எதிர்க்காமல் உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுத் தேரிலிருந்து கீழே இறங்கி அதை வணங்கினால் ஒன்றும் செய்யாது என்றார். பீமனைத் தவிர அனைவரும் அப்படியே செய்தனர். பீமன் துரோணரின் மகனை நோக்கித் தனது தேரைச் செலுத்தினான், தனது கதையை வேகமாகச் சுழற்றினான், நாராயண ஆயுதம் அவனை சூழ்ந்து கொள்ள அருச்சுனனும்,கிருட்டிணனும் பீமனை வலுக்கட்டாயமாகத் தேரிலிருந்து கீழே இறக்கி, ஆயுதங்களைக் கீழே போட வைத்து அவனைக் காப்பாற்றினர்.

கிருஷ்ணரின் சொல்படி தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தரையில் மண்டியிட்டு கைகூப்பி வணங்கி உயிர் தானம் வேண்டுகிறார்கள்.அம்புமாரி பொழிவதை நிறுத்திவிட்டு தேவர்கள் மறைகிறார்கள், பாண்டவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'

நாராயணாஸ்திரம் வலுவிழந்தும்கூட, பதறவில்லை அஸ்வத்தாமா. முழு நம்பிக்கையுடன் ஆக்னேயாஸ்திரத்தை ஏவினான். நெருப்பை உமிழும் அந்த அஸ்திரத்தால், திக்குமுக்காடிப் போனார்கள் எதிரிகள், பகவான் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் நெருங்கவில்லை அஸ்திரம். அதுமட்டுமின்றி, த்ருஷ்டத்யும்னனையும் அழிக்க இயலவில்லை. இதைக் கண்டு அதிர்ந்தான் அஸ்வத்தாமா. அப்போது வியாசர் தோன்றி, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமந் நாராயணன் ஆவார். அர்ஜுனன், அவரது அம்சத்துடன் விளங்கும் நரன். நர நாராயணரை வெல்வது சுலபமல்ல என அறிவுறுத்தினார். எனவே, நர நாராயணர்களை மனதில் வேண்டி, படைகளுடன் வெளியேறினான் அஸ்வத்தாமா, பிறகு, கர்ணனின் தலைமையில் போரில் இணைந்தவன், த்ருஷ்டத்யும்னனை அழிக்காமல் அஸ்திரத்தைக் களையமாட்டேன் என சூளுரைத்தான். 18-ஆம் நாள் யுத்தம். பீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டையிட்டனர். இதில் அடிபட்டு தரையில் வீழ்ந்தான் துரியோதனன்.

அவனை அங்கேயே விட்டுவிட்டு, பாண்டவர்கள் வெளியேறினர். வேதனையுடன் இருந்த துரியோதனனுக்கு அருகில் ஸஞ்சயன் வந்தார். அஸ்வத்தாமா, கிருபாசார்யர், கிருதவர்மா ஆகியோரை அழைத்தான் துரியோதனன்; நடந்தவற்றை விளக்கினான். அறத்துக்குப் புறம்பான வழியில் துரியோதனனை பீமன் வீழ்த்தியதை அறிந்து, கோபமுற்று பாண்டவர்களைப் கூண்டோடு அழிப்பேன் எனக் கொக்கரித்தான் அஸ்வத்தாமா.

அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலைந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரியனின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரியனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.

"துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.

துரியன் மெல்ல இமை திறந்தான்.

"அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந்தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"

"இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். ஒரு சொல்... பாண்டவரின் வம்சத்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"

துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த்தது. சற்றே உடலை அசைத்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தில் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் கௌரவசேனையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"

அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.

பதவியேற்ற அன்றைய இரவு, அஸ்வத்தாமா தூங்கவே இல்லை. கொடுத்த வாக்குறுதியால் தூக்கம் வரவில்லை. தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றான். உடன் இருந்த இருவரும் உறங்கிவிட, இவன் மட்டும் மரத்தடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடுமென ஆந்தையின் ஒலி கேட்டு, மரக்கிளையை கவனித்தான். ஆந்தை ஒன்று, கூட்டினில் உறங்கிக்கொண்டிருந்த காக்கைக் குஞ்சுகளை அழித்துவிட்டு வெளியேறியது. சட்டென்று அவனுக்குள், பாண்டவர்களின் வாரிசுகளையும் அப்படித்தான் அழிக்கவேண்டும் எனச் சிந்தித்தான். இது தெய்வம் காட்டிய வழி எனச் சிலிர்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, தனது திட்டத்தை எடுத்துரைத்தான். ஆனால் கிருபாசார்யர், தவறான வழியில் பழிவாங்குவது தவறு; கௌரவ அழிவுக்குக் காரணமாகிவிடும். வேண்டாம். எதையும் போர்க்களத்தில் சந்திப்போம்; சாதிப்போம் என்றார். அவற்றைக் கேட்கும் மனநிலையில் அஸ்வத்தாமா இல்லை. வேறுவழியின்றி, மூவரும் அன்றிரவே பாண்டவர்களின் கூடாரத்தை நெருங்கினர்.

கண்ணில் பட்டவரையெல்லாம் தன் தந்தையின் குருவான பகவான் பரசுராமர் தனக்கு கொடுத்த அற்புத வாள் கொண்டு சிதைக்கும் அஸ்வத்தாமனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் கிருஷ்ணர், பாண்டவர்களையும் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக காட்டிற்குள் செல்கிறார்.போகும்முன்பு களிமண்ணால் ஒரு பூத உருவத்தை செய்து நான் திரும்பி வரும்வரை இங்கு நீதான் காவல் காக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

அந்த எல்லையை கடக்க நினைக்கும் அஸ்வத்தாமனை அந்த பூதம் தடுக்கிறது. அஸ்வத்தாமனின் தனுர் வித்தைக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும், அதர்வண வேத சக்திகளுக்கும் அந்த பூதம் மசியவேயில்லை.கடைசியாக தன்னிடம் இருக்கும் சிவனின் அஸ்திரமும், இந்த பூவுலகிலேயே மிகவும் சக்திவாய்ந்ததும், எப்படிப்பட்ட இலக்கையும் அழிக்கவல்லதும், ஈடு இணையற்றதுமான பாசுபதாஸ்திரத்தை எடுத்து அந்த பூதத்தின் மீது ஏவுகிறார் அஸ்வத்தாமன்.ஆனால் அந்த பூதமோ பாசுபதாஸ்திரத்தை சோற்றுக்கவளத்தை விழுங்குவதுபோல் விழுங்கிவிட்டு அஸ்வத்தாமனைப் பார்த்து ஏளனமாக சிரித்தது.

பாசுபதாஸ்திரத்தை பூதம் தனக்குள் அடக்கியதும் அஸ்வத்தாமன் தன் அஸ்திரங்களையெல்லாம் தியாகம் செய்கிறார், அந்த உருவத்தின் முன் மண்டியிட்டு "இந்த ஜகத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைத்தவிர வேறு எவருக்கும் பாசுபதம் கட்டுப்படாது, அப்படிபட்ட பசுபதத்தை கட்டுப்படுத்திய நான்காவது நபரான நீங்கள் யார் தயவுசெய்து சொல்லுங்கள்?" என்று மனமுருக வேண்ட, தன் சுயரூபம் காட்டுகிறார் எல்லாம் வல்ல ஈசன். தன் உதிரத்தால் ஈசன் பாதம் நனைத்து தன் பக்தியை வெளிப்படுத்துகிறார் அஸ்வத்தாமன். கிருஷ்ணரின் வேண்டுகோள்படி பாண்டவ கூடாரத்திற்கு காவல் நிற்கும் ஈசன் மகிழ்ந்து "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்க "பாண்டவ கூடாரத்திற்குள் என்னை செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டுகிறார். வரம் தர மறுக்கிறார் ஈசன், உடனே "என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள் இல்லையென்றால் உங்கள் கண்முன்னே என் உயிர் நீப்பேன்" என்று தன் சிரம் கொய்கிறார் அஸ்வத்தாமன். அவருடைய பிறப்பு ரகசியம் தெரிந்த ஈசன் (அஸ்வத்தாமனின் மரணம் என்பது மனித இனத்தின் முடிவு), அவர் பக்தியையும் விடாமுயற்சியையும் பாராட்டி தன் வாளை பரிசளித்துவிட்டு அங்கிருந்து மறைகிறார்.

சிவனின் வாளுடன் பாண்டவ கூடாரத்திற்குள் நுழையும் அஸ்வத்தாமன் தன் கண்ணில் பட்டதையெல்லாம் சர்வ நாசம் செய்கிறார்.  திரவுபதியின் ஐந்து மகன்களையும், சிகண்டி, திருஷ்டதுய்மணன் மற்றும் ஏனைய வீரர்களையும் கொன்று குவிக்கிறார்.குறிப்பாக திரவுபதியின் மகன்களை உறக்கத்தில் இருக்கும்போதே கொலை செய்கிறார்.

உபபாண்டவர்கள் என பெயர் பெற்ற அவர்கள் முன்னொரு காலத்தில் அரிச்சந்திர மகாராஜாவை மிகவும் சோதித்த விஸ்வாமித்திர முனிவரால் சாபம் பெற்ற குருநில தெய்வங்களாவர். விஸ்வாமித்திரரின் சாபத்தின்படி மனித பிறப்பெடுத்து உறக்கத்திலேயே அந்த ஈசனின் அம்சம் பெற்ற ஒருவனால் மரணம் நிகழும் என்பது அவர்கள் விதி. அதன்படி அஸ்வத்தாமனால் மரணம் நிகழ்ந்து மீண்டும் சொர்க்கம் சென்றனர்.

தன் தந்தையின் சாவுக்கு காரணமான திருஷ்டதுய்மணனை ஆயுதம் இன்றி வெறும் கைகளாலேயே அடித்து அவன் சிரசை உடலில் இருந்து பிய்த்து எடுக்கிறார்.மொத்த பாண்டவ சேனையையும் ஒரே ஆளாய் நின்று அழித்து, தீ வைத்து எரிக்கிறார்.

பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவர்களை உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன.

மறுநாள் காலை வந்து பார்க்கும் பாண்டவர்கள் துடிதுடித்து போகிறார்கள். மகன்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. அஸ்வத்தாமாவின் சிரசைக் கொய்து உன்னிடம் தருகிறேன் என சூளுரைத்தான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட ஆயத்தமானான். கிருஷ்ணனிடம், "18 நாள் போரில் எங்களை எதுவும் செய்ய முடியாத அஸ்வத்தாமனால் இது எப்படி சாத்தியமாயிற்று" என்று கேட்ட தர்மனிடம் "அஸ்வத்தாமன் சக்தி அளவிடமுடியாதது, அது யாருக்கும் தெரியாமல் போனதால்தான் துரியோதணன் தோற்றான், அஸ்வத்தாமன் மட்டும் கெளரவர்களின் தளபதியாக ஒருநாள் இருந்திருந்தால் தன் அதர்வண வேதத்தின் துணைகொண்டு ஒரேநாளில் போரை வென்றிருப்பான், அவன் நெற்றியில் உள்ள சாமந்தகமணி அவனிடம் உள்ளவரை அவனை கொல்வதென்பது நடவாது" என்று சொல்கிறார் கிருஷ்ணர்.

இறந்தது உண்மையான பாண்டவர்கள் என நினைத்து துரியோதணனிடம் சென்று குருதி தோய்ந்த வாளை காட்டுகிறார் அஸ்வத்தாமன். மன நிறைவுடன் உயிர் நீக்குகிறான் துரியன்.

ஆற்றங்கரையோரம் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்துகொண்டிருக்கும் அஸ்வத்தாமனை அழிக்க திட்டம் போடுகிறார்கள் பாண்டவர்கள், பிரம்மாஸ்திரம் தவிர வேறு எந்த அஸ்திரம் கொண்டும் அவரை சாய்க்க முடியாது என்று கிருஷ்ணர் மூலம் தெரிந்து கொள்ளும் அர்ஜுனன் அவரை நோக்கி பிரம்மாஸ்த்திரத்தை செலுத்த, தன் தவ வலிமையால் இதை உணர்ந்து கொள்ளும் அஸ்வத்தாமன் தன் கையில்  உள்ள தர்ப்பை புல்லை வேத சக்திகொண்டு பிரம்மாஸ்திரமாக மாற்றி அர்ஜுனனின் அஸ்திரத்துக்கு எதிராக எய்கிறார். இரு பிரம்மாஸ்திரங்களும் ஒன்றோடு ஒன்று மோத வானில் தீப்பிழம்பு தோன்றி அனைத்து உயிர்களும் அஞ்சி நடுங்கின.

ஒரே நேரத்தில் இரு பிரம்மாஸ்திரங்கள் மோதிக் கொண்டால் பூமி அழிவைச் சந்திக்கும் என்பதை உணர்ந்த வேத ஞானி வியாசர் தன் ஞான சக்தியின் மூலம் இரு பிரம்மாஸ்திரங்களையும் தடுக்கிறார்.அர்ஜீனனையும் அஸ்வத்தாமனையும் பிரம்மாஸ்திரங்களை திரும்பப்பெறச் சொல்கிறார்.அர்ஜூனன் பிரம்மாஸ்திரத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள, அஸ்வந்தாமனோ மறுக்கிறார். உயிர்களின் நலன் கருதி யாராவது ஒரு உயிரை தானமாக தர முன் வருகிறான் தருமன், ஆகையால், அஸ்வத்தாமனோ அபிமன்யுவின் மனைவி உத்திரையின் கருவை நோக்கி செலுத்துகிறார்.அவள் கருவை அழித்து உறைவிடம் செல்கிறது பிரம்மாஸ்திரம். காவியங்களில் முதல் கருவறுத்தல் என்ற நிகழ்ச்சிக்கு வித்திட்டவர் அஸ்வத்தாமன்.  உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பகவான் கிருஷ்ணர், காத்தார்;

பரீக்ஷித்து உதயமாவதற்கு உதவினார்.  அத்தோடு பாண்டவர் மற்றும் பாஞ்சால தேசத்தின் அனைத்து வாரிசுகளும் அழிந்து போகிறார்கள். (சிகண்டி மற்றும் திருஷ்டதுய்மணன், அவர்கள் மகன்கள்,திரொளபதியின் மகன்கள் என அனைவரையும் முதல் நாள் இரவே கொன்றுவிட்டார்)..

இவ்வளவு அரும்பாடுபட்டு போரை வென்று ஒரு உபயோகமும் இல்லை என்று எண்ணி பாண்டவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். அஸ்வத்தாமனின் செயல் கண்டு வெகுண்டு எழுகிறார் ஸ்ரீகிருஷ்ணர், அஸ்வத்தாமனை அழிக்க தன் சுதர்சண சக்கரத்தை ஏவுகிறார், ஆனால் அஸ்வத்தாமன் நெற்றியில் இருக்கும் சாமந்தாகமணி அவரை காப்பாற்றுகிறது.அவருடைய சாமந்தாகமணியை பறிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

மகா பாரதத்தில் அஸ்வத்தாமன் கொல்ல ப் படுவதில்லை.மாறாக  அவன் சிகை நீக்கப்படுகிறது. கௌரவம் அழிக்கப்படுகிறது. ஒருவனை மொட்டையடித்து வீதிகளில் ஊர்வலமாக அனுப்புதல் பெரிய தண்டனையாக கருதப்படுகிறது. அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது. அஸ்வத்தாமனை இப்படி செய்துவிடுகிறார்கள்.

"கருவில் இருக்கும் குழந்தையைகூட கொன்ற மகாபாதகனான நீ பூமி அழியும்வரை உயிரோடு இருந்தாலும் உனக்கு உறவென்று யாரும் இருக்கமாட்டார்கள், உன் சாமந்தாகமணி உன்னிடம் இல்லாததால் இனி உன்னை எந்த நோயும் தீண்டும், உன் முன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும் நிற்காமல் வடியும், உனக்கு பசியோ, தாகமோ,தூக்கமோ எதுவும் இருக்காது, மனித நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நீ நுழையக்கூடாது" என்று சாபம் இடுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். உடனே "பகவானே, நான் செய்தது குற்றமென்றால் நீங்களும் பாண்டவர்களும் செய்தது எந்த விதத்திலும் தர்மம் இல்லை, நீங்கள் இட்ட சாபம் என்னை கேட்குமாயேன் அதன் முழுகாரணகர்த்தா தாங்களே, அதனால் என் தேகத்தில் இருந்து வடியும் உதிரத்தை காலம் உள்ளவரை அருந்திக் குடிக்கும் புழுவாக தாங்கள் ஜனனம் எடுக்கவேண்டும்" என்று சாபம் தருகிறார்.கடவுளால் சாபம் பெற்ற ஒரே மனிதனும், கடவுளுக்கே சாபம் தந்த ஒரே மனிதனும் அஸ்வத்தாமனே.

தருமன் அஸ்தினாபுர அரியணை ஏறியதும் காட்டுக்குள் சென்று வேத முனிவர் வியாசரின் ஆசிரமத்தில் சேர்ந்து வேதங்களை போதிக்கிறார் அஸ்வத்தாமன்.மனவந்திரங்களையும், அதர்வண வேதத்தையும் திருத்தி எழுதுகிறார்.வியாசரின் அறிவுரைப்படி அன்னை யோகமாயாவை நோக்கி தவம் புரிந்து ஸ்ரீகிருஷ்ணரின் சாபத்தில் இருந்து விடுபடுகிறார்."துவாபர யுகம் முடிந்து கலி யுகத்தில் கி.பி 4044ம் வருடம் நான் கல்கி அவதாரம் எடுக்கும் சமயத்தில் நீயும் நானும் சந்திப்போம், அப்போதுதான் உனக்கு முக்தி கிடைக்கும், அதுவே மனித குலத்தின் அழிவும் ஆகும், அதுவரை மனித இனத்திற்காக நீ வாழவேண்டும்" என்று வரமளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

36 ஆண்டுகள் கழித்து பரிக்ஷித்து மகாராஜன் அரியணை ஏற்றதும் தம் வாழ்நாளை முடித்துக் கொள்ள இமயம் புறப்பட்ட பாண்டவர்கள் அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும், அதன் பிறகு அவர் மனித சமுதாயத்தின் கண்ணில் படவில்லை என்றும் புராணங்கள் சொல்கின்றன.

இன்றும் குஜராத் மாநிலத்தின் ஆசிர்கார் மாவட்டத்தில் உள்ள மலைக்காடுகளில் அவர் சுற்றி வருவதாகவும், பலர் அவரை நேரில் கண்டதாகவும் வதந்திகள் உண்டு.அவர் நெற்றியில் பெரிய காயமும் அதில் இருந்து உதிரம் வடிந்துகொண்டே இருக்கும் என்றும், அவர் சுமார் 10அடி உயரம் இருப்பார் என்றும் மக்களிடையே ஒரு பேச்சு. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.அந்த மலையில் உள்ள மிகப்பழமையான சிவன் கோவிலுக்கு தினமும் அதிகாலையில் வந்து அவர் பூஜித்து செல்வதாகவும், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்காத மலர்களும், இமயத்தின் சாரல்களில் மட்டுமே வளரும் அதிசயமான மலர்களைக் கொண்டு அர்ச்சணை செய்வதாகவும் அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

இந்த கட்டுக்கதைகள் உண்மையோ பொய்யோ அது நமக்கு தேவையில்லை, சரித்திரம் போற்றும் ஒரு சிரஞ்சீவி வாழ்ந்திருக்கிறார், அவரை கொல்ல யாராலும் முடியாது, அனைத்து அஸ்திர சாஸ்திரமும் தெரிந்த ஒரே துவாபர யுகத்தின் நாயகன், போன யுகத்திற்கும் இந்த யுகத்திற்கும் பாலமாக இருக்கும் கடைசி மானிடன்.சிவ தொண்டில் தலைசிறந்த பக்தன், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமான பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்த்திரம், பாசுபாதஸ்த்திரம் தெரிந்த ஒரே மாவீரன், மனித குலம் வாழவேண்டும் என்று தன் சாவை தினந்தினம் தள்ளி வைக்கும் தயாளன் அஸ்வத்தாமன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.


No comments:

Post a Comment