Sunday 26 November 2017

அமாவாசையும், அகத்தியரின் தெளிவும்!!

அமாவாசையும், அகத்தியரின் தெளிவும்!!

அமாவாசை தினத்தன்று முன்னோரின் கருமம் தீர்க்கும் திதி பூசை குறித்து அகத்தியர் எழுப்பின கேள்விகளை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த பூசை முறைகளை அகத்தியர் முற்றாக நிராகரிக்கிறார். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை யோகி மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார். மற்ற யாராலும், எந்த பூசை வகைகளாலும் இந்த கரும வினைகளை தீர்க்கமுடியாது என உறுதியாகச் சொல்கிறார்.

அப்படியானால் அமவாசையில் என்னதான் செய்யவேண்டும். அதற்கும் அகத்தியர் வழி சொல்கிறார்..

சிக்காமல் சொல்லுகிறேன் புலத்தியனே கேளு
தேசத்தோ டொத்துணியாய் வாழாதப்பா
சொக்காதே யிருந்தல்லோ சாக்கிரத்திற்
சுருதியந்த ஆக்கினையி லகாரந்தொட்டு
மக்காத கீழ்படியில் மகாரந்தொட்டு
வாசமா மிடகலையில் வகாரந்தொட்டு
புக்காதே பின்கலையிற் சிகரந்தொட்டு
பூட்டப்பா ரிதுவல்லோ அமாவாசையெண்ணே.

அமாவாசை பூரணையிற் பிதிர்மாதா கன்மம்
ஆகாகா விந்துநா தத்துட்பாரு
நமவசி விந்துவிலே நாட்டமூணு
நாலான பூரணத்தை மேலேதாக்கு
சமராகி விந்துவோடு நாதம்ரெண்டுஞ்
சமரசமாம் அமாவாசைக் குள்ளேதாக்கி
யிமையோடு விழியூட்டு சோமசூர்யன்
யிகபரமாய் ஒளிவீசும் திதியிதாச்சே.

திதிசடங்குக் கமாவாசை குள்ளேசென்று
திருப்தியா மிப்படியே சிவயோகமப்பா
கெதிமோட்ச மிதுவல்லோ சற்புத்திரராதி
கெடியாக அமாவாசை யறிந்தோர்க்கையா
பிதிர்சூட்சம் மாதாவின் சூட்சஞ்சொன்னேன்
பிதற்றாதே யெழுகோடி பிதிர்க்குமுத்தி
மதிகெட்ட மாணாக்கள் தோற்றமெழில்
வங்கிஷமு முத்திபெறு மாதாந்தத்தே.

அமாவாசை பௌர்ணமியில் பிதிர் மாதா கடமைகள் என்று எதையும் செய்ய கூடாது என்று சொல்லும் அகத்தியர். மக்கள் எல்லோரும் செய்வதை பார்த்து நீயும் ஏமாந்து போகாமல், அமாவசை நாட்களில் ஆக்னையை லகாரமாக கொண்டு, அதற்க்கு அடுத்த படியை மகாரமாக கொண்டு மனதை நிறுத்தி, இடங்கலையை வகாரமாக கொண்டு, பிங்கலையை சிகாரமாக கொண்டு உணர்ந்து "நமவசி" என்று செபித்து சிவ யோகம் செய்யவேண்டும் என்கிறார்.

மாதாந்தம் வரும் அமாவாசை, பௌர்ணமியில் இந்த சிவ யோகமே செய்யவேண்டுமாம். அப்படி செய்தால் சந்திர சூரிய பிரகாசம் புருவ மையத்தில் தென்படுமாம். இதுதான் முக்தி யடைவதற்கான வழி என்கிறார்.

இதைத்தான் “பிதிர் சூட்சுமம்”, “மாதா சூட்சுமம்” என்பார்கள். இதை நீ உணர்ந்து மாதாமாதம் செய்து முக்தியடைவாய் என தன் சீடர் புலத்தியருக்குச் சொல்கிறார்.

No comments:

Post a Comment