Monday 18 May 2020

வள்ளலார் பற்றிய அற்புத நிகழ்வுகள்

Forward message .......

வள்ளலார் பற்றிய அற்புத நிகழ்வுகள்.
வள்ளலார் பொன்னுடம்பு பெற்ற ரகசியம் முழுவதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும், நாடிசுத்தி செய்து, உடல் அழுக்கு (கார்பன்) நீக்கி, சுவாசத்தை ஏதோ ஓர் அளவில் ஒழுங்குபடுத்துவதன் மூலம் நரை, திரை, மூப்பு முதலான நோய்களின்றி உடம்பு பொன்னாகிறது என நூற்றுக் கணக்கான சித்தர் பாடல்கள் மூலம் யூகிக்க முடிகிறது. “வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு” என்பதை வாரியார் சுவாமிகள் தனது சுய சரிதத்தில் எழுதுகிறார்.
“வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன்.
அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன். ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத்துடன், அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காடுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார் என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன் ” என்கிறார்.
பொன்னுடம்பு பெற்ற வள்ளலார்,
கடவுளை ஆறு வேளை… அதாவது சூரியோதயம், உச்சிப் பொழுது, சாயரட்சை, மாலை, யாமம் மற்றும் வைகறையில் தியானம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறார். அந்த தியானம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும்போது, எக்காலத்திலும் புருவ மத்தியின் கண்ணே நமது கரணத்தைச் செலுத்தவேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார்.
புருவமத்தி என்பது சுழுமுனை நாடி, அந்தக் கரணம் அதாவது மனம், புத்தி என்கிற இடது வலது சுவாசங்களை ஒருமுகப்படுத்துவது என்பதன் மூலம் பொன்னுடம்பைப் பெறுவதையே சுட்டுகிறார் என்று கொள்ளலாம். சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்ற மூன்று ரகசியக் குறியீடுகளைத் திருவருட்பாவில் பல இடங்களில் அவர் வெளிப்படுத்துகிறார். விந்து வீணாக வெளியேறாமை போகாப் புனல், சாகாத்தலை என்பது இறப்பற்ற பெருநிலை- அதாவது மரணமிலாப் பெருவாழ்வு, வேகாக்கால் என்பது காற்று பற்றிய ரகசியம் (கால் என்பது காற்றைக் குறிக்கும் சொல்), வெந்து அழியாத பிராணவாயுவே வேகாக்கால், தீய்த்துக் கெடுக்கப்படாத பிராணனாகிய காற்று – உடம்பு முதிர்ந்து வாடிக் கெடாதபடி பிராணனை அடக்கும் வித்தைதனை அறிந்தால் மரணம் இல்லை என்கிறார்.
“சாவாதிருக்கும் சாகாக்கல்வி” என்பதை நமக்குக் கொட்டித் தந்தவர்கள் தமிழகத்துச் சித்தர்கள். அவர்கள் சொன்ன வழிமுறைகளையெல்லாம் சுருக்கிச் சொன்னால், மூன்று வழிகள் கிடைக்கின்றன. ஒன்று – ரசவாத முறை, அடுத்தது – குண்டலினி யோகம், மூன்றாவது உல்டா சாதனை எனும் தலைகீழ்ப்பயிற்சி முறை எனும் மறித்தேற்றும் முறை எனப் பட்டியலிடலாம்.
பாதரசம், கந்தகம், காக்கைப் பொன் என்கிற மைக்கா ஆகிய வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி, ரசாயன யுக்கிகளால் (கெமிக்கல்) சாவா நிலைக்கு முயற்சி செய்துள்ளனர். குண்டலினி யோகத்தில் முன் சொன்ன வேதிப்பொருட்களுக்கு பதிலாக நம்முடைய உடலில், தலையில் சகஸ்ராரத்தில் ஊறிவரும் உயிர்ச்சாறு பருகுவது விளக்கப் படுகிறது. இதனை மெய் யாகம் என்கிறார் திருமூலர்.
தமிழ்ச் சித்தர் மரபு என்கிற நூலில் பேராசியர் டி.என். கணபதி அழகாக இதுகுறித்து விளக்குகிறார்…. “ஓர் இரும்புத் துண்டை நீரில் போட்டால், அது மூழ்கிவிடுகிறது. ஆனால், அதே இரும்புத் துண்டைக் கொண்டு, படகு செய்து நீரில் மிதக்க விட முடிகிறது, கடலைக் கடக்க உதவுகிறது. அதேபோல், பிண்டநிலையில் ஒரு கரையில் இருக்கும் ஆன்மாவை, மறுகரையில் அண்ட நிலையில் இருக்கும் பரமான்மாவுடன் இணைக்கிற படகாக இந்த உடம்பு பயன்படுகிறது. மூழ்கும் இரும்பை மூழ்காத படகாக்குவது போல், அழியும் உடம்பை அழியா உடம்பாக்கும் விந்தையே குண்டலினி யோகம்!”
அடுத்து…. மறித்தேற்றும் முறை… சித்தர்களால் சித்தர்களுக்கு மட்டுமே புலப்படுத்தப்படும் ரகசியம் இது. விந்துவை மறித்து மேலேற்றும் முறை. இந்த உல்டை சாதனையை நாத சித்தர்கள் பயில்கிறார்கள். இந்த உயரத்துக்கெல்லாம் பாயாவிடினும் காற்றைக் கையாளும் கலையை அறிந்தால் வலுவான, பொலிவான உடலும் உள்ளமும் ஆன்மாவும் நம் வசமாவது உறுதி. வள்ளலார், “சாகாத்தலை வேகாக்கால்” என்கிறார். வேறு சில சித்தர்களோ சிறிது மாற்றி, “சாகாக்கால் வேகாத் தலை” என்கின்றனர். ‘சாகாக்கால்’ என்று பிராணாயாமத்தையே பேசுகின்றனர். ‘வேகாத்தலை’ என்பது சகஸ்ராரமாகிய தலையில் உள்ள சக்கரம்.


No comments:

Post a Comment