Friday 17 November 2017

மகா பெரியவர் நாத்திகர்களுக்கு கூறிய சம்பவம்

பெரியவா  சரணம்

ஒரு  முறை  திருவான்மியூரில்    பெரியவா   திருமுன்னர்  காலில்   செருப்பு,  சூட் கோட்டுடன்    மரியாதை   இல்லாமல்    குறுக்கே  நின்றான்.

அவன்  ஸ்வாமிகளிடம்   நெஞ்சை  நிமிர்த்தி,  "ஏன்   கல்லில்   பால்  ஊத்தற?    அதையே   செய்  என்று   எல்லாருக்கும்   ஏன்  சொல்ற!"  என்று   சுடுசொல்   சொன்னான். 

அருகில்    இருந்த  எல்லாரும்   அதிர்ச்சியும், ஆத்திரமும்   அடைந்தனர்.  ஸ்வாமிகள்    கையசைப்பில்    அனைவரும்  ஒதுங்கி  நின்றனர்.

பெரியவா  மிகவும்   அன்புடன்  அவனை  நெருங்கினார்.   அந்த  இளைஞனிடம்,  "எங்கே  போறே? என்று  கேட்டார். " கிண்டிக்கு " என்றான்  அவன்.

ஸ்வாமிகள், " இப்படிப்  போனா  கிண்டி  போலாமா? "என்று   கேட்டார். " அது   தான்   கைகாட்டி,  பெயர்ப் பலகை  எல்லாம்  இருக்கே! " என்றான். " இது  எவ்வளவு  நாளாக  இருக்கு? " என்றார்   பெரியவா.

" ரொம்ப  நாளா   இங்கே   தான்   இருக்கே!  தெரியாதா? "

" நீ  பிறக்கும்  முன்னேயே   இந்தக் கைகாட்டி   இருந்ததா? "

" ஆமாம்  எங்கப்பா,  தாத்தா   காலத்திலே  ன்னு   பெரியவங்க   சொன்னாங்க! "

" அப்பவே  கிண்டி, இந்த   ரோடு  எல்லாம்    இருந்ததா? 

"ஆமாம் "

" இந்தக்   கைகாட்டி யைப்    பார்த்து   இது   காட்டும்   திசையிலே   போனா, கிண்டி    வந்திடுமா? "

 " அது   வராது,  நாம  கிண்டிக்குப்   போகலாம்  "

" நீ  இதப்  பார்த்துட்டுத் தான்   முதன் முதல்லே     கிண்டி   போனாயா? ". ... .. ஸ்வாமிகள்.

" ஆமாம் "
" அப்போ    உன்   கண்ணுக்கு   கிண்டி   தெரிஞ்சுதா? "

" அதெப்படித்    தெரியும்?   கிண்டி  இன்னும்  அஞ்சு கிலோ  மீட்டர்   தூரத்தில்   இருக்கு ன்னு    போர்டுல எழுதி   இருக்கே!    உன்னால   அஞ்சு  கிலோ மீட்டர்   தூரத்தில்   இருக்கிறதைப்    பார்க்க முடியுமா? "என்றான்     இளைஞன்.

" அப்படீன்னா,   உன்   கண்ணுக்குத்  தெரியாத    கிண்டியை  இந்த  போர்டைப்    பார்த்துத்  தெரிந்து   கொண்டாயா? "

" ஆமாம் "

" இந்தப்     போர்டைப்   பார்த்து  அது காட்டும்   திசையிலே   நேரா,  எங்கும் வளையாம     நடந்தா   போயிடலாமா? "

" முடியாது  இந்த   ரோட்டிலே  நாமாக வளைஞ்சு  வளைஞ்சு   போகணும்! "

" இந்த  போர்டை   இங்கே   யார்  வச்சாங்க? "

" எனக்குத்  தெரியாது,  முன்னாலே இருந்தவங்க   இது தான்  கிண்டிக்குப்   போகிற  வழி ன்னு  தெரிஞ்சு  கொண்டு    இதை  வைச்சிருப்பாங்க "

" அப்படீன்னா   என்னிக்கோ  யாரோ வெச்ச  கைகாட்டியை   நாமாகப்  பார்த்துத்  தெரிஞ்சுண்டு ,  நாமே  வழியைக்   சரியாகப்   பார்த்துப்  பார்த்து  வளைஞ்சு  வளைஞ்சு   போனால்   கிண்டிக்குப்   போகலாம்  அப்படித் தானே? "

இளைஞனுக்கு   வேகம்   குறையத் தொடங்கியது!!

" நானும்  அப்படித்தான்   பெரியவங்க   சொன்னதைக்   கேட்டுக்  கடவுளைக்  காண்பதற்கு  அவங்க   போட்ட  பாதையிலே  செல்கிறேன்!  வழியில்  இருக்கிற  தடங்கல்களை   நானாக  யோசனை செய்து,  தாண்டியும்,  விலகியும்  போய்க் கொண்டிருக்கிறேன்! " என்றார்.   இளைஞன்    திகைத்தான்.

 " கிண்டிக்குப்    போய்  மீண்டும்  வந்து  இது தான்  வழி ன்னு  காட்டினவங்களை  நீ  சந்தேகப் பட்டால்,  உன்னால்   கிண்டிக்குப்  போக முடியுமா? அது  போலத் தான்  நம்   ஆண்டவனைக்   கண்டவர்கள்  காட்டின   வேதம், உபநிஷதம்  பூஜை முறை   எல்லா வற்றிலும்  சந்தேகமே கொள்ளாமல்  முழுமையான   நம்பிக்கையுடன்   அவர்கள்  காட்டிய  வழியில்   போகிறேன்  " என்றார்.

அந்த  இளைஞன்  சற்று  விலகிப்  போய்  தன்   செருப்புகளைக்  கழற்றி  எறிந்து  விட்டு,  ஓடோடி,  வந்து   ஸ்வாமிகளின்   திருவடிகளில்   சாலையில்  வீழ்ந்து,  கண்ணீர்  விட்டான்......

நடமாடும்  தெய்வம்,!

No comments:

Post a Comment