Friday 29 May 2020

ஞானப்பாடல்

இகமொடு பரமனெவே நின்றாடும்
அவனருளால் அனைத்துமே இவனாகும்
பரலோக வாழ்வுமிங்கே நனவாகும்
இதிலிதற்கு இடங்கொடுப்பாய் புகழ்மைந்தனே
தாமரைமேல் அமர்ந்துள்ள அல்லிகையவள்
மணமுவந்துதான் உரைப்பாள் மேலும் பாரே
காணுகின்ற காட்சியெல்லாம் பிம்பமாகி
பிம்பமாகி நின்றதெல்லாம் எழுந்து ஆடி
பொறுளுனர்த்தி அருள்நிறையாய் நிறவிநிற்க
அருளுலகில் கண்ட காட்சி ஆட்சி செய்ய
பற்றி நீயும் நடந்திடுவாய் பாரில் நீயே
கண்டதொரு காட்சிதன்னை நினைவில்கொண்டு
வரும் பகலில் அதிசயங்கள் பலவும் காண்பாய்
பொருளுலகில் அருள் காட்சி மாயையாய் நிற்க
நிலவுலகில்   நீண்டு வாழும் ரகசியமறியார்
பொய் கூறி அற்பம் பேசி பொழுதும் போக்கி
இருக்குமிடமறியார் செல்லுமிடமறியார்
மரணமே வாழ்வின் நியதியெனக்கொண்டு
பாழ்குழிதனிலே விழத்துணிந்து பகுத்தறிவு பேசி த்திரிவார்
எத்திக்கும் பரவி நிற்கும்பரமனை காணார்
வீண் பிறவி எடுத்திங்கு இயம்புகிறாரே
தானத்துள் சிறந்த தானங்கள் பலவிருக்க
கிடைத்தரிய மனித பிறவியை தானஞ்செய்து
ஐந்தறிவு உயிர்களுக்கு உயர்வை தானம் அளித்து
தாம் கீழிறங்கி அல்லல்பட்டு, நிலையறியாமல்
இன்னும் எத்தனை பிறவியோ கீழேமேலே சென்றுகொண்டு
வீண் கதைகள் பேசி த்திரிந்து
உத்தமர் போல காட்டிக்கொண்டு
உழல்வோர் கோடானுகோடி
தவப்புதல்வன் நீயுமே இந்நிலை மாற்ற
தரணியிலே  வந்துதித்தாய் அறிந்துகொள்ளே
நிலை மாறும் இவ்வுலகில் நிலையாய் நீயும்
நிலைத்து நிற்க வழியும் சொன்னேன்
அறிவாய் நீயே
நீயே ஆத்மன் உயிரே கடவுளெனவே உணர்ந்துகொண்டாய்
பொருளற்று பிதற்றுவோர் தம் சபையில்  நீயமர்ந்து
எனை ப்பேசி பாடிப்புகழ்ந்து பகுத்து நீயும்
உண்மைதனை உரக்கவுரைத்து
மன்னர் போல வாழ்வதற்கு
சித்தர் வழி ஒன்றதுவே காட்டிடுவாய்
பித்தம் நீங்கி நிலைவாழ்வு நிலைபெறவே
ஞானக்களஞ்சியத்தை நீயவிழ்ப்பாய் சபைநடுவே
பார் போற்றும் பரமன் புகழ் போற்றி நீயூம்
வழிகாட்டி வழி நின்று துணையாக
புகழுலகம் செய்திடுவாய் அகமகிழ
அகமகிழ ஜெகத்தினிலே சிகரமேறி
உயர்நிலையை உயர்ந்து நின்று
உய்த்துய்வித்து உலகெங்கும் வலம்வந்து
ஆழ்ந்தனுபவித்து அதில்துய்த்து
ஆரம்பமும் முடிவும் ஒன்றெனவே கண்டுகொண்டு
வரமதுவும் நீயேயாகி சிவஜோதியிலேகி
பரப்ரம்ம பரமானந்த பரஞ்சோதியாய் பறந்துவிரிந்து
பால்வெளி தாண்டி பலகிரகங்கள் தாமும் படைத்து
தானுமாலயனாய் தன்னிகரற்ற தலைவனுமாகி
இகபரஜோதியாய் பவனி வந்து
அணைத்துமாகி இருந்து
ஒளிர் விடும் நிலையே உன் உள் நிலையே
உள் சென்றால் வெளி கிட்டும்
வெளியிலேயே நின்றால் இருளில் மூழ்கும்
அருட்பெருஞ்சோதியே ஆருயிர் என்றுணர்ந்து
திருவை உண்ணுடலில் ஆராதனை செய்து
அழியாத்திருமேனியனாய் ஆழியிலே வலம் வந்து
அழியாதிருப்பாய் என்மகனே நீயும்
உன் குடியும் உன் வம்சமும் வழிவழியாய்
பற்றி நின்று பாரினிலே தருமந்தழைத்து
என்றென்றுமாய் காலசக்கரமாய் நீநின்று
சுழன்றோடி இயங்கும்பணிசெய்து
இருப்பாகவே நீ இருப்பாய் சிரஞ்சீவியாக என்றென்றும்


இவநுடற்ப்பெயர்
- தி. இரா. சந்தானம்

இவனாத்மனின் இடமடையாளம் அகத்தியம்.

No comments:

Post a Comment