Sunday 12 November 2017

வேளி மலை என்னும் "வேள்வி மலை" முருகன் கோவில்

வாழ்வில் வளம் பெற வேளிமலை முருகன் திருக்கோவில்

முருகப்பெருமான் புள்ளிமானைத் தேடி வந்து, விநாயகர் அருளால் வள்ளியைக் கானகத்தில் கரம் பற்றியத் தலம் இது. இதன் புராணப்பெயர் வேள்வி மலை என்பதாகும். முருகப்பெருமான்- வள்ளியம்மனுக்கு திருமணம் நடந்தபோது, அதற்காக வேள்வி நடைபெற்ற மலை இது என்று கூறப்படுகிறது. எனவே இந்தத் தலம் வேள்விமலை என்றானதாக தல புராணம் தெரிவிக்கிறது. வேள்வி மலையே, தற்போது மருவி வேளிமலை என்று அழைக்கப்படுகிறது. வேளி என்றால் திருமணம் என்று பொருள் உண்டு.


இந்த ஆலயத்தின் தல மரம் வேங்கை மரமாகும். முருகப்பெருமான் புள்ளிமானைத் தேடி வந்து, விநாயகர் அருளால் வள்ளியைக் கானகத்தில் கரம் பற்றியத் தலம் இது. மலைக்கோவிலான இந்த ஆலயத்திற்குச் செல்ல 38 திருப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள முருகப்பெருமானின் வலது திருக்கரம் வரத ஹஸ்த முத்திரையுடன் அருள, இடது திருக்கரம் தொங்கவிட்டவாறு காட்சி தருகிறது. வேடனாய் வந்த முருகப்பெருமான், வள்ளியை கவர்ந்து சென்றபோது, அவருடன் போரிட்ட மலைக்குறவர்களுக்கு முருகன் வேடன் உருவிலேயே காட்சி கொடுத்தார். நமக்கும் அதே கோலத்திலேயே வள்ளி மணாளனாக, காண்போரை கவரும் கந்தசுவாமியாக காட்சியளித்து அருள்புரிகிறார். மூலவர் முருகப்பெருமான் குமாரசுவாமி என்னும் திருப்பெயரில், 9 அடி உயரத்தில் தென் கிழக்குப் பக்கமாக வீற்றிருக்கிறார்.


அருகில் வள்ளியம்மை காட்சி தருகிறார். இந்த மூலவர் சுதையால் ஆனவர். உற்சவர் முருகப் பெருமானுக்கு, மணவாள குமரன் என்று பெயர். ஆலயத்தின் வலது புறம் ஆலயத் திருக்குளமும், அதன் முன்புறம் விநாயகப்பெருமான் சன்னிதியும் உள்ளன. மூலவரின் சன்னிதியை அடுத்த, சிவபெருமான் நந்தியோடு காட்சி தருகிறார். ஆறுமுக நயினார் மற்றும் நடராஜ பெருமானும் தெற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக் கிறார்கள். முருகன், வள்ளியைக் காதலித்த காலத்தில், மலைக்குறவர் கூட்டம் முருகனைத் துரத்தியது. அப்போது முருகப்பெருமான் வேங்கை மரமாக மாறி திருவிளையாடல் புரிந்தார். எனவே ஆலயத்தில் உள்ள தல மரமாக வேங்கை மரம், முருகப்பெருமானாகவே பாவிக்கப்படுகிறது. தல மரத்திற்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விரும்பிய வண்ணம் திருமணம் கைகூட விரும்புபவர்கள், கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியர் ஆகியோர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் வளம் கூடும்; வாழ்வு சிறக்கும்.

இந்தக் கோவிலில் தட்சனுக்கு தனி சன்னிதி உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தான். அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த சன்னிதியில் காட்சி தரு கிறார். இங்குள்ள தூண் ஒன்றில் பின்னிப் பிணைந்திருக்கும் இரு பெரிய பாம்புகளுக்கு நடுவில் சிவலிங்கம் ஒன்று எழிலாக காட்சி தருகிறது. இதற்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபட்டால், நாக தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்கு அரைகிலோமீட்டர் தொலைவில் வள்ளியை முருகப்பெருமான் மணம் செய்த மண்டபம் காணப்படுகிறது. அதன் அருகில் விநாயகருக்கு ஒரு கோவிலும், வள்ளியம்மை குகைக்கோவிலும் உள்ளன. குகைக் கோவிலுக்கு அருகில் தினைப்புனம், வள்ளிச் சோலை, கிழவன் சோலை, வட்டச் சோலை முதலியன உள்ளன. வள்ளி நீராடிய சுனைக்கு அருகில் உள்ள பாறையில், விநாயகர், முருகன் மற்றும் வள்ளியின் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் 6-ம் நாள் விழா அன்று வள்ளிக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்கள் ஆலய ஊழியர்களால் வாசிக்கப்படுகின்றன. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருப்பெருந்துறை பாகற்காய் சாதம் போல் இந்தக் குமாரக் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் கஞ்சி பிரசாதம் வழங்கப்படுகிறது. இதனை வாங்கிக் குடித்தால் நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. இந்த கஞ்சி பிரசாதம் வெள்ளிக்கிழமை மட்டுமே வழங்கப்படும். திருக்கார்த்திகை தினத்தில் மாலையில் இந்த ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. அந்த நிகழ்வின் போது கலந்துகொண்டால், நமது முன் ஜென்ம பாவ வினைகளும் எரிந்து போகும் என்பது நம்பிக்கை. பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரம் அன்று, இரவில் இங்கு வள்ளி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, தேனும், தினை மாவும், குங்குமமும் பிரசாதமாக வழங்கு கிறார்கள்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நடை பெறும் தேரோட்டத்தின் போது, இத்தல குமாரசாமி பல்லக்கில் புறப்பட்டு, அன்று இரவு கிருஷ்ணன் கோவில் ஆலயத்தில் தங்குவார். மறு நாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுசீந்திரம் சென்று அங்குள்ள பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் குமாரகோவில் திரும்புகிறார்.

அதே போல் நவராத்திரி விழாவின் போதும், குமாரகோவில் முருகப்பெருமான் பல்லக்கில் பத்மநாபபுரம் சென்று, அங்கிருந்து சரஸ்வதி அம்மன் மற்றும் சுசீந்திரத்தில் இருந்து வரும் முன்னுதித்த நங்கை அம்மன் சகிதம் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் அன்றிரவு குழித் துறையில் தங்கி, மறுநாள் புறப்பட்டு கரமனை என்னும் ஊரில் வெள்ளிக் குதிரையேறி திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் காட்சியளிக்கிறார். குமாரகோவிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆடிக்கிருத்திகையில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல சவுபாக்கியங் களும் கிடைக்கும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையில் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் பக்தர்களின் பூக்குவியலுக்கும் வள்ளியம்மையுடன், முருகப்பெருமான் வீற்றிருக்கும் அழகைக் காண இரண்டு கண்கள் போதாது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வேளிமலை. நாகர்கோவில்- திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் என்னும் ஊருக்கு முன்னதாக தக்கலை என்ற ஊர் வரும். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்தத் திருத்தலத்தை அடையலாம். 

அகத்தியர் ஞானம்


இந்த பதிவு உயர்திரு. சுவாமிநாதன் அவர்களின் முகநூல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. அய்யா அவர்கள் பாண்டிச்சேரியில்  வில்லியனூர் என்ற இடத்தில் அகத்தியர் ஞானம் என்ற  பிரார்த்தனை கூடத்தை அமைத்து சித்தர்கள் வழியில்  தொண்டு செய்து  வருகிறார்கள்.

முகவரி :
திரு சுவாமிநாதன், ஸ்ரீ  அகத்தியர் ஞான இல்லம், 27, பெரம்பை ரோடு, வில்லியனூர், பாண்டிச்சேரி - 605110. கைபேசி 09894269986

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 




No comments:

Post a Comment