Thursday 30 November 2017

சித்தர்கள் வணங்கிய பொன் வாசிநாதர் கோவில்

புதுகை மாவட்டம், விராலிமலை அருகே இலுப்பூர் உள்ளது. சங்க காலத்தில், இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால், இந்த ஊர் இலுப்பையூர் என  அழைக்கப்பட்டது. பின்னர் மருவி இலுப்பூர் ஆனது. இங்குள்ள பொன்வாசிநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர்  ஹேம விருத்தீஸ்வரர். தமிழில் பொன்வளர்ச்சி நாதர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி பொன்வாசி நாதர் என்று ஆனது. அம்பாள் சொர்ணாம்பிகை.   தமிழில் பொன்னம்மாள். சொர்ணம் என்றால் பொன் என்று பொருள். 

பொன் தொடர்பான தொழில்களில் சிறப்புற்று விளங்கியது இலுப்பூர். தங்க வியாபாரம் செய்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து அபிஷேகங்கள் செய்து வழிபட்டால்,  தொழில் மேன்மையடையும் என்பது ஐதீகம். சுவாமி, அம்பாள் ஆகியோரது பெயரில் பொன் சம்பந்தப்பட்டு வருவதால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு  அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்த பின் பலர் நகைக்கடை துவங்குகின்றனர்.  ஆண்டு தோறும் அட்சய திருதியை நாளில் நகை கடை உரிமையாளர்கள்  சார்பில் இக்கோயிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. இதேபோல் ஆபரணத் தொழில் புரிவோருக்கும் உற்ற இறைவனாக பொன்வாசிநாதர் விளங்குகிறார். 

களவு போன தங்க நகைகள் கிடைப்பதற்காக பக்தர்கள் இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயில் வந்து வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டால், நகைகள்  திரும்பக்கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. சித்திரைப் பெருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும். கந்த சஷ்டி, கார்த்திகை தீபம்,   மகா சிவராத்திரி, குருபெயர்ச்சி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொள்வர். இலுப்பூர் வந்த பட்டினத்தார்  பொன்வாசிநாதரை போற்றி பிறவாமை வேண்டும் என்று பதிகம் பாடி அருளியுள்ளார்



அஷ்டமா சித்தி பெற்ற பட்டினத்தாரால் பாடல்பெற்ற திருத்தலமாக இக் கோயில் விளங்குகிறது. வராகமுனிவர் இக்கோயிலில் சிவபெருமானை நோக்கி தவம்  புரிந்துள்ளார் என்பதற்கான சான்றுகள், கோயில் கல்தூண்களில் சிற்பங்களாக உள்ளன. சித்தர்கள் சித்திபெற சித்தன்னவாசல், விராலிமலை, திருச்சி உள்ளிட்ட  இடங்களுக்குத் தவம் இயற்ற வந்த காலங்களில் இக்கோயிலில் உள்ள பொன்வாசிபெருமானை வணங்கி அருள் பெற்றுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான  இடங்கழிநாயனார் இக்கோயிலுக்கு வந்து தொண்டுகள் பல செய்து இறைவனை வணங்கியுள்ளார்.

பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கணி சித்தர், விராலிமலை முருகப்பெருமானிடம் அஷ்டமா சித்தி பெற்ற அருணகிரிநாதர் இலுப்பூர் வந்து  பொன்வாசிநாதரை வணங்கி அருள் பெற்றுள்ளனர். பல ஆண்டுகள் வாழ்ந்து அருள் வழங்கிய சித்தர் சுருளிஆண்டவர் இலுப்பூர் வந்து சிவபூஜை செய்துள்ளார்.  காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரிய சுவாமிகள் இலுப்பூர் வந்து 21 நாட்கள் தங்கி பொன்வாசிநாதரையும், சொர்ணாம்பிகை அம்பாளையும் வணங்கி  வழிபட்டுள்ளார். 

கோயிலின் உப கோயிலாக அலமேலு மங்கை கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு திருமணங்கள் அதிக அளவில் நடக்கிறது.  பொன்வாசி  நாதர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது இக்கோயிலில் இருந்து சீர் கொண்டு போகும் முறை இன்று வரை வழக்கத்தில் உள்ளது. கோயிலின்  மற்றொரு உப கோயிலாக தரம்தூக்கி பிடாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாதம் பூச்சொரிதல் விழாவும் திருவிழாவும் சிறப்பு மிக்கது. கோயிலில்  வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சம்பழத்தில் விளக்கு போட்டு வழிபாடு நடத்துவது சிறப்பம்சம்.

பஸ் ரூட்

புதுக்கோட்டையில் இருந்து பழனி செல்லும் வழியில் 30வது கி.மீட்டரிலும், திருச்சியில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் 40வது கிலோ மீட்டரிலும்  இலுப்பூர் உள்ளது.  விராலிமலையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. திருச்சியில் இருந்து விராலிமலை, பொன்னமராவதி, அன்னவாசல், இலுப்பூர்  வழித்தடத்திலும், இதேபோல் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர். பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல் பஸ்களிலும் கோயிலுக்கு செல்லலாம்.

No comments:

Post a Comment