Monday, 13 November 2017

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்

சுருளி அருவி கோவில்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலையில் ஒரு குகையின் மீது அமைந்துள்ள முருகபெருமான் திருக்கோவில்.இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர்,பாறையாக மாறுகிறது.



எவ்வளவு நாட்களும் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும். இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.

மஹாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலைஅரசனான நம்பிராஜன் வளர்த்து, முருகபெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர், முருகனுக்கு தனக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தார். எனவே இந்த தலத்திற்கு வந்து அருளினார்.

ஒருசமயம், சனி பகவான், தனது நியமனப்படி,தேவர்களை ஆட்கொள்ளவேண்டி வந்தது. தேவர்கள் அனைவரும் முருகனை சரணடைந்து, வழிபட, சனியின் பிடி அகன்றது.

சிவபெருமானிடம் இலங்கையை ஆண்ட ராவணேஸ்வரன் தனது தவ வலிமையினால் அண்ட சராசரங்களையும் ஆளும் வரம் பெற்றான். அதன் பின்னர் தேவர்களையும் ரிஷிகளையும் சித்தர்களையும் வதைத்தான். அனைவரும் இங்குள்ள கைலாசநாதர் குகையில் அருள்புரியும் மஹாவிஷ்ணுவிடம் சரணடைந்து காத்து அருள வேண்டினர். இதற்குள் ராவணன் தனது படையுடன் இங்கு வந்து கூச்சலிட மஹாவிஷ்ணு பஞ்ச பூதமாய் உருவெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிய உருவெடுத்து கோப நிலை காட்ட, இதைக்கண்டு நடுங்கி தன் படைகளுடன் திரும்பி ஓடினான். இத்தகைய பெருமை வாய்ந்த கைலாசநாதர் குகையின் மேற்பகுதியில் சுருளிவேலப்பன் அருள் பாலிக்கிறார்.

முருகன், சுருளிவேலப்பன் சன்னதியில், சிவன், விஷ்ணு, விநாயகர் அனைவரும் காட்சி தருவது சிறப்பான அம்சமாகும். இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசித்து வருவதாக ஐதீகம். ஆதலால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி சிலைகள் உள்ளன. ஆடி அமாவாசை, தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர்.

குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு சுருளி வேலப்பரே மகனாக வந்து இறுதிச்சடங்குகள் செய்து முடித்தாராம். எனவே ஆண் வாரிசுகள் இல்லதவர்களும் இறுதி வேளையின் போது இவரை தங்கள் மகனாக பாவித்து வழிபட மன அமைதியும் வளமும் கிடைக்கும்.

இங்கு பெருமாள் சன்னதியில் சிவபெருமானும் இருப்பது ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. விபூதி, குங்கும பிரசாதமும் தருகின்றனர். அத்துடன் சடாரி ஆசீர்வாதமும் செய்கின்றனர். துளசி தீர்த்தமும் வழங்கப்படுகிறது. இது உச்சிக்கால பூஜையில் மட்டும் கொடுக்கப்படுகிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

இங்கு பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவபெருமானுக்கு பரிவார மூர்த்தியாக தெட்ஷிணாமூர்த்தியும் (சின்முத்திரையுடன்) இருக்கின்றனர். சிவபெருமா னாருக்கு விசேஷ அபிஷேகங்கள் உண்டு. பால்குடம் எடுத்து முடி காணிக்கை செலுத்தி, தீர்த்த நீராடி, வழிபட, சகல பாவங்களும் நீங்கும். நல் வாழ்வு கிட்டும். தீராத வியாதி தீரும் என்பதும் நம்பிக்கை ஆகும். இங்கு அன்னதானம் செய்தால், நற்கதியும் மோட்ஷமும் கிட்டும் என்பதால், அன்னதானம் பிரதானமாய் நடைபெறுகிறது.

சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் இமயமலைக்கு சென்றுவிட்டதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்பொதிகைக்கு அனுப்பினார். பின்னர் அகத்திய முனிவருக்கு தன் திருமணக்கோலத்தைக்காட்ட, இங்குள்ள குகையில் அருளினார். எனவேதான் இந்த குகை கைலாய குகை என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன. விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன.

இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும்
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறி, மலைக்கோவில்களை “குன்று தோறாடல்” என்று பெயரிடுகிறார். சுருளி வேலப்பர் சுயம்புவாக தோன்றி, குடவரை சன்னதியில் அருள் பாலிக்கிறார்.அவர் அருகில் விநாயகர்,மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு, ராம பிரான், லட்சுமணன் ஆகியோர் உள்ளனர். இம்மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக கூறுகின்றனர்.

குகைகள் மிகவும் சிறிய அளவில் உள்ளன. இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. அதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கும். தீர்த்தமும் பாறையின் மீது இருக்கும் துகள்களையே விபூதி பிரசாதமாக தருகின்றனர்.

முக்கிய விழாக்களாக ஆடி பதினெட்டாம்பெருக்கு, தைப்பூசம், ஆடி , தை அமாவாசை, பங்குனி உத்திரம், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, சித்திரை திருவிழா, கந்த சஷ்டி ஆகியவை கொண்டாடப்படுகிறது.

இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பம் ,கம்பராய பெருமாள் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.

இந்த கோவிலுக்கு செல்ல மதுரை வந்து தேனிக்கு பஸ் மூலம் வந்த பின்பு கம்பம் அல்லது உத்தமபாளையம் செல்லவேண்டும்.இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் சுருளிதீர்த்தம் செல்லும் பஸ் மூலம் சுருளிப்பட்டி வந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தால்தான் இந்த தலத்தை அடைய முடியும். நல்ல பாதை உண்டு என்றாலும் இரண்டு புறமும் காட்டில் உள்ள செடிகளும் புதருமாகத்தான் இருக்கும். ஆனால் நல்ல சுகமான தென்றலையும் மூலிகை மணத்தையும் அனுபவிக்கலாம். மழைக்காலத்திலும் மற்றும் பருவ காலத்திலும் சுருளி அருவியில் சுகமாய் நீராடலாம். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்
சைவம் வைணவம் சமரசமாகத் தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்த நல் யோகம்

இரவலர்க்(கு) அருளும் சுருளி வேலா போற்றி!

அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோவில், சுருளிமலை,கம்பம் – 625 516. தேனி மாவட்டம் 

அகத்தியர் ஞானம்


இந்த பதிவு உயர்திரு. சுவாமிநாதன் அவர்களின் முகநூல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. அய்யா அவர்கள் பாண்டிச்சேரியில்  வில்லியனூர் என்ற இடத்தில் அகத்தியர் ஞானம் என்ற  கூடத்தை அமைத்து சித்தர்கள் வழியில்  கொண்டு வருகிறார்கள்.

முகவரி :
சுவாமிநாதன்,ஸ்ரீ  அகத்தியர் ஞான இல்லம், 27, பெரம்பை ரோடு, வில்லியனூர், பாண்டிச்சேரி - 605110. கைபேசி 09894269986

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 


No comments:

Post a Comment