Tuesday 5 May 2020

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் !

சில நாழிகைகளாக இடிச்சத்தம் ஓயாமல் கேட்டது. அது இடிதானா அல்லது இரணியகசிபுவின் கர்ஜனையா என இந்திரன் கலங்குகிறான். மீண்டும் தன்மீது போர் தொடுக்க வந்தானெனில் என்ன தான் இருக்கிறது இழக்க? உயிர் கூட போக முடியாது அமரத்துவம் அல்லவா தடையாக உள்ளது என நொந்தான்.

ஆட்டமே கண்டு விட்ட சத்யலோகத்தில், பிரம்மாவோ, தன்னால் வரமளிக்கப்பட்டதால் அமரத்துவத்திற்கு இணையான நிலை அடைந்துவிட்டதாக கொக்கரிக்கிறானோ? இதற்குமேல் சிக்கலான வரத்தை இதுவரை தன்னிடம் யாருமே வேண்டியதில்லையே. அவன் கணக்குப்படி பார்த்தால் என்னால் உருவாக்கப்பட்ட எதனாலும் அவன் மரணம் நேராது. மேலும் முப்பத்து முக்கோடி தேவர், மற்றும் கிங்கர, கந்தர்வ, யக்ஷ, நர, இத்யாதிகளாலும் முப்பொழுதிலும், மூவுலகிலும் தனக்கு மரணமேற்படக் கூடாதெனக் கேட்டான். நானும் யோசிக்காது வரமும் தந்துவிட்டேனே!!
 அன்றிலிருந்து அவன் செய்து வரும் பாவச்செயல்களுக்கு அளவே இல்லையே. எல்லாமறிந்த அந்த ஜகன்னாதன் தான் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும் என மனதிற்குள் அந்த மாலோலனை வேண்டுகிறார்.

தேவ, கந்தர்வ, யக்ஷ மற்றும் இத்யாதி தேவதைகளும் பூலோகத்தில் நடப்பவைகளை அச்சத்துடனே கவனித்து வந்தனர். ஒரு சிறு பாலகனுக்கும் அவன் தந்தையாகிய கொடிய அரக்கனுக்கும் நடக்கும் போராட்டத்தின் முடிவு தான் என்ன? தர்மமே உருவான அப்பரம பாகவதோத்தமன் பிரகலாதனுக்குத்தான் எத்துணை தைரியம்? அதன் அடிப்படையே அவன் மகாவிஷ்ணு மேல் கொண்ட தீர்க்கமான பக்தியே அன்றோ? அடடா! இப்படிப்பட்டப் பாவியின் பிள்ளையாகப் பிறந்தும் பக்திக்கு ஒருவன் எனப் பேர்வாங்கும் பிள்ளையாக இருக்கிறானே என அனைவரும் வியக்கின்றனர்.

சர்வேஸ்வரனான அந்த மாயவனோ சில நாழிகைகளாகவே யோக நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக உணர்கின்றனர் அவனுடனே சதாசர்வ காலமும் உறையும் மகாலட்சுமியும் மற்ற நித்தியசூரிகளும்.
 மந்தகாசப் புன்னகையுடன் மிளிரும் அமரரின் அதிபதியாம் அவனது திருமுக மண்டலம் இன்று ஏன் கொதிக்கும் பிழம்பாய்ச் சிவந்திருக்கிறது? வழக்கமான அமைதியும், ஆனந்தமும் தவழும் இந்த திருப்பாற்கடல் இன்று ஏன் குமுறிக் கொந்தளிக்கறது?

ஏதோ ஒரு வித பயம் அனைவரின் மனங்களையும் அரித்துக் கொண்டிருக்கிறதே. என்ன நடக்கிறது? என்னதான் நடக்கப்போகிறது என கற்பனை கூட செய்து பார்ககமுடியவில்லையே! இன்பம் துன்பம் ஏதுமண்டா வைகுந்தமே இன்று ஏன் கலக்கத்தில் அதிர்கிறது?
 கண்கள் மூடி இருந்தும் அம்மாலவனின் மன ஓட்டம் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கிற்று. ஒரு நொடி அன்னையைப் போல் அன்பைப் பொழிந்து, மறுநொடி குமுறிப் பெருகும் எரிமலை போல் அனல் கக்குகிறது. அவன் ஏதோ ஒரு நிகழ்வை உன்னிப்பாகக் கவனித்து வருவதைப் போல் அனைவரும் உணர்ந்தனர்.

வேறு என்னவாக இருக்க முடியும்? அண்டபகிரண்டங்களும், அஷ்டதிக்கஜங்களும், அமரலோகம் முதல் அதள பாதாளம் வரை அனைத்துமே இன்று உற்று நோக்குவது இரணியன் -பிரகலாதன் சம்பாஷணையைத் தானே!!

இதோ இரணியன் கேட்கிறான் அவன் மகனை.

பிரகலாதா!! எங்கே கற்றுக் கொண்டாய் இந்த அபத்தங்களை? என் முன்னாலேயே என் பரமவைரி கபட வேட நிபுணன் விஷ்ணுவின் புகழ் பாட என்ன தைரியம் உனக்கு?

வைகுந்தத்தில் இருக்கும் வைத்தமாநிதி இதைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.
 பொங்கும் கோபம் அவன் உடலெங்கும் பரவ சிலிர்த்தான்.

பிஞ்சிலேயே பக்தியில் பழுத்த அப்பாலகன் பதில் சொல்கிறான். “நீர் எனக்கு இப்பிறவியில் தந்தை. ஆனால் சகல ஜீவன்களுக்கும், அசையும் அசையா அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் அந்த அமலனே அல்லவா?
 இந்த பதில் கேட்டு பலகோடி சூரியன் ஒரு சேர உதித்தாற்போல புன்னகை புரிந்தான் புருஷோத்தமன்.
 கண் சிவந்து நா துடிக்க கோபத்தில் அசுரன் கத்தினான் “நானே கடவுள். என்னையே வணங்குவாய்”
 கண்ணில் பொங்கும் அருவியாய் பக்திப் பெருக்கெடுக்க, கொஞ்சமும் பதறாது பதில் பகன்றான் அவன் பிள்ளை. “எங்கும் உள்ளவன், எல்லாம் அறிந்தவன் அகில உலகையும் ஆக்கிப் பாதுகாத்து, அழிக்கும் ஆற்றல் உள்ளவன். அவன் தானே அனைவர்க்கும் இறைவன்?”

பாற்கடலில் பையத் துயில்பவன் படமெடுக்கும் பாம்பைப்போல் சீறினான். வைகுண்டவாசிகள் வாயடைத்துப் போயினர்.

கீழே குமுறினான் அவுணன்.

“அடே குலத்துரோகி. எத்தனை முறை நம் முன்னோர்கள் அவன் கையால் மாண்டனர் தெரியுமா?
 அது அவர்கள் பாக்கியம் அல்லவா தந்தையே,” சாந்தமாகப் பதிலளித்தான் பிரகலாதன்.
 இரணியனின் கோபம் எல்லை கடந்தது. எகிறிக் குதித்தான் சிம்மாசனத்திலிருந்து.

“யார் கூட இருக்கும் இறுமாப்பில் இவ்வாறு நீ பேசுகிறாய்? யானையின் கால், பாம்பின் விஷம், காட்டு விலங்குகள், இவையெல்லாம் பலிக்காது, பாதாளத்தில் தள்ளி விட்டும் பிழைத்தெழுந்து வந்து பிதற்றுகிறாயா?”

அமைதியின் வடிவம் அதற்கு மறுமொழி கூறினான் “ஆதிசேடன் மேல் ஆனந்தமாய் வீற்றிருக்கும் அந்த அரும் பொருளால் காக்கப்பட்டவனை எந்த ஆபத்தும் எப்படி நெருங்கும் அப்பா?”

மறுமொழியால் மதிவதனன் மனம் மகிழ்ந்தான். இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே என உணர்ந்தான்.

பொல்லா அரக்கனோ பொறுமை இழந்தான்

“நிறுத்து! அப்படிக் கூப்பிடாதே! ஆபத்து இல்லையென்றா ஆணவத்துடன் கூறினாய்? இதோ நான் தான் அந்த ஆபத்து. எங்கும் இருப்பான் என்று சென்னாயே, முடிந்தால் உன்னை அவன் என்னிடம் இருந்து இங்கு, இப்போது காப்பாற்றட்டும்!! பார்க்கிறேன்.

என்று கூறிக்கொண்டே மதயானை போன்ற தன் பெரும் உருவத்தை முறுக்கேற்றி, மேரு மலை போன்ற தன் கதாயுதத்தைச் சுழற்றியவாறே இறங்கி வந்தான்.

அலைமகளின் கேள்வன் ஆயத்தமானான். அனபனைக்காக்க அவகாசம் இல்லை. அதனால் அவ்வைனதேயனையும் துறந்தான்.

சபையோர் கல்லாய்ச் சமைந்திட, கலங்காது எதிர் நிற்கும் பாலகனைப் பார்த்துக் கேட்கிறான் கீழ்மகன்.
“எங்கும் உள்ளானா உன் விஷ்ணு?

பதில் சொன்னான் பக்தியில் பகலவனாய் விளங்கும் பக்தப் பிரகலாதன்.

தூணோ துரும்போ

வானோ வளியோ

ஊனோ உயிரோ

உயிரின் விதையோ

மண்ணோ மலையோ

கடலோ நதியோ

நதியின் முடிவோ

பனியோ தீயோ

தீயின் வாயோ

கல்லோ கனியோ

கனியின் சுவையோ

கள்ளோ முள்ளோ

கரும்போ கார்முகிலோ

மாந்தரோ மாக்களோ

காண்பவையோ காணாதவையோ

உள்ளனவோ அல்லனவோ

அதிலும், இதிலும், எதிலும் உள்ளான் அவனே !!

ஒருகணம் திகைத்தான் ஒப்பிலியப்பன். சர்வ வியாபியே ஆனாலும் இரணியன் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எதைக் காட்டி இதில் உள்ளானோ எனக் கேட்பானோ இந்தப்பிள்ளை எதைச்சொல்வானோ? என்று.

அப்படியா? சரி, இதோ இது நானே கட்டிய கல் தூண். இதில் இருக்கிறானா?” என அவன் தர்பார் மண்டபத்தின் ஒரு தூணைக் காட்டிக் கேட்கிறான்.

ஆஹா… இதுபோதும்!! திருத்தேகம் தீப்பிழம்பாகத் தீர்மானித்தான் தீனதயாளன். நேரம் நெருங்கி விட்டது என.

ஓங்கி அடித்தான் இரணியன் தூணை. அவன் அடி விழுந்த நொடி கேட்டது பேரிடி. தூளானது தூண் மட்டுமல்ல தூர்த்தன் பெற்ற வரமும் தான்.

கருங்கற்கள் சுற்றிலும் சிதற,

காண்போர் பயத்தில் அலற,

அண்டகடாகங்கள் அதிர,

அஷ்டதிக்கஜங்கள் பிளிற,

அமரர் அனைவரும் மிரள

தேவர்கள் மகிழ்ச்சியில் திளைக்க,

அசுரர்கள் அச்சத்தில் மரிக்க,

பக்தர் மனம் பூரித்து மகிழ,

இரணியன் என்னவென்று தெரியாது குழம்ப

வெளிவந்தது ஓர் பேருருவம்.

சூரியன் மறையத் தயாரானான். செங்கதிர்களை அவ்வுருவின் மேல் உதிர்த்து. தன் ஒளியை விடப் பலகோடி மடங்காய் ஜொலிக்கும் அத்திருவுடம்பைக்கண்டு விதிர்விதிர்த்து.

வெடித்தது பூமிப்பந்து. துடிதுடித்தது பிரபஞ்சம். ஆர்ப்பரித்தன மேகங்கள். சுற்றிச்சுழன்றடித்தான் வாயுதேவன். அஞ்சி அலறி ஓடின புள்ளினமெல்லாம். அடங்கின அதனதன் கூட்டினிள்ளே.

இரணியனின் இறுதியை எதிர் நோக்கிக் காத்திருந்த முனிசிரேஷ்டர்கள் வேத முழக்கமிட்டனர். வான்வாழ் தேவரும் தேவதைகளும் மலர்மாரி பொழிந்தனர்.

எண்ணெழுத்து மந்திரம் எல்லாவிடங்களிலும் எதிரொலித்தது. சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் சந்தோஷ கூச்சலிட்டனர்.

சப்பரமஞ்சத்தில் சயனித்திருந்த யக்ஷ கந்தர்வர்கள் மதிமயங்கித் தரையில் வீழ்ந்தனர்.

சமுத்திரங்கள் கூட சத்தம் எழுப்பாது உறைந்தன. மூன்றுலோகங்களும் இது ஊழிக்காலம் தானோ எனக் கலங்கின.

ஆழிப்பேரலைகூட இந்த ஆத்திரத்துக்கு முன் ஆட்டின் குளம்படி நீர் போல் அடங்கியது.

மலைகள் குலுங்கின. நிலமகள் தன் நெடுநாள் ஏக்கம் தீர்க்க தன் நாயகன் எடுத்திருக்கும் அவதாரத்தைக் கண்டு புளகாங்கிதமடைந்தவளாய் மேனி சிலிர்த்தாள். கோட்டை கொத்தளங்கள், கூட கோபுரங்கள், மாடமாளிகைகள் மண்ணில் சரிந்தன. அவற்றோடு உலகில் அநீதியும், பாவமும் அடியற்று வீழ்ந்தன.

அழகில் எல்லையில்லா ஆளரியாய் ஆஜானுபாகுவாய், வெஞ்சினத்தீயே வெளிவரும் மூச்சாய், செந்நிறக்கண்கள் தகிக்க, மனிதனும் மிருகமும் கலந்த “நரசிங்கமாய்” முழங்கிப் புறப்பட்டது அவ்வுருவம். அந்த கர்ஜனையில் கலங்கிப்போனது இரணியனின் உள்ளம். தன் முன்னே நிற்கும் இது என்ன? குழம்பிப்போனான்.

எட்டுத்திக்கும் எதிரொலித்தது அதன் இடிமுழக்கக் குரல்.

அந்தி வேளையில் உதித்தது ஆங்கோர் கோடி சூர்யப் பிரகாசம்.

ஆறாச்சினத்தோடு சீறிக்கிளம்பிற்று ஓர் அரிமா.

அள்ளி எடுத்தது அவனை ஒரே பிடியில்.

துள்ளி வந்து குதித்தது வாசற்படியில்.

ஆயுதமெல்லாம் அற்பர்களுக்கே, என் வெறும் கை விரல் நக நுனியே போதும் இந்த பிரபஞ்சம் அனைத்தையும் அழிக்கவென்று ஆஹாகாரம் செய்தது.
 பிடித்தது அவன் உடலை. படுக்கையாய் இட்டது அதன் மடியில்.

விசாலமாய்ப் பிளந்தது அவன் மார்பை. கிழித்தது அவன் வயிற்றை. கிள்ளிக்களைந்தது அவன் ஆவியை. உருவி எடுத்தது அவன் குடலை அதனோடு அதர்மத்தின் முழுமுதலை. குடித்தது அவன் குருதி அதில் தெறித்தது அதன் உறுதி.
 அவனைப் பழித்தாலும் விமோசனமுண்டு. ஆனால் அவன் அடியாரைப் பழிப்போர்க்கு ஆவது என்னவென்று உணர்த்தவே உட்கார்ந்து சிதைத்தது அவன் உடலை. கீழ்வானில் சிவந்து நின்ற சூரியன் அதன் ஜ்வாலைக்குமுன் நிற்கவொட்டாது ஓடி ஒளிய எத்தனிக்கிறான்.

தெய்வங்களனைத்தும் சாந்தி சாந்தி என ஒலி எழுப்பி சினங்கொண்ட சிம்ஹத்தை அமைதிப் படுத்த முயன்று தோற்றனர். நித்தியம் அவன் மார்பில் குடிகொண்ட மகாலட்சுமியும் தயங்கி நின்றாள். அகில உலகமும் இந்த ஊழித்தாண்டவத்தைக் கண்டு திகைத்து நின்றது.

எழுந்தான் பிரிய பக்தன் பிரகலாதன். கண்ணீர் மல்க நடந்தான் அவ்வுருவை நோக்கி. கொதிக்கும் சினத்தினுள்ளும் அவன்பால் அன்புடைய கோவிந்தனைக் கண்டான். கோடி நமஸ்காரம் செய்தான். இசை பாடிப் பரவி அவன் சினத்தைக் கொன்றான்.

கருமேக வண்ணன் உடனே கருணாமூர்த்தியாய்க் காட்சி தந்தான். அள்ளி எடுத்தணைத்தான் அவன்றன் ஆருயிர் அடியவனை. அன்பு பெருக்கெடுக்க அமர்த்திக் கொண்டான் தன்மடியில். கோபம் மாறிக் கண்ணில் சாந்தம் தவழ அமர்ந்தான்.

பிறகு அன்னை வந்தாள். அமைதியைத் தந்தாள்.

சினம் கொண்ட சீரிய சிங்கம் ஒருமுறை பிடறி சிலிர்த்துப் பின் செவ்வனே சிரித்தது.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !


1 comment:

  1. ஆஹா. இதற்கு மேலும் அற்புதம் உண்டோ, என நினைக்க வைக்கும் பதிவு. கோடி கோடி நமஸ்காரம்.

    ReplyDelete