Tuesday 19 May 2020

வள்ளலார் அருளிய முத்தான பத்து பாடல்கள்.

வள்ளலார் அருளிய முத்தான பத்து பாடல்கள். 

கந்தர்சரணப்பத்து

1) அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா வமலா சரணம் சரணம்
பொருளா வெனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில் வாகனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

அருள் நிறைந்த அமுதமே,
அழகனே, மலமில்லாத தூயனே,
என்னையும் பொருளாக மதித்து ஆள்கின்ற புனிதனே, பொன்னும்மணியும் போன்றவனே, மருட்சி யுடையார் நினைத்தற் கரியவனே, மயிலை வாஹனமாக உடையவனே, கருணைக்குச் சிறந்த இடமானவனே, கந்தனே, உன் திருவடியே எனக்குக் கதியாகும்.

2) பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணே ரொளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணே ருயிரே உணர்வே சரணம்
உருவே யருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

இசை பொருந்திய மறையை ஓதுவதால் விளையும் பயனே, பதிப் பொருளே, பரம்பொருளே, விண்ணிடத்து விளங்கும் ஒளிப் பொருளே, அதனின் மேலாய வெளியே, அவ்வெளியின் விளைவாகிய பொருளே, உடற்குள் நிலவும் உயிராயவனே, உணர்வு வடிவாயவனே,
உருவமாயும் அருவமாயும் உள்ள பொருளே, எனக்கு உறவாகியவனே,
என் கண்ணே, கண்ணின் மணியே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலாம்.

3) முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவே லரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

முடியா முதற் பொருளே, முருகனே, குமரனே, வடிவேலேந்தும் அரசனே, மயிலேறும் மணிபோலும் பெருமானே, அடியவர்க் கெளியவனே, அரியவனே, பெரியவனே, விலக்கரிய கதியாகுபவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

4) பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவ சண்முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

மலராகவும் மணமாகவும் உள்ளவனே, பொருட் செல்வமும் அருட் செல்வமுமானவனே, தலைவனே, குகப் பெருமானே, ஞானாசிரியனே, ஞானச் செல்வமே, தேவனே, தெளிவின் வடிவாயவனே, சிவ சண்முகக் கடவுளே, கற்பகச் சோலைக்கு அழகுதரும் கற்ப தருவே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

5) நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுண் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

ஆடுகின்ற ஒப்பற்ற பெரிய மயிலை வாஹனமாக உடையவனே, நல்லவர்கள் பாராட்டும் வல்லமை யுடையவனே, தேகத்திற்கு வண்மையும் வாழ்க்கைக்குச் செல்வமும் தருபவனே, தேவர்கள் எய்துதற் கரியவனே, பெரிய வண்மையுடைய தோள்களை உடையவனே, ஒப்பற்ற பெரிய முதல்வனே, தெய்வமணியே, கந்தசாமிக் கடவுளே நின் திருவடி எனக்குப் புகலிடமாம்.

6) கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக் கருள்வோய் சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவாகிய நல்லொளியே சரணம்
காலற் றெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

அழகிய குறமகளாகிய வள்ளி நாயகியார் கணவனே, உயர் குலத்துப் பெரிய மாணிக்க மணியே, சீலமுடைய பெரியோர்க்குஅருள் செய்பவனே, சிவபெருமான் மகனே, நிலத்தில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்குபவனே, நீதி வடிவாகிய நல்ல ஒளிப் பொருளே, நமன் போந்து செய்யும் துன்பத்தை நீக்குபவனே, கந்தசாமிக் கடவுளே, உன்திருவடியே எனக்குப்புகலிடமாம்.

7) நங்கட் கினியாய் சரணம் சரணம்
நந்தா வுயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவை தந்தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகநன் றருள்வோய் சரணம்
சுரர் வாழ்த்திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

எங்களுக்கு இனியவனே, குன்றாத வுயர்வுடைய சம்பந்தப் பெருமானே, பிறைத் திங்களைச் சூடிய சடையையுடைய சிவபெருமான் மகனே, பார்வதி தந்தருளிய நற் புதல்வனே, உயரிய இன்ப வாழ்வை மிக நல்குபவனே, தேவர்கள் வாழ்த்தி மகிழும் எங்கள் தலைவனே, கங்கை மடியிலேந்தி வளர்த்த குழந்தையே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

8)ஒளியுள் ளொளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

ஒளிக்கு ஒளி நல்கும் காரணப் பொருளே, ஒன்றாயும் பலவாயும் தோன்றும் பரம்பொருளே, தெளிவுடையார்க்கும் தெளி வளிக்கும் தெளிபொருளே, சிவமே, சிவப் பேற்றுக்குரிய தவமே, முற்றப் பழுத்த கனியே, அமிர்தமே, அறிவே, இன்பமே பொருந்த அருள்பவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடியே எனக்குப் புகலாகும்.

9) மன்னே யெனையாள் வரதா சரணம்
மதியே யடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம
்புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவே லரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

மன்னவனே, எனை ஆண்டருளும் வரதனே, இயற்கை யறிவு வடிவினனே, அடியேனது வாழ்வாயவனே, பொன் போன்றவனே, தூயனே, புகழ்ந்து ஏத்தும் அன்பர் மனத்தில் புகுந்திருப்பவனே, அன்னை போல்பவனே, கூரிய வேலேந்தும் வேந்தனே, ஆறுமுகப் பெருமானே, மலை போன்ற தோளை யுடையவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடி எனக்குப் புகலாம்.

10) வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவை யில்லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

வேதத்தின் பொருளாயவனே, தேவர்கட்குப் பெருமானே, ஞான வடிவினனே, அழகிய மயிலை வாகனமாக வுடையவனே, ஓசையின் ஒலி வடிவாகியவனே, குற்றமே யில்லாதவனே, செவியாற் கேட்டற் கினிமை தரும் புகழை யுடையவனே, கந்த சாமிக் கடவுளே உன் திருவடி எனக்குப் புகலிடமாம்.


No comments:

Post a Comment