Tuesday 29 August 2017

மீனாட்சி திருவிளையாடல்

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
நம் நாடு, மன்னர் ஆட்சி மாறி ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. 1812ஆம் ஆண்டு இரோஸ் பீட்டர் என்பவர் ஆட்சிப் பொறுப்பேற்று மதுரைக் கலெக்டராகப் பணிபுரிய வந்தார்.

அதிகாரியான பீட்டர் இளகிய மனம் கொண்டவர். மக்களை மிகவும் அன்புடன் நேசித்தார். இவரது ஆட்சியில் தர்மம், நியாயம், இருந்ததால் செல்வ வளம் மிகுந்தது. பழைய பாண்டிய மன்னர்களைப் போல் ஆட்சி செய்ததால் இவரை மக்கள் அன்புடன் பீட்டர் பாண்டியன் என அழைக்கலாயினர்.

மதுரையின் மண், அதன் மக்கள், குறிப்பாக வானத்தை எட்டும் கோபுரங்கள், வீதி உலா வரும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பீட்டரின் மனத்தைக் கொள்ளை கொண்டனர். வீதி உலா வரும் அன்னை மீனாக்ஷியின் அருள் பார்வையில் பீட்டரும் தப்பவில்லை. அவளது அருள் பார்வையும், அழகும் அன்னியனான ஆங்கிலேயர் பீட்டர் மனத்தில் பதிந்தன. இப் பதிவு நாளடைவில் பக்தியாக மலர்ந்தது. பீட்டர், அலுவலகத்துக்குச் செல்லுமுன் ஒரு முறை ஆலயத்தை வலம் வந்து விட்டுத் தன் அலுவல்களைத் தொடருவது வழக்கம்.

மக்களின் மனத்தில் பீட்டர் குடி கொள்ள, அவர் மனத்தில் அன்னை மீனாக்ஷி குடி கொண்டாள். அன்பைப் பிறரிடம் காட்டும் அன்பருக்கு, அடி பணிவான் இறைவன் என்னும் கூற்று உண்மையே. அன்னை, எவ்விதம் பீட்டருக்கு அருள் புரிந்தாள் என்று பார்ப்போம்.

இது ஒரு உண்மைச் சம்பவம்.

ஒருநாள், பீட்டர் வழக்கம்போல் அன்றைய அலுவல்களை முடித்த பின்னர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அன்று இரவு வானம் கறுத்து மழை பெய்து கொண்டிருந்தது. வானத்தைப் பிளப்பது போல் மின்னல் மின்னியது. பீட்டர், அவரது படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், ஒரு பிஞ்சுக் கரம் அவரைத் தொட்டு எழுப்பியது. பீட்டர் கண் திறக்க, அவர் முன் அழகே உருவெடுத்த ஒரு சிறுமி, அவரது கையைப் பிடித்து இழுத்தாள். அறை முழுவதும் இருட்டு, தூக்கக் கலக்கம். இவள் யார்? எப்படி வந்தாள்? ஏன் வந்தாள்? ஒன்றும் புரியவில்லை. ஆனால் சிறுமி பலவந்தமாக அவர் கையைப் பிடித்து இழுக்க, அவளது கட்டளையை ஏற்று, மாடியிலிருந்து இறங்கி, வீட்டை விட்டு வெளியே வந்தார். மறுகணம், ஒரு பேரிடி, அவர் வீட்டுக் கூரையில் விழுந்து, வீடு பற்றி எரிந்தது. பீட்டரின் உடலும் உள்ளமும் பதற, அருகில் நிற்கும் சிறுமியை நோக்கினார். அவள் முகத்தில் சிறு புன்னகை. “என உயிரைக் காக்க வந்த நீ யார்?” என்று கேட்க, சிறுமி அந்த மழையில் ஓடலானாள். பீட்டரும் அவளைத் தொடர்ந்தார். எவ்வளவு வேகமாக ஓடினாலும் இருவருக்குமிடையில் அதே இடைவெளி இருந்தது. சிறுமியை எட்டிப் பிடிக்க இயலாமல் பீட்டர் ஓடினார். ஓடிய சிறுமி கோவிலை அடைந்து உள்ளே சென்றாள். மீனாக்ஷீ கர்ப்பகிருகத்துள் சென்று மறைந்தாள். பீட்டர் மெய் சிலிர்த்து, கண்ணீர் மல்க சிலையாக நின்றார். இது கனவா நினைவா, அல்லது கற்பனையா? இல்லை. இது நிஜம். ஊர் உறங்கும் இவ்வேளையில் இடியிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றியது வேறு யாருமில்லை. இங்கு கோவில் கொண்டிருக்கும் அன்னை மீனாக்ஷீ எனப் புரிந்து கொண்டார். அவளது கருணை, அவருள் இருந்த மாயக் கற்றைகளையும், ஐயங்களையும் போக்கியது, பீட்டரின் ஊனக் கண்களைத் திறந்து ஞானக் கண்களை வழங்கினாள் இதனால் பீட்டர் அடியாருள் ஒருவரானார்.



அவளை நினைத்து நெஞ்சம் கனிந்து குழைந்து, தாயைப் பிரிந்த சேயாக வாழ்ந்தார். தன்னை ஆட்கொண்ட அன்னைக்கு பொன்னும் பொருளும் வழங்கினார். மீனாக்ஷி குதிரை வாகனத்தில் பவனி வருவதைக் கண்டு பல முறை பக்திப் பரவசத்தில் கரைந்தார். உலக நாயகி, உலகை வலம் வரும் தாயை, நான் வலம் வருவது மட்டும் போதாது. என்னிடம் இருப்பது யாவும் அவள் கொடுத்த செல்வமே. குதிரையில் வரும் தன் தாய்க்கு அவளது திருவடிகளைத் தாங்க இரு மிதியடிகள் செய்வது என முடிவு எடுத்தார். பத்தரை மாற்றுத் தங்கத்தில் 4-முத்து, 4நீலம், 4-வைடூர்யம், மரகதக் கற்கள் 576 வைத்து இரு மிதியடிகளில் பதிக்கச் செய்தார். அவற்றை அன்னை மீனாக்ஷிக்கு அர்ப்பணித்தார்.

குதிரை வாஹனத்தில் உலா வரும் தாயின் பாதங்களைத் தாங்கி இருக்கும் மிதியடிகளைக் காணும் போதெல்லாம் தானே அவளது காலடியில் கிடப்பதாக எண்ணி மகிழ்ந்தார், அந்த ஆங்கிலேயரான பீட்டர். அவரது பதவிக் காலம் முடிவுற்றது. எல்லாரையும் போல் அவரும் வேலை முடிந்ததும் தன் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லவா! ஆனால் இவருக்கோ தன் தாயை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அன்புச் சேயாக மாறினார். தினமும் அன்னை மீனாக்ஷியைக் காண வேண்டி மதுரையிலே இருப்பது என தீர்மானித்தார். தன் ஆயுள் முடிவு வந்ததும், எப்பொழுதும் மீனாக்ஷியைப் பார்க்கும் வண்ணம், அடக்கம் செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் கூறி விட்டார். அவ்வாறே, அவரின் சடலம், நகைக் கடைகளுக்கு அருகில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலய வெளியில் ஆலயத்தைத் தரிசித்த படியே துயில் கொண்டு இருப்பது போல அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை சென்றால், இன்னும் அவரின் கல்லறையைக் காணலாம். அவர் அன்னைக்கு அளித்த மரகத மாலை மியூசியத்தில் உள்ளது. மீனாக்ஷி அம்மனுக்கும் அழகர் கோவிலுக்கும் பல பொன் ஆபரணங்களை வழங்கியுள்ளார் பீட்டர் பாண்டியன்.

No comments:

Post a Comment