Tuesday 7 November 2017

வரவுகளுடன் எவ்வாறு இருக்க வேண்டும் - அகத்தியர் அருள் வாக்கு

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனருளால் யாம் கூறவருவது யாதென்றால் உன் போல் எம் மீது அவா கொண்டு இஃதொப்ப ஓலை வாயிலாக எமது வாக்கை மெய்யாக, மெய்யாக, மெய்யாக, மெய்யாக நாடுகின்ற மெய்யன்பர்கள் அனைருக்கும் பொருந்துவதாகும். ஆகுமப்பா  அஃதொப்ப லௌகீக வாழ்விலே துன்பங்களும், தோல்விகளும், துவண்டு விழவைக்கும் நிகழ்வுகளும் வந்துகொண்டேயிருக்கும். அதற்கும், ஒரு மனிதன் இறைவன் திருவடியை உணர்வதற்கும் உண்டான முயற்சிக்கும் என்றுமே தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. ‘இறைவனை வணங்குகிறேனே? எனக்கு இப்படியொரு துன்பம் வரலாமா? இயன்றளவு தர்மம் செய்கிறேனே? என் குடும்பத்திற்கு இப்படியொரு கஷ்டம் வரலாமா? இறைவனை வணங்கிக்கொண்டே இருந்தால் நல்லது நடக்கும் என்கிறார்களே? ஆனால் அன்றாடம் பதறிப் பதறி வாழவேண்டிய நிலை இருக்கிறதே? என்றெல்லாம் அறியாமையால் மனிதன் புலம்புவது இயல்பு என்றாலும், அங்ஙனம் புலம்புவது எம்மைப்பொருத்தவரை ஏற்புடையது அல்ல. இஃதொப்ப இல் ஆனாலும், உறவானாலும், நட்பானாலும் கர்மவினைகளின் காரணமாக பிறப்பெடுத்து குறிப்பிட்ட மனிதர்களோடு, குறிப்பிட்ட உறவு என்ற பந்தத்திற்குள் இந்த ஜென்மத்திற்கு என்று அது அடைபட்டு இருக்கிறது. இஃதொப்ப ஜென்ம, ஜென்மமாய் எத்தனை தாய்? எத்தனை தந்தை? எத்தனை தாரம்? எத்தனை பிள்ளைகள்? கடந்த ஜென்மத்து தாய். அவளை நினைத்து ஏங்குவதா? அழுவதா? கடந்த ஜென்மத்து பிள்ளைகளை எண்ணி ஏங்குவதா? அழுவதா? இனிவரும் ஜென்மத்து உறவுகளை எண்ணி அழுவதா? சிரிப்பதா? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தொலைதூர பயணத்திற்காக வாகனத்தில் அமரும் மனிதன் அருகருகே அமரும் பிறமனிதர்களோடு எந்தளவில் தொடர்பு கொள்கிறானோ அப்படியொரு வாழ்க்கை பயணத்திலேதான் உறவுகளும். அதற்காக இவர்களையெல்லாம் விட்டுவிடு, இவர்களையெல்லாம் வெறுத்துவிடு என்றெல்லாம் யாம் கூறவில்லை. இஃதொப்ப நிலையிலே அவர்களுக்கு செய்யவேண்டிய நீதியான, நியாயமான கடமைகளை செய்வதோடு மனதளவிலே எந்தவிதமான பற்றுக்கும் இடம் தராமல் வாழ கடினம் பாராது முயற்சி செய்யவேண்டும். இஃதொப்ப கருத்தை நன்றாக மனதிலே வைத்துக்கொண்டால் ஒவ்வொரு மனிதனும் செழுமையாக வாழ்ந்து இறைவனின் அருளை புரிந்துகொள்ளக்கூடிய அந்தவொரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ளலாம்.

அடக்கத்தோடு ஒருவன் செய்கின்ற அறமானது இருமடங்கு, மும்மடங்கு, பஞ்சமடங்கு என்று அதன் அடக்கம் காரணமாக உயர்ந்துகொண்டே செல்லும். அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்து கொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.

இறைவன் அருளாலே இயன்ற பக்தியை செய்துகொண்டே தர்மகாரியங்களை செய்துகொண்டே இருக்க, இருக்க அஃதொப்ப பாவவினைகள், முன்ஜென்ம வினைகள் குறைய, குறைய பக்குவமும், பரிபக்குவமும், புரிதலும், இறை நோக்கி செல்லவேண்டும் என்கின்ற தீவிரமும் வருமப்பா.

செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும், முன்ஜென்ம பாவத்தை கழித்து வைக்கும், புண்ணியத்தை பெருக்கி வைக்கும், தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும்.

மனிதனுக்கு துக்கமோ, துயரமோ, இன்பமோ, துன்பமோ அதற்கேற்ற சிந்தனையோ அல்லது நடைமுறை நிகழ்வுகளோ அனைத்தும் ஊழ்வினைகளின் எதிரொலிதானப்பா. மனதை தளரவிடாது செய்கின்ற இறைபக்தி, தொண்டு, தன்னலமற்ற தர்மகாரியங்கள், சாத்வீக வாழ்வு, கடமைகளை சரியாக ஆற்றுதல் – இவற்றை ஒரு மனிதன் கடைபிடித்தால் அவனுடைய தேவையற்ற குழப்பங்களும், ஐயங்களும் வேறு கலக்கங்களும் எழாமல் இருக்கும்.

இந்த பதிவு, உயர் திரு, சுவாமிநாதன் அவர்களின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டு உள்ளது. அய்யா அவர்கள், பாண்டிச்சேரி வில்லியனூரில் அகத்தியர் ஞானம் என்ற பிரார்த்தனை கூடத்தில், அகத்தியர் உலோபாமுத்திரை வழிபாடு செய்து கொண்டு உள்ளார்.
G.ஸ்வாமிநாதன்.
ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்
27 பெரம்பை ரோடு
வில்லியனுர்
பாண்டிச்சேரி605110
கைபேசி,09894269986

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

No comments:

Post a Comment