Thursday 21 May 2020

கிரிவலமுறை

கிரிவலமுறை : திருஅருணாசலேச்வரர் கோயிலருகிலுள்ள இரட்டைப் பிள்ளையார் சந்நிதியின் பின்புறத்தினின்று திருஅண்ணாமலையைத் தரிசிக்க வேண்டும். இதற்குச் “சாணக்ய தரிசனம்“ என்று பெயர். அறிவில் சிறந்த சாணக்யர் தம் சபதத்தை இறையருளால் நிறைவேற்றித் தம் குடுமியை மீண்டும் முடிந்த இடம் இதுவே. இத்தரிசனத்தால் குழந்தைகளுக்குக் கல்வியறிவு விருத்தியாகும்.. படிப்பில் மந்தமாயுள்ள பிள்ளைகள் இத்தரிசன மஹிமையால் கல்வியில் நல்ல முன்னேற்றமடைவர். இவ்விடத்தில் சிலேட்டு, எழுதுகோல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றைத் தானமளித்தால் இதன் பலனாய் அவர்தம் குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர்.  ஸ்ரீ இரட்டைப் பிள்ளையார் தரிசனத்திற்குப் பின் திரு அருணாசல சிவன் கோயில் கிழக்குக் கோபுரம் வழியே உள் நுழைந்து, இடப்புற வாயில்படிப் பிள்ளையார், கோபுரத்தின் உட்புறம் வலது, இடப்புறமுள்ள ஸ்ரீகாளிதேவியர், கம்பத்து இளையனாராகிய ஸ்ரீமுருகன், ஸ்ரீநந்தீஸ்வரர், கிளிக்கோபுரம், இடப்புறம் திரும்பி ஸ்ரீபிரம்மலிங்கம் ஆகிய இறைமூர்த்திகளைத் தரிசித்துத் தெற்குக் கோபுரம் குளத்தருகே, மூன்று கோபுரங்களைக் காணும், முக்கூட்டுத் தரிசனத்தைக் கண்டு, தெற்குக் கோபுரவாயில் வழியே வெளிவந்து கிரிவலத்தைத் துவங்க வேண்டும். முக்கூட்டுத் தரிசனத்தின் பலனால் குடும்பத்தில் மனைவி, மக்களிடையேயுள்ள பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்ந்து மன அமைதி கிட்டும். அலுவலகம், குடும்பம், பொருளாதாரத் துன்பங்களில் அவதியுறுவோர்க்கு முக்கூட்டுத் தரிசனம் நல்வழிகாட்டி அமைதியைத் தரும். இதற்கெல்லாம் ஆழ்ந்த குரு நம்பிக்கை தேவை.
கிரிவலத் துவக்கம் : 1. ஸ்ரீ இரட்டைப் பிள்ளையாரில் துவங்கும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் மௌனம் அனுஷ்டிப்பது சிறந்தது.
2. ஓம் நமசிவாய, ஓம் முருகா, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீகாயத்ரி மந்திரம்,, ராம நாம தாரக மந்திரம் போன்ற இறை நாமாக்களை, இறைத் துதிகளை இடைவிடாது கூட்டாகப் பாராயணம் செய்தலும் மௌனத்திற்குரிய பூரண பலனளிக்கும்.
3. கிரிவலத்தில் செருப்பு அணிதல் கூடாது. ஆண்கள் வேஷ்டியை மேல்பகுதி இடப்புறமாகச் செருகி அணிதல் சிறந்தது. பஞ்சகச்சம் (OR) மேற்கு வங்கம்/ஆந்திர பாணியில் வேஷ்டியைக் கச்சம் வைத்துக் கட்டினால் சுவாச நிலை சீர்பட்டு மனம் அமைதி பெறும். பெண்கள் மடிசார் முறையில் புடவை அணிவது உத்தமமானது.
4. நெற்றிக்கு மஞ்சள்/விபூதி/குங்குமம்/சந்தனம்/சிந்தூரம்/ நாமம் ஏதேனும் இட்டுத்தான் கிரிவலம் வரவேண்டும்.
5. கிரிவலம் வருகையில் பழங்கள், பிரெட், பிஸ்கட், சாதம், நீர், மோர், உடைகள் போன்றவற்றை எடுத்துச் சென்று ஆங்காங்கே ஏழைகளுக்கும், பசுக்கள் போன்றவற்றிற்கும் தானமாக அளித்திட அவற்றின் பலன்கள் அபரிமிதமாகப் பெருகி நமக்கு ஆசியளிக்கின்றன.
பெரியோரின் ஆசி
பிரபஞ்சத்தில் சர்வேஸ்வர மூர்த்தியே ஸ்தூல ரூபமாக விளங்கும் ஒரே மலை திருஅண்ணாமலை, ஆதலின் மஹரிஷிகள், யோகிகள், ஞானிகள், முமூட்சுக்கள் போன்றோர் எப்போதும் வெவ்வேறு ரூபங்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இறைவனை ஸ்தூல ரூபத்தில் தரிசித்து பேரானந்தம் அடைந்து அதனைக் கிரிவலம் வருவோர்க்கு ஆசியாக அளித்திட அவர்தம் புண்ணிய சக்தியே இறையருளால் நம் துன்பங்களைத்   துடைக்கின்றன.
  1. நம் வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவர்களும், உத்தம கந்தர்வர்களும், மஹரிஷிகளும் வெவ்வேறு ரூபங்களில் நம் தான தருமங்களைப் பெற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர். திருஅண்ணாமலையின் தெய்வீக விசேஷம் என்னவெனில் எப்போதும், எந்நேரமும் யாரேனும் ஒருவரேனும் கிரிவலம் செய்த வண்ணம் இருப்பர். கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ தரிசனம், ஏகமுக தரிசனம், ஸ்ரீசோமாஸ்கந்த தரிசனம், பஞ்சமுக தரிசனம், தசமுக தரிசனம் என பலவகைப்பட்ட தரிசனங்கள் உண்டு. இதைத் தக்க குருமூலம் அறிவோமாக!
  2. நம் குருமங்கள கந்தர்வா நூற்றுக்கணக்கான கிரிவல தரிசனங்களை இறையடியார்களுடன் கிரிவலம் வந்தவாறே அவற்றின் மஹிமைகளோடு காட்டியுள்ளார். இத்தகைய ஆன்மீகப் பெரியோர்களை நாடினால் திருஅண்ணாமலையின் ஆன்மீக இரகசியங்களை நன்கு உய்த்துணரலாம்.
  3. செங்கம் ரோடில் இருந்து கிரிவலப்பாதை பிரியும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் சிங்கமுகம் கூடிய சுதையுடன் “சிவராஜ சிங்க தீர்த்தம்“ உள்ளது. இவ்விடத்தில் எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் செய்த எவ்விதக் கொடிய தீவினைக்கும், தீயபழக்கத்திற்கும், (மது, புகை, தகாத உறவுகள், களவு ) தக்க முறையில் இத்தீர்த்தத்தில் பரிகாரம் தேடலாம். ஆனால் தன்னால் பாதிக்கப்பட்டோர்க்குத் தக்க நிவாரணமளித்து அத்தவறை மீண்டும் செய்யலாகாது என்ற வைராக்கியம் மேற்கொள்ள வேண்டும். தவறிடில் கடும் சாபங்கள் உண்டு.
  4. அடி அண்ணாமலையில் ஸ்ரீஆதி அண்ணாமலையாரைத் தரிசித்து, தசமுக தரிசனத்தைப் பெற வேண்டும்.
  5. பல தரிசனங்களை அடுத்து வருவது சிவசக்தி ஐக்யஸ்வரூப தரிசனம் ஆகும். இங்கு சக்தி சொரூபமாக ஸ்ரீபார்வதிதேவி மலைமுகடாக உச்சியின் முன் காட்சியளிக்கின்றாள். உச்சியே சிவம், முன்னிற்கும் முகடே சக்தி. இவ்விடத்தில் தான் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரின் பரிபூரண இறையருளுடன் நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தமஹாபுருஷரின் குருவருளுடனும், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருட்கடாட்சத்தால் “ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்“ நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்திலிருந்து பெறுகின்ற சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தால் குழந்தைப் பேறு கிட்டும். ஒரு நிலைப்பட்ட நிலை எளிதில் கூடும். இது பல யுகங்களில் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவின் பாரம்பர்ய சித்த புருஷர்கள் தங்கி அருள்பாலித்த விசேஷப் பகுதியாகும்.
  6. ஸ்ரீகுபேரலிங்க தரிசனம், ஸ்ரீஇடுக்குப் பிள்ளையார் தரிசனம், பஞ்சமுக லிங்க தரிசனம் இவற்றுடன் இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னுள்ள ஸ்ரீபூத நாராயணப் பெருமாள் சன்னதியில் தான் கிரிவலம் நிறைவு பெறும்.
  7. ஓம்காரப் பிரணவத்தில் துவங்கி இப்பூதவுடலில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதற்கு அருள்பாலித்த ஸ்ரீபூத நாராயணப் பெருமானை வணங்கி் கிரிவலத்தைப் பூரணம் செய்திடல் வேண்டும்.
  8. இக்கிரி வலத்திற்குப் பிறகு கோவிலில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீஉண்ணாமுலையம்மையையும் வணங்கிடில் பிரார்த்தனா பலன் பரிபூரணமடையும்.

No comments:

Post a Comment