Saturday, 4 November 2017

அகத்தியர் அருள் வாக்கு - உண்மையான தர்மம் எது

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
எல்லோருமே "தர்மம்" என்பதை தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நிறைய தனம் இருந்தால்தான், தர்மம் செய்ய முடியும். எங்களுக்கு நிறைய தனத்தைக் கொடுத்தால், தர்மம் செய்யமாட்டோமா? என்று வினா எழுப்புகிறார்கள், மாந்தர்கள். தனம் இருப்பவன் தனத்தைக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். தானம் இல்லாதவன் பிறருக்கு உடல் உழைப்பைக் கொடுத்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளட்டும். உடலால் உழைக்க முடியவில்லை, தனமுமில்லை என்பவர்கள், எண்ணங்களால் "அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். மனதில் கொள்ள வேண்டும். எக்காலத்திலும் அதிகமதிகம் தனத்தை வைத்துக்கொண்டு "இது பிற்காலத்தில் நமக்கு உதவும். நமது வாரிசுகளுக்கு உதவும். நம் உடல் தளர்ந்து போய்விட்டால், இந்த தனத்தை வைத்துக் கொண்டுதானே வாழவேண்டும். உழைக்கின்ற காலத்திலேயே நன்றாக உழைத்து சேர்த்துக் கொண்டால்தானே, உழைக்க இயலாத காலத்திலே இந்த தனம் நமக்கு உதவும்" என்றெல்லாம் மனிதன் குருட்டு வேதாந்தம் பேசி தனத்தை இறுக்கப் பிடித்துக் கொள்கிறான். உடலே தளர்ந்த பிறகு கையிலே தனம் இருந்தால் அந்த தனத்தை வைத்து, ஒரு மனிதனை ஏகினால் அவன் உதவி செய்வான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆக, எந்தெந்த வழியிலெல்லாம் முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் தனத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவேண்டும். அதே போல் வாக்காலும், செயலாலும் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். சில தனவான்கள் ஆலயம் கட்டுவதற்கு ழகரம், லகரமாக ஈவான். தன்னிடம் வேலை பார்க்கும் ஓர் அடிமைக்கு, ஏக தனம் கூட அதிகம் தரமாட்டான். இவன் இறைவனை எண்ணிப்பார்க்க கூட இயலாது. இறைவன் இவன் பக்கம் ஒருபோதும் திரும்பப்போவதில்லை. உணரவேண்டும். ஒரு மனிதன் தன்னை சுற்றி இருப்பவர்களின் கஷ்டங்களை தீர்க்க சக்தி இருந்தும், வசதி இருந்தும், அவ்வாறு செய்யவில்லை என்றால், அவனால் இறையருளைப் பெற இயலாது.
அகத்தியர் ஞானம்.

No comments:

Post a Comment