Tuesday, 29 August 2017

அங்குலாஸ்தி தவ முறை - கைகளில் வலிமை

அற்புதமான நமது கையைப் பற்றி ஆத்ம விசாரம் செய்யத் தொடங்கினால் நீங்கள் முக்தி நிலையை அடைய முடியும் என்பது உண்மையே. அத்தனை பொக்கிஷங்களை இறைவன் நமது கையில் அடக்கி வைத்திருக்கிறான்.

நமது குருமங்கள கந்தர்வா அவர்கள், ”உங்கள் கைகளை ஒழுங்காகப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும் இந்த உலகத்தையே வில்லாக வளைக்கலாம்,” என்று கூறுவார்.
ஐந்து விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் உண்டு அல்லவா? இந்த பகுதிகளைப் பிரிக்கும் கோடுகளில் அங்குலாஸ்திதி தேவதைகள் என்று பெயர் கொண்ட 1500 புனித தேவதைகள் உறைகின்றன. ஒவ்வொரு தேவதைக்கும் தனித் தனி பெயர் உண்டு.

ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய காயத்ரீ முத்திரைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் நாளடைவில் நீங்களே இந்த அங்குலாஸ்திதி தேவதைகளின் புனித நாமங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்து கர தரிசனம் பூஜை செய்யும்போது இந்த அங்குலாஸ்திதி தேவதைகள் உங்களுடன் உரையாடி இனி வரப்போகும் விஷயங்களைக் குறித்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ தெரியப்படுத்தும். காஞ்சிப் பெரியவர் போன்ற மகான்கள் இந்த அங்குலாஸ் திதி தேவதைகளுடன் உரையாடி அன்று தம்மை தரிசனம் செய்ய வரப்போகும் அடியார்களைக் குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான அனுகிரகத்தை அளிக்க தேவையான பூஜைகளை மேற்கொள்கிறார்கள்.

மகான்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும்போது இந்த அங்குலாஸ்திதி தேவதைகள் அவர்களுக்கு வேண்டிய புண்ணிய சக்தியை பூலோகத்திற்கு உகந்த சக்தியாக மாற்றி அளிக்கின்றன.

சாதாரண மக்கள் காயத்ரீ ஜபம், முத்திரைகள் மூலமாகவும், இறை நாம, சுய நாம ஜபம் மூலமாகவும் இந்த அங்குலாஸ்திதி தேவதைகளை வழிபடலாம்.

#‎அங்குலாஸ்திதி #‎ஜபம்
---------------------------------
தொன்று தொட்டு வரும் ஜப முறை இது. ஜபமாலைகளைக் கொண்டு இறை நாம எண்ணிக்கையை கணக்கிடுவதற்குப் பதிலாக நமது கைவிரல்களின் மூலமே லட்சக் கணக்கான இறை நாமங்களை எண்ண முடியும் என்பது உண்மையே.

நமது ஐந்து விரலிலும் நவகிரக தேவதைகள் உறைகின்றன.

கட்டை (பெரு) விரல் சுக்கிர பகவான்
ஆள்காட்டி விரல் குரு பகவான்
நடு விரல் சனீஸ்வர பகவான்
மோதிர விரல் சூரிய பகவான்
சுண்டு விரல் புத பகவான்

நாம் கோயில்களில் காணும் நவகிரக மூர்த்திகளும், நம் கைகளில் உறையும் நவகிரக தேவதைகளும் வேறானவை. அது போல கோயில்களில் உள்ள நவ மூர்த்திகளும் ஒருவருடைய ஜாதக கட்டத்தில் உறையும் நவகிரகங்களும் வேறு வேறே. இந்த விஷயத்தை நன்றாக ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொள்வது அவசியம்.

பஞ்சபூத பிரதிஷ்டை முத்திரையுடன்
திகழும் வள்ளலார் சுவாமிகள்

நவகிரகங்களைப் பற்றி முழுயாகப் புரிந்து கொள்ளததால்தான் தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, குரு சுப கிரகம், சனீஸ்வரன் பாப கிரகம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால், அதை அப்படியே நமது கையில் உறையும் தேவதைகளுக்கு ஏற்றுக் கொள்வதால் குழப்பமே விளையும். ஆள்காட்டி விரலால் பல் துலக்கக் கூடாது, நடு விரலால்தான் பல் துலக்க வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

நமது மேலோட்டமான ஏட்டுப் படிப்பை வைத்துப் பார்த்தால் ஆள் காட்டி விரல் என்றால் குரு விரல்தானே. அப்படியானால் புனிதமான சுப கிரக ஆசியுடன் பல் துலக்கும்போது அது எப்படி தீமையைச் செய்யும் என்ற குழப்பம் ஏற்படலாம். எனவே, நவகிரக தேவதைகளின் உண்மையான செயல்பாட்டைத் தெரிந்து கொண்டால்தான் குழப்பங்களிலிருந்து விடுபட முடியும்.

முதலில் வலது கை சூரிய விரலில் உள்ள நடுக் கோட்டிலிருந்து (அங்குலாஸ்திதி) இறை நாமத்தை சுக்கிர விரல் நுனியால் எண்ண ஆரம்பித்து கீழ்க் கண்ட முறையில் தொடர வேண்டும்.
சூரிய விரல் நடுக் கணு (கோடு, அங்குலாஸ்திதி)
சூரிய விரல் கீழ்க் கணு
புத விரல் கீழ்க் கணு
புத விரல் நடுக் கணு
புத விரல் மேல் கணு
சூரிய விரல் மேல் கணு
சனி விரல் மேல் கணு (நடுக் கணுவும், கீழ்க் கணுவும் ஜபத்தில் பயன்படுவதில்லை)
குரு விரல் மேல் கணு
குரு விரல் நடுக் கணு
குரு விரல் கீழ்க் கணு
இவ்வாறு ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நமசிவாய என்று ஒவ்வொரு இறை நாமத்தைக் கூறி நமது கட்டை விரல் நுனியால் மேற்கூறிய அங்குலாஸ்திதிகளைத் தொட்டு ஜபிக்கும் முறையே அங்குலாஸ்திதி ஜபம் என்பதாகும். மிக மிக சக்தி வாய்ந்த ஜப வழிபாடு.

கட்டை விரல் மற்ற விரல்களில் நகரும் புள்ளிகளைச் சேர்த்தால் அது ஓங்கார வடிவில் அமையும். அதனால் அதை அங்குலாஸ்திதி ஓங்கார ஜபம் என்றும் அழைப்பதுண்டு. இவ்வாறு ஜபம் செய்து பழகிக் கொண்டபின் இரண்டாம் நிலைக்கு நீங்கள் தயாராகிறீர்கள்.

அங்குலாஸ்திதி ஜபம் இரண்டாம் நிலை
இவ்வாறு ஒரு முறை ஜபம் செய்தால் பத்து இறை நாமங்களை நீங்கள் ஜபித்து விடுவீர்கள் அல்லவா? உங்களுடைய ஒரு ஓங்காரச் சுற்றில் பத்து இறை நாமங்கள் பதிந்து விடுகின்றன. இரண்டாம் நிலையில், நீங்கள் பத்தாம் முறை இறை நாமத்தைக் கூறுவதற்குப் பதிலாக குசம் என்று அழைப்பதன் மூலம் நீங்கள் கூறிய ஒன்பது இறை நாமங்களும் குசா என்னும் சித்த சக்தியைப் பெற்று விடுகின்றன.

உதாரணமாக,
ராமா, ராமா
ராமா, ராமா, ராமா
ராமா
ராமா
ராமா, ராமா, குசம்

என்று ஜபிப்பதால் குசா சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்.
இவ்வாறு நீங்கள் எந்த இறை நாமத்தை ஜெபித்தாலும் அதை ஒன்பது முறை ஜபித்து விட்டு பத்தாவது முறையாக குசம் என்று சொல்வது நலம்.

மூன்றாம் நிலை
மேற்கூறிய ஜப முறையில் கட்டை விரல் வலஞ் சுழியாக விரல்களின் மீது தவழும். மூன்றாம் நிலை ஜபத்தில் கட்டை விரலை இடஞ் சுழியாக வருடி ஜபம் செய்ய வேண்டும். அதாவது முதல் சுற்றில் சூரிய விரலில் ஆரம்பித்து குரு விரலில் ஜபம் முடியும் அல்லவா? அப்போது மீண்டும் சூரிய விரலில் ஜபத்தை ஆரம்பிப்பதற்குப் பதிலாக முதல் சுற்று முடிந்த குரு விரலிலிருந்தே (அதாவது குரு விரல் அடிக் கணுவிலிருந்து) இரண்டாவது சுற்று ஜபத்தை ஆரம்பித்து இடஞ் சுழியாக கட்டை விரலை நகர்த்தி (reverse direction or anti-clockwise) சூரிய விரல் நடுக் கணுவில் முடிக்க வேண்டும். இப்போது ஓங்கார வடிவம் இடஞ் சுழி இயக்கத்தைப் பெறும்.

நான்காம் நிலை
சூரிய விரல் நடுக் கணுவில் ஒரே ஒரு முறை மட்டுமே இறை நாமத்தைக் கூறுவதற்குப் பதிலாக கணு, கணுவின் அடிப் பகுதி, கணுவின் மேல்பகுதி, இடப் புறம் கணு, கணுவின் அடிப் பகுதி, கணுவின் மேல் பகுதி, வலப் பறம் கணு, கணுவின் அடிப் பகுதி, கணுவின் மேல் பகுதி என ஒரே கணுவில் ஒன்பது இறை நாமங்களை ஜபிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு விரல் கணுவிலும் ஒன்பது இறை நாமங்களைக் கூறி ஜபித்தால் ஐந்து விரல்களிலும் ஒரே ஓங்காரச் சுற்றில் 90 இறை நாமங்களை ஜெபித்து விடலாம்.

அடுத்த கட்டமாக வலஞ்சுழியாக 90 இறை நாமங்களை ஜபித்தது போலவே இடஞ்சுழியாகவும் 90 இறை நாமங்களை ஜபிக்கலாம் அல்லவா? இவ்வாறு ஒரு இடவல ஓங்காரச் சுற்றில் 90+90=180 இறை நாமத்தை ஜபித்து விடலாம். ஒரு இடவல ஓங்காரச் சுற்று ஜபம் முடிந்தவுடன் அதை இடது கையில் உள்ள கணுக்களைக் கொண்டு கணக்கிடவும்.

வலது கையில் உள்ள கணுக்களை இறை நாமங்களை ஜபிப்பதற்குப் பயன்படுத்தியது போல இடது கையில் உள்ள கணுக்களை ஓங்கார ஜப சுற்று எண்ணிக்கைகாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வலது கையை ஜபம் செய்வதற்காகவும், இடது கையை ஜப எண்ணிக்கைகாகவும் பயன்படுத்துவதன் மூலம் இடது கையும் வலது கையும் சேர்ந்த ஒரு சுற்றில் மொத்தம் (180 x 180) 32400 நாமங்களை ஜபிக்க முடியும். இவ்வாறு மூன்று சுற்றுகள் ஜபத்தை நிறைவேற்றினால் மொத்தம் 97200 இறை நாமங்களைக் கூறியதாகும். ஐந்து விரல்களைக் கொண்டு லட்சம் இறை நாமங்களை எண்ணி ஜபிக்க முடியும் என்றால் விரல்களின் மகிமையை எவராலும் வாய் விட்டுக் கூற முடியுமா?

No comments:

Post a Comment