Monday, 13 November 2017

நம்பி மலை

ண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டு காற்றுடன் கலந்து மூலிகைக் காற்றாகவும் நீருடன் கலந்து மூலிகை நீராகவும் விளங்கும் நம்பிமலைக்கு மற்றொரு பெயர் மகேந்திரகிரி மலை. நம்பினோரைக் கைவிடாத நம்பி என்னும் திருமலை நம்பி ஆண்டவரின் தரிசனம் அருளப்படும் மலை இதுதான்.

விண்ணைத் தொட்டு விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை. அந்த மலை முகட்டில் மேகக் கூட்டத்துக்கு நடுவில் நம்பினோரைக் கைவிடேன் என்று கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார்.
திருமலைநம்பி கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மலைமேல் நம்பி என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் நம்பி.


பெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்புப் பெற்றது என்பார்கள். அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் முதலிய பல சித்தர்கள் இங்கு நித்யவாசம் செய்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
திருக்குறுங்குடி தலத்தில் இருந்து மலை யாத்திரையைத் தொடங்குகிறோம்.
வழிநெடுக சிவா சாமி ஆசிரமம், வெள்ளவேஷ்டி சாமி ஆசிரமம் எனப் பல ஆசிரமங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து செந்நிறக் காட்டுக்குள் நுழைகிறோம். அதில் இருபுறமும் வாழை, தென்னை மரங்கள் நிறைந்த தோட்டங்கள் செழித்து நிற்கின்றன.
வனத்துறையின் அனுமதி பெற்று நம்பி மலைக்கு ஏறுகிறோம். இம்மலையில் தொழுகண்ணி அழுகண்ணி, கருணைக் கிழங்கு, நாகதாளி, திருநீற்றுப்பூண்டு, போன்ற பல மூலிகைகள் அடங்கிய தாவரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. எனவே, இந்த வனத்தினிடையே செல்லும்போதே நோய் தீர்க்கும் சுத்தமான காற்று கிடைக்கிறது.
அடர்ந்த காட்டுக்குள் நடக்கும்போது, வண்டுகளின் ரீங்காரச் சத்தம் கேட்கிறது. பாணன் நம்பாடுவான், நம்பியை நோக்கி ஒலித்த நாதமாகத்தான் நமது காதில் இனிமையாக ஒலிக்கிறது.

சங்கிலிப் பூதத்தாருக்குப் படையல்

திருமலையில் இருப்பது போலவே ஏழு ஏற்றங்கள் கொண்டது நம்பி மலை. எனவேதான் ஒவ்வொரு வளைவிலும் உள்ள ஏற்றங்களில் நாம் ஏறும்போதே மூச்சு வாங்குகிறது.
வயதானவர்கள், நோயாளிகள் நம்பியை தரிசிக்க இந்த வழியாக நடந்து வந்து விட முடியாது, எனவே, அவர்கள் ஜீப்பைப் பயன்படுத்துவார்கள். நம்பி கோயிலுக்குச் செல்லும் முன்பு நம்பியாற்றைக் கடக்க வேண்டும். அங்கே பிரமாண்டமான பாலம் அமைத்து இருந்தார்கள்.
பாலத்தின் அருகிலேயே ஆற்றுக்கு முன்பே கட்டப்பட்ட படிக்கள் வழியே இடது புறம் இறங்கினால், அங்கு காவல்தெய்வமான சங்கலிப் பூதத்தாருக்குப் படையல் போட்டு, பூஜைக்குத் தயாராக இருக்கிறது. இங்கு பெரும்பாலும் சிறப்பு அன்னப் படையல்தான் நடைபெறும். இந்தக் கோயிலுக்கு முன்பு பாலத்துக்கு அடியில் நம்பியாறு பாறைக்குள் சிக்கி ஓடி வருகிறது

அரூபச் சித்தர்கள்

பாலத்தைக் கடக்கிறோம். நம்பி ஆண்டவர் ஆலயத்தின் அடிவாரத்தில் ஒரு புற்று உள்ளது. இந்தப் புற்றில் 201 சித்தர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தினமும் நம்பியைப் பூஜை செய்து அரூபமாக உலவுபவர்கள்.
நம்பியைத் தரிசிக்கும் முன்பு நம்பி ஆற்றில் ஒரு குளியல் போட வேண்டும். கோயிலில் இருந்து மிக அருகிலேயே நம்பி ஆறு அருவியாக கொட்டுகிறது. பாறைகளைக் கடந்து சில இடங்களில் தத்தித்தாவித்தான் செல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் பாறைகளைப் பிடித்து இடுக்குகளை தாவியும் நம்பி அருவிக்கு வந்தோம். சுமார் 50 அடிதான் உயரம் இருக்கும். இரண்டு பெரிய பாறை இடுக்கு வழியாக நம்பி ஆறு பொங்கி வழிகிறது. முன்பு பெரிய தடாகம். கண்ணாடி போல் தெளிவாக இருந்தது தண்ணீர்.
மாயவன் பரப்பு என்ற இடத்தில் ஐந்து சுனைகளாகத் தோன்றுகிறது நம்பியாறு. பின் கடையார் பள்ளம் வழியாக தாய்பாதம் தொட்டு, நம்பி கோயில் வந்து சேருகிறது.
குளியல் முடிந்தது. நம்பியின் தரிசனத்துக்கு வருகிறோம். நின்ற கோலத்தில் நம்பாடுவானுக்கு அருள்புரிந்தவர், நாம் கேட்கும் வரம் தருவதற்காகவே தினமும் அருளாட்சி தருகிறார். எனவேதான் பக்தர்கள் தங்கள் உடல் ரணத்தைப் பொருட்படுத்தாமல் மேலே வந்து வணங்கி நிற்கின்றனர்.
பெரும்பாலான வைணவக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால், திருமலை நம்பிகோயிலில் மட்டும் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கருட சேவை நடக்கிறது!.
நடுக்காட்டுக்குள் இருக்கும் மலைமேல் நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும், கோயிலையும் காவல் காக்கிறார், சங்கிலிபூதத்தார். கருட சேவை நடைபெறும் போது சாமியாடும் சங்கிலிபூதத்தாரின் பக்தர்கள் சங்கிலியால் தம் உடலில் அடித்துக்கொள்வதைக் கண்டு பக்தர்கள் பரவசப்படுகின்றனர்.




No comments:

Post a Comment