Sunday, 27 August 2017

ஞானசம்பந்தரின் புரட்சி

ஞானசம்பந்தரின் புரட்சி!


சீர்காழியில் கௌண்டின்ய கோத்திர மரபில் தோன்றிய ரிக் வேத பண்டிதரான சிவபாத இருதயர் என்னும் அந்தணருக்கு ஆண்மகவாக அவதாரம் செய்தார் ஞானசம்பந்தப் பெருமான். மூன்றாம் வயதில் உமையம்மையிடம் ஞானப்பால் அருந்திய தினம் முதலே தம் புரட்சியை தம் அவதாரத்தின் இறுதிநாள் வரை விட்டாரில்லை.

ஊர் ஊராகச் சென்று சைவத்தையும் வேதத்தையும் தமிழையும் வளர்த்தார். ஒவ்வொரு தமிழனும் தன்னைத் தமிழன் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்பதனை தம் தேவாரப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். அவரது ஒவ்வொரு பாடலிலும் சைவ மணம் செழித்துக் காணப்பட்டது. வைதீக மணம் வையகத்தையும் வானகத்தையும் விஞ்சிற்று. தமிழ் மணம் தரணியெங்கும் தழைத்தோங்கியது.

வேள்வி செய்ய அஞ்சிய வேதியர்கள் மீண்டும் வேள்விகள் செய்ய முற்பட்டனர். சிவ சின்னங்களை சவச் சின்னங்கள் என எண்ணி அவற்றை விட்டிருந்த சைவர்கள் மேனி எங்கும் நீறு பூசி மேதினியில் மிளிர்ந்தனர். தமிழ் பயிலுதலும் தமிழ்ப் பாக்களை இயற்றுதலையும் தம் மரண பயத்தினால் விட்டிருந்த தமிழர்கள் தலைநிமிரத் தொடங்கினர். தமிழ்ல் பாமாலைகளைத் தொடுத்தனர்.

அவ்வாறாக நாடெங்கும் சூறாவளி சுற்றுப்பயனம் மேற்கொண்டிருந்த ஞானசம்பந்தப் பெருமான் திருவாவடுதுறையில் முகாமிட்டிருந்த சமயம் இறைவன் தன் திருவிளையாடலை நடத்தத் திருவுள்ளம் பூண்டான். வேதங்களைப் பொய் என்றும் குடிகாரர்களால் போதையில் உளறப்பட்டவை என்றும் கூறிக்கொண்டு கொட்டமடித்த கொடியவர்களின் கோமாளித்தனத்தைக் கூறுபோட நினைத்தான். ஸ்வாயம்புவ மனு தன் தவ வலிமையால் கண்ட ஈஸாவஸ்ய உபநிஷத்என்றழைக்கப்படும் வேத பாகம் எக்காலத்தும் உண்மையே எனவும், அவ்வாக்கியங்களைக் கொண்டே அவர், பரமாத்மா ஸ்ரீமன் நாராயணனைத் துதி பாடியது உண்மை என்பதையும் இவ்வுலகம் அறிய வேண்டி உவகை கொண்டான் திருவாவடுதுறையில் உறையும் மாசிலாமணியீசன்.

ஞானசம்பந்தப் பெருமான் அவர்கள் திருவாவடுதுறையில் தங்கி, அத்தலத்தில் அமர்ந்து உலகோரை உய்விக்கும் மாசிலாமணியீசனைத் தம் பாமாலையால் அனுதினமும் அலங்கரித்து அழகு பார்த்தார். அவ்வமயம், தன் மகனைக் காண வேண்டி சிவபாத இருதயரும் அத்தலத்திற்கு வந்தார்.

சைவமும் தமிழும் ஒருங்கே தன் மகனைப் பொலிவுறச் செய்யும் அந்த அழகில் தன்னை மறந்தார். இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்னும் சொல்என்னும் திருக்குறளை மனம் மெல்ல ஞாபகப்படுத்திக் கொண்டது. குருவுடனும் சுக்கிரனுடனும் சேர்ந்த சந்திரன் எவ்வாறு ஒளி வீசுவானோ அவ்வாறு சைவமும் தமிழும் சேர்ந்த ஞானசம்பந்தப் பெருமான் தமிழ் ஞானசம்பந்தப் பெருமானாக ஒளி வீசிக்கொண்டிருந்தார். தந்தையைக் கண்ட தனயன் அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். தலை வணங்கிய தனயனை வாரியணைத்து உச்சி முகர்ந்தார். நெஞ்சாரத் தழுவி, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். இருவரும் சேர்ந்து மாசிலாமணியீசனை வணங்கி வழிபட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். களைப்புற்றிருந்த தந்தையை இளைப்பாறச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். சில நாள்கள் தம் அருமை மகனுடன் சிவத்தொண்டு செய்து வந்த சிவபாத இருதயர் ஒரு நாள் தன் உள்ளக்கிடக்கையை மகனிடம் வெளிப்படுத்தினார். மகனே! நீ செய்து வரும் புரட்சியினால் சைவமும் வேதமும் தமிழும் ஒருங்கே உயர்ந்து ஓங்கு புகழ் பெற்று வருகின்றன. நாடெங்கிலும் வைதிகர்கள் விரக்தியிலிருந்து விடுபட்டு வேள்வி செய்து வருகின்றனர். அதுபோல் நானும் நம்குல வழக்கப்படி வேள்வி புரிய ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்குப் பெருஞ்செல்வம் தேவைப்படுகிறது. தற்போது என்னிடத்தில் வேள்விக்குரிய பெருஞ்செல்வம் இல்லை எனினும், என் மனம் வேள்வி புரியப் பேராவல் கொண்டுள்ளது. ஆகையால் மகனே! வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து தர நீ தான் முன்வர வேண்டும். அத்தகைய மாபெரும் சாமர்த்தியம் உன்னிடம் மட்டுமே உள்ளது. வேத வேள்வியை நடத்த வேண்டி நிற்கும் இவ்வேதியனுக்குத் துணை புரிவாயா? மகனே!என கண்ணீர் மல்கத் தன் மகனிடம் மனக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார்.

தந்தையின் சொல்லனைத்தும் செவிமடுத்த ஞானசம்பந்தப் பெருமான், இறைவனின் திருவிளையாடலை எண்ணினார். நாடெங்கிலும் வாதவேள்வி செய்து வெற்றிவாகை சூடி வரும் இவ்வேளையில் நம் வாயிலாகவே இறைவன், வேதவேள்வியையும் நடத்திக்கொள்ள திருக்குறிப்புக் கொண்டுள்ளான் என மனத்தில் நினைத்துக் கொண்டார். செல்வத்தை தானே கொடுக்கப்போகிறானா? என்ன செய்யப் போகிறான் நம் செல்லக்குழந்தை? என அமைதியாய் ஆவடுதுறையில் அமர்ந்திருந்தான் மாசிலாமணியீசன்.

இப்போது சம்பந்தப் பெருமான் முன்னிற்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்.

நாடெங்கிலும் வாத வேள்விகளைச் செய்து சைவத்தையும் வேதத்தையும் தமிழையும் தழைக்கச் செய்யும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேத வேள்வி தேவைதானா?


வாத வேள்வியை ஏற்று வெற்றியை வழங்கி வரும் இறைவன் வேத வேள்வியையும் ஏற்று அருள் வழங்குவாரா?

இறைவனுக்கு வைதிக சடங்குகளிலும் சம்மதம் உண்டா?

வேத வேள்விகளும் அதில் இயற்றப்படும் சடங்குகளும் வழிபாடுகளும் எதற்காகவெனில் இறைவனின் அருளைப் பெறுவதற்காக. அத்தகைய அருளைத்தான் தாமும் தம் தந்தையும் முன்னமே பெற்றாகிவிட்டதே! அப்படியெனில் இறைவனின் அருளை வேண்டிச் செய்யப்படும் இவ்வேள்வி வீணோ?

இறைவன் தனக்களித்த செல்வத்திலிருந்து தன் தந்தைக்குக் கொடுப்பதா? அல்லது தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அரசர்களிடமோ அல்லது தனவந்தர்களிடமோ கேட்டுப் பெற்றுக் கொடுப்பதா?

சைவத்தையும், தமிழையும் வளர்க்க வேண்டிய இத்தருணத்தில் இது போன்ற மரபு வழிச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா?

நயவஞ்சக நாஸ்திகர்களை விரட்டியடிக்க வேண்டி, ஞானப்பால் அருந்திய நாள் முதலாகக் கொண்ட கொள்கையை விட்டு மற்றைய விஷயங்களில் நாட்டம் கொள்ளுதல் முறையா? “கொள்கைப் பிடிப்பு இல்லைஎன்ற பழிக்கு ஆளாகி விடமாட்டோமா?

இதுபோன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் சம்பந்தப் பெருமானின் உள்ளத்தில் தோன்றி விடையில்லாமல் திக்குமுக்காடி நின்றன. இவற்றிற்கெல்லாம் பதில் காண பெருமானார் முற்படவில்லை. நேரே மாசிலாமணியீசனிடம் சென்று முறையிடுதலே சாலச் சிறந்தது என எண்ணிக்கொண்டார். ஈஸாவஸ்ய உபநிஷத்தும் அதைத்தான் கூறுகிறது. இவ்வேள்வி விஷயத்தில் இறைவனுக்கு முழுச் சம்மதம் எனில் அவனே அதற்குரிய செல்வத்தைத் தந்தருளுவான். இறைவனால் கொடுக்கப்பட்டதேயன்றி மற்றவரின் செல்வத்தை எண்ணாதேஎன்று ஈஸாவாஸ்யம் கூறுகிறதே! வேத வாக்கியம் அப்படியிருக்க நான் போய் எவ்வாறு பிறரிடம் செல்வத்தைக் கேட்க முடியும்? வேதம், சைவம், தமிழ் வளர்க்க வந்தவனென்று தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டு அவ்வேத வாக்கியங்களுக்கு விரோதமாகச் செயல்படுதல் முறையோ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு மாசிலாமணியீசர் சந்நிதியை அடைந்தார்.

இறைவனைக் குறித்து பின் வருமாறு தன் விண்ணப்பத்தைத் தெரிவித்து இடரினும் தளரினும்...எனத் தொடங்கும் தமிழ்ப் பாமாலையால் இறைவனை அலங்கரித்தார்.

நீண்டகாலம் மூப்பின்றி வாழும் பொருட்டு அமுதம் வேண்டி தேவர்கள் அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அவ்வமயம் முதற்கண் அமுதம் தோன்றாமல் ஆலகால விஷம் தோன்றிற்று. விஷத்தின் வேகம் தாங்காத தேவர்களும் அசுரர்களும் உயிர் பிழைக்க வேண்டி புறங்கால் பிடரியில் படுமாறு ஓடினர். பயந்து நடுங்கினர். தேவர்களைக் காக்க எண்ணி, அவ்வாலகால விஷத்தைக் குடித்து அதனைக் கண்டத்திலேயே நிறுத்திய அருளாளா! நான் மேற்கொண்டுள்ள சைவம், வேதம் மற்றும் தமிழ் ஆகியவற்றைக் காத்து வளர்க்கும் பணியில் ஏதேனும் இடர்ப்பாடு ஏற்படுமானால் நான் உன் திருவடியையே தொழுதெழுவேன். தங்கள் அடியவனான என்னைப் பாதுகாக்கும் விதமாக இவ்வுலகோர் அறியுமாறு தந்தைக்குத் தேவையான பொருள் தந்து உதவ வேண்டும் ஆவடுதுறை அரனே! அருள்புரிக.

பரந்து விரிந்த கங்கையையும், பிறை மதியையும் தன் சடையிலே அனிந்த புண்ணியனே! இவ்வுலகில் அறத்தோடு வாழும்போதும், இவ்வுலகை விட்டு உன் திருவடி நிழலை அடையும் போதும் நான் உன் திருவடி துணையன்றி வேறொன்றையும் நினைக்கமாட்டேன். அத்தகைய அடியவனான என்னை, நீ உய்விப்பது உண்மை என உலகோர் அறியும் வண்ணம் வேள்வி செய்யும் பொருட்டு பொருள் வேண்டி நிற்கும் என் தந்தைக்கு அருள்வீராக!

குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலரைக் கொண்டையிலும், வெம்மை நிறைந்த தீச்சுடரைக் கையிலும் கொண்டு அருள் செய்யும் அரனே! நான் விழித்திருக்கும்போதும், உறங்கும்போதும், புலன்கள் செயல்படாத காலத்திலும் கூட உன் திருநாமத்தை விட்டு வேறு அறியேன். அத்தகைய அடியவனுக்கு வேண்டிய பொருள் தந்து உதவ வேண்டும்.

மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரமும் எரித்த மன்னவனே! எனக்குத் தும்மல் முதல் கடுமையான பிணி வரை எது வந்து வருத்தினாலும், என் நா உன் திருவடிப் புகழல்லாது பிறவற்றைப் பாடாது. ஆகையால் உன் அடியவனான எனக்கு அருள் செய்யும் விதமாக வேள்விக்கு வேண்டிய பொருளைக் கொடுப்பாயாக.

ஆலகால விஷத்தால் உன் கழுத்து கறுப்பாயிற்று. அது உனக்கு அழகு சேர்த்ததேயன்றி உன் அழகினைக் குறைக்கவில்லை. அத்தகைய பெருமையை உடைய பூரணனே! கையில் உள்ள பொருள் அனைத்தும் இழந்த போதிலும் அதன் பொருட்டு பிறரால் இகழப்பட்டாலும், என் சிந்தை உன் திருவடியையே பற்றி நிற்குமேயன்றி பிறவற்றை நாடாது. ஆகையால் என்னை ஆட் கொள்ளும் விதமாக, அடியேனுக்கு வேண்டிய தனத்தைக் கொடுத்தருள்வீராக.

கொடிய விஷத்தையுடைய ஸர்ப்பங்களை அணிகலன்களாக அணிந்துள்ளவனே! உடலெங்கும் வெண்ணீறு பூசிய மெய்ப்பொருளே! கொடுமையான துன்பம் என்னை அணுகி வந்து அச்சுறுத்தினாலும் என் நா உன் திருப்பெயரல்லாது மற்றையதை உரையாது. அத்தகைய அடியவனான என்னை ஆளும் விதமாக வேள்விக்கு வேண்டும் தனம் தந்து அருள்வீராக.

துன்பமும், வேதனையும் கூடிய கொடிய வினைகள் விரைந்து வந்து என்னை வீழ்த்தினாலும், நான் உன் திருவடியை விட்டுப் பிறவற்றை நாடமாட்டேன். உன்னையல்லாது பிறவற்றை என் நா ஒருபோதும் பேசாது. ஆகையால் நான் வேண்டுவதை எனக்களித்து அருள்வீராக.

பத்துத்தலையனை (இராவணனை) பனிமலையின் கீழ் அழுத்தி அறம் புகட்டியவனே! ஆவடுதுறை அரசே! மீளாத்துயர் வரினும், பிணிவந்து பற்றிடினும் அதுபற்றி யான் நினையாது, உன் பொன்னார் திருவடிகளையே நான் சிந்தனை செய்வேன். அரனே! அடியவன் வேண்டும் தனம் தந்து அருள்வீராக.

உண்ணும் காலத்தும், உண்டபின் ஏற்படும் மயக்க நிலையிலும், உணவின்றி வீணே திரியும் காலத்தும், உணவின்மையால் உண்டாகும் மயக்க நிலையிலும் என் நா உன் திருவடிப் புகழல்லாத பிறவற்றைக் கூறுவதில்லை. ஆகையால் அரசே! அரசே! அருளாளா! அடியவனை ஆட்கொண்ட விதமாக வேண்டும் பொருளைத் தந்தருளுவீர்.

பித்தம் தலைக்கேறி அதனால் பிதற்றும் நிலை வந்தாலும் என் நா உன் திருவடிப் புகழையல்லாது பிறவற்றைப் பாடாது. அடியவர்க்கு அருள் செய்யும் ஆவடுதுறை அரசே! அடியேனுக்கு அருளும் வண்ணம் வேள்விப் பொருள் தந்து உதவவேண்டும்.

இவ்வாறு இறைவனிடத்தில் காதலாகிக் கசிந்து உருகி தன் விண்ணப்பத்தை இறைவனின் திருவடியில் வைத்துப் பணிந்தார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளான இறைவன், திருஞானசம்பந்தரின் வேண்டுகோளினை ஏற்று தன் பூத கணம் ஒன்றின் மூலம் பொற்கிழி ஒன்றினைக் கொடுத்தனுப்பினார். அந்தப்பொற்கிழி விரும்பும் அளவிற்கு தனத்தைக் கொடுக்கும் ஆற்றல் உடையதுஎன அசரீரி வாக்கின் மூலம் ஞானசம்பந்தருக்குத் தெரிவிக்கப்பட்டது. பூதகணம் ஞானசம்பந்தருக்கு பொற்கிழி வழங்கிய இடத்தை இன்றும் திருவாவடுதுறையில் கண்டு தரிசிக்கலாம்.


இந்நிகழ்ச்சியின் மூலம் வேதமும் தமிழும் இறைவனுக்கு உவப்பானதே என்பதனையும், வேதத்தைத் தழைக்கச் செய்த தமிழ் வேதத்தையும் தழைக்கச் செய்தான் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று உயர்ந்தது என்று பிரித்தறிதலுக்கோ அல்லது ஒன்றைக்காட்டிலும் மற்றொன்றில் தரம் குறைந்தது என புறந்தள்ளலுக்கோ இங்கே எள்ளளவும் இடமில்லை என்பதைக் காட்டவே இறைவன் மேற்கண்ட திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டியுள்ளான் என்பது துணிபு..


ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta


No comments:

Post a Comment